என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
- பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 'அண்ணாமலை' என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த நிலையில் ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பவுர்ணமி வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 5.40 மணிக்கு தொடங்கி மறுநாள் 16-ந் தேதி (சனிக்கிழமை) காலை 3.33 மணிக்கு நிறைவடைகிறது. அதனால் 15-ந்தேதி இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தது என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரு தினங்களில் மேற்கு திசையில், தமிழ்நாடு, இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.
- தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 36 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இது அதற்கு அடுத்த இரு தினங்களில் மேற்கு திசையில், தமிழ்நாடு, இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.
இதனால், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் முதல் சூடுபிடிக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- ஆய்வு வாகனத்தை புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்து இருக்கிறது.
- ஆய்வு வாகனத்தை அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் பயன்படுத்துகின்றன.
சென்னை:
இந்தியா 9 கடற்கரையோர மாநிலங்களையும், 1,382 தீவுகளையும் உள்ளடக்கிய மிக நீண்ட கடற்கரை பரப்பை கொண்டிருக்கிறது. இந்த கடல் பகுதியின் ஆழ்கடலுக்குள் சென்று ஆராய்வதற்கும், வெளி உலகுக்கு தெரியாதவற்றை வெளிக்கொண்டு வருவதற்கும் மத்திய அரசு ''சமுத்ரயான்'' எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டது. சமுத்ரயான் என்பதற்கு கடல் விமானம் என்பது பொருள்.
மத்திய அரசின் நீல பொருளாதார கொள்கையை ஆதரிக்கும் ஆழ்கடல் இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ''மத்ஸ்யா 6000'' என்ற ஆழ்கடல் ஆய்வு வாகனத்தில், ஆழ்கடல் துறையில் அனுபவமிக்க 3 பேர் ஆழ்கடலுக்குள் அனுப்பப்பட உள்ளனர்.
இதற்கான ஆய்வு வாகனத்தை புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்து இருக்கிறது. இந்த வாகனம் ஆய்வு நோக்கங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டு இருப்பதால், சுற்றுச்சூழலுக்கு இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கருவிகள், உணர்திறன் தன்மை கொண்ட கருவிகள், நிபுணத்துவம் பெற்ற 3 பேர் ஆகியோருடன் இந்த ஆய்வு வாகனம் சுமார் 6 ஆயிரம் மீட்டர் ஆழத்துக்கு சென்று தாதுக்கள் போன்ற ஆழ்கடலின் வளங்களையும், பல்லுயிர் மதிப்பீடுகளையும் ஆய்வு செய்து அதனை ஆவணங்களாக சேகரிக்க இருக்கிறது.
இந்த ஆய்வு வாகனத்தை அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் பயன்படுத்துகின்றன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இடம்பெறப்போகிறது. இந்த வாகனத்தின் சோதனை ஓட்டம் நடந்து வரும் நிலையில், இதுபற்றி புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம்.ரவிச்சந்திரனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:-
சமுத்ரயான் திட்டத்தின் கீழ் ஆழ்கடலுக்குள் மனிதர்களை அனுப்பும் திட்டம் அடுத்த ஆண்டு (2025) தொடக்கத்தில் செயல்படுத்த உள்ளோம். அடுத்த மாதம் (டிசம்பர்) துறைமுகப் பகுதிகளில் இந்த வாகனத்தை பயன்படுத்தி சோதனை அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம்.
மொத்தம் 6 ஆயிரம் மீட்டர் ஆழத்துக்கு ஆழ்கடலில் சென்று இந்த ஆய்வை நடத்த உள்ளோம். இந்திய பெருங்கடலின் அதிகபட்ச ஆழமாக இதுதான் இருக்கிறது. அந்த அளவை எட்டி ஆய்வு செய்வோம்.
துறைமுக பகுதி ஆய்வு வெற்றிகரமாக முடிந்ததும், முதற்கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஆழ்கடலில் 500 மீட்டருக்குள்ளும், அதனைத் தொடர்ந்து படிப்படியாக 6 ஆயிரம் மீட்டர் ஆழத்துக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பட்டினப்பிரவேசம் என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
- வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து டெல்லி கணேஷ் அனைவரையும் கவர்ந்தார்.
ஆகஸ்ட் 1, 1944 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர் கணேஷ். இவர் தக்ஷிண பாரத நாடக சபா என்ற 'டெல்லி' நாடகக் குழுவில் உறுப்பினராக இருந்தார். 1964 முதல் 1974 வரை இந்திய விமானப் படையில் பணியாற்றி இருக்கும் டெல்லி கணேஷ் 1977 ஆம் ஆண்டு வெளியான பட்டினப்பிரவேசம் என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
பட்டினப்பிரவேசம் திரைப்படத்தை மறைந்த பிரபல இயக்குநர் கே. பாலசந்தர் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து இவர் ஏற்ற கதாபாத்திரங்கள் துணை நடிகர், நகைச்சுவை வேடங்களாக அமைந்தது. இடையில் கமல்ஹாசன் மூன்று கதாபாத்திரங்களில் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து டெல்லி கணேஷ் அனைவரையும் கவர்ந்தார்.
இதுதவிர, சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், ஆஹா, தெனாலி, சங்கமம், அவ்வை சண்முகி மற்றும் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் டெல்லி கணேஷ்.
திரைப்படங்கள் மட்டுமின்றி டெல்லி கணேஷ் இதுவரை 8 முக்கிய சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். 1979ம் ஆண்டு பசி திரைப்படத்திற்கு "தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். அதோடு, 1993 - 1994ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில அரசின் "கலைமாமணி விருது" பெற்றுள்ளார்.
தமிழ் திரையுலகில் 1977 ஆம் ஆண்டு அறிமுகமான டெல்லி கணேஷ் உயிரிழக்கும் வரையிலும் திரைத்துறையில் இயங்கி வந்தவர் ஆவார். 47 ஆண்டுகால திரைப் பயணம் கொண்ட டெல்லி கணேஷ் திடீர் உயிரிழப்பு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- இணையதளத்தில் பட்டா விவரங்களை பார்க்கும்போது மாவட்டம், தாலுகா, மற்றும் கிராம விவரங்களை தேர்வு செய்ய வேண்டும்.
- தமிழகத்தில் மொத்தம் 317 தாலுகாக்கள் உள்ளன.
சென்னை:
நில மோசடிகளை தடுப்பதற்கு, தமிழக அரசு நிலம் சம்பந்தமான விவகாரங்களில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக எங்கிருந்தும், எந்த நேரத்திலும் இணைய வழி சேவைகள் மூலம் நிலம் தொடர்பான விவரங்களை பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்வதற்காக https://eservices.tn.gov. in/ என்ற இணையதளத்தை வடிவமைத்து உள்ளது.
அதில் பட்டா மாறுதல், பட்டா-சிட்டா விவரங்கள், அ பதிவேடு விவரங்கள், அரசு புறம்போக்கு நிலம், புலப்பட விவரங்கள், நகர நில அளவை வரைபடம் ஆகியவற்றை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இதன்மூலம் நிலத்தின் உரிமையாளர் யார்? நிலத்தின் அளவு எவ்வளவு என்பது பொதுமக்களுக்கு துல்லியமாக தெரியும். அதன் மூலம் நில மோசடிகளில் சிக்காமல் தப்பித்து கொள்ளலாம்.
இந்த இணையதளத்தில் கிராமங்களில் உள்ள நிலங்கள் பற்றிய விவரங்களை மட்டும் தெரிந்து கொள்ளும் வசதி இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதி என வரையறுக்கப்பட்ட நத்தம் பகுதிகளையும் தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் இந்த திட்டம் கொண்டு வரப்பட்ட போது குறிப்பிட்ட தாலுகாவில் மட்டும் இந்த வசதி இருந்தது. ஆனால் இப்போது 245 தாலுகாவில் உள்ள கிராமங்களில் உள்ள நத்தம் குடியிருப்பு விவரங்களை தெரிந்து கொள்ள தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அதாவது இந்த இணையதளத்தில் பட்டா விவரங்களை பார்க்கும்போது மாவட்டம், தாலுகா, மற்றும் கிராம விவரங்களை தேர்வு செய்ய வேண்டும். அதில் நத்தம் என்ற ஒரு பிரிவு இருக்கும். அதனை டிக் செய்தால் நத்தம் தொடர்பாக பட்டா-வரைபட விவரங்களை எளிதாக பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் மொத்தம் 317 தாலுகாக்கள் உள்ளன. அதில் சென்னையில் உள்ள 12, திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, கோவை தெற்கு ஆகிய 15 தாலுகாக்கள் முழுவதும் நகர் மயமாகி விட்டன. அங்கு விவசாய நிலங்கள் என்பது கிடையாது. அந்த தாலுகாக்கள் நகர அளவைக்கு சென்று விடுகின்றன. எனவே 302 தாலுகாவில் கிராம நத்தம் இடங்கள் உள்ளன.
அதில் தற்போது வரை 245 தாலுகா கிராம நத்தம் இடங்களின் பட்டா விவரங்களை பொதுமக்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மீதமுள்ள 57 தாலுகா கிராம நத்தம் இடங்களை பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. அடுத்த மாதம் இறுதிக்குள் இந்த பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த பணிகள் முழுமையாக முடிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம நத்தம் இடங்களையும் பொதுமக்கள் எளிதாக ஆன்லைன் முறையில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நத்தம் என்றால் என்ன?
ஆங்கிலேயர்கள் ஒரு கிராம வரைபடத்தை தயாரிக்கும் போது அதில் உள்ள விவசாய நிலங்களை நஞ்சை, புஞ்சை எனவும், விவசாயம் நடக்காத இடத்தை தரிசு நிலம் எனவும் மற்றும் சாலைகள், ஏரிகள், ஆறுகள், குளங்கள் என அனைத்தையும் வகைப்படுத்தினர்.
பொதுமக்கள் வாழ்ந்த குடியிருப்பு பகுதிகளை நத்தம் என வரையறுத்தனர். அதாவது நத்தம் பகுதியில் முதலில் வீடு கட்டி வசிப்பவர்களுக்கு அரசு சார்பாக பட்டா வழங்கப்பட்டது. ஏனென்றால் அந்த இடங்களுக்கு பத்திரம் என்பது இருக்காது. நத்தம் இடத்தில் முதலில் ஆக்கிரமித்தவர்கள் பெயருக்கு பட்டா வழங்கப்படும். அந்த பட்டா அடிப்படையில் இப்போது தொடர்ச்சியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டு வேறு ஒருவருக்கு கிரையம் செய்யப்படுகிறது. அந்த கிரையம் அடிப்படையில் இடம் வாங்கியவர்களுக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் தற்போது உட்பிரிவு செய்யப்படாத நிலங்களை கிரையம் செய்தால் உடனடியாக தானியங்கி முறையில் உடனே பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை பத்திரப்பதிவு துறை செய்துள்ளது. இப்போது ஆன்லைன் முறையில் 245 தாலுகாவிற்கு உட்பட்ட கிராம நத்தம் குடியிருப்புகளை பத்திரப்பதிவு செய்தாலும் பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. எனவே இந்த திட்டம் பொதுமக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும்.
- முதல்நிலைத் தேர்வுக்கு 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருந்தனர்.
- முதன்மைத் தேர்வு அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி மாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
துணை வணிகவரி அலுவலர், உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், உதவி பிரிவு அலுவலர், வனவர், கூட்டுறவுத் துறை முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், கைத்தறித் துறை ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட குரூப்-2, 2ஏ பதவிகளில் 2 ஆயிரத்து 327 காலி இடங்கள் இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜூன் மாதம் அறிவிப்பை வெளியிட்டது.
இந்த பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருந்தனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 14-ந்தேதி நடந்து முடிந்தது.
7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருந்த நிலையில், 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் தேர்வை எழுதினார்கள். தேர்வு முடிந்து 2 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அவர்களுக்கான தேர்வு முடிவு டிசம்பர் மாதம் வெளியிட முடிவு செய்து இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வு அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி மாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த 2 ஆயிரத்து 327 காலிப் பணியிடங்களுடன் கூடுதலாக 213 இடங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. நேற்று அறிவித்துள்ளது. இதன் மூலம் குரூப்-2, 2ஏ பதவிகளில் 2 ஆயிரத்து 540 காலிப் பணியிடங்கள் வந்துள்ளன. ஏற்கனவே முதல்நிலைத் தேர்வு முடிந்துவிட்ட நிலையில் இந்த தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் எழுதியிருந்தனர். அந்தவகையில் ஒரு பணியிடத்துக்கு 228 பேர் போட்டியிடுகின்றனர்.
- எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை தற்போது இந்த பள்ளி நடைபெற்று வருகிறது.
- 13 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மாணவ-மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.
திருவொற்றியூர்:
சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் கடந்த 2004-ம் ஆண்டு ஆதரவற்ற மாணவர்களுக்காக பேராசிரியர் டாக்டர் சிவ.செல்வக்குமார் ஒரு பள்ளியை தொடங்கினார். இந்த மாணவர்களுக்கு இலவச கல்வியுடன், சீருடை, கல்வி உபகரணங்கள், மதிய உணவு போன்றவற்றையும் வழங்குகிறார். இவர், 59-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.
தனது பணி போக கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தனது பள்ளியை நடத்திட பொது இடங்களில் பொதுமக்களின் செருப்புகளை சுத்தம் செய்கிறார். அப்படி செய்யும்போது துண்டறிக்கைகளை கொடுத்து பொதுமக்களிடம் நிதி திரட்டுகிறார். இதற்காக தமிழக அரசின் பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார். 11 பல்கலைக்கழகங்களில் இவர் டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார்.
231 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் 130-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் படிப்பதாக கூறுகிறார். எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை தற்போது இந்த பள்ளி நடைபெற்று வருகிறது. 13 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மாணவ-மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.
இவரின் செயல்பாட்டை அறிந்து பொதுமக்கள் தங்களின் செருப்பை அவரிடம் கொடுத்து சுத்தம் செய்து கொண்டு, அதற்காக அவர் வைத்துள்ள உண்டியலில் நிதி வழங்குகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கும் சென்று பொதுமக்களின் செருப்பை சுத்தம் செய்ததாகவும், இதற்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும் பேராசிரியர் கூறினார்.
இவரது மனைவி பள்ளியை பார்வையிட்டு, மதிய உணவையும் சமைத்துக் கொடுக்கின்றார். பல்வேறு மாநிலங்களில் இருந்து 576-க்கும் மேற்பட்ட விருதுகளை இவர் பெற்றுள்ளார். இந்த பள்ளி மாணவர்களுக்கு இலவச கணினி வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் நேற்று திருவொற்றியூர் தேரடி தெருவில் வடிவுடையம்மன் கோவில் முன்பு பொதுமக்களின் செருப்பை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது முன்னாள் நகராட்சி தலைவர் ஜெயராமன், அரிமா சங்க நிர்வாகிகள் துரைராஜ், சண்முகம் உள்ளிட்டோர் தங்கள் செருப்பை அவரிடம் கொடுத்து சுத்தம் செய்ததுடன், அதற்காக நன்கொடை வழங்கினர். மாணவர்களுக்காக செருப்பை சுத்தம் செய்துவரும் பேராசிரியருக்கு பொதுமக்களின் பாராட்டு குவிகிறது.
- நிர்வாக காரணங்களுக்காக கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
- தமிழகம் முழுவதும் 23-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் வரும் 23-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், கிராம சபை கூட்டத்தை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் 23-ம் தேதி காலை 11 மணியளவில் நடத்த வேண்டும். கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க ஏதுவாக, கூட்டம் நடைபெறும் இடம், நேரத்தை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
- சூலக்கரைமேட்டில் உள்ள அரசு காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ராமமூர்த்தி சாலை வரை வாகனப் பேரணி மேற்கொண்டார்.
தமிழக அரசின் நலத் திட்டங்கள் மக்களை சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி, 2 நாள் பயணமாக இன்று விருதுநகர் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்குள்ள தனியார் பட்டாசு ஆலையில், பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
இதைதொடர்ந்து, சூலக்கரைமேட்டில் உள்ள அரசு காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் மாணவிகளுடன் கலந்துரையாடினார். மாணவிகளுக்கு பரிசுகள், இனிப்புகள் வழங்கிய மு.க.ஸ்டாலின், காப்பகத்தில் அடிப்படிடை வசதிகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, மாணவி ஒருவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அப்பா என்று அழைத்தார். இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் நிறைவான நாள் என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ராமமூர்த்தி சாலை வரை வாகனப் பேரணி மேற்கொண்டார்.
சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள் முதலமைச்சருக்கு வரவேற்பை அளித்தனர்.
- கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுமார் 8 லட்சம் பேர் திரண்டிருந்தனர்.
- மாநாடு முடிந்து 14 நாட்கள் ஆன நிலையில், இதுவரை அவர் வீடு திரும்பவில்லை.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் கடந்த மாதம் 27ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சுமார் 8 லட்சம் பேர் திரண்டிருந்தனர்.
இந்நிலையில், விஜய்யின் தீவிர ரசிகரான திருவாரூர் மாவட்டம் கரையான்காடு பகுதியை சேர்ந்த மேகநாதன் என்கிற இளைஞர் த.வெ.ம மாநாட்டிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.
ஆனால், மாநாடு முடிந்து 14 நாட்கள் ஆன நிலையில், இதுவரை அவர் வீடு திரும்பவில்லை.
மேகநாதனுடன் 34 பேர் மாநாட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால், மேகநாதன் மட்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அச்சத்தில் உள்ள மேகநாதனின் தந்தை புஷ்பநாதன், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
அப்போது, மகனை கண்டுபிடித்து தருமாறு தந்தை போலீசாரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.
- கிருஷ்ணகிரியில் ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகியுள்ளது.
- நில அதிர்வு பூமிக்கு அடியில் சுமார் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவாகியுள்ளது. இதனை தேசிய புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
பிற்பகல் 1.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு பூமிக்கு அடியில் சுமார் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வின் தாக்கம் அரசம்பட்டி, பண்ணந்தூர், மஞ்சமேடு, பனங்காட்டூர், சந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது. நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
- "பனை நடவு திருவிழா 2024 - 2025" என்ற பெயரில் இன்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மாமல்லபுரத்தில் 100 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த அருங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரியில், வனத்துறை சார்பில் ஒரு கோடி பனை மரம் நடும் நெடும் பணியின் ஒரு பகுதியாக "பனை நடவு திருவிழா 2024 - 2025" என்ற பெயரில் இன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ச.அருண்ராஜ், காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாவட்ட கூடுதல் கலெக்டரும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான அனாமிகா ரமேஷ், மாவட்ட வன அலுவலர் ரவி மீனா, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.எல்.ஆர்.இதயவர்மன், அருங்குன்றம் ஊராட்சி தலைவர் மற்றும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, அமைச்சர் அங்கு நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, மருத்துவ முகாமை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நமது தமிழக பாரம்பரிய மரமான பனை மரங்களை காக்கும் விதமாக ஆண்டிற்கு ஒரு கோடி பனை மரங்கள் வளர்க்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
இதை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 5 லட்சம் விதைகள் நட முடிவு செய்துள்ளோம். இதுவரை 3.31லட்சம் விதைகள் இதுவரை நடவு செய்துள்ளோம். இன்று மட்டும் ஒரு லட்சம் நட்டுள்ளோம் மீதமுள்ள விதைகள் இம்மாதம் இறுதிக்குள் நடவுள்ளோம்.
மாமல்லபுரத்தில் 100 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. செங்கல்பட்டு நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அங்குள்ள அரசு பேருந்து பணிமனையை இடமாற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்த சின்ன சின்ன வசதிகள் குறைபாடுகளை சரி செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






