என் மலர்
நீங்கள் தேடியது "வடகிழக்கு பருவழை"
- புயல் உள்ளிட்ட வானிலை நிகழ்வுகள் உருவாவதற்கும், கடல் சார்ந்த அலைவுகளை ஈர்ப்பதற்கும் கடலின் வெப்பநிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
- இதேபோன்ற நிகழ்வு 2019-ம் ஆண்டில் நிகழ்ந்தபோது, அரபிக்கடலில் அடுத்தடுத்த வானிலை நிகழ்வுகள் உருவாகின.
சென்னை:
வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வருகிறது. பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் புயல் போன்ற நிகழ்வுகளால் மழைக்கான வாய்ப்பு அதிக அளவில் இருக்கும்.
ஆனால் நடப்பாண்டில் பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே 'மோன்தா' புயல் உருவாகி, ஆந்திரா நோக்கி சென்றது. தமிழகத்தில் வட மாவட்டங்களில் ஓரளவுக்கு மழையை கொடுத்தது. தற்போது பருவமழை சற்று இடைவெளி விட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதியில் இருந்து மீண்டும் பருவக்காற்று திரும்பி, 15-ந் தேதிக்கு பிறகு மழை தீவிரம் எடுக்கவுள்ளது.
இந்தநிலையில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் வலுவான புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் தெரிவித்திருக்கிறார். அதாவது, புயல் உள்ளிட்ட வானிலை நிகழ்வுகள் (தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலம்) உருவாவதற்கும், கடல் சார்ந்த அலைவுகளை ஈர்ப்பதற்கும் கடலின் வெப்பநிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது வங்கக்கடலில் தற்போது சாதகமாக உள்ளது.
கிழக்கிந்திய பெருங்கடலில் சுமத்ரா கடற்கரை அருகே கடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதும், அதேநேரத்தில் சோமாலியா கடற்கரை அருகே குளிர்ச்சி நீடிப்பதும் போன்ற சாதகமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு இந்திய பெருங்கடல் இருமுனை எதிர்மறை நிகழ்வு (நெகட்டிவ் ஐ.ஓ.டி.) என சொல்லப்படுகிறது. இது அடுத்துவரும் 2 வாரங்களில் மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது என ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
ஏற்கனவே இதேபோன்ற நிகழ்வு 2019-ம் ஆண்டில் நிகழ்ந்தபோது, அரபிக்கடலில் அடுத்தடுத்த வானிலை நிகழ்வுகள் உருவாகின. அதில் ஒன்று 'சூப்பர்' புயலாகவும், ஒன்று அதி தீவிர புயலாகவும், ஒன்று மிக தீவிர புயலாகவும் வலுவடைந்தது. இதுதவிர மற்றவை தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலங்களாக உருவானது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் தற்போதைய கடல் வெப்பநிலை அதிகரிப்பு எதிரொலியாக வங்கக்கடலில் அடுத்தடுத்த தொடர் நிகழ்வுகளும், வலுவான புயலும் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், இது நல்ல மழையை கொடுக்கும் நிகழ்வுகளாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
- தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட அதிகமான மழை பதிவாகி உள்ளது.
- சென்னையில் இயல்பை விட சுமார் 57 சதவீதம் அதிகமாக 28 செ.மீ.மழை பெய்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு வலுவிழந்ததால் பெரும்பாலான பகுதுகளில் பெரிய அளவில் மழை கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று 8.கி.மீ வேகத்தில் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து சென்னைக்கு கிழக்கே-தென் கிழக்கில் 790 கி.மீ. தூரத்திலும், விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கில் 850 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டிருந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நகர்ந்து வருகிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் 27-ந்தேதி காலையில் ஒரு சூறாவளி புயலாக மாறும். இந்த 'மோன்தா' புயல் சென்னையில் இருந்து சற்று விலகி ஆந்திரா நோக்கி நகர தொடங்கும். அது வடமேற்கு நோக்கி நகர்ந்து பின்னர் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அக்டோபர் 28-ந் தேதி (செவ்வாய்) காலைக்குள் ஒரு கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடையும். அப்போது பலத்த சூறாவளி காற்று வீசத் தொடங்கும்.
இந்த சூறாவளி புயல் வடக்கு-வட மேற்கு நோக்கி மேலும் நகர்ந்து செவ்வாய்க்கிழமை (28-ந்தேதி) இரவு காக்கி நாடாவை சுற்றி உள்ள மச்சிலப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திர மாநில கடற்கரையை கடக்கும்.
அப்போது அதிகபட்சமாக மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசும். இந்த காற்று சில இடங்களில் 110 கி.மீ வேகத்தில் வீசும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
சூறாவளி புயல் ஆந்திராவில் கரையை கடப்பதால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. அதிலும் சூறாவளி புயல் மோன்தா சென்னை நோக்கி வராமல் சற்று விலகி ஆந்திரா நோக்கி செல்கிறது.
இதனால் சென்னை சூறாவளி புயலில் இருந்தும், அதிகனமழையில் இருந்து தப்பியது என்றே சொல்லலாம். சூறாவளி புயல் ஆந்திராவை நோக்கி திரும்புவதால், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே அதிக மழை பெய்ய வாய்ப்பு ஏற்படும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் விட்டு விட்டு ஒருசில இடங்களில் கனமழை பெய்யும். இருந்தாலும் இந்த மாவட்டங்களுக்கு வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட அதிகமான மழை பதிவாகி உள்ளது.
சென்னையில் இயல்பை விட சுமார் 57 சதவீதம் அதிகமாக 28 செ.மீ.மழை பெய்துள்ளது. காஞ்சிபுரத்தில் 25 செ.மீ. இயல்பை விட 88 சதவீதம் அதிகமாக மழை கிடைத்துள்ளது.
திருவள்ளூர் 30 செ.மீ. இது இயல்பை விட 113 சதவீதம் அதிகமாகவும், செங்கல்பட்டில் 20 செ.மீ. இது இயல்பைவிட 27 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் அதாவது இயல்பைவிட 71 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.
- சென்னைக்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
- திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை மறுநாள் ஆரஞ்ச் அலர்டும் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, வங்கக்கடலில் முதலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.
இதனை தொடர்ந்து தற்போது வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நாளை மறுநாள் புயலாக உருவாக உள்ளது. இந்த புயலுக்கு 'மோன்தா' என்று தாய்லாந்து பரிந்துரைத்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகும் 'மோன்தா' புயல் காரணமாக சென்னைக்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
சென்னையில் இன்றும், நாளையும் கனமழையும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என்றும் திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் சென்னையில் இருந்து 950 கி.மீ தொலைவில் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
- பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம், சிவகங்கை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, சென்னை மற்றும் புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் மற்றும் பணியாளர் பாதுகாப்புடன் கூடிய தடையில்லா மின்வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.
- பொதுமக்கள் மின்தடை புகார்களை மின்னகத்தினை "94987 94987" என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
சென்னை:
வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், மின்சாரத்துறை செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மின்சார வாரிய தலைவர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்படும் மின்பகிர்மான கட்டுப்பாட்டு அறை, மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் மற்றும் மின்னகம் ஆகியவற்றை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கினார். இதுகுறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
போதிய தளவாடங்கள் இருப்பு வைத்திருப்பதுடன், மின்தடை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புடன் கூடிய விரைவான மின்சார வினியோகம் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் சுழற்சி முறையில் பணி செய்யவும், மாநில அளவில் மின்சார தளவாடப்பொருட்கள் உடனுக்குடன் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து எடுத்து செல்ல பணியாளர் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் பணியாளர் பாதுகாப்புடன் கூடிய தடையில்லா மின்வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.
கனமழை மற்றும் காற்றின் வேகம் காரணமாக மரங்கள் மின்சார கம்பங்களின் மீது விழுந்து சேதமடையும்போது, உடனடியாக, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மிகுந்த கவனத்துடனும், உரிய பாதுகாப்புடனும் செயல்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.
மாவட்ட பேரிடர் மேலாண்மை துறையினர், மின்சார வாரிய அலுவலர்கள் தலைமையிலான களப்பணி குழுக்கள், தொடர்பு எண்கள் மற்றும் பணியாளர் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டு தயார்நிலை உறுதி செய்ய வேண்டும்.
பொதுமக்கள் மின்தடை புகார்களை மின்னகத்தினை "94987 94987" என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மின்தொடரமைப்புக் கழக மேலாண்மை இயக்குநர் டி.சிவக்குமார், இயக்குநர்கள் ஏ.செல்லக்குமார் (பகிர்மானம்), ஏ,கிருஷ்ணவேல் (இயக்கம்) மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு காரணமாக சிதம்பரம் பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
- மாவட்டம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளானர்கள்.
கடலூர்:
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அதன்படி பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 1 வாரத்துக்கு மேலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
நேற்று முதல் பெய்ய தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய விடிய கொட்டிதீர்த்தது. இன்று காலையும் மழை பெய்தபடி காணப்பட்டது. இதேபோல மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு காரணமாக சிதம்பரம் பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மாவட்டம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளானர்கள்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் சூழும் பகுதிகளுக்கு செல்ல படகு தயார் நிலையில் உள்ளது. இதுதவிர மாநகராட்சி, நகராட்சி பகுதியில் வெள்ளத்தை தடுக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரிகள் மற்றும் குளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் புவனகிரியை சுற்றியுள்ள ஆதிவராக நத்தம், மஞ்சகுழி, பெருமாத்தூர், சுத்துக்குழி, பூதவராயன்பேட்டை, வண்டு ராயன்பட்டு, உடையூர், கீரப்பாளையம், வடகறி ராஜபுரம், ஒரத்தூர், தெற்கு திட்டை, வடக்குதிட்டை, பு.சித்தேரி, சாத்தப்பாடி ஆகிய பல்வேறு கிராமங்களில் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது.
- கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு ஒப்பந்ததாரருக்கு பல பணிகள் ஒதுக்கி இருக்கிறார்கள்.
- குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகள் முடியவில்லை.
சென்னை:
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சைதாப்பேட்டை பனகல் மாளிகை, பஜார் ரோடு, வேளச்சேரி ரெயில் நிலைய பகுதி, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம் பகுதிகளில் இன்று ஆய்வு செய்தனர். பின்னர் எ.வ.வேலு கூறியதாவது:-
மழை நீர் வடிகால் கால்வாய் பணிகள் நிறைவடையாமல் போனதற்கு காரணம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு ஒப்பந்ததாரருக்கு பல பணிகள் ஒதுக்கி இருக்கிறார்கள். அதனால்தான் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகள் முடியவில்லை. இப்போது நாங்கள் ஒரு ஒப்பந்ததாரருக்கு ஒரு பணி என்ற அடிப்படையில்தான் பணிகளை ஒதுக்கி வருகிறோம். அ.தி.மு.க. ஆட்சியில்தான் பிரச்சினை. அவர்கள் கஜானாவையும் காலி செய்து, ஊரையும் காலி செய்து விட்டார்கள். நாங்கள்தான் அதை சரி செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வடகிழக்கு பருவமழை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
- பருவமழை வருவதற்குள் கிடப்பில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆணையிட்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நெருங்கி வருவதால், சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை வெள்ள மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தபடுவதற்கு 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
156 பேட்டரி ஸ்ப்ரேகள், 324 புகைப்பரப்பும் இயந்திரங்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட 64 புகைப்பரப்பு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய ஆலோசனை கூட்டத்தில், ஓட்டேரி, விருகம்பாக்கம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் கால்வாய் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணி விரைந்து நடைபெற்று வருகிறது.
நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, மின்சார துறை, நகர்ப்புற உள்ளாட்சி துறை பல்வேறு துறை அதிகாரிகளையும் வைத்து முதலமைச்சர் நேற்று ஆலோசனை நடத்தினார். பருவமழை வருவதற்குள் கிடப்பில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆணையிட்டுள்ளார்.
1156 இடங்களில் 792 கிமீ தொலைவில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 6 நாட்களில் எல்லா பணிகளும் விரைவாக முடியும். 13 செ.மீ மழை பெய்த இடத்தில் கூட, எவ்வளவு நேரம் அங்கு மழைநீர் தேங்கியது என மணி நேரத்தை கணக்கில் வைத்து அங்கு என்ன செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை செய்துள்ளோம்.
கொசஸ்த்தலை ஆற்று வடிகால் பணிகள், 24.08.2024-க்குள் முடித்திருக்க வேண்டும். அது இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது வரை கொசஸ்தலை ஆற்றை நீர்வளத்துறையினர் தான் சீர் செய்து வருகிறார்கள். எங்கள் துறை பணி என்னவென்றால் மழைநீர் கால்வாய் குழாய்களை அதில் சேர்க்க வேண்டியது தான்.
நாங்கள் குழாய் இணைப்பு சரியாக வைத்துள்ளோம். அவர்கள் வேலை முடிந்தவுடன் இணைத்து விடுவோம். இரண்டு மூன்று மாதங்களில் நிரந்தரமாகவே அது முடிந்துவிடும்.
வானிலை ஆய்வு மையம் கூறும் சராசரி மழையின் அளவுக்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். திடீரென்று ஒரே நாளில் 30 செ.மீ, 45 செ.மீ மழை பெய்தால் என்ன செய்வது.? இயற்கையை வெல்ல யாராலும் முடியாது. ஆனாலும் அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மழை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது.
- தமிழகத்தின் வட பகுதிகளில் இயல்பான அல்லது இயல்பை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்பு.
புதுடெல்லி:
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது என்றும், அக்டோபர் 4-வது வாரத்தில் மழை அளவு அதிகரிக்கும், 3 மாதங்களுக்கு மழை இருக்கும் என்றும் தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்தநிலையில் வருகிற 15-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரை கேரளா, தமிழகம்,தெற்கு கர்நாடகா, ராயலசீமா, ஆந்திரப் பிரதேசத்தில் இயல்பைவிட மழை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் வட பகுதிகளில் இயல்பான அல்லது இயல்பை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.
- அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும்.
- சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 2 நாட்கள் மிக கனமழை பெய்யும்.
சென்னை:
வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளது.
42 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும்.
சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 2 நாட்கள் மிக கனமழை பெய்யும்.
அக்டோபர் 1 முதல் தற்போது வரை 12 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னையில் மாலை தொடங்கி இரவு வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
- சென்னையால் 15 செ.மீ மழையை தாங்க முடியும்.
- 40 செ.மீ மழை பெய்தால் 4 நாட்கள் நீர் தேங்கும் என்ற சூழலில்தான் உள்ளோம்.
வங்கக் கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம். செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்சு' எச்சரிக்கையும் நாளை 'சிவப்பு' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று கனமழையும் நாளை மிக கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 8 மணியில் இருந்து மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு முழுவதும் சூறைக்காற்றுடன் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையில் அது கனமழையாக மாறியது. இதனால் சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் மழைநீர் தேங்குவதற்கு காரணம் என்ன என்று வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "சென்னையில் பெய்யும் மொத்த மழையும் எண்ணூர், நேப்பியார், அடையாறு, ஒக்கியம் வழியாக கோவளம் ஆகிய 4 வழிகளில் மட்டுமே வெளியேறுகிறது. சென்னையால் 15 செ.மீ மழையை தாங்க முடியும். 20 செ.மீ மழை பெய்தால் சென்னையில் ஒரு நாள் நீர் தேங்கும். 30 செ.மீ மழை பெய்தால் சென்னையின் பள்ளிக்கரணை, புளியந்தோப்பு, முடிச்சூர் போன்ற நீர்நிலைகளுக்கு அருகே உள்ள பகுதிகளில் கண்டிப்பாக மழைநீர் தேங்கும்.
40 செ.மீ மழை பெய்தால் சென்னையில் 4 நாட்கள் நீர் தேங்கும் என்ற சூழலில்தான் உள்ளோம். மழைநீர் வடிகால் என்பது சாலைக்காக போடப்படுவது. 40 செ.மீ அளவுக்கு பெய்யும் மழைக்காக வடிகால் அமைக்க முடியாது. நம் பகுதியின் சூழலை புரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.
- சென்னையில் வெள்ள நீர் தேங்காது என்ற நிலையை உருவாக்கும் அளவு களப்பணிகள் செய்யவேண்டும்.
- ஊடகங்களின் உதவியுடன் வீண் விளம்பரம் செய்து கொண்டிருந்தால் மட்டும் போதாது என்றார்.
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்னையில் இன்று காலை 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ. அளவுக்கு மட்டுமே மழை பொழிந்துள்ள நிலையில், அதையே சென்னை மாநகரத்தால் தாங்க முடியவில்லை.
சென்னை மாநகரின் பல பகுதிகளில் ஓரடி உயரத்திற்கும் கூடுதலாக மழை நீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது.
சென்னையில் தமிழக அரசாலும், சென்னை மாநகராட்சியாலும் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் உள்ளிட்ட வெள்ளத் தடுப்புப் பணிகள் போதிய அளவுக்கு பயனளிக்கவில்லை என்பதையே 6 செ.மீ. மழையின் விளைவுகள் காட்டுகின்றன. அப்படியானால், 20 செ.மீ. மழை பெய்தால் சென்னை என்னவாகும் என்ற அச்சம் மேலும் அதிகரித்திருக்கிறது.
சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து விட்டன, 95 சதவீதம் முடிவடைந்து விட்டன என்று ஊடகங்களின் உதவியுடன் வீண் விளம்பரம் செய்து கொண்டிருந்தால் மட்டும் போதாது.
உண்மையான அக்கறையை களப்பணிகளில் காட்ட வேண்டும். அவ்வாறு காட்டியிருந்தால் 6 செ.மீ. மழைக்கு சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்காது.

எத்தகைய இடர்ப்பாடுகள் வந்தாலும், எத்தகைய பேரிடர்கள் வந்தாலும் நம்மை ஆளும் அரசு நம்மைக் காக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வரவேண்டும். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள மக்களுக்கு அரசின்மீது அந்த நம்பிக்கை இல்லை என்பதையே பொதுமக்கள் தங்களின் மகிழுந்துகளை வேளச்சேரி பாலத்திலும், பள்ளிக்கரணை பாலத்திலும் நிறுத்தி வைத்திருப்பது காட்டுகிறது.
மகிழுந்துகளை நிறுத்திவைத்த மக்களில் ஒருவர் கூட தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் தங்கள் பகுதிகளில் மழை நீர் தேங்காது என்று கூறவில்லை. மாறாக, காவல்துறையினர் ஆயிரக்கணக்கில் அபராதம் விதித்தாலும் பரவாயில்லை; எங்கள் மகிழுந்துகளை பாலத்தில் தான் நிறுத்துவோம் என்று கூறியிருப்பதன் மூலம் அரசின் மீதான அவர்களின் அவநம்பிக்கை வெளிப்பட்டிருக்கிறது.
பாலங்களின் மீது மகிழுந்துகளை நிறுத்துவது போக்குவரத்தின் வேகத்தைக் குறைக்கும் என்பதுதான் உண்மை. ஆனாலும், வேளச்சேரி, பள்ளிக்கரணை பாலங்களில் மகிழுந்துகள் நிறுத்தப்படுவதை எவரும் எதிர்க்கவில்லை. அதன் பொருள், தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் கையாலாகாத்தனத்தை மக்கள் புரிந்துகொண்டு விட்டனர் என்பதுதான். தொடக்கத்தில் மகிழுந்துகளை நிறுத்தும் மக்களை மிரட்டியும், அபராதம் விதித்தும் அவற்றை அப்புறப்படுத்தும்படி அச்சுறுத்திய சென்னை மாநகரக் காவல்துறை மக்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சி, இப்போது பாலங்களில் நிறுத்தப்படும் மகிழுந்துகளுக்கு நாங்கள் அபராதம் விதிக்கவில்லை என்று பல்டி அடித்துள்ளனர்.
எனவே, தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் வீண் விளம்பரங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில் வெள்ள நீர் தேங்காது என்ற நிலையை உருவாக்கும் அளவுக்கு களப்பணிகளை செய்ய வேண்டும். இது நம்மைக் காக்கும் அரசு என்று எண்ணும் அளவுக்கு மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.






