என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 9-ந் தேதி 225 பஸ்களும், 10-ந் தேதி 880 பஸ்களும் இயக்க திட்டம்.
- அரசு விரைவு போக்குவரத்துக் கழக அறிவிப்பு.
சென்னை:
அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆயுத பூஜை பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 9-ந் தேதி (புதன்கிழமை) 225 பஸ்களும், 10-ந் தேதி (வியாழக்கிழமை) 880 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 9-ந் தேதி (புதன்கிழமை) 35 பஸ்களும், 10-ந் தேதி (வியாழக்கிழமை) 265 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விழுப்புரம், சிதம்பரம், திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு மாதவரத்தில் இருந்து 9-ந் தேதி மற்றும் 10-ந் தேதி ஆகிய 2 நாட்களும் 110 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
- தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
நேற்று விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 17 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. மழை தொடர்ந்து வருவதை அடுத்து நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
- மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தால் பரபரப்பு.
- விமானம் தரையிறங்கிய போது, டயர் வெடித்தது.
மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தின் டயர்கள், விமான நிலையத்தில் தரையிறங்கிய போது வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 146 பயணிகளுடன் மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தை தரையிறக்கிய போது, அதன் டயர் திடீரென வெடித்தது.
டயர் வெடித்த நிலையிலும், விமான சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை கட்டுப்படுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டயர் வெடித்ததை தொடர்ந்து, குறிப்பிட்ட விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டு, அனைத்து பயணிகளும் நகரின் பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
- துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
- புத்தகங்கள் எல்லோருடைய கரங்களிலும் - அவற்றின் கருத்துக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தவழட்டும்! வெல்லட்டும்!
சென்னை, கலைவாணர் அரங்கில் எம்.பி. திருச்சி சிவா எழுதிய 5 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

நூல் வெளியீட்டு விழா குறித்து துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறப்பட்டுள்ளதாவது:-
கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர் - தி.மு.கழகத்தின் மாநிலங்களவைக் குழுத்தலைவர் அண்ணன் திருச்சி சிவா அவர்கள் எழுதியுள்ள 5 நூல்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டு வாழ்த்திய நிகழ்வில் கலைவாணர் அரங்கில் இன்று பங்கேற்றோம்.
நம் கழகத்தலைவர் அவர்கள் திமுக இளைஞரணியை தொடங்கிய போது, அதன் வளர்ச்சிக்கு முன்வரிசையில் நின்று உழைத்தவர் அண்ணன் சிவா அவர்கள்.
இளைஞரணி பயிற்சி பாசறைக் கூட்டம் உட்பட, தான் ஏறுகின்ற மேடைகள் தோறும் திராவிட இயக்கக் கொள்கைகளை ஓர் ஆசிரியரைப் போல அடுத்தடுத்த தலைமுறைக்கும் பாடமெடுக்கும் ஆற்றலுக்குச் சொந்தக்காரர்.
தனது மேடைப்பேச்சு - 'மிசா' சிறைவாசம் - முரசொலிக் கட்டுரைகள் - பேட்டிகள் - வாட்ஸ் அப் வழி கருத்துக்கள் ஆகியவற்றை புத்தகங்களாகக் கொண்டு வந்திருக்கும் அண்ணன் சிவாவை வாழ்த்தியும், இச்சிறப்புக்குரிய நிகழ்வுக்கு வந்தோரை வரவேற்றும் உரையாற்றினோம்.
அண்ணன் சிவா எழுதியுள்ள இப்புத்தகங்கள் எல்லோருடைய கரங்களிலும் - அவற்றின் கருத்துக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தவழட்டும்! வெல்லட்டும்!
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
- எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக.
- யாருடைய மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் அஞ்சாமல் இயங்கி வருகிறோம்.
சென்னை, கலைவாணர் அரங்கில் எம்.பி. திருச்சி சிவா எழுதிய 5 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
பிறகு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்றத்தில் திமுகவின் முகமாக திருச்சி சிவா திகழ்கிறார். கட்சி பணியில் தனது உழைப்பால் உயர்ந்தவர் திருச்சி சிவா.
எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக. மிசா என்ற சிறைச்சாலையில் பயின்றவர்கள் நாங்கள்.
யாருடைய மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் அஞ்சாமல் இயங்கி வருகிறோம்.
ஒரு எம்.பி., எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக திருச்சி சிவா விளங்குகிறார்.
75 ஆண்டுகளாக இயக்கம், கொடி, சின்னம் மாறவில்லை. என் மீதான அன்பின் மிகுதியால் கலைஞராக வாழும் தளபதி என கூறி இருக்கிறார்.
என் மீதான அன்பின் மிகுதியால் கலைஞராக வாழும் தளபதி என கூறி இருக்கிறார். கலைஞராக அல்ல அவரின் வழியில் வாழ்ந்து வருகிறேன்.
பொய்களை எப்படி உண்மையா மாற்றலாம் என யோசித்துக் கொண்டு எதிரிகள் வருகிறார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நடராஜர் கோவிலுக்கு சொந்தமான 3000 ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு.
- நிலங்களை பொது தீட்சகர்கள் முறையாக பராமரிக்கவில்லை என புகார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 3,000 ஏக்கர் நிலத்தில் 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக இந்து சமய அறநிலையத் துறை பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தது.
நிலம் விற்கப்பட்டதாக கூறப்படுவது பற்றி ஆவணங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க கடலூர் ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 3000 ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை பொது தீட்சகர்கள் முறையாக பராமரிக்கவில்லை என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிலங்களை மீட்பது தொடர்பாக விசாரணை நடத்தி, 12 வாரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சாம்சங் நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் உடன் வரும் திங்கட்கிழமை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை.
ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் செப்டம்பர் 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து 25 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக ஊதியத்தை உயர்த்தி வழங்கிட, தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கிடைத்திட, 9 மணி நேரத்திற்கும் அதிகமாக நீளும் பணிநேரத்தைக் குறைத்திட உள்ளிட்ட நியாயமான பல கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 90 சதவிகித சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை செய்யப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்தது. ஆனாலும் தொடர்ந்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அமைச்சர்கள் டிஆர்பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணசேன் ஆகியோர் தலையிட்டு தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சாம்சங் நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் உடன் வரும் திங்கட்கிழமை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
- ஆன்மீக விழிப்புணர்வு வாயிலாக, சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களையமுடியும் என்பதை உணர்ந்தவர்.
- அவர் உருவாக்கிய வடலூர் சத்திய ஞான சபை, இன்றும் தினமும் லட்சக்கணக்கான மக்களின் பசியாற்றி வருகிறது.
சென்னை:
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
அன்பையே தெய்வ வடிவாகக் கண்டு, அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்துவதன் மூலம் இறைவனை அடையலாம் என, ஜீவகாருண்யத்தையும், ஆன்மீகத்தையும் ஊட்டி வளர்த்த சிறந்த முருக பக்தரான வள்ளலார் பெருமான் அவதார தினம் இன்று. பிறப்பினால் ஏற்படும் ஜாதி சமூக வேறுபாடுகள் அர்த்தமற்றவை என்று குறிப்பிட்டதோடு ஆன்மீக விழிப்புணர்வு வாயிலாக, சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களையமுடியும் என்பதை உணர்ந்தவர்.
பசித்தவர்களுக்குச் சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளிப்பதற்காக அவர் உருவாக்கிய வடலூர் சத்திய ஞான சபை, இன்றும் தினமும் லட்சக்கணக்கான மக்களின் பசியாற்றி வருகிறது. சமூகத்தில் அன்பு மற்றும் சகோதரத்துவம் நிலவ வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே வாழ்ந்த திருவருட்பிரகாச வள்ளலார் பெருமானைப் போற்றி வணங்குவோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும்.
- உணவு பாதுகாப்புத் துறையின் நுகர்வோர் குறை தீர்ப்பு செயலியினை பதிவிறக்கம் செய்து புகார் செய்யலாம்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆயுத பூஜை, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரவகைகள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பதும், சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பு அளிப்பதும் நமது கலாச்சாரமாக விளங்கி வருகிறது.
மேலும் தீபாவளி பண்டிகை காரணமாக இனிப்பு மற்றும் காரவகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இனிப்பு, காரவகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது. மேலும் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணையை மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்தக்கூடாது.
பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விபரச்சீட்டு இடும்போது அதில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர். தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலா வதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு மற்றும் FSSAI உரிமம் /பதிவு எண் கட்டாயம் குறிப்பிட வேண்டும். உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும்.
உணவு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும் unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் புகார் அளிக்கலாம். மேலும் கூகுள் பிளேஸ்டோரில் இருந்து உணவு பாதுகாப்புத் துறையின் நுகர்வோர் குறை தீர்ப்பு செயலியினை பதிவிறக்கம் செய்து புகார் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது லேசான மழை பெய்து வருகிறது. மதிய வேளையில் மழை பெய்து வருவதால் சென்னை நகரத்தில் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது.
ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழையும், திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மோசடி வழக்குகள் சென்னை மத்திய குற்றப்பிரிவில் இருப்பதால் சனிக்கிழமை ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
- போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
சென்னை:
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 26-ந்தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
அவர் மீது மோசடி வழக்குகள் சென்னை மத்திய குற்றப்பிரிவில் இருப்பதால் சனிக்கிழமை ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதன்படி இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி காலை 10 மணிக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
- சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து தொடங்கியது.
- ஈரோடு மாநகர் பகுதியில் தொடர்ந்து 45 நிமிடத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. தொடர்ந்து 101 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நேற்று காலை முதல் மதியம் வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. மதியம் 4 மணிக்கு பிறகு வானில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்து தொடங்கியது.
ஈரோடு மாநகர் பகுதியில் தொடர்ந்து 45 நிமிடத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. அதன் பின்னரும் மழை தூறி கொண்டே இருந்தது. ஈரோடு பஸ் நிலையம், நாச்சியப்பா வீதி, ஆர்.கே.வி.ரோடு, சக்தி ரோடு, காந்திஜி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தெப்பம் போல் தேங்கின்றது.
இந்த திடீர் மழையால் ஈரோட்டில் மேடன பகுதியான சாஸ்திரி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெருக்கெடுத்த வெள்ளநீர் நாடார் மேடு பகுதி நோக்கி பாய்ந்து சென்றது. இதனால் ஈரோடு நாடார்மேடு பகுதியில் தாழ்வாக உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
வீட்டில் புகுந்த தண்ணீரை பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் வெளியே ஊற்றினர். பின்னர் சிறிது நேரத்தில் மழைநீர் வடிய தொடங்கியது. இதேபோல் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் உள்ள பெரிய காய்கறி மார்க்கெட்டிலும் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். ஈரோடு மாநகர பகுதியில் அதிகபட்சமாக 49 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள மாக்கம்பாளையம் மலை கிராமத்தில் 3000-க்கும் மேற்பட்ட வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு குரும்பூர் பள்ளம் சர்க்கரை பள்ளம் வழியாகத்தான் செல்ல வேண்டும். கடம்பூரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மார்க்கம்பாளையம் பகுதிக்கு அரசு பேருந்து தினமும் 2 முறை இயக்கப்ப டுகிறது. மழைக்காலங்களில் குரும்பூர் பள்ளங்களில் அடிக்கடி வெள்ளம் கரை புரண்டு ஓடும்.
இதேபோல் நேற்று இந்த கனமழையால் சக்கரை பள்ளத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் சக்கரை பள்ளம் வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. திடீர் மழையால் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்து சென்றனர்.
இந்நிலையில் காய்கறி லோடுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஒன்று அந்தக் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது. டிரைவரால் எவ்வளவு முயற்சி செய்தும் வாகனத்தை இயக்க முடியவில்லை. உடனடியாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு கயிறு கட்டி சரக்கு வாகனத்தை நீண்ட போராட்டத்துக்கு பிறகு மீட்டனர். இந்த பகுதி மக்கள் நீண்ட வருடமாக உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மிககனத்த மழை பெய்தது. இதன் காரணமாக அருள்வாடி, சூசைபுரம், திகினாரை, ஏரகனள்ளி, கெட்டவாடி செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு மழைநீர் வடிந்த உடன் போக்குவரத்து சீரானது.
இதேபோல் ஆசனூர், திம்பம், அரேபாளையம் பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் அரேபாளையத்தில் இருந்து கொள்ளேகால் செல்லும் சாலையில் வலுவிழந்து காணப்பட்ட மூங்கில் மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூங்கில் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதன் பின்னர் சுமார் 2 மணி நேரம் கழித்து போக்குவரத்து சீரானது.






