என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அண்ணாசாலையில் போதை பொருள் விற்பனை செய்து வந்ததாக கிடைத்த தகவலை அடுத்து கைது.
- 5 கிராம் மெத்தபெட்டமைன் என்கிற போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை அண்ணாசாலை பகுதியில் பிரபல சீரியலில் நடித்து வரும் சின்னத்திரை துணை நடிகை மீனா என்பவரை போலீசார் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளனர்.
இவர், அண்ணாசாலையில் போதை பொருள் விற்பனை செய்து வந்ததாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் நடவிக்கை மேற்கொண்டுள்ளனர்.
துணை நடிகை மீனாவை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதை அடுத்து, அவரிடம் இருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் என்கிற போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
நடிகை மீனா, டெடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தார்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
தமிழக அரசின் நலத் திட்டங்கள் மக்களை சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி, 2 நாள் பயணமாக இன்று விருதுநகர் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்குள்ள தனியார் பட்டாசு ஆலையில், பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துக் கொண்டு வருகிறார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது விருதுநகர் பயணம் தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், " தென்தமிழ்நாட்டுக்கே உரிய வாஞ்சையுடன் "அண்ணே… அண்ணே…" என்றும் - குலவையிட்டும் வரவேற்ற விருதுநகர் மக்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் மற்றொரு பதிவில், "இன்று விருதுநகர் மாவட்ட ஆய்வின்போது, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களிடம் அவர்களது தேவைகள் குறித்து கலந்துரையாடினேன்" என்றார்.
- கிராம மக்கள், வாயக்கால் நடுவே பாலம் கட்டித் தர பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- கிராம மக்கள் ஒருவரின் சடலத்தை வாயக்காலில் நீந்தியபதி எடுத்து செல்லும் வீடியோ ஒன்று வைரலானது.
கடலூர் வீரசோழபுரம் கிராமத்தில் உள்ள மக்கள் உயிரிழந்தவர்களின் சடலங்களை வாய்க்காலில் நீந்தி கொண்டு சென்று அடக்கம் செய்யும் அவலை நிலையில் உள்ளனர்.
இது மக்களுக்கு பெறும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராம மக்கள், வாயக்கால் நடுவே பாலம் கட்டித் தர பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கிராம மக்கள் ஒருவரின் சடலத்தை வாயக்காலில் நீந்தியபதி எடுத்து செல்லும் வீடியோ ஒன்று வைரலானது.
இதன் எதிரொலியால், வீரசோழபுரம் கிராமத்தில் மயானத்திற்கு வாய்க்காலை கடந்து செல்ல ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நடைபாலம் அமைக்கப்படும் என்று கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆணை பிறப்பித்துள்ளார்.
மேலும் அவர், மயானத்திற்கு செல்ல ஏதுவாக தற்காலிக பாலம் உடனடியாக அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- மாற்றுத்திறனாளியான மகேஷ் தனது மனைவி, குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக வந்தார்.
- மகேஷ் திடீரென தான் கொண்டு வந்திருந்த பெட்ரோல் பாட்டிலை திறந்து தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை செந்தில் நகரை சேர்ந்தவர் மகேஷ் (வயது 47). இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான மகேஷ் இன்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக வந்தார்.
அப்போது கலெக்டர் அலுவலகம் முன்பு மகேஷ் திடீரென தான் கொண்டு வந்திருந்த பெட்ரோல் பாட்டிலை திறந்து தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரோகிணி செல்வி தலைமையிலான போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் ஓடிச்சென்று மகேசிடம் இருந்து பெட்ரோல் பாட்டிலை பறித்தனர்.
பின்னர் அவர் மீது தண்ணீர் ஊற்றினர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவரது மனைவி அனிதா போலீசாரிடம் கூறியதாவது:-
நாங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு செந்தில் நகரில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறினோம். தற்போது அந்த வீட்டின் உரிமையாளர் எந்த காரணமும் கூறாமல் வீட்டை காலி செய்யுமாறு எங்களை மிரட்டுகிறார்.
நாங்கள் அவரிடம் அவகாசம் கேட்டோம். ஆனால் அவர் அவகாசம் தர மறுப்பதோடு வீட்டின் மின் இணைப்பை தடை செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு தொந்தரவு கொடுக்கிறார். எனவே எங்களுக்கு உரிய அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து அவர்களுக்கு அறிவுரை கூறிய போலீசார் இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசில் முறைப்படி புகார் மனு அளியுங்கள் என கூறி தங்களது ரோந்து வாகனத்திலேயே அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.* * *மனைவி, குழந்தைகளுடன் வந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளியை மீட்டு போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
- கடல் வெப்ப அலை ஏற்படுவதால் வரும் நாட்களில் புயல்கள் வலிமையாகும்.
- வெப்பம் அதிகரிப்பால் மேகங்கள் நீரை சுமக்கும் திறன் அதிகரிக்கும்.
பருவமழை என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருந்தாலும், வானிலை நிகழ்வில் ..இப்பொழுதெல்லாம் எப்போது மழை வருகிறது, எப்போது வெயில் அடிக்கிறது, எப்போது புயல் வருகிறது என்று தெரிவதில்லை.
தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும். இது மே மாத இறுதியில் அல்லது ஜூன் தொடக்கத்தில் தொடங்கி மெதுவாக நாடு முழுவதும் பரவுகிறது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கிறது.
வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிக புயல்கள் உருவாகும். இத்தகைய புயல்கள் அண்மைக்காலங்களில் அதிதீவிர புயல்களாக உருவாகி இந்தியாவை அச்சுறுத்தி வருகின்றன. இது காலநிலை மாற்றத்தில் விளைவு என்று சொல்லப்படுகிறது.

கடல் வெப்ப அலை ஏற்படுவதால் வரும் நாட்களில் புயல்கள் வலிமையாகும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ரவிச்சந்திரன் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:
கடல் வெப்ப அலைகளால் வரும் காலங்களில் புயல்கள் வலிமை பெற்றதாக மாறும். வெப்பம் அதிகரிப்பால் மேகங்கள் நீரை சுமக்கும் திறன் அதிகரிக்கும். காலநிலை மாற்றத்தால் மேகங்களின் பரப்பளவு குறைந்து அதிக நீரைக் கொண்டதாக உருவாகின்றன.
'மரைன் ஹீட் வேவ்' மாதக் கணக்கில் தொடர்கிறது. இதனால் புயல்கள் இனி மிகுந்த வலிமை பெற்றதாக மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிங்கர சென்னை 2.0 என்ற திட்டத்தின்படி, பொது மக்கள் ரிப்பன் மாளிகையை காண திட்டமிடப்பட்டுள்ளது.
- ரிப்பன் மாளிகையை சுற்று பார்க்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
111 ஆண்டுகள் பழமைவாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க சென்னை மாநகராட்சி பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான, ரிப்பன் மாளிகை பழமையான கட்டிடங்களில் ஒன்றாகும். இங்கு, மாநகராட்சி அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.
சிங்கர சென்னை 2.0 என்ற திட்டத்தின்படி, பொது மக்கள் ரிப்பன் மாளிகையை காண திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, ரிப்பன் மாளிகையை சுற்று பார்க்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
commcellgcc@gmail.com என்ற இமெயில் மற்றும் 9445190856 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்யலாம்.
தனி நபர் அல்லது பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் வாயிலாகவும் அனுமதி பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
ரிப்பன் மாளிகையின் கட்டுமான வரலாறு, சென்னையின் வரலாறு, மாநகராட்சி இயங்கும் முறை உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ளும் வகையில் சுற்றுலா திட்டம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேவையான உரங்கள் கூட தடையின்றி கிடைப்பதை தமிழக அரசால் உறுதி செய்ய முடியாதது கண்டிக்கத்தக்கது.
- சில தனியார் கடைகளில் யூரியா உரம் கிடைத்தாலும் கூட, அவர்கள் 25% வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்கின்றனர்.
காவிரி பாசன மாவட்டங்களில் உரத் தட்டுப்பாட்டால் உழவர்கள் பாதிக்கப்படுவதாகவும், தாராளமாக கிடைக்க நடவடிக்கை தேவை எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நெற்பயிர்களுக்குத் தேவையான யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் கிடைக்காமல் உழவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நாட்டின் முதன்மைத் தொழிலான விவசாயத்திற்கு தேவையான உரங்கள் கூட தடையின்றி கிடைப்பதை தமிழக அரசால் உறுதி செய்ய முடியாதது கண்டிக்கத்தக்கது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நிலப்பரப்பில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. முன்கூட்டியே நடவு செய்யப்பட்ட பயிர்கள் குருத்து வெடிக்கும் நிலையில் உள்ளன. தாமதமாக நடவு செய்யப்பட்ட பயிர்கள் இப்போது தான் செழித்து வளரத் தொடங்குகின்றன. இரு நிலையில் உள்ள பயிர்களுக்கும் யூரியாவும், பொட்டாஷும் பெருமளவில் தேவை. ஆனால், காவிரி பாசன மாவட்டங்களில் தனியார் கடைகளில் மட்டுமின்றி, கூட்டுறவு சங்கங்களில் கூட அந்த உரங்கள் கிடைக்கவில்லை.
சில தனியார் கடைகளில் யூரியா உரம் கிடைத்தாலும் கூட, அவர்கள் 25% வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்கின்றனர். அதைக் கட்டுப்படுத்தவோ, பிற பொருட்களை வாங்க வேண்டும் என்று கட்டுப்படுத்தாமல் அதிகபட்ச சில்லறை விலைக்கு தனியார் கடைகளில் உரம் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டில் உரத்திற்கு எந்த தட்டுப்பாடும் இல்லை, கூட்டுறவு சங்கங்களில் 32,755 டன் யூரியா, 13,373 டன் பொட்டாஷ், 16,792 டன் டி.ஏ.பி, 22,866 டன் காம்ப்ளெக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். அந்த உரங்கள் எல்லாம் எங்கிருக்கின்றன என்பது தெரியவில்லை. அமைச்சர் குறிப்பிடும் அளவுக்கு உரங்கள் இருப்பு இருந்தால் காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு நிலவுவது ஏன்? என்பதை அரசு விளக்க வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி வெற்றிகரமாக அமைவதை உறுதி செய்ய தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
- சில வாரங்களில் எங்களது நட்பு காதலாக மாறியது.
- எழிலரசன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கோவை:
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவர் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், நான் திருச்சியில் வசித்து வந்தேன். எனக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருவண்ணாமலையை சேர்ந்த எழில் அரசன் என்பவர் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார்.
அவர் கோவையில் வேலை பார்த்து வருவதாக தெரிவித்தார். அப்போது அவர் என்னுடன் நட்புடன் இருக்க விரும்புவதாக தெரிவித்தார். நானும் அவரது நட்பை ஏற்றுக்கொண்டேன்.
இதையடுத்து நாங்கள் 2 பேரும் பேஸ்புக்கில் பேசி வந்தோம். சில வாரங்களில் எங்களது நட்பு காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தோம். இதையடுத்து நான் திருச்சியில் இருந்து புறப்பட்டு, கோவைக்கு வந்தேன்.
இதையடுத்து எழிலரசனும், நானும், கோவை கணபதி அருகே லட்சுமணபுரத்தில் திருமணம் செய்யாமலேயே லிவிங் டூ கெதர் முறையில் ஒன்றாக வசித்து வந்தோம்.
அப்போது எழிலரசன் என்னுடன் உடலுறவு கொண்டார். நானும், திருமணம் செய்து கொள்ள போகிறவர் தானே என அனுமதித்தேன்.
ஆனால் அதன் பிறகு எழிலரசனின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. நான் அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டேன். அதற்கு அவர் மறுத்து விட்டார்.
மேலும் என்னை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், மிரட்டவும் செய்தார். எனவே என்னை திருமணம் செய்வதாக ஏமாற்றிய எழிலரசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, இளம்பெண்ணை ஏமாற்றிய எழிலரசன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- திருப்பூரில் அரசியல் கட்சி கொடி தயாரிப்பில் 3 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
- கொடிகள் ரூ.100 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.
திருப்பூர்:
தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் விக்கிரவாண்டியில் நடத்திய முதல் மாநாடு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி தமிழக மக்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதனால் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விஜய் செல்ல உள்ளதால் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் இப்போது இருந்தே அதற்கான ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.
குறிப்பாக அரசியல் கட்சிகள் என்றால் அதில் கொடிகள் பிரதானமாக விளங்குகிறது. எனவே கொடிகள் தயாரிக்க திருப்பூரில் உள்ள கொடி உற்பத்தியாளர்களிடம் ஆர்டர்கள் கொடுக்க தொடங்கி உள்ளனர்.
இது குறித்து திருப்பூரை சேர்ந்த கொடி தயாரிப்பாளர் மகேஷ் கூறியதாவது:-
திருப்பூரில் அரசியல் கட்சி கொடி தயாரிப்பில் 3 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. முன்பெல்லாம் தேர்தல் சமயங்களில் மட்டுமே கொடிகள் தயாரிக்க அதிக அளவு ஆர்டர்கள் வரும். தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், பொதுக்கூட்டம், மாநாடு என நடத்துவதால் முன்பை விட கொடிகள் தயாரிக்க ஆர்டர்கள் அதிக அளவு வருகின்றன.
தற்போது நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிகள் தயாரிப்புக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கில் மட்டும் தயாரிக்க ஆர்டர்கள் வருகிறது.
மாநாடு நடத்தி உள்ள நிலையில் அடுத்து பொதுக்கூட்டம், நடிகர் விஜய்யின் சுற்றுப்பயணம் நடைபெற உள்ளது. இதனால் அப்போது அதிக அளவு கொடிகள் தேவைப்படும். எனவே ஒரு சில நிர்வாகிகள் கொடிகள் தயாரிக்க ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர்.
மாநாட்டின் போது துண்டுகள், காரில் முன்பு கட்டப்படும் கொடிகள் அதிக அளவு விற்பனையானது. துண்டுகள் அதிக அளவு விற்பனையாகி வருகிறது. காரின் முன்பு கட்டப்படும் கொடிகள் ரூ.100 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. எல்.இ.டி. பொருத்தப்பட்டுள்ள கொடிகள் ரூ.2000, ரூ.3000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பெரும்பாலான நிர்வாகிகள் கொடி கம்பத்தில் ஏற்றவும், கைகளில் பிடித்து செல்லக்கூடிய வகையிலான கொடிகள் தயாரிக்க தொடர்ந்து ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர். இந்த வகை கொடிகள் ரூ.100 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் சட்டையில் அணியக்கூடிய பேட்ஜ்கள் அதிக அளவு விற்பனை ஆகிறது. மொத்தமாக இல்லாமல் சில்லரையில் அதிகம் விற்பனை ஆகிறது. எங்கள் நிறுவனத்திற்கு வரும் ஆர்டர்களை சிறிய உற்பத்தியாளர்களுக்கு பிரித்து கொடுக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூரை சேர்ந்த பிரபல வேட்டி தயாரிப்பு நிறுவனத்தினர் கூறுகையில், அனைத்து அரசியல் கட்சிகளின் கரைவேட்டிகள் தயாரித்து கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்புகிறோம். ஆர்டர்கள் கொடுத்தால் தயாரித்து கொடுக்கிறோம்.
தற்போது விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் கரை போட்ட வேட்டிகள் தயாரித்து கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதுவரை ஆர்டர்கள் எதுவும் வரவில்லை. விஜய் கட்சி நிர்வாகிகள் கடைகளிலேயே வாங்கி கொள்கின்றனர். விற்பனைக்கு தகுந்தாற்போல் தயாரித்து அனுப்புகிறோம். அடுத்து விஜய் பொதுக்கூட்டம், சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் நிர்வாகிகள், தொண்டர்களிடம் இருந்து அதிக அளவு ஆர்டர்கள் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றனர்.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த இருதினக்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.
நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் 12-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழக அரசின் நீர்வளத்துறை அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மதுரை:
மதுரை பீ.பி.குளம் முல்லை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் நிலத்திற்கு பட்டா இல்லை யென கூறப்படுகிறது.
இந்த நிலையில் மேற்கண்ட குடியிருப்புகள் நீர்பிடிப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த வீடுகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்தது.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசின் நீர்வளத்துறை மூலம் குடியிருப்புவாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் 48 ஆயிரத்து 990 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பீ.பி.குளம் கண்மாய் நீர்பிடிப்பின் ஒரு பகுதியினை ஆக்கிரமிப்பு செய்து உள்ளீர்கள்.
ஆக்கிரமிப்பை காலி செய்வது தொடர்பாக ஏற்கனவே அதற்கான படிவங்கள் மூலம் 2 முறை அறிவிப்பு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. எனவே நாளை 10-ந்தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றி கொள்ள காலகெடு வழங்கப்படுகிறது.
அதற்குள் அகற்றாத பட்சத்தில் மறுநாள் (11-ந்தேதி) நீர்வளத்துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். அப்போது உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பேற்காது. மேலும் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழக அரசின் நீர்வளத்துறை அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீடுகளை காலி செய்ய மேலும் கால அவகாசம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நீர்வளத்துறையின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் விருதுநகருக்குவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு கொடுக்க முடிவெடுத்தனர்.
அதன்படி இன்று காலை பீ.பி.குளம் முல்லை நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் வேன், கார், ஷேர் ஆட்டோ, மோட்டார் சைக்கிள்களில் சென்று முதலமைச்சரை சந்தித்து மனு கொடுக்க புறப்பட தயாரானார்கள்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். முதலமைச்சரிடம் மனு கொடுக்க உரிய அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதனை அவர்கள் ஏற்க மறுத்தனர்.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- இரும்பு கம்பியின் மூலம் மின் கசிவு ஏற்பட்டு கொடி கம்பியில் பாய்ந்து தங்கமணியை மின்சாரம் தாக்கியது.
- அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரம் பட்டுவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன், விவசாய கூலி தொழிலாளி.
இவரது மனைவி தங்கமணி (வயது 43), இவர்களுக்கு திருமண நாளான நேற்று கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பிறகு வீட்டுக்கு வந்துள்ளனர்.
இவர் துணிகளை துவைத்து காய போடுவதற்காக வீட்டில் உள்ள இரும்பு கம்பியில் கொடி கட்டியிருந்தனர். அதன் அருகே மற்றொரு சிறிய கம்பியை கட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த கொடி கம்பியில் நேற்று தங்கமணி துணி காய போட்டுள்ளார்.
பின்னர் அவர் துணிகளை எடுக்க சென்றபோது வீட்டில் உள்ள இரும்பு கம்பியின் மூலம் மின் கசிவு ஏற்பட்டு கொடி கம்பியில் பாய்ந்து தங்கமணியை மின்சாரம் தாக்கியது.
இதில் மூக்கில் ரத்தத்துடன் சுருண்டு விழுந்து தங்கமணி உயிருக்கு போராடினார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தங்கமணி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து தகவல் அறிந்த திருவோணம் போலீசார் தங்கமணி உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக திருவோணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரசாத் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி இறந்த தங்கமணிக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர் திருவோணம் அருகே திருமண நாளில் மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






