என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்- தோழி உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு
    X

    கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்- தோழி உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு

    • தினமும் ஆட்டோ மூலம் கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம்.
    • மாணவி உடல்ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    சென்னையில் கல்லூரி மாணவி ஒருவரை தங்கும் விடுதிகளுக்கு அழைத்து சென்று கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது தோழி உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் 21 வயதுடைய மன வளர்ச்சி குன்றிய மாணவி ஆங்கில இலக்கியம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய தந்தை சரக்கு வாகன டிரைவர் ஆவார். இவரது தாயார் கடந்த 2022-ம் ஆண்டு இறந்துவிட்டார். அயனாவரம் பகுதியை சேர்ந்த இவர் தினமும் ஆட்டோ மூலம் கல்லூரிக்கு வந்து செல்வது வழக்கம்.

    கடந்த மாதம் மாணவியின் செல்போன் எண்ணுக்கு ஆபாச குறுந்தகவல்களும், தேவையில்லாத அழைப்புகளும் வந்துள்ளதை பார்த்து அவரது தந்தை அதிர்ச்சியடைந்து, அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    பின்னர் அவர், தனது மகளுக்கு 'செமஸ்டர்' தேர்வு நடந்ததால் விசாரணை தேவையில்லை என்று கூறியுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி அன்று மாணவி உடல்ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். தந்தை விசாரித்த போது, 'என்னை கல்லூரி வாசலில் இருந்து சிலர் வெளியே அழைத்து சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தனர்' என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ந்து போன அவர், அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். ஆனால், மாணவியை கல்லூரி அருகில் இருந்து அழைத்து சென்றிருப்பதால் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க ஆலோசனை வழங்கினார்கள். அதன்படி அவரும் புகார் அளித்தார்.

    சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், அந்த மாணவிடம் விசாரித்த போது, அவர் தனது கல்லூரி தோழி மூலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகமான நரேஷ், சுரேஷ், சீனு ஆகிய 3 பேர் அவரை யானைக்கவுனி, பெரியமேடு பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளுக்கு அழைத்து சென்று பலமுறை பாலியல் உறவு கொண்டதாகவும், மேலும் திருப்பூரை சேர்ந்த கவி, கோயம்பேட்டை சேர்ந்த ரோஷன், அம்பத்தூரை சேர்ந்த பாண்டி, திருத்தணியை சேர்ந்த மணி ஆகியோர் 'ஸ்னாப் ஸாட்' மூலம் பழகி அவர்களும் என்னை இந்த தங்கும் விடுதிகளுக்கு அழைத்து சென்று பாலியல் உறவில் ஈடுபட்டனர் என்றும் கூறியுள்ளார்.

    முதற்கட்டமாக மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் 8 பேர் மீது பெண்ணை பாதுகாவலரின் அனுமதியின்றி அழைத்து செல்லுதல், அனுமதியின்றி தொடுதல், பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக அந்த மாணவியின் தோழி மீதும் வழக்கு பாய்ந்துள்ளது. இந்த வழக்கில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். வழக்கில் சிக்கியவர்கள் கைதான பின்னர், இந்த விவகாரத்தில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

    சென்னை அயனாவரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மன வளர்ச்சி குன்றிய சிறுமி 17 பேர் கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை போன்று இந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×