என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மோசடி வழக்குகள் சென்னை மத்திய குற்றப்பிரிவில் இருப்பதால் சனிக்கிழமை ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
    • போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

    சென்னை:

    சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 26-ந்தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

    அவர் மீது மோசடி வழக்குகள் சென்னை மத்திய குற்றப்பிரிவில் இருப்பதால் சனிக்கிழமை ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதன்படி இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி காலை 10 மணிக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

    • சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து தொடங்கியது.
    • ஈரோடு மாநகர் பகுதியில் தொடர்ந்து 45 நிமிடத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. தொடர்ந்து 101 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நேற்று காலை முதல் மதியம் வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. மதியம் 4 மணிக்கு பிறகு வானில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்து தொடங்கியது.

    ஈரோடு மாநகர் பகுதியில் தொடர்ந்து 45 நிமிடத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. அதன் பின்னரும் மழை தூறி கொண்டே இருந்தது. ஈரோடு பஸ் நிலையம், நாச்சியப்பா வீதி, ஆர்.கே.வி.ரோடு, சக்தி ரோடு, காந்திஜி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தெப்பம் போல் தேங்கின்றது.

    இந்த திடீர் மழையால் ஈரோட்டில் மேடன பகுதியான சாஸ்திரி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெருக்கெடுத்த வெள்ளநீர் நாடார் மேடு பகுதி நோக்கி பாய்ந்து சென்றது. இதனால் ஈரோடு நாடார்மேடு பகுதியில் தாழ்வாக உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    வீட்டில் புகுந்த தண்ணீரை பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் வெளியே ஊற்றினர். பின்னர் சிறிது நேரத்தில் மழைநீர் வடிய தொடங்கியது. இதேபோல் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் உள்ள பெரிய காய்கறி மார்க்கெட்டிலும் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். ஈரோடு மாநகர பகுதியில் அதிகபட்சமாக 49 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.


    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள மாக்கம்பாளையம் மலை கிராமத்தில் 3000-க்கும் மேற்பட்ட வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு குரும்பூர் பள்ளம் சர்க்கரை பள்ளம் வழியாகத்தான் செல்ல வேண்டும். கடம்பூரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மார்க்கம்பாளையம் பகுதிக்கு அரசு பேருந்து தினமும் 2 முறை இயக்கப்ப டுகிறது. மழைக்காலங்களில் குரும்பூர் பள்ளங்களில் அடிக்கடி வெள்ளம் கரை புரண்டு ஓடும்.

    இதேபோல் நேற்று இந்த கனமழையால் சக்கரை பள்ளத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் சக்கரை பள்ளம் வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. திடீர் மழையால் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்து சென்றனர்.

    இந்நிலையில் காய்கறி லோடுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஒன்று அந்தக் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது. டிரைவரால் எவ்வளவு முயற்சி செய்தும் வாகனத்தை இயக்க முடியவில்லை. உடனடியாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு கயிறு கட்டி சரக்கு வாகனத்தை நீண்ட போராட்டத்துக்கு பிறகு மீட்டனர். இந்த பகுதி மக்கள் நீண்ட வருடமாக உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மிககனத்த மழை பெய்தது. இதன் காரணமாக அருள்வாடி, சூசைபுரம், திகினாரை, ஏரகனள்ளி, கெட்டவாடி செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு மழைநீர் வடிந்த உடன் போக்குவரத்து சீரானது.

    இதேபோல் ஆசனூர், திம்பம், அரேபாளையம் பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் அரேபாளையத்தில் இருந்து கொள்ளேகால் செல்லும் சாலையில் வலுவிழந்து காணப்பட்ட மூங்கில் மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூங்கில் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதன் பின்னர் சுமார் 2 மணி நேரம் கழித்து போக்குவரத்து சீரானது.

    • 7-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழையும், திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    7-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    8-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    9-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    10-ந்தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்றும் காரைக்கால் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    11-ந்தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமுட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக தேர்ந்தெடுக்கப்படவில்லை.
    • அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 3192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்டு 80 நாட்களாகியும் அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்காமல் பள்ளிக்கல்வித்துறை தாமதப்படுத்தி வருகிறது. பணி ஆணைகள் வழங்கப்படாததால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. ஆசிரியர்களுக்கு பணி வழங்குவதில் அரசு காட்டும் தாமதம் கண்டிக்கத்தக்கது.

    பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ஆம் நாள் வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மே மாதம் 18-ஆம் நாள் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 18-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அவர்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு கலந்தாய்வை ஒரே நாளில் நடத்தி பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்க முடியும். ஆனால், 80 நாட்களாகியும் இன்று வரை அதை தமிழக அரசு செய்யாததற்கான காரணம் தெரியவில்லை.

    தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதனால், அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இத்தகைய சூழலில் மின்னல் வேகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆசிரியர் நியமன பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஆசிரியர்கள் நியமனத்திற்கான நடைமுறை தொடங்கபட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், இன்னும் அது முடிவடையாதது மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

    தமிழ்நாடு அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் ஆசிரியர்கள் நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், ஆசிரியர் பணிக்கு தேந்தெடுக்கப்பட்டும் தங்களுக்கு வேலை கிடைக்குமா, கிடைக்காதா? என்ற மன உளைச்சலில் 3192 பேரும் தவித்து வருகின்றனர். அவர்களின் மன உளைச்சலைப் போக்கி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை ஆகும். எனவே, போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 3192 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கூட மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
    • விஸ்வகர்மா திட்டத்தின் மூலமாக நிதியுதவி வழங்குவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது.

    கோவையில் நடந்த நிகழ்ச்சியில் குலத்தொழில் தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வானதி சீனிவாசன் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் விஸ்வகர்மா திட்டத்தை மாநில அரசு அனுமதிக்கவில்லை. குலத்தொழிலை திமுக அனுமதிக்க மறுக்கிறது. விஸ்வகர்மா சமுதாயத்திற்குரிய பெருமையான விஷயத்தையே குலைக்க நினைக்கிறார்கள். பெருமையை குலைக்க நினைப்பவர்களை கேள்வி கேட்க யாராலும் முடியவில்லை.

    கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கூட மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் அமல்படுத்தப்படுகிறது. விஸ்வகர்மா திட்டத்தின் மூலமாக நிதியுதவி வழங்குவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஒவ்வொரு சாதிக்கும், ஒரு பெருமை இருப்பதை போல குலத்தொழிலுக்கும் பெருமை உள்ளது என்றார்.

    விஸ்வகர்மா சமூகத்தினர் முன்பாக குலத்தொழில் குறித்து பேசிய வானதி சீனிவாசன் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    வானதி சீனிவாசனின் பேச்சு ஆணவத்தின் உச்சம். குலத்தொழிலை பற்றி பேசும் அனைவரும் அவர்களின் குலத்தொழிலை செய்யப்பட்டும். வானதி தனது குலத்தொழிலை செய்ய தயாரா என்று திருச்சி வேலுசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

    • கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே உள்ள பெரியாச்சி அம்மன் கோவில் சுவற்றின் மீது மோதி நின்றது.
    • விபத்தில் கார் முன்பக்க பகுதி மற்றும் கோவில் சுவர் பலத்த சேதமடைந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு அடுத்த ஓரடியம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சரும் தற்போதைய வேதாரண்யம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஓ.எஸ்.மணியன்.

    இவர் இன்று வேதாரண்யத்தில் இருந்து கீழ்வேளூருக்கு காரில் புறப்பட்டார். காரில் முன்இருக்கையில் ஓ.எஸ்.மணியன் அமர்ந்திருந்தார். காரை அவரது டிரைவர் ஓட்டினார்.

    கார் கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்றபோது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே உள்ள பெரியாச்சி அம்மன் கோவில் மதில் சுவற்றின் மீது மோதி நின்றது.

    இந்த விபத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இருந்தாலும் ஓ.எஸ்.மணியன், டிரைவர் ஆகியோர் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு முதலுதவி சிகிச்சைக்காக சென்றனர்.

    இந்த விபத்தில் கார் முன்பக்க பகுதி மற்றும் கோவில் மதில் சுவர் பலத்த சேதமடைந்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • உப்பிலியபுரம் பகுதியில் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
    • மழையின் காரணமாக திருச்சியில் வெப்பம் தணிந்து குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    திருச்சி:

    லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் வருகிற 8ம் தேதி வரை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது.

    திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கோடைக்கு இணையான வெப்பதாக்குதலை மக்கள் சமாளித்து வந்த நிலையில் இந்த அறிவிப்பு ஆறுதலை அளித்தது. திருச்சியில் வெயில் வாட்டி வதைத்தது பின்னர் மாலையில் கரு மேகங்கள் திரண்டு ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. மாலை 6 மணி அளவில் திருச்சி மாநகர பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டியது.

    திருச்சி மத்திய பஸ் நிலையம், ஜங்ஷன் ,தில்லை நகர், பொன்மலை, கொட்ட ப்பட்டு, விமான நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, காந்தி மார்க்கெட், மலை க்கோட்டை, உறையூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒன்றரை மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. எதிர்பாராத இந்த மழையின் காரணமாக மார்க்கெட் மற்றும் வெளியிடங்களுக்கு சென்ற மக்கள் மழையில் நனைந்தபடி வீட்டுக்கு செல்ல நேரிட்டது.

    திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழை நீர் குளம் போல்தேங்கியது.

    இடி மின்னல் காரணமாக திருச்சி மன்னார்புரம் சுப்பிரமணியபுரம் கொட்டப்பட்டு பொன்மலை உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது உப்பிலியபுரம் பகுதியில் பெய்த கனமழையால் புளியஞ்சோலை அய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது உப்பிலியபுரம் வெங்கடாசலபுரம் மாரடி ,கோட்டப்பாளையம், வைரிச்செட்டிப்பாளையம், பி மேட்டூர், புளியஞ்சோலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அய்யாற்றில் செந்தண்ணீர் கரைபுரண்டு ஓடியது மேலும் உப்பிலியபுரம் பகுதியில் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

    இரண்டாம் குறுவைநெல் சாகுபடி அறுவடை தொடங்கியுள்ள நிலையில் இந்த மழையால் அறுவடை பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் நேற்று 719.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    இதில் அதிகபட்சமாக மணப்பாறை பகுதியில் 76.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு;-

    கள்ளக்குடி 30.2, லால்குடி 49, நந்தியாறு அணைக்கட்டு 70, புள்ளம்பா டி 33.4 , தேவி மங்கலம் 7.2, சிறுகுடி 18.8 , வாத்தலை அணைக்கட்டு 4.2 ,பொன்னணியாறு அணை 35, கோவில்பட்டி 39.2, மருங்காபுரி 64.2 , முசிறி 16, புலிவலம் 8 , தாப்பேட்டை 10, நவலூர் கொட்டப்பட்டு 1, துவாக்குடி 17.2 ,கொப்பம்பட்டி 40, தென்பர நாடு 20, துறையூர் 25, பொன்மலை 44.2 , திருச்சி ஏர்போர்ட் 55, திருச்சி ஜங்ஷன் 36, திருச்சி டவுன் 19. திருச்சி மாவட்டத்தில் சராசரியாக 29.97 மி.மீ மழை அளவு பதிவாகி இருந்தது.

    இந்த மழையின் காரணமாக திருச்சியில் வெப்பம் தணிந்து குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    • "உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்!"
    • "மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!" என அவர் காட்டிய சமரச சுத்த வழியை எந்நாளும் பின்பற்றுவோம்!

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டுமுதலாக, "#தனிப்பெருங்கருணை_நாள்" எனக் கொண்டாடி வரும் அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்தநாள் இன்று!

    "உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்!"

    "மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!" என அவர் காட்டிய சமரச சுத்த வழியை எந்நாளும் பின்பற்றுவோம்!

    உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியைப் போற்றுவோம்!

    வாழ்க வள்ளலார்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாநிலத்தின் மின்சாரத் தேவை மற்றும் மின் விநியோகத்தில் எவ்வித இடைவெளியும் இல்லை.
    • மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு மேற்கொண்டார். மின்னகத்தில் பதிவான மின்சாரம் தொடர்பான பொது மக்களின் புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, தொடர்ச்சியாக மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனுக்குடன் சரி செய்யுமாறும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தினார்.

    மாநிலத்தின் மின்சாரத் தேவை மற்றும் மின் விநியோகத்தில் எவ்வித இடைவெளியும் இல்லை. மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எடுத்து உள்ளது. மின் விநியோகம் சார்ந்த குறைபாடுகளை சரி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் தொலைபேசி சேவை மின்னகத்தை 94987 94987-ல் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

    • மண்டலம் வாரியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
    • மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், வெள்ள தடுப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    சென்னை:

    சென்னை தலைமைச்செயலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் மற்றும் மண்டலம் வாரியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், வெள்ள தடுப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    • 206 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 70 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தமிழ்நாட்டில் நிலைமை மோசமாக இருக்கிறது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்கள் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சட்டக் கல்வி இயக்குனர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழ்நாட்டில் உள்ள 15 சட்டக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட 20 இணைப் பேராசிரியர் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், 206 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 70 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு அதிகமான காலிப் பணியிடங்களை நிரப்பாதது தி.மு.க. அரசின் அக்கறையின்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஆசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால் சட்டக் கல்லூரிகளை மூடுவதே நல்லது என்று சென்னை உயர் நீதிமன்றம் குட்டு வைக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் நிலைமை மோசமாக இருக்கிறது.

    முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, சட்டக் கல்லூரிகள் உட்பட அனைத்துக் கல்லூரிகளிலும் காலியாக உள்ள இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நோவா உலக சாதனைக்காக 1,000 மண் ஓடுகளை தொடர்ச்சியாக உடைத்து நொறுக்கினார்.
    • கல்லூரி நுழைவிடத்தில் 10 வரிசைகளில் 10 ஓடுகள் வீதம், வரிசைக்கு 100 ஓடுகள் என 1,000 ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தைச் சேர்ந்த பஞ்சாட்சரம் (வயது 47) குங்பூ தற்காப்புக்கலை வீரரான இவர், செவன்த் டான் பிளாக் பெல்ட் உள்ளிட்டவை பெற்றுள்ளார்.

    நீண்டகாலமாக உள்ளூர் மற்றும் வெளியூர்களில் தனியாகவும், பள்ளிகளுக்கும் குங்பூ பயிற்சியாளராக இருந்து வருகிறார். பெண்கள், வாலிபர்கள், சிறுவர், சிறுமியர் ஆகியோருக்கு குங்பூ பயிற்சி அளித்து வருகிறார்.


    இவர் நோவா உலக சாதனைக்காக 1,000 மண் ஓடுகளை தொடர்ச்சியாக உடைத்து நொறுக்கினார். மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி நுழைவிடத்தில் 10 வரிசைகளில் 10 ஓடுகள் வீதம், வரிசைக்கு 100 ஓடுகள் என 1,000 ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டது. அவைகளை உடைத்து சாதனை செய்தார்.


    முன்னதாக நோவா வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் குழுவினர் அவருக்கு மருத்துவ பரிசோதனை, ஓடுகளில் சோதனை உள்ளிட்ட உலக சாதனை நடைமுறைகளை செய்தனர். பின்னர் அவரை ஓடுகளை உடைக்க அனுமதித்தனர். 10 நிமிடங்களில் அனைத்து ஓடுகளையும் உடைத்து நோவா உலக சாதனை வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.

    ×