என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சூறாவளி புயல் மோன்தா சற்று விலகல்- அதி கனமழையில் இருந்து சென்னை தப்பியது
- தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட அதிகமான மழை பதிவாகி உள்ளது.
- சென்னையில் இயல்பை விட சுமார் 57 சதவீதம் அதிகமாக 28 செ.மீ.மழை பெய்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு வலுவிழந்ததால் பெரும்பாலான பகுதுகளில் பெரிய அளவில் மழை கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று 8.கி.மீ வேகத்தில் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து சென்னைக்கு கிழக்கே-தென் கிழக்கில் 790 கி.மீ. தூரத்திலும், விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கில் 850 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டிருந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நகர்ந்து வருகிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் 27-ந்தேதி காலையில் ஒரு சூறாவளி புயலாக மாறும். இந்த 'மோன்தா' புயல் சென்னையில் இருந்து சற்று விலகி ஆந்திரா நோக்கி நகர தொடங்கும். அது வடமேற்கு நோக்கி நகர்ந்து பின்னர் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அக்டோபர் 28-ந் தேதி (செவ்வாய்) காலைக்குள் ஒரு கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடையும். அப்போது பலத்த சூறாவளி காற்று வீசத் தொடங்கும்.
இந்த சூறாவளி புயல் வடக்கு-வட மேற்கு நோக்கி மேலும் நகர்ந்து செவ்வாய்க்கிழமை (28-ந்தேதி) இரவு காக்கி நாடாவை சுற்றி உள்ள மச்சிலப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திர மாநில கடற்கரையை கடக்கும்.
அப்போது அதிகபட்சமாக மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசும். இந்த காற்று சில இடங்களில் 110 கி.மீ வேகத்தில் வீசும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
சூறாவளி புயல் ஆந்திராவில் கரையை கடப்பதால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. அதிலும் சூறாவளி புயல் மோன்தா சென்னை நோக்கி வராமல் சற்று விலகி ஆந்திரா நோக்கி செல்கிறது.
இதனால் சென்னை சூறாவளி புயலில் இருந்தும், அதிகனமழையில் இருந்து தப்பியது என்றே சொல்லலாம். சூறாவளி புயல் ஆந்திராவை நோக்கி திரும்புவதால், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே அதிக மழை பெய்ய வாய்ப்பு ஏற்படும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் விட்டு விட்டு ஒருசில இடங்களில் கனமழை பெய்யும். இருந்தாலும் இந்த மாவட்டங்களுக்கு வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட அதிகமான மழை பதிவாகி உள்ளது.
சென்னையில் இயல்பை விட சுமார் 57 சதவீதம் அதிகமாக 28 செ.மீ.மழை பெய்துள்ளது. காஞ்சிபுரத்தில் 25 செ.மீ. இயல்பை விட 88 சதவீதம் அதிகமாக மழை கிடைத்துள்ளது.
திருவள்ளூர் 30 செ.மீ. இது இயல்பை விட 113 சதவீதம் அதிகமாகவும், செங்கல்பட்டில் 20 செ.மீ. இது இயல்பைவிட 27 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் அதாவது இயல்பைவிட 71 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.






