என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய முடியவில்லை.
    • 148 பயணிகளும் பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு 12.20 மணிக்கு, சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது.

    இதில் செலும் 148 பயணிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.

    இந்த நிலையில் அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. நீண்ட நேரமாக முயற்சித்தும் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.

    விமானத்தில் பயணிக்க வந்திருந்த 148 பயணிகளும், சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானம் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு இன்று இரவு, மலேசியாவுக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அமைச்சர் எ.வ.வேலு வைக்கம் சென்று பெரியார் நினைவகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
    • கேரள மாநிலம் கோட்டயத்தில் 12-ந்தேதி தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது.

    சென்னை:

    கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் கோயில் நுழைவுப் போராட்டம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்துள்ளது. தந்தை பெரியார் சமூகநீதி காக்க போராடிப் பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில், பெரியாருக்கு வைக்கத்தில் நினைவுச் சின்னம் அமைக்க உத்தரவிடப்பட்டு 1994-ம் ஆண்டு நினைவிடம் திறந்து வைக்கப்பட்டது.

    இந்த நினைவிடத்தை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    இதை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு வைக்கம் சென்று பெரியார் நினைவகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதை தொடர்ந்து புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இப்போது அங்கு பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர புகைப்பட கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைந்துள்ளது.

    மேலும் அமர்ந்த நிலையில் பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களில் ஏற்பட்ட கரையான் அரிப்பு போன்றவற்றால் நினைவிடம் பழமையானதால் தமிழக அரசு சார்பில் ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.

    இதை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11-ம் தேதி கேரளா செல்ல உள்ளார்.

    கேரள மாநிலம் கோட்டயத்தில் 12-ந்தேதி தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகம் திறப்பு விழாவுக்கு அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமை தாங்குகிறார்.

    பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    • பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தலின் பேரில் இங்கு மருத்துவ முகாம் நடத்துகிறோம்.
    • பாதிப்புக்கு அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ம.க. சார்பில் மருத்துவ முகாம் கடலூர் கண்டகாடு பகுதியில் இன்று காலை நடைபெற்றது. மருத்துவ முகாமிற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேரில் வந்தார்.

    பின்னர் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தார்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தலின் பேரில் இங்கு மருத்துவ முகாம் நடத்துகிறோம். அரசு சார்பில் நடத்த வேண்டியதை நாங்கள் செய்து வருகிறோம். விழுப்புரம் மாவட்டத்தில் பல மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்கிறேன்.

    இந்த மருத்துவ முகாம் என்பது மிக அவசியமானது என மருத்துவர் என்ற முறையில் நான் செய்து உள்ளேன். புயல் தாக்கி ஒரு வாரம் ஆகயும் இன்னும் இந்த பகுதிக்கு சரியான முறையில் நிவாரணம் வரவில்லை. இங்கு மருத்துவர்கள் வரவில்லை. இங்கு வந்து பாதிப்புகள் கணக்கெடுக்க அதிகாரிகள் வரவில்லை. இதுதான் தமிழ்நாட்டின் தலைவிதி.

    இந்த புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டு இருப்பது இயற்கையானது. இதனை யாரும் கட்டுப்படுத்த முடியாது. இதனால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த அரசு சார்பில் முடியும். அதுதான் அரசாங்கத்தின் வேலையாகும்.

    ஆனால் அரசின் மெத்தனப்போக்கால் தென்பெண்ணை ஆற்றில் ஒரே நாளில் 1.70 லட்சம் கன அடி வினாடிக்கு தண்ணீர் வெளியேற்றியதால் இந்த மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை தண்ணீர் வீட்டுக்குள் வந்துள்ளது. அப்போது நீங்கள் உங்கள் உயிரை தான் முதலில் காப்பாற்ற வேண்டியது முக்கியம் என்ற நோக்கில் வெளியேறி இருப்பீர்கள்.

    ஆனால் முன்கூட்டியே அரசு சார்பில் 6 மணி நேரத்திற்கு முன்பு கூறினால் உங்களை பாதுகாப்பாக வெளியேற்றி உங்கள் பொருட்களை அனைத்தையும் காப்பாற்றி இருக்கலாம். இந்த பாதிப்புக்கு அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

    இதனை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் நானும் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கண்டித்து உள்ளோம். இந்த தி.மு.க. அரசு அ.தி.மு.க. ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் விடப்பட்டபோது விமர்சனம் செய்தார்கள். இதனை விட மோசமானது தி.மு.க. அரசு சாத்தனூர் அணையை திறந்து விட்டதுதான்.

    ஆனால் இது அரசு செய்த மிகப்பெரிய தவறாகும். ஒரு பக்கம் தவறு நேரிட்டாலும் அதற்கு மாறாக நிவாரணம் மற்றும் உதவி செய்திருக்க வேண்டும். ஆனால் ரூ.2 ஆயிரம் மட்டும் நிவாரணம் வழங்கினால் மக்கள் என்ன செய்வார்கள்? இந்த பணத்தை வைத்துக்கொண்டு வீட்டை சுத்தம் செய்வதற்கு சரியாகுமா? ஆனால் வீட்டில் உள்ள பொருட்கள் முழுவதும் சேதமாகி உள்ளது. இதனை பார்க்கும்போது அரசு ஆணவமாக இந்த நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது.

    மேலும் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டால் 9-வது மாடியில் இருக்கும் நபர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள். தூத்துக்குடியில் வெள்ளம் ஏற்பட்டபோது 6 ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள். ஆனால் கடலூரில் வெள்ளம் ஏற்பட்டால் 2 ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்குகிறார்கள். இதுதான் திராவிட மாடல் என்று கூறுகிறார்கள்.

    ஆனால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி போன்ற மக்கள் பாவம் பட்டவர்களா? தூத்துக்குடி, சென்னை மக்கள் புண்ணியம் செய்தார்களா? அங்குள்ள மக்களுக்கு ரூ.6 ஆயிரம். இங்குள்ள மக்களுக்கு ரூ.2 ஆயிரம். அதனையும் தூக்கி போடுகிறீர்கள். மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும், நிலப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும் குறித்து பார்வையிட்டு தான் வருகின்றேன். வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட பிறகு நோய் மற்றும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுத்து உள்ளார்கள் என தெரியவில்லை. தி.மு.க. கிளை செயலாளர் மூலம் கணக்கெடுப்பு பணி நடந்துள்ளது. இது வெட்க கேடான செயலாகும். அவர்கள் மூலமாக தான் காசு வரும். அவர்கள் கமிஷன் எடுத்துக் கொள்வார்கள். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

    இதனை பார்க்கும் போது மக்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள். தினம் ஒரு மணி நேரம் 2 மணி நேரம் கால்ஷீட் கொடுத்தால் போதாது. சொல்றது புரிகிறதா யாரை சொல்கிறோம் என தெரிகிறதா? இதனை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்துவார்கள். இதுதான் தமிழ்நாட்டில் நடக்கிறது. எங்கு பாத்தாலும் கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதனை மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறீர்கள். செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் கடும் கோபமாக அரசை பற்றி குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர். எதற்கெடுத்தாலும் காசு லஞ்சம் பெற்றுக் கொண்டு வருகின்றனர். தியாகி செந்தில் பாலாஜி என்ற ஒருவர் உள்ளார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். மக்களுக்காக சிறைக்கு சென்று உள்ளார் என நினைப்பு. ஆனால் 400 நாட்கள் ஜெயிலில் இருந்து வந்த அவர் அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் என்ன நடக்கிறது அவருக்கு தெரியுமா? ஆனால் அவருக்கு லஞ்சம் பெறுவது தான் தெரியும். இது போன்ற மருத்துவ முகாமை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    தி.மு.க. போல் போட்டோ பிடித்து செல்வதில்லை. இங்கு சிகிச்சை பெறும் மக்களை தொடர்ந்து பின்பற்றி அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும். மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் சரி செய்ய எவ்வளவு பெரிய போராட்டம் நடத்த தயங்க போவதில்லை.

    உங்களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீடு அனைத்தையும் அரசு கொடுக்க அழுத்தம் கொடுத்து செய்து கொடுப்போம்.

    இவ்வாறு பேசினார்.

    அப்போது மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பொருளாளர் திலக பாமா , மாநில சொத்து பாதுகாப்பு குழு கோவிந்தசாமி, மாவட்ட செயலாளர்கள் சண். முத்து கிருஷ்ணன், ரவிச்சந்திரன், கார்த்திகேயன், மகேஷ், சமூக முன்னேற்ற சங்கம் தலைவர் சிவப்பிரகாசம், மாவட்ட தலைவர் தடா. தட்சிணா மூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • பல மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
    • நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்பட பல மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் பள்ளிகள் திறக்கப்படாத சூழல் நிலவுகிறது.

    இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "அண்மையில் தமிழ்நாட்டைத் தாக்கிய ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இப்பேரிடரிலிருந்து மக்களை மீட்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் விசிக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கென ரூ. பத்து இலட்சம் வழங்கிட நேற்றைய உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது."

    "சட்டமன்ற உறுப்பினர்கள் தலா ஒரு மாத சம்பளத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா இரண்டுமாத சம்பளத்தையும் கொண்டு இந்நிதி மாண்புமிகு முதலமைச்சரிடம் வழங்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • கடலில் சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்தது.
    • சபரிமலை சீசன் மீண்டும் களைகட்டி உள்ளது.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தளமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.

    இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதேபோல ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள்.

    இந்த ஆண்டு சபரிமலை சீசன் கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர் விடுமுறையை யொட்டி சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர்.

    அந்த அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கடலில் சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்தது. அதனை பார்த்து சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலாப் பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்பு பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் அங்கு கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் கன்னியாகுமரியில் விடுமுறை நாளான இன்று சபரிமலை சீசன் மீண்டும் களைகட்டி உள்ளது. இதைத்தொடர்ந்து சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிவதால் சுற்றுலா தலங்களும் களை கட்டியது.

    இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • மதுபானங்களை முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டு விற்பனை செய்யக் கூடாது.
    • துறை ரீதியான உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    டாஸ்மாக் மதுக்கடைகள் தற்போது கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம் (வடக்கு), காஞ்சிபுரம் (தெற்கு) அரக்கோணம், ராமநாதபுரம், கரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் கணினி மயமாக்கப்பட்டு உள்ளதால் மது வாங்குபவர்களுக்கு ரசீது வழங்கப்பட்டு வருகிறது.

    இதில் கடை விற்பனையாளர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றாமல் தவறான செயல்பாடுகளில் ஈடுபடுவதாக டாஸ்மாக் நிர்வாகத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுபான சில்லரை விற்பனை கடைகளில் விற்பனையின் போது, நுகர்வோர் விரும்பி கேட்கும் மதுபானங்களுக்கு அதற்கான ரசீதுகள் கண்டிப்பாக வழங்கப்படவேண்டும்.

    மதுபான சில்லரை விற்பனை கடைகளில் நுகர்வோர்களுக்கு மது பானங்களை விற்பனை செய்யும் போது மட்டுமே பாட்டிலை ஸ்கேன் செய்து விற்க வேண்டும்.

    மதுபானங்களை முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டு விற்பனை செய்யக் கூடாது. இதனால் விற்பனைக்கும் இருப்புக்கும் வித்தியாசம் ஏற்படுகிறது. இதை கடைக்காரர்கள் சரி செய்ய வேண்டும்.

    தவறான செயல்பாடுகளை கண்காணிக்க தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர் மற்றும் உதவி மேலாளர் முழு பொறுப்பாவதோடு, துறை ரீதியான உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    எனவே ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் வாடிக்கையாளர் வாங்கும் சரக்குக்கு அவர் முன்னிலையில் ஸ்கேன் செய்து ரசீது வழங்க வேண்டும். இதை செயல்படுத்திட ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிறுவன் அவினேக் குமாரை காணவில்லை என அவரது பெற்றோர்கள் தேடி உள்ளார்.
    • சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகேஷ் தாஸ்.இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பால்நல்லூர்பகுதியில் உள்ள புதியதாக கட்டி வரும் கட்டிடத்தில் வேலை செய்து வருகிறார்.

    கட்டிடம் கட்டும் இடத்திற்கு அருகில் தன் குடும்பத்துடன் தங்கி முகேஷ் தாஸ் வேலை செய்து வந்தார். அவினேக் குமார் வயது 6,என்கிற மகனும், அனுகுமாரி வயது 2 என்கிற மகளும், லலிதா குமாரி என்கிற மனைவியும் உள்ளனர். நேற்று மாலை சிறுவன் அவினேக் குமாரை காணவில்லை என அவரது பெற்றோர்கள் தேடி உள்ளார்.

    அப்போது முகேஷ் தாஸ் தங்கி உள்ள இடத்திற்கு அருகே அவர் வேலை செய்யும் புதிய கட்டுமான பணிக்கு தோண்டபட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் சிறுவன் மூழ்கி பேச்சு மூச்சு இல்லாமல் மிதந்து உள்ளார். அவரை மீட்டு மாத்துரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • டிடிவி தினகரன் பிறந்தநாள் மாரத்தான் போட்டி.
    • உதயநிதி ஸ்டாலின் சினிமா துறையை சேர்ந்தவர் தான்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் மாரத்தான் போட்டி இன்று காலை நடைபெற்றது.

    இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சினிமா செய்திகள் பார்ப்பதில்லை என கூறியுள்ளார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் சினிமா துறையை சேர்ந்தவர் தான் தேர்தலுக்கு பிறகுதான் அவர் நடிப்பதில்லை. சினிமா செய்திகளும் மக்கள் விரும்பி பார்ப்பதுதான்.

    தமிழ்நாடு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்று அதில் வெற்றி பெற்றவர்தான் முதலமைச்சராக உள்ளார். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

    சீமான், போலீஸ் சூப்பிரண்டு வருண் குமார் விவகாரத்தில் தமிழக காவல்துறை டிஜிபியிடம் சீமான் முறையிட்டுள்ளார். என்ன நடக்கிறது என பார்க்கலாம்.

    இரட்டை இலையைக் காட்டி பழனிச்சாமி இனி மக்களை ஏமாற்ற முடியாது. அ.தி.மு.க. பலவீனமாகி உள்ளது . தி.மு.க.விற்கு பி டீம் ஆகவும் வெற்றி பெற துணையாக உள்ளவர்களுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என மக்கள் முயற்சி செய்வதாக தகவல் கிடைத்துள்ளது .

    நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். வலுவான கூட்டணி, தீய சக்தி தி.மு.க.வை வீழ்த்துவதற்கு தமிழ்நாட்டு மக்கள் 2026 தேர்தலில் கூட்டணி, மக்களாட்சி கொண்டுவர குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழகத்தை பாதுகாப்பதற்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்பது உறுதி.

    கூட்டணியில் பல கட்சிகள் உள்ளது. மேலும் பல கட்சிகள் வர உள்ளார்கள் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் எங்களுடன் கை கோர்ப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • 2023-ம் ஆண்டு நினைவுத்தூண் அமைக்கப்பட்டது.
    • புகைப்படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    ஊட்டி:

    இந்திய ராணுவ முப்படைத்தளபதியாக இருந்த பிபின்ராவத் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி கோவை சூலூர் விமானப்படைத்தளத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார்.

    அப்போது குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் மோசமான வானிலை மற்றும் மேகமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின்ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பலியானார்கள்.

    இந்த நிலையில் குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளான பகுதியில் வெலிங்டன் ராணுவ மையம் சார்பில் கடந்த 2023-ம்ஆண்டு நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. இதில் பிபின்ராவத் உள்ளிட்ட உயிரிழந்த 14 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    மேலும் அந்த நினைவுத்தூணில் ஆன்மா அழியாதது, அதனை எந்த ஆயுதத்தாலும் துளைக்க முடியாது, எந்த நெருப்பாலும் அழிக்க முடியாது. தண்ணீராலும் ஈரப்படுத்த முடியாது, காற்றாலும் உலரப்படுத்த முடியாது என்ற பகவத்கீதையின் வாசகங்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் பிபின்ராவத் உள்ளிட்டோரின் 3-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ராணுவத்தினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அப்போது குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி கமான்டண்ட் வீரேந்திரவாட்ஸ் பிபின்ராவத் உள்ளிட்டோரின் புகைப்படங்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த புகைப்படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து நஞ்சப்பசத்திரம் பகுதி மக்களும் திரண்டு வந்து ஹெலிகாப்டர் விபத்தில் பலியான வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர்.

    • பணிகள் 33 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
    • சென்னையைச் சார்ந்த லார்சன் அண்டு டூப்ரோ கட்டுமான நிறுவனத்துடன் ரூ.1118.35 கோடிக்கு (ஜிஎஸ்டி வரி சேர்க்காமல்) கட்டுமான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 5 ஆண்டுகளை கடந்தும் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நடைபெறாமல் இருந்து வந்ததால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

    இதனைதொடர்ந்து கடந்த மார்ச் 14 ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தனியார் கட்டுமான நிறுவனமான L&T நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டது. இந்தப் பணிகள் 33 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ஆர்.டி.ஐ.யில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர் ஆர்.டி.ஐ.யில் கேள்வி எழுப்பி இருந்தார்.

    அதற்கு ஆர்.டி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- மதுரை எய்ம்ஸ்-இன் கட்டுமான ஒப்பந்தத்தின்படி, தற்போது பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மருத்துவ கல்விசார் கட்டிடம், நர்சிங் கல்லூரி, மாணவ மாணவிகள் தங்கும் விடுதிகள், உணவு கூடம், வெளி நோயாளிகள் பிரிவு, சேவை பிரிவு கட்டடங்கள் ஆகியவற்றிற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையைச் சார்ந்த லார்சன் அண்டு டூப்ரோ கட்டுமான நிறுவனத்துடன் ரூ.1118.35 கோடிக்கு (ஜிஎஸ்டி வரி சேர்க்காமல்) கட்டுமான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 22 மே 2024 அன்று கட்டுமானம் தொடங்குவதற்கு கடிதம் வழங்கப்பட்டு 33 மாதங்களில் முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மதுரை எய்ம்ஸ்-க்கான திட்ட மதிப்பீடு ரூ.2021.51 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டு, 33 மாதங்களில் மொத்த பணிகளையும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்து 18 ஆயிரத்து 927 சதுர மீட்டர் பரப்பளவில் மருத்துவமனை கட்டடங்கள், மருத்துவக் கல்லூரி கட்டடங்கள், விடுதிகட்டடங்கள், ஆசிரியர்கள் குடியிருப்புகள், உணவகங்கள், விளையாட்டுக் கூடங்கள் கட்டப்பட இருக்கின்றன. தற்காலிக கட்டடங்களாக திட்ட அலுவலகம், சேமிப்பு கிடங்குகள், காங்கிரீட் தயாரிப்பு ஆலை, மெடிக்கல் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான கட்டடங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூரியஒளி மின்சக்தியால் இயங்கும் சைக்கிளை வடிவமைத்தார்.
    • 2 ஆட்டோக்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் தயாரிக்கவும் சிறைத்துறை திட்டமிட்டு உள்ளது.

    கோவை:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்தவர் யுகஆதித்தன் (வயது 32). ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர். இவர் ஒரு கொலை வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் கடந்த 7 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    மத்திய ஜெயில் தொழிற்கூடத்தில் பணியாற்றி வரும் யுகஆதித்தன் கையில் கிடைக்கும் சாதனங்களை கொண்டு பயன்பாடு உள்ள பொருட்களை உருவாக்குவதில் ஆர்வம் உடையவர்.

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூரியஒளி மின்சக்தியால் இயங்கும் சைக்கிளை வடிவமைத்தார். இது சிறை அதிகாரிகள் மத்தியில் பாராட்டுதல்களை பெற்றது.

    இந்த நிலையில் யுகஆதித்தன் சூரிய ஒளி மின்சக்தியால் இயங்கும் சோலார் ஆட்டோவை வடிவமைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.


    கோவை மத்திய சிறையில் சமையற்கூடம் உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த ஆட்டோவை சோதனை பயன்பாடு முடிந்த பிறகு ஜெயில் கைதிகளை சந்திக்க வரும் உறவினர்களில் வயதானவர்கள் மற்றும் நடக்க முடியாதவர்கள் அமர்ந்து செல்லும்வகையில் நுழைவுவாயிலில் இருந்து பார்வையாளர் அறை வரை பயன்படுத்துவது என்று அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதுகுறித்து கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.சண்முகசுந்தரம் கூறியதாவது:-

    ஜெயில் கைதி யுகஆதித்தன் உருவாக்கி உள்ள சோலார் ஆட்டோவின் மீது சூரியஒளி மின்உற்பத்திக்காக தகடு பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஆட்டோவில் டிரைவர் இருக்கைக்கு அடியில் பேட்டரி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

    சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் மேற்கண்ட ஆட்டோவில் ஒருமுறை பேட்டரி முழுவதுமாக நிரம்பினால் 200 கி.மீ. வரையிலும் தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். இதில் டிரைவர் உள்பட 8 பேர் வரை அமர்ந்து பயணிக்கலாம்.

    மேலும் எல்.இ.டி. விளக்கு, ஹாரன், ஹேண்ட் பிரேக், டேப் ரிக்கார்டர் போன்ற வசதிகளும் உள்ளன.

    ரூ.1.25 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த ஆட்டோ தற்போது சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர மேலும் 2 ஆட்டோக்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் தயாரிக்கவும் சிறைத்துறை திட்டமிட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காற்றழுத்த தாழ்வு பகுதியால் நாளை மறுநாள் மழை தீவிரமாகும்.
    • தமிழக கடலோரத்தை நோக்கி வேகமாக நகர்வதாக வானிலை ஆய்வாளர்கள் தகவல்.

    தென்கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது. இதன் தாக்கத்தால் அங்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

    இது இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய உள்ளது.

    நாளை அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வடமேற்கில் நகரும். எதிர்பார்த்ததை போல் அது தமிழக கடலோரத்தை நோக்கி வேகமாக நகர்வதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

    11-ந்தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

    இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் மழை தீவிரமாகும்.

    10-ந்தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், வருகிற 11-ந்தேதி மேற்கண்ட மாவட்டங்கள் (ராமநாதபுரம் நீங்கலாக) மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    வருகிற 12-ந்தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

    வருகிற 13-ந்தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழக மீனவர்கள் வருகிற 11-ந்தேதி வரை ஆழ்கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    ×