என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சீராக உள்ளது.
    • ஐயப்ப பக்தர்கள் குவிந்திருந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் சமீபத்தில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சீராக உள்ளது.

    கார்த்திகை மாதம் பிறந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிவித்ததால் குற்றால அருவிகளில் புனித நீராடி சபரிமலைக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    இன்று குற்றாலம் மெயின் அருவியில் சீராக விழுந்த தண்ணீரில் புனித நீராடுவதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் குவிந்திருந்தனர். மெயின் அருவியில் சீராக விழும் தண்ணீரில் உற்சாக குளியலிட்டு மகிழ்ந்தனர்.


    ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக குளித்து முடித்தவுடன் திருநீர், சந்தனம், குங்குமம் பூசி கொள்வதற்கென அருவி கரைகளை சுற்றி அமைந்துள்ள கடைகளை சேர்ந்த வியாபாரிகள் கடையின் முகப்பு பகுதியில் முகம் பார்க்கும் கண்ணாடிகளை வரிசையாக அமைத்து அதன் அருகே சிறு, சிறு கிண்ணங்களில் சந்தனம், குங்குமம், திருநீர் வரிசையாக வைத்துள்ளனர். அதனை குளித்து முடித்த ஐயப்ப பக்தர்கள் கண்ணாடி பார்த்து நெற்றியில் திருநீர், சந்தனம், குங்குமம் இட்டு கொள்கின்றனர்.

    சந்தனம், குங்குமம்,திருநீறு கண்ணாடி பார்த்து பூசி கொள்வதற்கு ஒரு பக்தருக்கு ரூ.5 கட்டணமாக நிர்ணயித்து கடைக்காரர்கள் வசூல் செய்து வருகின்றனர். தற்போது குற்றாலம் மெயின் அருவி அய்யப்ப பக்தர்களின் புனித நீராடும் பகுதியாகவும், பக்தி பரவசமூட்டும் இடமாகவும் காட்சியளிக்கிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்பட்டது.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரையில் நேற்று காலை முதல் மதியம் வரையில் மிதமான வெயிலாகவும், மாலையில் குற்றாலம் பகுதியில் அவ்வப்பொழுது விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இன்று காலையில் குற்றாலம் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. 

    • சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் விழுந்துள்ளன.
    • வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், திட்டக்குடி, சிதம்பரம் காட்டுமன்னார்கோவில், வேப்பூர் மற்றும் மாவட்டம் முழுவதும் பெய்துள்ளது.


    கனமழை காரணமாக கடலூர், வடலூர், காட்டுக் கூடலூர், நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் விழுந்துள்ளன.


    கடலூர் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி உள்ளது. முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக் குள்ளாகி உள்ளனர்.

    • 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
    • அருந்ததியர் நகர் வெள்ளத்தில் மூழ்கியது.

    விழுப்புரம் மாவட்டத்தில் 42 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் அதிக மழை பெய்துள்ளது. மயிலத்தில் 50 செ.மீ. மழை பெய்துள்ள நிலையில் அங்குள்ள தென் ஏரி உடைந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள அருந்ததியர் நகர் வெள்ளத்தில் மூழ்கியது.

    இங்குள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்டவர்கள் அப்பகுதியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரியில் கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 செ.மீ. மழை பெய்திருந்தது. தற்போது 47 செ.மீ. மழை பெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • வினாடிக்கு 1568 கன அடி தண்ணீர் வசிஷ்டநதியில் திறக்கப்பட்டுள்ளது.
    • கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதிதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால் சுற்றுப்புற கிராமங்களில் 5,011 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

    பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர்பட்டி ஏரிகளும், 20-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீர் ஆதாரமும், பாசன வசதியும் பெறுகின்றன.

    செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான சித்தேரி, பெரியகுட்டி மடுவு, சந்தமலை, அருநூற்றுமலை பகுதியில் பெய்த பருவ மழையால், அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கடந்த ஆக்டோபர் மாதம் 23-ந் தேதி அணையின் நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்து, 197 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.


    இந்த நிலையில், எதிர்பாராத விதமாக அக்டோபர் மாதம் 24-ந் தேதி மாலை முதல் இரவு வரை தொடர்ந்து 4 மணி நேரம் 15 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது.

    26-ந்தேதி அதிகாலை அணையின் நீர்மட்டம் 65.29 அடியை எட்டி 3 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது. அணையில் 240 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது. இதனையடுத்து, அணையில் இருந்து வசிஷ்டநதியில் வினாடிக்கு 85 கன அடி தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் புயல் காரணமாக நேற்று மாலை முதல், இன்று அதிகாலை விடிய விடிய இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1568 கன அடி தண்ணீர் வசிஷ்டநதியில் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் 3 ஆண்டுகளுக்கு பிறகு பெருமளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே வசிஷ்ட நதி ஆற்றுப்படுகை கரையோர கிராம மக்களுக்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை வாயிலாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • பலத்த மழை காரணமாக பிச்சாடடூர் அணை நிரம்பி உள்ளது.
    • இன்று காலை 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் அணை உள்ளது. பலத்த மழை காரணமாக பிச்சாடடூர் அணை நிரம்பி உள்ளது. இதையடுத்து அணையில் இருந்து இன்று காலை 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டு உள்ளது. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக நீர்வளத் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிச்சாட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்தும் சற்று அதிகமாக இருப்பதால், பாதுகாப்பு கருதி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திர மாநில அரசு இன்று (1-ந்தேதி)காலை 10 மணியளவில் உத்தேசமாக 500 கன அடி உபரி நீரை திறந்து விடுகிறது.

    இதனால் ஆரணியாறு ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ளவர்களுக்கு வெள்ள அபாய முன் எச்சரிக்கை விடப்படுகிறது.

    நீர் தேக்கத்திற்கு மழை நீரினால் வரத்து அதிகமாகும் பட்சத்தில் மிகை நீர் வெளியேற்றத்தின் அளவு படிப்படியாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்பொழுது ஆரணியாற்றின் குறுக்கே உள்ள அ.நாகுப்பம் அணைக்கட்டு, லட்சுமிபுரம் அணைக்கட்டு, அரெட்டி பாளையம் தடுப்பணைகள் மூலம் சராசரியாக 3200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    எனவே ஆரணி ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை, தாராட்சி பேரண்டூர் 43யனப்பாக்கம், பாலவாக்கம், காக்கவாக்கம், செங்காத்தாகுளம், பெரியபாளையம், பாலவாக்கம், ஆர்.என்.கண்டிகை, அனந்தேரி, பேரிட்டிவாக்கம், வட தில்லை, மாம்பாக்கம், கல்பட்டு, மானந்தூர்.

    தொளவேடு, மேல் மாளிகைப் பட்டு, கீழ் மாளிகைப்பட்டு, பெரியபாளையம், ராளப் பாடி, மங்களம் காரணி ஆரணி, போந்தவாக்கம், புதுவாயல், துறைநல்லூர், வைரவன்குப்பம், மேல்முதலம்பேடு, கீழ்முதலம்பேடு, பெருவாயல், ஏலியம்பேடு, பெரியகாவனம், சின்ன காவனம், பொன்னேரி, லட்சுமிபுரம், கம்மவார் பாளையம்.

    பெரும்பேடு, வஞ்சி வாக்கம், வெள்ளோடை ஆலாடு, கொளத்தூர், குமாரசிறுலப்பாக்கம், மனோபுரம், அத்தமணஞ்சேரி, வேலூர், அ.ரெட்டிபாளையம், காட்டூர், தத்தமஞ்சி, கடப்பாக்கம், சிறுபழவேற்காடு. போலாச்சியம்மன்குளம், ஆண்டார்மடம், தாங்கல் பெரும்புலம் மற்றும் ஆரணி ஆற்றின் இருபுறம் உள்ள தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    பலத்த மழையினால் பொன்னேரி ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பி 3250 கன அடி தண்ணீர் வெளியேறி மனோபுரம் ரெட்டிபாளையம் ஆண்டார் மடம் வழியாக பழவேற்காடு கடலில் கலக்கிறது. பொன்னேரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள 55 ஏரிகளில் 32 ஏரிகள் கொள்ளளவு நிரம்பி உள்ளன.

    மீஞ்சூர் அடுத்த நாளூர் பத்மாவதி நகர்,இந்துஜா நகர், கலைஞர் நகர அத்திப்பட்டு புது நகர், நந்தியம்பாக்கம், பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம், ஏ.ஏ.எம். நகர், பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட தாய்மான் செட்டி தெருவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.

    பொன்னேரி-பழவேற் காடு சாலை, திருவாயர்பாடி ெரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாலச்சந்தர் இளநிலை பொறியாளர் பரந்தாமன் மற்றும் ஊழியர்கள் 2 ராட்சதமின்மோட்டார்கள் மூலம் மழை நீரை வெளியேற்றி வருகின்றனர்.இதனை அமைச்சர் ஆவடி நாசர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பழவேற்காடுமற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பாலைவனம், அத்திப்பட்டு, பள்ளி பாளையம், வைரங்குப்பம் ஆலாடு பாதுகாப்பு மையத்தில் 507 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இவர்களுக்கு தேவையான உணவு, பிரட் பிஸ்கட் போர்வை, உள்ளிட்டவைகளை அமைச்சர் சா.மு. நாசர், எம்.எல்.ஏக்கள் துரை சந்திரசேகர், டி.ஜே.எஸ்.கோவிந்தராஜன், சேர்மன் ரவி, பழவேற்காடு அலவி, ஆகியோர் வழங்கினர். அப்போது வட்டாட்சியர் மதிவாணன் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் பலர் உடன் இருந்தனர்.

    சோழவரம் அடுத்த ஆத்தூரில் 2 குடிசை வீடுகள் சின்னம்பேடு, சோம்பட்டு பகுதியில் தலா ஒரு வீடு இடிந்து விழுந்தன. மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள், 5 மின்கம்பங்கள் சாய்ந்தன பழவேற்காடு கடற்கரையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 30-க்கும் மேற்பட்ட படகுகள் என்ஜின்கள், வலைகள், சேதமடைந்து உள்ளன. இன்று காலையும் பொன்னேரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது.

    • ஓடுபாதையில் தேங்கிய தண்ணீர் அகற்றம்.
    • பயணிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் நேற்று மாலை மாமல்லபுரம், புதுச்சேரி இடையே கரையை கடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் மாலை வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக் காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகள் முழுவதும் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

    பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலை யத்தில் உள்ள ஓடுபாதைகளில் மழை நீர் வெள்ளமாக தேங்கியது. இதைத் தொடர்ந்து நேற்று காலை 10 மணி முதல் சென்னை விமான நிலையம் மூடப்பட்டது. விமான சேவை முழுவதும் நிறுத்தப்பட்டது.

    மழை தொடர்ந்து பெய்ததால் இன்று (1-ந்தேதி) அதிகாலை 4 மணிவரை விமானநிலையம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    எனவே விமான பயணிகள், தாங்கள் பயணம் செய்ய இருக்கும், விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தங்களுடைய விமானங்கள் எப்போது புறப்படும் என்பதை கேட்டு அறிந்து கொண்டு, பயணிகள் சென்னை விமான நிலையத்திற்கு வரும்படி அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் புயல் கரையை கடந்த பின்னர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை முழுவதும் நின்றது. லேசான சாரல் மட்டுமே அடித்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதையில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    ஓடுபாதையில் தண்ணீர் முழுவதும் அகற்றப்பட்ட நிலையில் மழையும் இல்லாததால் 3 மணி நேரம் முன்னதாகவே விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது.

    சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவில், இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் மற்றும் விமான நிறு வனங்களின் மேலாளர்கள் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் புயல் கரையைக் கடந்து வானிலை சீரடைந்து விட்டதால், முன்னதாகவே விமானங்களை இயக்க முடிவு எடுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 1 மணி முதல் சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதுபற்றி பயணிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
    • அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர்.

    சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்துள்ளது.

    சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

     

    சென்னை கொளத்தூர் தொகுதியில் மழைநீர் நிவாரண பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர்.

    செல்விநகர் நீர் உந்து நிலையத்தில் ஆய்வு நடத்திய முதலமைச்சர், அப்பகுதி மக்களிடம் மழைநீர் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், மழை நின்றதும் தண்ணீர் வடிந்துவிடும் என்று கூறினார்.

    • 113 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.
    • நீர்வளத்துறை கட்டுப் பாட்டில் 909 ஏரிகள் உள்ளன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மற்றும் செங்கல் பட்டு மாவட்டங்களில் நீர்வளத்துறை கட்டுப் பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 113 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    நேற்று ஒரே நாளில் 52 ஏரிகள் நிரம்பி உள்ளன. 241 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும் , 284 ஏரிகள் 50 சதவீதமும், 200 ஏரிகள் 25 சதவீதமும, 70 ஏரிகள் 25 சதவீதத்துக்கு கீழும் நிறைந்து உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

    உத்திரமேரூர் - 20.5 செ.மீ

    காஞ்சிபுரம் - 15.3 செ.மீ

    செம்பரம்பாக்கம் - 13.2 செ.மீ

    வாலாஜாபாத் - 12.7செ.மீ

    ஸ்ரீபெரும்புதூர்- 13.1 செ.மீ

    குன்றத்தூர் - 10.7செ.மீ

    மஞ்சள் நீர் கால்வாய்

    பலத்த மழை காரணமாக திருகாலிமேடு அருந்ததி பாளையம் பகுதியில் உள்ள மஞ்சள் நீர் கால்வாயில் இருந்து வெளியேறிய தண் ணீர் அருகில் உள்ள குடி யிருப்புகளுக்குள் புகுந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் அப்பகுதியில் வசிப்பவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    மாநகராட்சி நிர்வாகம் சரியான திட்ட மிடாமல் மஞ்சள் கால்வாயில் மேற்கொண்டு வரும் பணியினால் கால்வாயில் போதிய மழை நீர் செல்ல முடியாமல் தண்ணீர் வெளியேறி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    • கிருஷ்ணகிரி அணையில் 21.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
    • அத்திவாசிய பொருட்கள் வாங்க முடியாமல பொதுமக்கள் தவித்தனர்.

    தருமபுரி:

    வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக பெஞ்சல் புயல் உருவாகி தமிழகத்தில் சென்னை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் நகர பகுதியில் நேற்று அதிகாலை முதல் வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. வெயிலே தெரியாமல் காலை முதல மதியம் வரை குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை உருவானது. மதியம் திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது.

    இந்த மழை இரவு விடிய, விடிய பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்ததால், அத்திவாசிய பொருட்கள் கூட வாங்க வெளிவர முடியாமல பொதுமக்கள் தவித்தனர்.


    நகரின் முக்கிய பகுதிகளான பஸ் நிலையம், 4ரோடு, பச்சையம்மன் கோவில் தெரு, சேலம் மெயின்ரோடு, மதிக்கோண்பாளையம், முகமதுஅலி கிளப்ரோடு, குமாரசாமிப்பேட்டை, மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர் மழையால் தருமபுரி நகரில் கந்தசாமி வாத்தியார் தெருவில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு இருந்த புளியமரம் இன்று காலை சாய்ந்து விழுந்தது.

    இதில் அந்த தெருவில் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது மரம் விழுந்ததால் வண்டியின் முன்பு சேதமாகி இருந்தன. அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் இல்லை.

    மரம் சாய்ந்து விழுந்தால் தருமபுரி நகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைப்பட்டது. உடனே பேரிடர் மீட்பு படையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


    காரிமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, அடிலம், அனுமந்தபுரம், பொம்மஅள்ளி, கெரகோடஅள்ளி, நாகணம்பட்டி, திண்டல், தும்பலஅள்ளி உள்ளிட்ட பகுதியில் இரவு தொடங்கி காலை வரை பலத்த மழை பெய்தது.

    தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, பென்னாகரம், ஏரியூர், பெரும்பாலை, பாலக்கோடு, அரூர், கம்பை நல்லூர், பாப்பிரெட்டிப் பட்டி, தொப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று முதல் இன்று காலை வரை கனமழை கொட்டியது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், பொதுமக்கள் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளதால், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.


    மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:

    தருமபுரி-30மி.மீ, பாலக்கோடு-15மி.மீ, மாரண்டல்-6மி.மீ, பென்னாகரம்- 12 மி.மீ, ஒகேனக்கல்- 3 மி.மீ, அரூர்- 91.4 மி.மீ, பாப்பிரெட்டிப் பட்டி-75மி.மீ, மொரப்பூர்- 86 மி.மீ என மாவட்டத்தில் மொத்தம் 318.4 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பெஞ்சல் புயல் எதிரொலியால் இரவு முதல் இன்று காலை வரை கனமழை பெய்தது.

    இதன் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளான பஸ் நிலையம், லண்டன்பேட்டை, சேலம் மெயின்ரோடு, பெங்களூரு சாலை, சப்-ஜெயில் ரோடு மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.

    இதேபோன்று மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, பாம்பாறு, பாரூர், கிருஷ்ணகிரி டேம், உள்ளிட்ட பகுதிகளில் அதிக கனமழை பெய்தது.

    தொடர்ந்த பெய்து வரும் மழையின் தாக்கம் காரணமாக, பல்வேறு பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு மழை பதிவாகியுள்ளது.

    வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக பம்பாறு அணையில் 95 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஊத்தங்கரை தாலுகா அலுவலகத்தில் 71 மி.மீ, போச்சம்பள்ளி தாலுகாவின் பெணுகொண்டபுரத்தில் 46.4 மி.மீ மற்றும் பாரூரில் 37.2 மி.மீ என மழை பதிவாகியுள்ளது.

    கிருஷ்ணகிரி அணையில் 21.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் பகுதிகளில் மழை குறைவாக பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.

    • சென்னையில் 200 மருத்துவ முகாம்களும் மற்ற 6 மாவட்டங்களில் தலா 50 மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது.
    • காய்ச்சல், சளி, பரிசோதனை, ரத்த கொதிப்பு உள்ளிட்ட பாதிப்புக்கு அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

    சென்னை கிண்டி மடுவின்கரை பகுதியில் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

    * சென்னையில் 200 மருத்துவ முகாம்களும் மற்ற 6 மாவட்டங்களில் தலா 50 மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது.

    * காய்ச்சல், சளி, பரிசோதனை, ரத்த கொதிப்பு உள்ளிட்ட பாதிப்புக்கு அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

    * முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி 7 மாவட்டங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

    * தமிழகம் முழுவதும் ஒன்றரை மாதமாக நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் 28.02 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

    • சுற்றுலாப் பயணிகள் தரைப்பாலத்தை கடக்க தடை.
    • நீர் இருப்பு 3023 மி.கன அடியாக உள்ளது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

    மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. அணையின் நீர்மட்டம் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த மாத தொடக்கத்தில் 65 அடியை எட்டியது.

    முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு மழை அளவு படிப்படியாக குறையத் தொடங்கியது.

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் அவ்வப்போது பெய்யும் மழை நீரால் வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 56.82 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 612 கன அடி தண்ணீர் வருகிறது. நீர் இருப்பு 3023 மி.கன அடியாக உள்ளது.

    இந்நிலையில் வைகை அணையில் இருந்து சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கிருதுமால் உபவடி நிலத்திற்கு குடிநீர் தேவைக்காக சிறப்பு நிகழ்வாக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி வைகை அணையில் கூடுதல் இருப்பாக உள்ள 1.68 டி.எம்.சி. தண்ணீரில் இன்று முதல் 8 நாட்களுக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் 0.45 டி.எம்.சி.க்கு மிகாமல் தண்ணீரின் இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து நீர் திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை அணையில் இருந்து கூடுதல் பாசனத்துக்கான தண்ணீர் மற்றும் குடிநீருக்கு என 2219 கன அடி நீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது.


    அணையின் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால் இரு புறங்களிலும் அடைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் செல்ல அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.

    தரைப்பாலத்தை கடந்து பூங்காவிற்கு செல்ல முடியாமல் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். இருந்த போதும் சிலர் வாகனங்கள் மூலம் பாலத்தை சுற்றி எதிர்புறம் சென்றனர்.

    எனவே கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி நீர்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என எச்சரித்துள்ளனர்.

    அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஏரியை சுற்றி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
    • கிடங்கல் ஏரியில் முறையான கால்வாய் வசதி இல்லாததால் ஏரி நிரம்பி குடியிருப்பு பகுதிக்குள் சூழ்ந்தது.

    திண்டிவனம்:

    வங்கக்கடலில் உருவாகிய ஃபெஞ்சல் புயல் நேற்று நள்ளிரவில் கரையை கடந்தது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நேற்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் திண்டிவனத்தில் கிடங்கல் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை சுற்றி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக கிடங்கல் ஏரி நிரம்பியதால் அதனைச் சுற்றியுள்ள பகுதிக்குள் மழைநீர் சூழ்ந்துள்ளது.

    இப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அத்தியாவாசிகள் தேவையான பொருட்கள் கூட வாங்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த கிடங்கல் ஏரியில் முறையான கால்வாய் வசதி இல்லாததால் ஏரி நிரம்பி குடியிருப்பு பகுதிக்குள் சூழ்ந்தது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தவும் மேலும் மழைநீர் வீடுகளுக்குள் வராமல் இருக்கவும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×