தளவாடபொருட்கள் தடை: குமுளியில் முற்றுகை போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு

பென்னிகுவிக் மணிமண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டம்.4 நாட்களாக அனுமதி வழங்காதது வேதனையளிக்கிறது.
தளவாடபொருட்கள் தடை: குமுளியில் முற்றுகை போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு
Published on

கூடலூர்:

கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

முல்லைப்பெரியாறு அணை கேரளாவில் இருந்தாலும் பராமரிப்பு பணி தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 4-ந் தேதி தமிழக நீர்வளத்துறையினர் 2 லாரிகளில் 4 யூனிட் எம்.சாண்ட் உள்ளிட்ட தளவாட பொருட்களை கொண்டு சென்றனர்.

வல்லக்கடவு சோதனைச்சாவடியில் கேரள வனத்துறையினர் லாரிகளை தடுத்து நிறுத்தி அணைப்பகுதிக்கு செல்ல அனுமதி மறுத்தனர். கடந்த 3 நாட்களாக பல்வேறு விவசாய சங்கங்கள் லோயர் கேம்பில் முற்றுகை போராட்டம், ஆர்ப்பாட்டம், பென்னிகுவிக் மணிமண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டம் ஆகியவற்றை நடத்தினர்.

ஆனால் கேரள அரசு இதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து லாரிகளை அனுமதிக்காததால் 4 நாட்களாக சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், கேரள அரசு நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

லாரியின் டிரைவர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் வல்லக்கடவு பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வழக்கமாக அணை பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக செல்லும் தளவாட பொருட்களை இத்தனை நாட்கள் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆய்வு செய்து ஓரிரு நாட்களில் அனுமதித்திருக்க வேண்டும்.

ஆனால் 4 நாட்களாக அனுமதி வழங்காதது வேதனையளிக்கிறது. எனவே இன்று மாலைக்குள் தளவாட பொருட்கள் கொண்டு சென்ற லாரிகளை அணை பகுதிக்குள் அனுமதிக்காவிட்டால் நாளை குமுளியில் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com