என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 2 மாதத்திற்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட உப்பை பாதுகாப்பாக தார்பாய், பனை மட்டைகளைக் கொண்டு பாதுகாத்து வந்தனர்.
    • பாக்கெட் போட்டும் வெளியூர்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பும் பணியில் உப்பள தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. 2 மாதத்திற்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட உப்பை பாதுகாப்பாக தார்பாய், பனை மட்டைகளைக் கொண்டு பாதுகாத்து வந்தனர்.

    கடந்த ஒரு மாதமாக காலமாக வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்ததால் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் உப்பளங்களை மழை நீர் சூழ்ந்துள்ளதால் உப்பளங்கள் கடல் போல் காட்சியளிக்கிறது. கடந்த மாதம் 20-ந் தேதிக்கு முன்பு பெய்த மழையால் நிறுத்தப்பட்ட உப்பு ஏற்றுமதி கடந்த 22-ம் தேதி மீண்டும் தொடங்கி நடைபெற்றது.

    2 நாள் இடைவெளியில் 23-ம் தேதி மழை துவங்கிய நிலையில் 5 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் உப்பு ஏற்றுமதி அடியோடு பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மழை பெய்து ஓய்ந்த நிலையில் 7 நாட்களுக்கு பிறகு தற்போது சேமித்து வைத்துள்ள உப்பை வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இன்று காலை முதல் வேதாரண்யம் பகுதியில் வெயில் அடித்து வருவதால் சேமித்து வைத்துள்ள உப்பை சாக்கு மூட்டைகளில் அடைத்தும், பாக்கெட் போட்டும் வெளியூர்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பும் பணியில் உப்பள தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். உப்பு ஏற்றுமதி ஒரு வார காலத்திற்குப் பிறகு துவங்குவதால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது.

    • கழிவறையை சுத்தப்படுத்தும் பிரஸ்சில் கேமரா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
    • செல்போனை போலீசார் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பயன்படுத்தும் கழிப்பறைகள் தனித்தனியாக உள்ளன.

    நேற்று கழிவறைக்கு சென்ற பெண்நர்சுகள், கழிவறையில் கேமரா வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கழிவறையை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் பிரஸ்சில் பேனா காமிரா ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.

    இதுபற்றி நர்சுகள் ஆஸ்பத்திரி இருப்பிட மருத்துவ அலுவலர் மாரிமுத்துவிடம் புகார் செய்தனர். அவரும், டாக்டர்களும் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது பேனா காமிரா இருந்ததை உறுதி செய்தனர்.

    பின்னர் அவர்கள் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அங்கு பயிற்சி ஆர்த்தோ டாக்டராக பணியாற்றும் வெங்கடேஷ் (வயது 33) என்பவர் கழிவறையில் பேனா கேமரா பொருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களை தவறாக சித்தரித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் வெங்கடேஷ் பொள்ளாச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அவரை வருகிற 13-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வெங்கடேஷ் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கைதான டாக்டர் வெங்கடேசன், கிருஷ்ணகிரி மாவ ட்டம் ஊத்தங்கரை தாலுகா கீழ்குப்பம் அருகே உள்ள பனமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர். இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கோவையில் வசித்து வருகிறார்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்த இவர் பட்ட மேற்படிப்புக்காக கடந்த மாதம் 16-ந் தேதி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார்.

    அங்கு சபல புத்தியால் பெண்கள் பயன்படுத்தும் கழிவறையில் கேமரா பொருத்தி போலீசில் சிக்கிக் கொண்டார். கழிவறையில் காமிரா இருந்ததை நர்சுகள் பார்த்து முதலில் வெங்கடேசிடம் தான் தெரிவித்துள்ளனர்.

    உடனே அவர் கேமராவில் இருந்த மெமரி கார்டை எடுத்துவிட்டு விசாரிப்பதாகக் கூறி இருக்கிறார். பிரச்சனை பெரிதானதும் வெங்கடேசும் அங்கு சென்று விசாரிப்பது போல் நடித்துள்ளார்.

    ஆனால் போலீசார் ஆஸ்பத்திரியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் வெங்கடேஷ் கழிவறைக்கு சென்று வந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் பேரிலேயே அவரை போலீசார் பிடித்தனர்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆன்லைன் வாயிலாக பேனா கேமராவை வெங்கடேஷ் வாங்கியிருக்கிறார். அதனை யாருக்கும் தெரியாமல் கழிவறையில் மறைத்து வைத்துள்ளார்.

    அந்த கேமராவில் பதிவான காட்சிகளை செல்போனில் பார்த்து ரசித்துள்ளார். ஆனால் கேமரா வைத்த சில நாட்களிலேயே சிக்கிக் கொண்டார்.

    அவரிடம் இருந்து செல்போன் மற்றும் மெமரி கார்டு போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள். அவர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் தான் இப்படி செய்தாரா அல்லது பணியாற்றிய வேறு இடங்களில் இடங்களிலும் இப்படி ஒழுங்கீனமாக நடந்து கொண்டாரா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்காக அவரது செல்போனை போலீசார் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் ஒருவர் இழிவான செயல், பெண் டாக்டர்கள், செவிலியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    • போலீசார் லாரியில் சோதனை செய்தபோது அதில் சுமார் 3 யூனிட் ஆற்று மணல் இருந்தது தெரிய வந்தது.
    • தப்பியோடிய 3 பேரையும் போலீசார் பிடித்தனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் பகுதியில் மணல் கடத்தல் தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன், ஏட்டு ராஜா ஆகியோர் ராமநாதபுரம் நீலகண்டி ஊரணி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனையிடுவதற்காக தடுத்து நிறுத்தினர்.

    ஆனால் அந்த வாகனம் நிற்காமல் அந்த இடத்தை மின்னல் வேகத்தில் கடந்து சென்றது. சற்று தூரம் தள்ளி லாரி நின்றதும் அதிலிருந்த 3 பேரும் கீழே குதித்து தப்பி ஓடினர். தொடர்ந்து போலீசார் லாரியில் சோதனை செய்தபோது அதில் சுமார் 3 யூனிட் ஆற்று மணல் இருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து தப்பியோடிய 3 பேரையும் போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் லாரி டிரைவரான முதலூர் வடக்கு தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 32), லோகநாதன் என்ற கபில் (27), மதுரசேகர் (31) ஆகிய 3 பேரும் உரிய அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் இந்த மணல் கடத்தலுடன் தொடர்புடைய முதலூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி, அவரது மகன் மனோஜ், கார்த்திக், கந்தபாண்டி, விக்னேஷ், கபில், ராமர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் பஜார் போலீசாரின் இந்த துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

    • மத்திய அரசு சர்பாசி சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
    • விவசாயிகள் சொத்துக்கள் அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்க கூடாது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் திருச்சியில் நடத்தப்படும் கண்காட்சியை உடனடியாக நிறுத்த வேண்டும். விவசாயிகள் சொத்துக்கள் அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்க கூடாது. மத்திய அரசு சர்பாசி சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

    விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டத்தை கொண்டு வரவேண்டும். இதனை வலியுறுத்தி கடந்த 26-ம் தேதி முதல் பஞ்சாப் மாநிலம் கண்ணுரி பார்டரில் ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் ஜெகசித் சிங் டல்லேபாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ரெயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
    • நீர்வரத்து வினாடிக்கு 5,195 கன அடியாக அதிகரித்துள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் உபரி தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை ஆகியவற்றை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாகவும் உள்ளது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதனால் இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,528 கன அடியில் இருந்து 5,195 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 110.58 அடியாகவும், நீர் இருப்பு 79.23 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

    தமிழக காவிரி டெல்டா பாசனத்துக்கு அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது.

    • சென்னையில் ஒருசில தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெறுகிறது.
    • சென்னையில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை பட்டாளத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * புயல், மழை, வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு திறமையோடு கையாண்டது.

    * சென்னையில் ஒருசில தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெறுகிறது.

    * அதிக திறனுள்ள 600 HP மின் மோட்டார்களை கொண்டு மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    * சென்னையில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    * மழை நின்றவுடன் ரூ.19 கோடியில் பணிகள் தொடங்கப்பட்டு அடுத்த பருவமழைக்குள் நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.

    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • மண், பாறைகளும் சாலையில் சரிந்துள்ளது.

    கொடைக்கானல்:

    தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெஞ்சல் புயல் காரணமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காணரமாக திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.

    சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு செல்ல பழனி, வத்தலக்குண்டுவில் இருந்து மலைச்சாலை உள்ளது. தேனி மாவட்டத்தில் இருந்து பெரியகுளம், அடுக்கம் வழியாக கொடைக்கானலுக்கு செல்லும் பாதையை சீரமைத்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மலைச்சாலையில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டதால் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இலகுரக வாகனங்கள், பைக்குகள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

    தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக அடுக்கம் சாலையில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் மண், பாறைகளும் சாலையில் சரிந்துள்ளது.

    இதனை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். தற்காலிக சீரமைப்பிற்கு பின்னர் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

    இருப்பினும் தடுப்பு சுவர்களை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    திண்டுக்கல் 2, காமாட்சிபுரம் 3.8, நிலக்கோ ட்டை 2.2, வேடசந்தூர் தாலுகா அலுவலகம் 2.2, புகையிலை ஆராய்ச்சி மையம் 2.2, பழனி 3, ரோஸ்கார்டன் 2.5, பிரையண்ட் பூங்கா 1.5 என மாவட்டம் முழுவதும் 19.40 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 336 ஏரிகளில் 39 ஏரிகள் முழுமையாக நிரம்பின.
    • 57 ஏரிகள் 75 சதவீதமும், 88 ஏரிகள் 51 சதவீதமும், 31 ஏரிகள் 26 சதவீதமும் நிரம்பி உள்ளன.

    சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் நள்ளிரவில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்து வருகிறது.

    இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 39 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. புயல் எதிரொலியாக கனமழை பெய்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 336 ஏரிகளில் 39 ஏரிகள் முழுமையாக நிரம்பின.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 57 ஏரிகள் 75 சதவீதமும், 88 ஏரிகள் 51 சதவீதமும், 31 ஏரிகள் 26 சதவீதமும் நிரம்பி உள்ளன.

    • உத்தரமேரூர் தாலுகாவில் அதிகமாக மழை பெய்துள்ளது.
    • 17 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.

    சென்னை:

    பெஞ்ஜல் புயல் மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நேற்று கரையை கடந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் மழை விட்டு விட்டு பெய்தது.

    இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தரமேரூர் தாலுகாவில் அதிகமாக மழை பெய்துள்ளது. மற்ற தாலுகாவில் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய மழை இல்லை.

    இதுபற்றி மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறியதாவது:

    பெஞ்ஜல் புயல்-பலத்த மழை சேதத்தை ஏற்படுத்தும் என கருதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. நிவாரண முகாம்கள் 30 இடங்களில் ஏற்படுத்தப்பட்டன.

    இதில் நேற்றிரவு 849 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு சாப்பாடு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் 65 இடங்களில் தேங்கி நின்ற தண்ணீர் முழுமையாக வடிய வைக்கப்பட்டன. 17 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. அதையும் அப்புறப்படுத்திவிட்டோம். 5 குடிசை வீடுகள் இடிந்துள்ளது. அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்க அரசு ஏற்பாடு செய்யும்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    • ஆம்னி வேனின் முன் பகுதியும் சேதமடைந்து ஆம்னி வேனை ஓட்டி வந்த மணிகண்டனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
    • தலை மற்றும் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 3 பேரும் பலியானார்கள்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ராசிபாளையம் காட்டூர் எரியூர்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மலையண்ணன் (70), விவசாயி. இவரது மனைவி நிர்மலா (55). அதே பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் என்பவரது மனைவி செல்லம்மாள் (65). இவர்கள் 3 பேரும் நாமக்கல்-மோகனூர் செல்லும் தார் சாலை ஓரத்தில் காட்டூர் பெட்ரோல் நிலையம் அருகே இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் நடைபயிற்சி சென்றனர்.

    அப்போது மோகனூர் பாம்பாட்டி தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஆம்னி வேனை அதிவேகமாக ஓட்டி வந்தார். பின்னர் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் நடைபயிற்சி சென்ற மலையண்ணன், அவரது மனைவி நிர்மலா மற்றும் செல்லம்மாள் ஆகிய 3 பேர் மீதும் மோதியது. இதில் அவர்களுக்கு தலை மற்றும் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 3 பேரும் பலியானார்கள்.

    அதேபோல் ஆம்னி வேனின் முன் பகுதியும் சேதமடைந்து ஆம்னி வேனை ஓட்டி வந்த மணிகண்டனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து உடனடியாக மோகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் விபத்தில் பலியான 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஆம்னி வேன் டிரைவர் மணிகண்டனை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மோகனூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் மோகனூர் போலீசார் ஆம்னி வேனை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து ஆம்னி வேனை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடைபயிற்சி சென்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • லண்டனில் இருந்து நேற்று இரவு சென்னை புறப்பட்டார்.
    • கட்சியின் மையக்குழு கூட்டமும் நடக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் படிப்பை படிக்க கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி லண்டன் சென்றார்.

    3 மாத படிப்பை முடித்து விட்டு அவர் இன்று சென்னை திரும்புகிறார். லண்டனில் இருந்து நேற்று இரவு சென்னை புறப்பட்டார்.

    இன்று பிற்பகலில் சென்னை விமான நிலையம் வரும் அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.

    அதை தொடர்ந்து கோவை புறப்பட்டு செல்கிறார். அங்கு வாய்ஸ் ஆப் கோவை என்ற அமைப்பு சார்பில் கொடீசியா அரங்கில் இன்று 2-வது நாளாக நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொண்டு 'எழுந்திரு விழித்திரு, உறுதியாயிரு' என்ற தலைப்பில் மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார்.

    நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மீண்டும் சென்னை திரும்புகிறார். கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பின்னர் பகல் 12 மணிக்கு அமிஞ்சிகரையில் உள்ள அய்யாவு மகாலில் நடைபெறும் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    அதைதொடர்ந்து கட்சியின் மையக்குழு கூட்டமும் நடக்கிறது.

    • சாலையில் சென்று கொண்டிருந்தபோது தீவிபத்து ஏற்பட்டது.
    • தனியார் சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்து முழுமையாக நாசமானது.

    சென்னையிலிருந்து பெங்களூருக்கு 36 பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

    திருப்பத்தூர் மாவட்டம் லட்சுமிபுரத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அதிகாலை 4 மணியளவில் திடீரென பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டது.

    சாலையில் சென்று கொண்டிருந்தபோது தீவிபத்து ஏற்பட்ட நிலையில், பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கி உயிர் தப்பினர்.

    தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தனியார் சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்து முழுமையாக நாசமானது.

    இந்த தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×