என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பள்ளிகளில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.
- தண்ணீரை சுட வைத்து பருக அறிவுறுத்த வேண்டும்.
சென்னை:
தமிழக பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் இன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பருவமழை தொடர்பாக முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மின் இணைப்புகளை கண்காணிக்க வேண்டும். திறந்தவெளி கால்வாய்களை தூர்வாரி மூட வேண்டும்.
பள்ளிகளில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும். பள்ளிகளின் சுற்றுச்சுவர் உறுதித்தன்மையை கண்காணிக்க வேண்டும். பழுதடைந்த சுற்றுச்சுவர்களை சுற்றி வேலி அமைத்து தடுப்பு உருவாக்க வேண்டும்.
மழை காரணமாக வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் பாதிக்கப்பட்டால் அவற்றை பயன்படுத்தாமல் பூட்டி வைக்க வேண்டும். மின் கசிவு ஏற்படுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தில் நீர் தேக்கங்கள், திறந்தவெளி கிணறுகள், தரைமட்ட நீர்தேக்க தொட்டிகள் இருக் கும் இடங்களில் அவை மூடப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மழை காலங்களில் ஆறுகளில் நீர் பெருக்கு ஏற்படலாம் என்பதால் மாணவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். வெள்ளத்தை வேடிக்கை பார்க்க செல்வதை தடுக்க வேண்டும்.
மாணவர்கள் வசிக்கும் பகுதிகளில் மழை நீர் தேங்குவதால் கொசு உருவாகும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் தண்ணீரை சுட வைத்து பருக அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
- சென்னையில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
- வட கிழக்கு பருவமழையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கண்மாய், குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
- முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கன மழை காரணமாக நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வைகை ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் மதுரை மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று 3-வது நாளாக விடிய விடிய பெய்து மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. பலப்பகுதிகளில் குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கண்மாய், குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாய பணிகள் தொடங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம் வருமாறு-
மதுரை வடக்கு-6 மி.மீ., தல்லாகுளம்-8மி.மீ., பெரியப்பட்டி-21மி.மீ., விரகனூர்-4மி.மீ., சிட்டம்பட்டி-14மிமீ., கள்ளந்திரி-24மிமீ., இடையப்பட்டி-12மி.மீ., தணியாமங்கலம்-12மி.மீ., மேலூர்-12மி.மீ., வாடிப்பட்டி-62மி.மீ., சோழவந்தான்-50மி.மீ., ஆண்டிப்பட்டி-75மி.மீ., உசிலம்பட்டி-10மி.மீ., குப்பணம்பட்டி-20மி.மீ., மாவட்டம் முழுவதும் சராசரியாக 17 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் இல்லை என்றாலும் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சேதமடைந்தன.
இன்னும் மழை பெய்யும் என்பதால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணை, வைகை அணை பகுதியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 531 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 967 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
வைகை அணையில் நீர் மட்டம் 56.28 அடியாக உள்ளது. அணைக்கு 1242 கன அடி தண்ணீர் வரும் நிலையில் 969 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், மழை வெள்ளம் காரணமாகவும் ஆற்றில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் வைகை கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்கவும், ஆற்றை கடக்கவும் இறங்கவும் வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- சென்னையில் அதி கனமழைக்கான எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தலைமை செயலாளர் உத்தரவு.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதிப்படுத்த மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியான தகவல்களில், சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். சென்னைக்கு நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வரும் 21 ஆயிரம் ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்தது மிகப்பெரிய வெற்றி.
- மோடி போன்ற இயற்கையான தலைவர்களைத் தான் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பார்கள்.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக புதுச்சேரி முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மழையிலிருந்து மக்களை பாதுகாப்பது ஒரு புறம் என்றாலும், குளங்களை தூர்வாரி குடிநீரை சேமித்திருக்க வேண்டும். பெரியாறு அணையில் குழாய்கள் உடைந்துள்ளதால் குடிநீர் வீணாகி விட்டது. குடி தண்ணீர் இல்லாமல் குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்து விட்டதால் பிரச்சனை அதிகமாகி விட்டது. தி.மு.க. அரசு சென்னை, மதுரை, திருச்சி என அனைத்து மாவட்டங்களையும் மழைக்கு தயார் செய்வதில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது.
உதயநிதி வார் ரூமில் அமர்ந்து விட்டதால் மழைக்கான ஏற்பாடுகளை செய்து விட்டது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். விடியா அரசு இன்று விளம்பர அரசாக மாறிவிட்டது. மிகப்பெரிய வானியல் சாகசத்தை கூட மக்கள் மகிழ்ச்சியுடன் பார்க்கக்கூடிய ஏற்பாடுகளை செய்ய முடியாத அரசு எதற்கெடுத்தாலும் விளம்பரம் தான். அன்னை மீனாட்சி நம்மை காப்பாற்றுவாள், ஆனால் இந்த தி.மு.க. ஆட்சி நம்மை காப்பாற்றுமா என்றுதான் கவலையாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் பருப்பு கூட வேகாது போல உள்ளது.
காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்தது மிகப்பெரிய வெற்றி. அரியானாவில் உள்ள வாக்கு சதவீதத்தை தி.மு.க.வும், காங்கிரசும் ஆராய்கிறது. ஆனால் வெற்றி பெற்ற கூட்டணியை விட காஷ்மீரில் பா.ஜ.க. 25 சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 7 சதவீதத்திற்கு சுருங்கி விட்டது. காங்கிரசுக்கு எதிர்காலமே இல்லை. ராகுல் காந்தி மிகப்பெரிய தலைவராக உருவெடுத்து விட்டார் என்று சொன்னார்கள். ஆனால் செயற்கைத் தலைவர்களை உருவாக்க முடியாது.
மோடி போன்ற இயற்கையான தலைவர்களைத் தான் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பார்கள். மத்திய அரசின் திட்டங்களை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள், தி.மு.க. ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான் நமது கருத்து. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கதிர் சக்தி திட்டம் கொண்டு வந்தபோது அதை நான் முழுவதும் வரவேற்றேன். தேசத்தை சின்ன சின்ன விஷயங்களில் கூட பிரதமர் முன்னெடுத்து செல்வதற்கு இது மிகப்பெரிய உதாரணம்.
ரெயில் விபத்து மத்திய அரசின் சதி என்ற குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தியை வன்மையாக கண்டிக்கிறேன். வான்சாகத்தின்போது ஐந்து பேர் உயிரிழந்தபோது அவர் எங்கே சென்று இருந்தார். கள்ளக்குறிச்சியில் 65 பேர் உயிரிழந்தபோது ராகுல் எங்கே சென்று இருந்தார். வான் சாகசத்தில் உயிரிழந்த சம்பவம் போல பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலத்தில் நடந்திருந்தால் ஸ்டாலின்தான் முதலில் குரல் கொடுத்திருப்பார். அவரைப் போல் தான் ராகுல் காந்தியும் தமிழகத்தில் நடக்கிற அசம்பாவிதத்திற்கு குரல் கொடுக்க மாட்டார். அதனால் தான் காஷ்மீரில் மக்கள் காங்கிரசுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.
ரெயில் விபத்துகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். ஆனால் வான் சாகசத்தில் உயிர் இழந்ததை அரசியலாக்க கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால் தி.மு.க. எதை எடுத்தாலும் அரசியலாக்கும். தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளே அதற்கு எதிராக திரும்பி இருக்கிறார்கள். 2026 தேர்தலில் நிச்சயமாக இதே தி.மு.க. கூட்டணி நிலைக்காது. சாம்சங் விவகாரத்தை வைத்து கம்யூனிஸ்ட் வேறு எங்கோ செல்கிறார்கள். மதுவிலக்கு பிரச்சனையை வைத்து வி.சி.க. ஒரு புறம் செல்கிறார்கள். தங்களுக்கும் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்று தம்பி கார்த்திக் சிதம்பரம் இப்போதுதான் கொஞ்சம் தைரியம் வந்து பேசி இருக்கிறார். 2026 தேர்தலுக்கு தி.மு.க. கூட்டணிக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் தி.மு.க. கூட்டணி வெலவெலத்து போகும்.
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி குறித்து திண்டுக்கல் சீனிவாசன் பேசியது, தேர்தல் வரும்போது எது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எதைப் பற்றி வேண்டுமானாலும் நடக்கலாம். இப்போதைக்கு எங்கள் வேலை எங்கள் கட்சியை பலப்படுத்துவதற்கு உறுப்பினர்களை சேர்ப்பது தான். கூட்டணி குறித்து எங்கள் அகில பாரத தலைவர்கள் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவரிடம் கேட் கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கே: சீன தயாரிப்புகளுக்கு தடை குறித்து...
ப: நிர்மலா சீதாராமனுக்கும், பியூஸ் கோயலுக்கும் தமிழகத்தை சேர்ந்தவர் என்கிற முறையில் நன்றி சொல்கிறேன். மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் தீப்பெட்டி தொழில் வாழ்வாதாரமாக உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் இந்தியில் உள்ளதை தமிழ் படுத்தினால் மக்களுக்கு புரியும். நான் புதுச்சேரியில் திட்டங்களை தமிழ்படுத்தினோம். ஆனால் இங்கு உள்ள அரசு அது தெரியாமல் இருப்பது தான் நல்லது என நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் மத்திய அரசு திட்டங்களை மக்களுக்கு புரியும் வகையில் தமிழ் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
கே: த.வெ.க. தலைவர் பாதை மாறுகிறாரா?
ப: அரசியல் கட்சித் தலைவர் தவறை உணர்ந்து அதை திருத்திக் கொள்வது ஆரோக்கியமான சூழ்நிலைதான். ஆனால் தற்போது உள்ள சூழலில் இந்து மதம் சார்ந்த கருத்துக்களை யார் எதிர்த்தாலும் அவர்களை மக்கள் எதிர்ப்பார்கள். இந்து மதம் சார்ந்த மக்களுக்கு ஆதரவு தரவில்லை என்றால் மக்கள் அவர்களுக்கு ஆதரவு தர மறுப்பார்கள் என்கிறது தான் இன்றைய சூழ்நிலை. அதைத் தம்பி விஜய் உணர்ந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அவரிடம் இருந்து தீபாவளி வாழ்த்தையும் எதிர்பார்க்கிறோம்.
அவர் மட்டுமல்ல முதல்வரிடமிருந்தும் தீபாவளி வாழ்த்து எதிர்பார்க்கிறோம். தி.மு.க. தலைவராக இல்லை என்றாலும், தமிழக முதல்வராக தீபாவளி வாழ்த்து தெரிவிக்க வேண்டும். வாழ்த்து சொல்லவில்லை என்றால் தீபாவளி கொண்டாடுபவர்கள் அவரை எதிர்ப்பார்கள் என்பது எனது கருத்து என்றார்.
- தமிழ்நாட்டில் அடுத்துவரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இந்தப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.
சென்னை:
பா.ம.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. அரசைக் கண்டித்து வருகிற 17-ந்தேதி வடலூர், 20-ந்தேதி திண்டிவனம், 26-ந்தேதி சேலத்தில் பா.ம.க. சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்; அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் அடுத்துவரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு இந்தக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுகின்றன. டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இந்தப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒரு குழுவுக்கு 25 வீரர்கள் வீதம் 450 வீரர்கள் அனைத்து உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
- அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை தலைமையகத்தில் 10 பேரிடர் குழுக்கள் தயாராக உள்ளன.
சென்னை:
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழக அரசு அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக மாநில அரசின் வருவாய்த்துறை, மின்சாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, குடிநீர் கழிவுநீரகற்று துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் அரசு முன்னேற்பாடுகளை செய்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கும் உரிய உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளது.
கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு படையில் 18 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஒரு குழுவுக்கு 25 வீரர்கள் வீதம் 450 வீரர்கள் அனைத்து உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
சென்னையில் ஏற்கனவே 3 பேரிடர் குழுக்கள் உள்ள நிலையில் நெல்லையில் நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 பேரிடர் மீட்பு குழு சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 3 குழு, கோவையில் 3 குழு, மேட்டுப்பாளையத்தில் 3 குழு சென்னைக்கு வருவதற்கு தயாராக உள்ளது.
இது தவிர அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை தலைமையகத்தில் 10 பேரிடர் குழுக்கள் தயாராக உள்ளன.
இவர்கள் அதிநவீன மீட்பு உபகரணங்கள், ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், நவீன தொலை தொடர்பு சாதனங்கள், மருத்துவ முதலுதவி கருவிகளுடன் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கும்பகோணத்தில் இருந்து பூ லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தது.
- படுகாயமடைந்த கல்லூரி மாணவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
திருவிடைமருதூர்:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கள்ளப்புலியூரில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் கல்லூரி பஸ்சானது இன்று காலை கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் சுமார் 20 மாணவ-மாணவிகள் பயணம் செய்தனர்.
அதேவேளையில், கும்பகோணத்தில் இருந்து பூ லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சானது திருவிடைமருதூர் அடுத்துள்ள கோவிந்தபுரம் வழியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த மினிலாரி எதிர்பாராத விதமாக கல்லூரி பஸ்சின் மீது பயங்கரமாக மோதியது. இதில் மினி லாரியின் முன்பகுதி முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் மினி லாரியில் பயணம் செய்த கும்பகோணம் மூப்பக்கோவில் மேலத்தெருவை சேர்ந்த முகமது சமீர் (வயது 25), சுந்தரபெருமாள் கோவில் மேலவீதியை சேர்ந்த கார்த்தி (31) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பஸ்சில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவிடைமருதூர் போலீசார் பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த கல்லூரி மாணவர்களையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும், இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கோர விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- குடிநீர் வசதிகள், மின் விளக்கு வசதிகள், உணவுக்கூடங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- போலீஸ் பாதுகாப்பு மட்டுமின்றி பாதுகாப்புக்காக துபாய் தனியார் சிறப்பு பாதுகாப்பு படை வரவழைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு வருகிற 27-ந்தேதி விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது.
இதையொட்டி மாநாட்டுக்கான மேடை அமைப்பு பணிகள் இரவு-பகலாக நடந்து வருகிறது. இந்த பணிகளை பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மாநாடு பந்தலிலேயே தங்கி இருந்து கவனித்து வருகிறார்.
சுமார் 85 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாட்டுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மாநாட்டில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையொட்டி குடிநீர் வசதிகள், மின் விளக்கு வசதிகள், உணவுக்கூடங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாநாட்டில் பங்கேற்க வருவோர் வசதிக்காக ஏற்கனவே 4 இடங்களில் மிகப்பெரிய வாகனங்கள் நிறுத்தும் இடம் தயார் செய்யப்பட்டு வருகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கு என்று 27 ஏக்கர், 6½ ஏக்கர், 3½ ஏக்கர், 3 ஏக்கர் என இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மாநாட்டில் பங்கேற்போரின் எண்ணிக்கை அதிகமாவதை தொடர்ந்து வாகனங்கள் நிறுத்துவதற்காக சுமார் 25 ஏக்கர் முதல் 50 ஏக்கர் வரை கூடுதலாக மேலும் ஒரு இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மின் விளக்கு வசதி 3 ஆயிரம் இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாநாட்டுக்கான மின்சார வசதிகள் அனைத்தும் ஜெனரேட்டர் மூலம் செய்யப்பட்டுள்ளது. தொண்டர்களின் பாதுகாப்புக்காக மாநாடு மைதானம் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கிணறுகள் இரும்பு தகடுகளால் மூடப்பட்டுள்ளது.
மாநாடு பாதுகாப்பு வசதி, வரவேற்பு மற்றும் உணவு, வாகன நிறுத்தம் உள்பட பல்வேறு பணிகளுக்காக 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு மட்டுமின்றி பாதுகாப்புக்காக துபாய் தனியார் சிறப்பு பாதுகாப்பு படை வரவழைக்கப்பட்டுள்ளது. மாநாடு பணிகளில் எந்தவித குளறுபடிகளோ, அசம்பாவிதங்களோ நடைபெறாத வண்ணம் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள கட்சி தலைவர் விஜய் நிர்வாகிகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
மாநாடு தேதி நெருங்கும் நிலையில் பந்தல் மற்றும் அனைத்து பணிகளும் விரைவில் முழுமை பெற இருக்கிறது. மாநாடுக்கு 12 நாட்களே உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் களை கட்டி உள்ளது.
- வடகிழக்கு பருவமழையால் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படும் சென்னை அடுத்த சில நாட்களில் மிகக் கடுமையான மழையை எதிர்கொள்ளவிருக்கிறது.
- சென்னையை மழை தாக்கும் வரையிலான ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானவை.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்கு முன்பே மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் அதன் பாதிப்பை அனுபவிக்கத் தொடங்கி விட்டார்கள். சனிக்கிழமை இரவு முதல் பெய்த மழையால் கோவை மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. மதுரை மாநகரத்திலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு உள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரில் கணேசன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அய்யாக்கண்ணு, கடலூர் மாவட்டம் தொழுதூரை அடுத்த ராமநத்தம் பகுதியில் காயத்ரி என்ற 13 வயது சிறுமி, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் குமரேசன் என மொத்தம் 4 பேர் நேற்று ஒரே நாளில் அறுந்து விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்ததால் உயிரிழந்துள்ளனர்.
மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மிகச்சாதாரணமான பராமரிப்புப் பணிகளைக் கூட மேற்கொள்ளாமல் தமிழக அரசும், மின்சார வாரியமும் எவ்வளவு அலட்சியமாக செயல்பட்டுள்ளன என்பதற்கு மிகவும் வேதனையான எடுத்துக்காட்டு தான் இந்த உயிரிழப்புகள்.
வடகிழக்கு பருவமழையால் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படும் சென்னை அடுத்த சில நாட்களில் மிகக் கடுமையான மழையை எதிர்கொள்ளவிருக்கிறது. 24 மணி நேரத்தில் 20 செ.மீக்கும் கூடுதலான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னை மாநகரம் என்னென்ன பாதிப்புகளை எதிர்கொள்ளுமோ, சென்னை மாநகர மக்கள் எத்தகைய இன்னல்களையெல்லாம் எதிர்கொள்வார்களோ? என்ற அச்சமும், கவலையும் மனதை வாட்டுகின்றன.
சென்னை மாநகரில் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. 45-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை நீர் வடிகால்களை இணைக்கும் பணிகள் சில நாட்களுக்கு முன்பு வரை முடிக்கப்படவில்லை. மழை-வெள்ளத்தை எதிர்கொள்ள படகுகள், நீர் இறைக்கும் கருவிகள் ஆகியவை மிகவும் அவசியம் தான் என்றாலும் கூட, அவற்றை மட்டுமே தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் நம்பிக் கொண்டிருக்கின்றனவோ? என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
சென்னையை மழை தாக்கும் வரையிலான ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானவை. அவற்றை பயன்படுத்திக் கொண்டு மழை பாதிப்புகளில் இருந்து சென்னை மாநகர மக்களைக் காக்க அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மாநகரில் இன்றும் காலை முதலே மாநகர பகுதி முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
- சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் நேற்று மாலையில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் பிற்பகலில் பரவலாக மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலையில் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு கனமழை பெய்ய ஆரம்பித்தது. மாநகரில் சந்திப்பு, மேலப்பாளையம், பாளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் பரவலாக மழை பெய்தது.
பேட்டையில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. தொடர்ந்து சாலைகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட மாநகராட்சி 17-வது வார்டு பழைய பேட்டை சர்தார்புரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலையே தெரியாத அளவிற்கு மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தேங்கிய மழைநீரில் நடந்து செல்லமுடியாமல் சிரமத்துடன் சென்றனர்.
மாநகரில் இன்றும் காலை முதலே மாநகர பகுதி முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் கீழ் பகுதியில் மழைநீர் தேங்கி கிடந்தது. மாநகரில் பாதாள சாக்கடை பணிகள் நடக்கும் பகுதிகளில் மழை காரணாக சாலைகள் சகதியாக காணப்பட்டது. பாளை வ.உ.சி. மைதானம், மகாராஜாநகர் சாலைகளிலும் குளம் போல் மழைநீர் தேங்கி கிடந்தது.
ஆயுத பூஜை தொடர் விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், காலையில் இருந்தே பெய்த மழையால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதி அடைந்தனர். பணிக்கு செல்வோர் குடை பிடித்தபடி சென்றனர். அதிகபட்சமாக பாளையில் 11 மில்லிமீட்டரும், நெல்லையில் 4.4 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
மாவட்டத்தின் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் திடீர் கனமழை பெய்தது. அங்குள்ள சாலையோரம் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாலையோர வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். இன்றும் காலையில் இருந்தே சாரல் அடித்தது. இதேபோல் களக்காடு, மூலைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இன்று சாலையில் சாரல் மழை பெய்தது.
சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் நேற்று மாலையில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இன்று அதிகாலையில் இருந்து விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் அவதி அடைந்தனர். மாவட்டத்தில் சேரன்மகாதேவியில் 10.6 மில்லிமீட்டரும், அம்பையில் 5.6 மில்லிமீட்டரும், களக்காடு மற்றும் நாங்குநேரியில் தலா 3 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அவ்வளவாக பெய்யவில்லை. என்றாலும் மணிமுத்தாறு அணை பகுதியில் மட்டும் 1.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு, மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் இருந்து வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. இன்றும் காலையில் இருந்தே வெயில் அடிக்கவில்லை. இதனால் ரம்மியமான சூழ்நிலை நிலவியது. சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 44 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. சிவகிரியில் லேசான சாரல் பெய்தது.
ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கருப்பாநதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் 10 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. விடுமுறை முடிந்துவிட்டதால் அருவிக்கரைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் தொடங்கி இரவு வரையிலும் ஏராளமான இடங்களில் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. குறிப்பாக எட்டயபுரம், கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
அதிகபட்சமாக எட்டையபுரத்தில் 15 மில்லிமீட்டர் மழை பெய்தது. கோவில்பட்டியில் 7 மில்லிமீட்டரும், சூரன்குடி, கழுகுமலையில் தலா 6 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. சாத்தான்குளம் சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு சாரல் அடித்தது. இன்றும் காலையில் இருந்தே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.
- தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.
- சென்னை வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக சென்னையில் 15 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
திருவொற்றியூர் பகுதிக்கு சமீரன், மணலி பகுதிக்கு குமரவேல் பாண்டியன், அம்பத்தூர் பகுதிக்கு எஸ். ராமன், அண்ணாநகர் பகுதிக்கு ஸ்ரேயா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல் மீதமுள்ள பகுதிகளுக்கு மேகநாத ரெட்டி, கண்ணன், ஜானி வர்கீசு, கணேசன், பிரதாப், விசாகன், சிவஞானம், பிரபாகர், செந்தில் ராஜ், மகேஸ்வரி ரவிகுமார் மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோர் மற்ற பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க உள்ளனர்.






