என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மாநாடு வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.
- கிணறுகளுக்கு இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணி நடக்கிறது.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழக கட்சியின் மாநாடு பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெறுகிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து உள்ளார்.இதற்கான கொடி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. நடிகர் விஜய் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.
நேற்று முன்தினம் மாநாட்டிற்கு பந்தக்கால் நடும் விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அதை தொடர்ந்து மாநாடு நடைபெறும் இடத்தினை சமன்படுத்தி அப்பகுதியில் உள்ள 6 கிணறுகளுக்கு இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணியும், மேடை அமைக்க அடித்தள பைப்புகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
மாநாடு பந்தல் அமைக்க இரும்பு பைப்புகள் ஏற்றிவந்த லாரி ,மாநாடு திடலில் சேற்றி சிக்கி நின்றது.பின்னர் லாரியை கிரேன் கொண்டு அப்புறப்படுத்தினர்.
மாநாட்டிற்கு வருகின்ற தொண்டர்களுக்கு உணவு,குடிநீர் தடையின்றி கிடைக்கும் வகையில் தனியார் கம்பெனியிடம் ஒப்படைக்க பட்டுள்ளது .ஆண்கள் பெண்களுக்கு 250 கழிவறை வசதி,வாகனங்கள் நிறுத்த சாலையின் இரு புறங்களிலும்45 ஏக்கர் அளவில் இட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாநாடு மேடை அமைக்கும் பணி பிரத்யேகமாக சினிமா கலை அரங்க இயக்குனர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாரத்தில் மேடை அமைக்கும் பணியை கலைஞர்கள் ஆய்வு செய்துள்ளனர் . மாநாடு பணிகள் தீவிரம் அடைந்துள்ளதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் உள்ள கிணறுகளுக்கு இரும்பு தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
- குடிநீர் வாரிய உதவி பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரரை மிரட்டியதாக வழக்கு.
- 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
சென்னை:
மதுரவாயல், வி.ஜி.பி. அமுதா நகர் கூவம் கரையோரம் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 2019-ம் ஆண்டு முதல் கழிவுநீர் உந்துநிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
அங்கு சென்னை மாநகராட்சி 144-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஏ.ஸ்டாலின், தனது ஆதரவாளர்களை வைத்து, இந்த இடத்தில் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என நேரிலும், தொலைபேசியிலும் குடிநீர் வாரிய உதவி பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய செயற்பொறியாளர் மகாலட்சுமி மற்றும் உதவி பொறியாளர் கலைச் செல்வி ஆகியோர் கோயம்பேடு போலீசில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த கோயம்பேடு போலீசார் தி.மு.க. கவுன்சிலர் ஸ்டாலின் உள்பட 3 பேர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பணம் கேட்டு மிரட்டுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கவுன்சிலர் ஸ்டாலினை தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் வடக்குப்பகுதி, 144-வது வட்டச்செயலாளரான சென்னை மாநகராட்சி உறுப்பினர் ஏ.ஸ்டாலின் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்.
- மானிய விலையில் பெண்களுக்கு வழங்கப்பட உள்ளன.
- திட்டத்துக்கான அனுமதி வழங்கும் அரசாணை விரைவில் வெளியாகிறது.
சென்னை:
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சென்னையில் 250 இளஞ்சிவப்பு நிற ஆட்டோக்கள் மானிய விலையில் பெண்களுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்துக்கான அனுமதி வழங்கும் அரசாணை விரைவில் வெளியாகிறது.
தமிழக சட்டசபையில் சமூகநலத்துறை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் கீதா ஜீவன், 'சென்னை மாநகரத்தில் ரெயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் பெண்களால் இயக்கப்படும் ஆட்டோக்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட போலீஸ் துறை மூலம் கண்காணிக்கப்படும் வகையில் 'இளஞ்சிவப்பு' ஆட்டோ நடைமுறைப்படுத்தப்படும்.
வாகனம் ஓட்டும் உரிமம் பெற்ற ஆர்வமுள்ள 200 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு ஆட்டோ மொத்த விலையில் ரூ.1 லட்சம் அரசால் மானியமாக வழங்கப்படும். கடன் உதவியாக தேசியமயமாக்கப்பட்ட அல்லது இதர வங்கிகளுடன் இணைக்கப்படுவார்கள்' என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்திடும் வகையில் அதற்கான பணிகளை சமூக நலத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இந்த திட்டத்தில் பெண்களை, குறிப்பாக கணவனை இழந்த பெண்களை இணைத்து அவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த சமூக நலத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதி ஒப்புதல் கோரி தமிழக அரசுக்கு சமூக நலத்துறை சார்பில் கருத்துரு வழங்கப்பட்டுள்ளது. அறிவிப்பில் 200 பெண் பயனாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கையை 250 ஆக உயர்த்தவும் சமூக நலத்துறை திட்டமிட்டுள்ளது.
இந்த இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோ திட்ட பயனாளிகளை, 'கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்' மூலம் தேர்வு செய்ய சமூக நலத்துறை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
எப்போது வேண்டுமென்றாலும் இதற்கான நிதி ஒப்புதல் வழங்கி தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியாக வாய்ப்பு உள்ளது. அரசாணை வெளியிடப்பட்டவுடன், மானிய விலையிலான 'இளஞ்சிவப்பு' ஆட்டோ பெறும் பயனாளிகள் தேர்வு தொடங்கும் என சமூகநலத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
முதல்கட்டமாக தலைநகர் சென்னையில் 250 பெண்களுக்கு 'இளஞ்சிவப்பு' ஆட்டோ வாங்குவதற்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்க சமூக நலத்துறை திட்டமிட்டுள்ளது.
சென்னையில் வெற்றிகரமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, படிப்படியாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில், பெண்களுக்கான இளஞ்சிவப்பு ஆட்டோ சேவை விரிவுப்படுத்தப்படும் என்று சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தமிழகத்தில் மின்சார தேவை, மின் வினியோகத்தில் எந்தவித இடைவெளியும் இல்லை.
- மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இயங்கும் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, நேற்று ஆய்வு மேற்கொண்டார். மின்னகத்தில் பதிவான மின்சாரம் தொடர்பாக பொதுமக்களின் புகார்கள், அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மின் தடை ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களிடம் பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர், மேலாண்மை இயக்குனர் நந்தகுமார், தமிழ்நாடு பசுமை எரிசக்தி மேலாண்மை இயக்குனர் அனீஷ்சேகர், இணை மேலாண்மை இயக்குனர் விஷூ மகாஜன் உள்பட பலர் இருந்தனர்.
இதற்கிடையில் தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மின்னகம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 28 லட்சத்து 69 ஆயிரத்து 876 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 28 லட்சத்து 64 ஆயிரத்து 215 புகார்கள் (99.80 சதவீதம்) மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின்சார தேவை, மின் வினியோகத்தில் எந்தவித இடைவெளியும் இல்லை. மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.
எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைளையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எடுத்துள்ளது. மின் வினியோகம் சார்ந்த குறைபாடுகளை சரி செய்ய 9498794987 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
- கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் வசதிக்காகவும் சிறப்பு ரெயில்கள்.
சென்னை:
ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு வருகிற 8, 9 தேதிகளில் சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து நாகர்கோவில், தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் வசதிக்காகவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* கோவையிலிருந்து இன்று (6-ந்தேதி) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06171), மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து நாளை (7-ந்தேதி) காலை 10.30 மணிக்கு புறப்பட்டு கோவை வழியாக போடனூர் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06172), அதேநாள் மாலை 6 மணிக்கு போடனூர் சென்றடையும்.
* சென்னை சென்டிரலில் இருந்து வரும் 9-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் (06178), மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து வரும் 10-ந்தேதி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06179), மறுநாள் காலை 11.25 மணிக்கு வந்தடையும்.
* சென்னை சென்டிரலில் இருந்து வரும் 8-ந்தேதி இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி செல்லும் சிறப்பு ரெயில் (06186), மறுநாள் மதியம் 1.50 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
மறுமார்க்கமாக, தூத்துக்குடியில் இருந்து வரும் 9-ந்தேதி மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06187), மறுநாள் காலை 8.55 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.
* திருச்சியில் இருந்து வரும் 11-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையில் (திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை தவிர்த்து) வாரத்தின் 5 நாட்கள் காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06190), அதேநாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வரும் 11-ந்தேதி முதல் 31-ந்தேி வரையில் (திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை தவிர்த்து) வாரத்தின் 5 நாட்கள் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் சிறப்பு ரெயில் (06191), அதேநாள் இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விமானப்படை சாகச நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
- பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் இன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.
இதுதவிர சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்கிறார். விமான சாகச நிகழ்ச்சியைக் காண சுமார் 3 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது மக்கள் வருகையை ஒட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், வழக்கத்தை விட கூடுதல் பேருந்துகளை இயக்குவதாக மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்து இருக்கிறது. விமானப்படை சாகச நிகழ்ச்சியை ஓட்டி 6 ஆயிரத்து 500 காவல் துறையினர் உள்பட மொத்தம் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
- 9-ந் தேதி 225 பஸ்களும், 10-ந் தேதி 880 பஸ்களும் இயக்க திட்டம்.
- அரசு விரைவு போக்குவரத்துக் கழக அறிவிப்பு.
சென்னை:
அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆயுத பூஜை பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 9-ந் தேதி (புதன்கிழமை) 225 பஸ்களும், 10-ந் தேதி (வியாழக்கிழமை) 880 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 9-ந் தேதி (புதன்கிழமை) 35 பஸ்களும், 10-ந் தேதி (வியாழக்கிழமை) 265 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விழுப்புரம், சிதம்பரம், திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு மாதவரத்தில் இருந்து 9-ந் தேதி மற்றும் 10-ந் தேதி ஆகிய 2 நாட்களும் 110 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
- தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
நேற்று விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 17 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. மழை தொடர்ந்து வருவதை அடுத்து நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
- மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தால் பரபரப்பு.
- விமானம் தரையிறங்கிய போது, டயர் வெடித்தது.
மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தின் டயர்கள், விமான நிலையத்தில் தரையிறங்கிய போது வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 146 பயணிகளுடன் மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தை தரையிறக்கிய போது, அதன் டயர் திடீரென வெடித்தது.
டயர் வெடித்த நிலையிலும், விமான சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை கட்டுப்படுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டயர் வெடித்ததை தொடர்ந்து, குறிப்பிட்ட விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டு, அனைத்து பயணிகளும் நகரின் பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
- துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
- புத்தகங்கள் எல்லோருடைய கரங்களிலும் - அவற்றின் கருத்துக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தவழட்டும்! வெல்லட்டும்!
சென்னை, கலைவாணர் அரங்கில் எம்.பி. திருச்சி சிவா எழுதிய 5 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

நூல் வெளியீட்டு விழா குறித்து துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறப்பட்டுள்ளதாவது:-
கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர் - தி.மு.கழகத்தின் மாநிலங்களவைக் குழுத்தலைவர் அண்ணன் திருச்சி சிவா அவர்கள் எழுதியுள்ள 5 நூல்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டு வாழ்த்திய நிகழ்வில் கலைவாணர் அரங்கில் இன்று பங்கேற்றோம்.
நம் கழகத்தலைவர் அவர்கள் திமுக இளைஞரணியை தொடங்கிய போது, அதன் வளர்ச்சிக்கு முன்வரிசையில் நின்று உழைத்தவர் அண்ணன் சிவா அவர்கள்.
இளைஞரணி பயிற்சி பாசறைக் கூட்டம் உட்பட, தான் ஏறுகின்ற மேடைகள் தோறும் திராவிட இயக்கக் கொள்கைகளை ஓர் ஆசிரியரைப் போல அடுத்தடுத்த தலைமுறைக்கும் பாடமெடுக்கும் ஆற்றலுக்குச் சொந்தக்காரர்.
தனது மேடைப்பேச்சு - 'மிசா' சிறைவாசம் - முரசொலிக் கட்டுரைகள் - பேட்டிகள் - வாட்ஸ் அப் வழி கருத்துக்கள் ஆகியவற்றை புத்தகங்களாகக் கொண்டு வந்திருக்கும் அண்ணன் சிவாவை வாழ்த்தியும், இச்சிறப்புக்குரிய நிகழ்வுக்கு வந்தோரை வரவேற்றும் உரையாற்றினோம்.
அண்ணன் சிவா எழுதியுள்ள இப்புத்தகங்கள் எல்லோருடைய கரங்களிலும் - அவற்றின் கருத்துக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தவழட்டும்! வெல்லட்டும்!
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
- எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக.
- யாருடைய மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் அஞ்சாமல் இயங்கி வருகிறோம்.
சென்னை, கலைவாணர் அரங்கில் எம்.பி. திருச்சி சிவா எழுதிய 5 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
பிறகு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்றத்தில் திமுகவின் முகமாக திருச்சி சிவா திகழ்கிறார். கட்சி பணியில் தனது உழைப்பால் உயர்ந்தவர் திருச்சி சிவா.
எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக. மிசா என்ற சிறைச்சாலையில் பயின்றவர்கள் நாங்கள்.
யாருடைய மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் அஞ்சாமல் இயங்கி வருகிறோம்.
ஒரு எம்.பி., எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக திருச்சி சிவா விளங்குகிறார்.
75 ஆண்டுகளாக இயக்கம், கொடி, சின்னம் மாறவில்லை. என் மீதான அன்பின் மிகுதியால் கலைஞராக வாழும் தளபதி என கூறி இருக்கிறார்.
என் மீதான அன்பின் மிகுதியால் கலைஞராக வாழும் தளபதி என கூறி இருக்கிறார். கலைஞராக அல்ல அவரின் வழியில் வாழ்ந்து வருகிறேன்.
பொய்களை எப்படி உண்மையா மாற்றலாம் என யோசித்துக் கொண்டு எதிரிகள் வருகிறார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நடராஜர் கோவிலுக்கு சொந்தமான 3000 ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு.
- நிலங்களை பொது தீட்சகர்கள் முறையாக பராமரிக்கவில்லை என புகார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 3,000 ஏக்கர் நிலத்தில் 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக இந்து சமய அறநிலையத் துறை பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தது.
நிலம் விற்கப்பட்டதாக கூறப்படுவது பற்றி ஆவணங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க கடலூர் ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 3000 ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை பொது தீட்சகர்கள் முறையாக பராமரிக்கவில்லை என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிலங்களை மீட்பது தொடர்பாக விசாரணை நடத்தி, 12 வாரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.






