என் மலர்
உள்ளூர் செய்திகள்
- புதிய கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற வேண்டிய தேவை எழவில்லை.
- என்னை கட்டுப்படுத்தி இயக்குவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை.
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலித் அல்லாதவர்கள் எந்த மட்டத்தில் பொறுப்பில் இருந்தாலும் அவர்களின் மீது நடவடிக்கை என்று வருகிற போது தலைவர், பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட உயர்நிலைக்குழுவின் கவனத்திற்கு சென்று அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எந்த அளவுக்கு முகாந்திரமானவை என்பதை உறுதிப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஒரு நடைமுறையாக கொண்டு இருக்கிறோம். ஏன் என்றால் தலித் அடையாளத்துடன் இந்த இயக்கம் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்தது. இது முழுமையாக அரசியல் கட்சியாக மாற வேண்டும் என்பதற்கு வேளச்சேரி தீர்மானம் என்பதை நாங்கள் 2007-ல் நிறைவேற்றினோம்.
தலித் அல்லாத ஜனநாயக சக்திகள் இந்த கட்சியில் அதிகார மையங்களுக்கு வரவேண்டும். பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்பதுதான் அந்த தீர்மானம். அப்படி வருகின்ற போது அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது தலைவரின் கடமை. அந்த பொறுப்பிலே அவர்கள் தொடர்ந்து செயல்படுவதற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவது.
ஆகவே தான், ஆதவ் அர்ஜூனாவின் அண்மைகால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை கட்சி முன்னணி தோழர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதை தலைமையின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அதுகுறித்து முன்னணி தோழர்களுடன் கலந்து பேசியிருக்கிறோம். ஆதவ் அர்ஜூனா மீதான நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கும் நிலையில் நான் இல்லை. தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே உள்ள வி.சி.க. புதிதாக உருவாகும் கூட்டணியில் இடம்பெறாது. புதிய கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற வேண்டிய தேவை எழவில்லை.
விஜய் மீது எனக்கு எந்த சங்கடமும் இல்லை. அவருடன் நிற்பதிலும் சங்கடம் இல்லை. அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் பங்கேற்பதிலும் மகிழ்ச்சி தான். ஆனால் நானும், விஜயும் ஒரே மேடையில் நின்றால் அதை வைத்து இங்கே அரசியல் சூதாட்டம் ஆட விரும்புபவர்கள் தமிழக அரசியல் களத்தில் களேபரத்தை உருவாக்குவார்கள். குழப்பத்தை உண்டாக்குவார்கள். அதை நான் விரும்பவில்லை. இதனை நான் ஏற்கனவே கூறி விட்டேன். எனக்கு எந்த அழுத்தழும் கிடையாது. சுதந்திரமாக எடுத்த முடிவு. தொலைநோக்கு பார்வையுடன் எடுத்த முடிவு. தமிழக அரசியலின் எதிர்காலம் கருதி எடுத்த முடிவு. வி.சி.க. அங்கம் வகிக்கும் கூட்டணி நலன் கருதி எடுத்த முடிவு. என்னை கட்டுப்படுத்தி இயக்குவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை. அதற்கான சூழலும் இல்லை என்றார்.
- பென்னிகுவிக் மணிமண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டம்.
- 4 நாட்களாக அனுமதி வழங்காதது வேதனையளிக்கிறது.
கூடலூர்:
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.
முல்லைப்பெரியாறு அணை கேரளாவில் இருந்தாலும் பராமரிப்பு பணி தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 4-ந் தேதி தமிழக நீர்வளத்துறையினர் 2 லாரிகளில் 4 யூனிட் எம்.சாண்ட் உள்ளிட்ட தளவாட பொருட்களை கொண்டு சென்றனர்.
வல்லக்கடவு சோதனைச்சாவடியில் கேரள வனத்துறையினர் லாரிகளை தடுத்து நிறுத்தி அணைப்பகுதிக்கு செல்ல அனுமதி மறுத்தனர். கடந்த 3 நாட்களாக பல்வேறு விவசாய சங்கங்கள் லோயர் கேம்பில் முற்றுகை போராட்டம், ஆர்ப்பாட்டம், பென்னிகுவிக் மணிமண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டம் ஆகியவற்றை நடத்தினர்.
ஆனால் கேரள அரசு இதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து லாரிகளை அனுமதிக்காததால் 4 நாட்களாக சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், கேரள அரசு நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
லாரியின் டிரைவர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் வல்லக்கடவு பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வழக்கமாக அணை பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக செல்லும் தளவாட பொருட்களை இத்தனை நாட்கள் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆய்வு செய்து ஓரிரு நாட்களில் அனுமதித்திருக்க வேண்டும்.
ஆனால் 4 நாட்களாக அனுமதி வழங்காதது வேதனையளிக்கிறது. எனவே இன்று மாலைக்குள் தளவாட பொருட்கள் கொண்டு சென்ற லாரிகளை அணை பகுதிக்குள் அனுமதிக்காவிட்டால் நாளை குமுளியில் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.
- யானை கூட்டங்கள் அங்கு பயிரிடப்பட்டிருந்த ராகி பயிரை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தி உள்ளது.
- வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இவற்றில் தாளவாடி, ஆசனூர், கடம்பூர், திம்பம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.
அவ்வபோது யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது.
சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலை பகுதியில் உள்ள அருள்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சென்னப்பா. இவர் அவரது தோட்டத்தில் 4 ஏக்கர் ராகி பயிரிட்டு இருந்தார். இந்நிலையில் நள்ளிரவில் இவரது தோட்டத்தில் புகுந்த 10-க்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள் அங்கு பயிரிடப்பட்டிருந்த ராகி பயிரை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தி உள்ளது. சென்னப்பா இன்று காலை தோட்டத்தில் சென்று பார்த்த போது ராகி பயிரை யானை கூட்டங்கள் சேதப்படுத்தி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் தோட்டம் முழுக்க யானை சாணங்கள் அதிக அளவில் இருந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, கர்நாடக மாநிலத்திலிருந்து 40-க்கும் மேற்பட்ட யானை கூட்டம் தாளவாடி அடுத்த அருள்வாடி கிராமத்தில் முகாமிட்டுள்ளன.
இந்த யானை கூட்டங்கள் குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு மலை கிராமமாக சென்று பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாளவாடி அருகே உள்ள கிராமத்தில் சம்பங்கி பூந்தோட்டத்திற்குள் புகுந்த 10-க்கும் மேற்பட்ட யானைக் கூட்டங்கள் பூக்களை சேதப்படுத்தியது. அதே யானை கூட்டங்கள் தான் தற்போதும் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி இருக்கலாம் என கருதுகிறோம்.
எனவே தாளவாடி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராம மக்கள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றனர்.
இந்நிலையில் விவசாயி சென்னப்பன் மற்றும் விவசாயிகள் அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் யானைகள் ஊருக்குள் புகாதவாறு பெரிய அகழி வெட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மகா தீப கொப்பரைக்கு வருகிற 12-ந் தேதி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும்.
- தீப திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 5-ம் நாள் உற்சவம் இன்று விமரிசையாக நடந்தது. நாளை மறுநாள் 10-ந் தேதி மகா தேரோட்டம் நடைபெறுகிறது. ஒரே நாளில் 5 தேர்கள் வலம் வரும்.
தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 13-ந்தேதி காலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. மலையில் ஏற்றப்படும் மகா தீபம்தொடர்ந்து 11 நாட்களுக்கு காட்சியளிக்கும். அதையொட்டி, தொடர்ந்து 11 நாட்களும் மலையில் தீபம் ஏற்றப்படும். அதற்காக, 4,500 கிலோ தூய நெய் ஆவினிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, 1,500 மீட்டர் திரியும் தயார் நிலையில் உள்ளது.
இதில், மகா தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் மகா தீப கொப்பரை சீரமைக்கப்பட்டு, புதிய வண்ணம் தீட்டி ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்துள்ளனர். மேலும், தீப கொப்பரையில் உமையாளுக்கு இடபாகம் அருளிய அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலம் காட்சியளிக்கிறது.
இந்த நிலையில், மகா தீப கொப்பரைக்கு வருகிற 12-ந் தேதி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும். மலையில் தற்போது பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருப்பதால், தீப கொப்பரையை மலை உச்சிக்கு கொண்டு செல்ல கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிட்டு வருகிறது.
தீப திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வெளியூர்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவியத் தொடங்கியுள்ளனர். மாட வீதிகள், கிரிவலப் பாதைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி உள்ளனர். நாளை மறுநாள் நடைபெறும் தேர் இடத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையொட்டி 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். போலீசார் தங்குவதற்காக திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப் பாதைகளில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சுமார் 40 லட்சம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படைகளை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள், ஆட்டோக்கள் கட்டணங்கள் குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் நிறுத்தவும் ஆங்காங்கே பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலையில் பெய்த வரலாறு காணாத கனமழையின் காரணமாக தீபம் ஏற்றும் மலையில் பல்வேறு இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும், அடுத்தடுத்து பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, வருகிற 13-ந்தேதி நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மலை மீது பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக வல்லுனர் குழு நேரடி ஆய்வு நடத்தி அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் அறிவித்தனர்.
அதன்படி, சென்னை ஐ.ஐ.டி. புவியியல் துறை பேராசிரியர்கள் 8 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழுவினர் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 7 மணி அளவில் திருவண்ணாமலை தீபமலையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு தொடர்பாக வல்லுநர்குழு கள ஆய்வை தொடங்கினர்.
இந்த குழுவுடன் பாதுகாப்பு பணிக்காக போலீசார், பாம்புக்கடி மற்றும் விஷப்பூச்சி எதிர் மருந்து, ரத்த அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன் கருவிகள், தூக்குப்படுக்கை உள்ளிட்டவை அடங்கிய மருத்துவர் தலைமையிலான மருத்துவக் குழு, வனத்துறை குழு, தீயணைப்புத்துறை சார்பாக தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் 20 நபர்கள் கொண்ட மீட்புக்குழுவும் உடன் சென்றனர்.
மலை அடிவாரத்தில் பாதுகாப்பு கருதி அவசரகால ஊர்தியுடன் கூடிய மருத்துவக்குழுவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வல்லுநர் குழு இன்று மலைப்பகுதியில் ஆய்வு நடத்தி அங்குள்ள மண்ணின் தன்மை மற்றும் பாறைகளின் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.
பக்தர்கள் மலையேறினால் மண்சரிவு மீண்டும் ஏற்பட்டு ஆபத்து ஏற்படுமா? என்பது குறித்தும் அறிக்கையில் தெரிவிக்க உள்ளனர்.
அதன் அடிப்படையில், மலை ஏற பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை 2 நாட்களில் அரசு அறிவிப்பு வெளியிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சசிகுமார் மற்றும் மகாலெட்சுமி தற்கொலை செய்தகொள்ள முடிவு செய்தனர்.
- மயங்கிய நிலையில் இருந்த மகாலெட்சுமியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
கொடைக்கானல்:
மதுரை மேலக்கள்ளந்திரி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இவருக்கும் அவரது உறவினர் மகாலெட்சுமி என்பவருக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்துள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த சசிகுமார் மகாலெட்சுமி மீது கொண்ட காதல் மோகத்தால் நாடு திரும்பினார்.
இவர்கள் இருவரும் அடிக்கடி வீட்டுக்கு தெரியாமல் வெளியே சுற்றுலா சென்று வந்துள்ளனர். உறவினர்கள் இவர்களை சந்தேகப்படவில்லை. இந்த நிலையில் மகாலெட்சுமி தனது கணவரிடம் நகை கடைக்கு செல்வதாக கூறிச் சென்றார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவர் மகாலெட்சுமியை தேடினார்.
இந்நிலையில் மகாலெட்சுமி தனது குடும்பத்தினரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கொடைக்கானலில் உள்ளேன் தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விரைந்து கொடைக்கானலுக்கு சென்றனர்.
ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பு சசிகுமார் மற்றும் மகாலெட்சுமி தற்கொலை செய்தகொள்ள முடிவு செய்தனர். அதன்படி விஷ மருந்தை மகாலெட்சுமி மட்டும் குடித்துள்ளார். ஆனால் சசிகுமார் அதனை குடிக்காமல் வெளியே வீசினார்.
மயங்கிய நிலையில் இருந்த மகாலெட்சுமியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். நீண்ட நேரமாக அறை கதவு திறக்காததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கொடைக்கானல் போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது மகாலெட்சுமி பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கள்ளக்காதலன் சசிகுமாரை தேடி வருகின்றனர்.
- 7 ஆண்டுகளாக மிஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
- நெஞ்சு வலிப்பதாக சக பணியாளர்களிடம் கூறியுள்ளார்.
அம்மாப்பேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பட்லூர் பாரதிநகரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகன் சரவண க்குமார் (வயது 29). இவர் பூனாச்சியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மில்லில் கடந்த 7 ஆண்டுகளாக மிஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை 6 மணிக்கு வழக்கம்போல சரவணகுமார் வேலைக்கு சென்றுள்ளார்.
மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, நெஞ்சு வலிப்பதாக சகப் பணியாளர்களிடம் கூறிய சரவணக்குமார் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பூனாச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த போது சரவணக்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சரவணகுமாரின் பெற்றோருக்கு தனியார் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சரவணக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சரவணகுமாரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று மதியம் பூனாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மில் முன்பு உயிரிழந்த சரவணகுமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு நிறுவனத்தை முற்றுகையிட முயன்றனர். தொடர்ந்து அவர்கள் நிறுவனத்தின் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் (பொ) தலைமையிலான போலீசார் சரவணகுமாரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டம் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கைவிடப்பட்டது.
மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பவானி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மகாதீபம் வருகிற 13-ந் தேதி மாலை 6 மணிக்கு ஏற்றப்பட உள்ளது.
- மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா?
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் தொடர்ந்து பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு வ.உ.சி.நகரில் வசித்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி திருவண்ணாமலையில் கோலாகலமாக நடைபெற்று வரும் சூழலில் 7 பேர் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தை ஆழ்த்தியது.
தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 13-ந் தேதி மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது.
மலையில் ஏற்பட்ட மண் சரிவினால் மகாதீபத்தின்போது மலைக்கு செல்லும் 2,500 பக்தர்களுக்கு இந்தாண்டு அனுமதி அளிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில் வனத்துறையினர் அண்ணாமலையார் மலை மீது ஆய்வு மேற்கொண்டனர்.

இதுபற்றி அவர்கள் கூறுகையில், மலையேறும் முக்கிய பாதைகளான கந்தாஸ்ரமம் பாதை, முலைப்பால் தீர்த்த பாதை, அரைமலை பாதை உள்ளிட்ட அனைத்து பாதைகளிலும் மண்சரிவு ஏற்பட்டு புதைக்குழி போல் காட்சி அளிக்கிறது.
மலையேறும் அனைத்துப் பாதைகளும் மண் சரிந்து உள்ளது. ஆபத்தான சூழலில் 200 மற்றும் 300 டன் எடை கொண்ட பாறைகள் ஆபத்தான நிலையில் நிற்கின்றன. குறிப்பாக மகாதீபம் ஏற்றப்படும் கொப்பரை கொண்டு செல்லும் பாதைகளிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மலை உச்சியில் தீபம் ஏற்றும் சமயத்தில் மலையேற பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என்று வனத்துறையினரின் கோரிக்கை வைத்துள்ளனர்.
புவியியல் வல்லுனர்கள் அண்ணாமலையார் மலையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு செய்த பின்னர் கொடுக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் பக்தர்கள் மலையேறுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க உள்ளது.
ஆண்டிற்கு ஒருமுறை மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தின்போது மலைஏற அனுமதிக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
- தினமும் ஆட்டோ மூலம் கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம்.
- மாணவி உடல்ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
சென்னையில் கல்லூரி மாணவி ஒருவரை தங்கும் விடுதிகளுக்கு அழைத்து சென்று கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது தோழி உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் 21 வயதுடைய மன வளர்ச்சி குன்றிய மாணவி ஆங்கில இலக்கியம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய தந்தை சரக்கு வாகன டிரைவர் ஆவார். இவரது தாயார் கடந்த 2022-ம் ஆண்டு இறந்துவிட்டார். அயனாவரம் பகுதியை சேர்ந்த இவர் தினமும் ஆட்டோ மூலம் கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம்.
கடந்த மாதம் மாணவியின் செல்போன் எண்ணுக்கு ஆபாச குறுந்தகவல்களும், தேவையில்லாத அழைப்புகளும் வந்துள்ளதை பார்த்து அவரது தந்தை அதிர்ச்சியடைந்து, அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர் அவர், தனது மகளுக்கு 'செமஸ்டர்' தேர்வு நடந்ததால் விசாரணை தேவையில்லை என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி அன்று மாணவி உடல்ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். தந்தை விசாரித்த போது, 'என்னை கல்லூரி வாசலில் இருந்து சிலர் வெளியே அழைத்து சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தனர்' என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ந்து போன அவர், அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். ஆனால், மாணவியை கல்லூரி அருகில் இருந்து அழைத்து சென்றிருப்பதால் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க ஆலோசனை வழங்கினார்கள். அதன்படி அவரும் புகார் அளித்தார்.
சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், அந்த மாணவிடம் விசாரித்த போது, அவர் தனது கல்லூரி தோழி மூலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகமான நரேஷ், சுரேஷ், சீனு ஆகிய 3 பேர் அவரை யானைக்கவுனி, பெரியமேடு பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளுக்கு அழைத்து சென்று பலமுறை பாலியல் உறவு கொண்டதாகவும், மேலும் திருப்பூரை சேர்ந்த கவி, கோயம்பேட்டை சேர்ந்த ரோஷன், அம்பத்தூரை சேர்ந்த பாண்டி, திருத்தணியை சேர்ந்த மணி ஆகியோர் 'ஸ்னாப் ஸாட்' மூலம் பழகி அவர்களும் என்னை இந்த தங்கும் விடுதிகளுக்கு அழைத்து சென்று பாலியல் உறவில் ஈடுபட்டனர் என்றும் கூறியுள்ளார்.
முதற்கட்டமாக மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் 8 பேர் மீது பெண்ணை பாதுகாவலரின் அனுமதியின்றி அழைத்து செல்லுதல், அனுமதியின்றி தொடுதல், பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக அந்த மாணவியின் தோழி மீதும் வழக்கு பாய்ந்துள்ளது. இந்த வழக்கில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். வழக்கில் சிக்கியவர்கள் கைதான பின்னர், இந்த விவகாரத்தில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.
சென்னை அயனாவரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மன வளர்ச்சி குன்றிய சிறுமி 17 பேர் கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை போன்று இந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- திண்டுக்கல் ரெயில் நிலையத்தை கடந்த ரெயில் சில கிலோ மீட்டர் தொலைவில் சென்று பாதி வழியில் நின்றது.
- வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் கதவு திறக்கப்படாததால் சுமார் 1½ மணி நேரம் பயணிகள் தவித்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்:
சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரெயில் (வண்டி எண் 20665) வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று மதியம் 2.50 மணிக்கு சென்னையில் இருந்து நெல்லை நோக்கி புறப்பட்டது. அதில் ஏராளமானோர் பயணம் செய்தனர். இந்தநிலையில் இரவு 7.45 மணி அளவில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தை, வந்தே பாரத் ரெயில் வந்தடைந்தது.
அப்போது ரெயிலில் உள்ள தானியங்கி கதவுகள் வழக்கம்போல் திறக்கப்பட்டன. ஆனால் சி 4, சி 5 ஆகிய 2 பெட்டிகளின் கதவுகள் மட்டும் திறக்கப்படவில்லை. மற்ற கதவுகள் தானாக திறக்கப்பட்டது. அந்த பெட்டிகளில் பயணம் செய்த திண்டுக்கல்லை சேர்ந்த பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கிச்சென்றனர். ஆனால் சி 4, சி 5 ஆகிய பெட்டிகளில் பயணம் செய்தவர்கள் மட்டும் திண்டுக்கல்லில் இறங்க முடியாமல் ரெயில் பெட்டிக்குள்ளேயே தவித்தபடி நின்றனர்.
5 நிமிடங்களுக்கு மேலாகியும் கதவுகள் திறக்கப்படாததால் அந்த பெட்டியில் பயணம் செய்யும் டிக்கெட் பரிசோதகரிடம் பயணிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவர், ரெயில் என்ஜின் டிரைவரை தொடர்புகொண்டு பேச முயன்றார். ஆனால் அதற்குள் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நகர தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகளில் ஒருவர், அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார்.
இதற்கிடையே திண்டுக்கல் ரெயில் நிலையத்தை கடந்த ரெயில் சில கிலோ மீட்டர் தொலைவில் சென்று பாதி வழியில் நின்றது. தொடர்ந்து பயணிகளிடம் பேசிய டிக்கெட் பரிசோதகர், திண்டுக்கல் ரெயில் நிலையத்தைவிட்டு சில கிலோ மீட்டர் தூரம் ரெயில் கடந்து வந்துவிட்டது. எனவே கொடைரோடு ரெயில் நிலையத்தில் உங்களை இறக்கிவிட்டு, தூத்துக்குடியில் இருந்து மைசூர் நோக்கி செல்லும் ரெயிலில் கட்டணம் இன்றி திண்டுக்கல்லுக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.
இதையடுத்து பயணிகள் சமாதானம் அடைந்தனர். பின்னர் இரவு 8.10 மணிக்கு வந்தே பாரத் ரெயில் கொடைரோடு ரெயில் நிலையத்தை அடைந்தது. வழக்கமாக கொடைரோடு ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்லாது. ரெயில் பெட்டியில் சிக்கிய பயணிகளுக்காக நேற்று கொடைரோடு ரெயில் நிலையத்தில் அந்த ரெயில் நிறுத்தப்பட்டது.
பின்னர் ரெயிலில் இருந்து இறங்கியவர்களில் கைக்குழந்தையுடன் வந்த ஒரு பெண் மட்டும் வாடகை காரில் திண்டுக்கல் சென்றார். மற்ற 11 பேரையும், மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்றி ரெயில்வே அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அவர்கள் இரவு 9.15 மணிக்கு திண்டுக்கல்லை வந்தடைந்தனர். நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் கதவு திறக்கப்படாததால் சுமார் 1½ மணி நேரம் பயணிகள் தவித்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கைதான மீனவர்களை காங்கேசன் துறைமுக முகாமுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
- கடந்த 3-ந்தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 18 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டியதாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் கைதான மீனவர்களை காங்கேசன் துறைமுக முகாமுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3-ந்தேதி நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 18 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில் தற்போது 8 மீனவர்களை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பேரவை விதிகளின்படி, சட்டசபை கூட்டம் முடிவுற்ற நாளில் இருந்து 6 மாதத்துக்குள் மீண்டும் கூடியாக வேண்டும்.
- ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.
சென்னை:
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் அடுத்த 2 நாட்கள் நடந்தது. தொடர்ந்து, பிப்ரவரி 15-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.
அதன்பிறகு, பிப்ரவரி 19-ந்தேதி சட்டசபை மீண்டும் கூடியது. அன்றைய தினம் 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், அதற்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த 2 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று, அமைச்சர்கள் பதில் உரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.
அதனைத்தொடர்ந்து, துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்காக ஜூன் 20-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை 10 நாட்கள் சட்டசபை கூட்டம் நடந்தது.
பேரவை விதிகளின்படி, சட்டசபை கூட்டம் முடிவுற்ற நாளில் இருந்து 6 மாதத்துக்குள் மீண்டும் கூடியாக வேண்டும்.
அந்த வகையில், பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா, முன்னாள் ராணுவ தலைமை தளபதி எஸ்.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஈ.சி.ஐ. திருச்சபையின் பேராயர் எஸ்றா சற்குணம், பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
அதன் பின்னர், கேள்வி நேரம் தொடங்குகிறது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.
தொடர்ந்து, 2024-2025-ம் ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பின்னர், அரசினர் தனித் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட இருக்கிறது.
அதாவது, மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.
நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், 2024-2025-ம் ஆண்டு துணை பட்ஜெட் மீது விவாதம் நடைபெறுகிறது. விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளிக்க இருக்கிறார். தொடர்ந்து, கூடுதல் நிதி ஒதுக்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டம் நிறைவடையும்.
அடுத்து, புத்தாண்டில் (2025) ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் சட்டசபை கூடும்.
- தமிழ்நாட்டில் முடியாட்சி நடக்கவில்லை குடியாட்சிதான் நடக்கிறது.
- 1971 ஆம் ஆண்டே இந்தியாவில் மன்னராட்சி முடிவுக்கு வந்துவிட்டது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார்.
அந்நிகழ்வில் பேசிய அவர், "மன்னர் பரம்பரை போன்ற ஆதிக்கத்திற்கு தமிழகத்தில் இனி இடமில்லை. 2026ம் ஆண்டு தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். பிறப்பால் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் உருவாக்கப்பட கூடாது. கருத்தியல் உள்ளவர் தான் தமிழகத்தில் முதல்வராக வேண்டும். தமிழகத்தில் மதம், ஜாதியை போல ஊழல் எதிர்ப்பை ஏன் யாரும் முன்னெடுக்கவில்லை" தெரிவித்தார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு தான் ஆதவ் அர்ஜுனா இவ்வாறு பேசியுள்ளார் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் இக்கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், "தமிழ்நாட்டில் முடியாட்சி நடக்கவில்லை குடியாட்சிதான் நடக்கிறது. 1971 ஆம் ஆண்டே இந்தியாவில் மன்னராட்சி முடிவுக்கு வந்துவிட்டது. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மேடையில் பேசி முடிவு எடுக்கும் விஷயம் இது அல்ல" என்று தெரிவித்தார்.






