குற்றாலம் அருவிகளில் குளிக்க அலைமோதிய கூட்டம்

குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சீராக உள்ளது.ஐயப்ப பக்தர்கள் குவிந்திருந்தனர்.
குற்றாலம் அருவிகளில் குளிக்க அலைமோதிய கூட்டம்
Published on

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் சமீபத்தில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சீராக உள்ளது.

கார்த்திகை மாதம் பிறந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிவித்ததால் குற்றால அருவிகளில் புனித நீராடி சபரிமலைக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இன்று குற்றாலம் மெயின் அருவியில் சீராக விழுந்த தண்ணீரில் புனித நீராடுவதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் குவிந்திருந்தனர். மெயின் அருவியில் சீராக விழும் தண்ணீரில் உற்சாக குளியலிட்டு மகிழ்ந்தனர்.

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக குளித்து முடித்தவுடன் திருநீர், சந்தனம், குங்குமம் பூசி கொள்வதற்கென அருவி கரைகளை சுற்றி அமைந்துள்ள கடைகளை சேர்ந்த வியாபாரிகள் கடையின் முகப்பு பகுதியில் முகம் பார்க்கும் கண்ணாடிகளை வரிசையாக அமைத்து அதன் அருகே சிறு, சிறு கிண்ணங்களில் சந்தனம், குங்குமம், திருநீர் வரிசையாக வைத்துள்ளனர். அதனை குளித்து முடித்த ஐயப்ப பக்தர்கள் கண்ணாடி பார்த்து நெற்றியில் திருநீர், சந்தனம், குங்குமம் இட்டு கொள்கின்றனர்.

சந்தனம், குங்குமம்,திருநீறு கண்ணாடி பார்த்து பூசி கொள்வதற்கு ஒரு பக்தருக்கு ரூ.5 கட்டணமாக நிர்ணயித்து கடைக்காரர்கள் வசூல் செய்து வருகின்றனர். தற்போது குற்றாலம் மெயின் அருவி அய்யப்ப பக்தர்களின் புனித நீராடும் பகுதியாகவும், பக்தி பரவசமூட்டும் இடமாகவும் காட்சியளிக்கிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்பட்டது.

தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரையில் நேற்று காலை முதல் மதியம் வரையில் மிதமான வெயிலாகவும், மாலையில் குற்றாலம் பகுதியில் அவ்வப்பொழுது விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இன்று காலையில் குற்றாலம் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com