என் மலர்
உள்ளூர் செய்திகள்
- காந்தி இர்வின்சாலை அருகே இருந்த பார்சல் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- புதிய பார்சல் அலுவலகம் இன்னும் 6 மாதத்தில் கட்டி முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் ரூ.734.91 கோடி செலவில் மறுவடிமைப்பு செய்யப்படுகிறது. இதற்கு வடக்கு முகப்பு பகுதியில் இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. அதே போல் பூந்தமல்லி சாலையில் இருந்த ரெயில்வே குடியிருப்புகளும் இதர அலுவலகங்களும் இடிக்கப்பட்டன.
இந்த பகுதியில் புதிய கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. கட்டுமான பணிகள் நடக்கும்போது பூந்தமல்லி சாலை வழியாக ரெயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக புதிய ரேம்ப் நடை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. பயணிகள் பூந்தமல்லி சாலையில் இருந்து வேனல்ஸ் ரோடு வழியாக சென்று வலது புறமாக திரும்பி நடை மேம்பாலம் வழியாக ரெயில் நிலையத்துக்கு செல்லலாம்.
இந்த திட்டத்துக்காக காந்தி இர்வின்சாலை அருகே இருந்த பார்சல் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த அலுவலகம் முற்றிலுமாக மாற்றப்பட்டு கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது.
பார்சல் அலுவலகம் தற்காலிகமாக முதலாவது நடைமேடையில் செயல்படுகிறது. இதையடுத்து அடித்தளங்கள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், பார்சல் அலுவலகம் அமைக்கும் பணி நடக்கிறது. இதுவரை 3 தளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. புதிய பார்சல் அலுவலகம் இன்னும் 6 மாதத்தில் கட்டி முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
- மழை பெய்த நிலையில் மழை நீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதியில் முழங்கால் அளவிற்கு சூழ்ந்துள்ளது.
- சாலைகள் முழுவதும் பழுதடைந்துள்ளதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு கலைஞர் நகர் முதல் தெரு, 2-வது தெரு, ராஜேஸ்வரி நகர், பிரனாவநந்தா பள்ளி தெரு மற்றும் நாலூர் ஊராட்சிக்கு உள்பட்ட கேசவபுரம் பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
ஃபெஞ்ஜல் புயல் காரணமாக மழை பெய்த நிலையில் மழை நீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதியில் முழங்கால் அளவிற்கு சூழ்ந்துள்ளதால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசி வருவதாகவும், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இரவு நேரங்களில் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், சாலைகள் முழுவதும் பழுதடைந்துள்ளதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
ஆவடி போலீஸ் கமிஷனர் உத்தரவுபடி துணை கமிஷனர் ஆலோசனையின் பேரில் பொன்னேரி பழவேற்காடு சாலை திருப்பாலைவனம் பஜாரில் திருப்பாலைவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
பின்னர் பொன்னேரி தாயுமான் செட்டி தெருவை சேர்ந்த முசாமின் (50) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 65 கிலோ குட்காவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை செய்ததில் பொன்னேரி தாயுமாண் செட்டி தெருவில் மளிகைக் கடை நடத்தி வரும் பெருலால் (28) என்பவர் கடையில் பதுக்கி வைத்து அங்கிருந்து கிராமங்களில் உள்ள கடைகளுக்கு முசாமின் மூலம் இருசக்கர வாகனத்தில் விற்பனை செய்வது தெரிய வந்தது.
பின்னர் இருவரையும் கைது செய்து கடையில் பதுக்கி வைத்த 65 கிலோ குட்கா, விற்பனை செய்த 65 கிலோ குட்கா என மொத்தம் 130 கிலோவை திருப்பாலைவனம் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- தங்கச்சேரி தடுப்பணையில் 5-வது நாளாக 9 ஆயிரம் கன அடி தண்ணீர் ஓடுகிறது.
- விவசாயம் செய்துள்ள நிலையில் ஆற்றில் தண்ணீர் வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால், ஜவ்வாது மலையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் காஞ்சிபுரம் மாவட்டம் வெங்கச்சேரி - மாகரல் இடையே செல்லும் தங்கச்சேரி தடுப்பணையில் 5-வது நாளாக 9 ஆயிரம் கன அடி தண்ணீர் ஓடுகிறது.
அப்பகுதியில் உள்ள விவசாயிகள் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்துள்ள நிலையில் ஆற்றில் தண்ணீர் வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- சாமி தரிசனம் செய்து வருவதால் கோவில் கடற்கரை, கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக காணப்படுகிறது.
- இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதாலும், கார்த்திகை மாதம் என்பதாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் காலையில் இருந்தே சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்கள் ஏராளமானோர் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருவதால் கோவில் கடற்கரை, கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக காணப்படுகிறது.
இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 விஸ்வரூபம் 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
- 14-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடையக்கூடும். மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 11 -ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை தமிழகம் கடலோரப் பகுதிகளையொட்டி நிலவக்கூடும்.
இதனால் இன்று முதல் 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10-ந்தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
11-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
12-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதுவையில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
13-ந்தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
14-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31°-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24°-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32°-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24°-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- பின்னணியில் உள்ள சீன மோசடிக் கும்பலை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
சென்னை:
தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களை சைபர் அடிமைகளாக மாற்றும் சம்பவங்களை தடுப்பதற்கு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
சென்னையை சேர்ந்த அப்துல்காதர், சையது ஆகியோரது மூலமாக மேற்கு வங்காளத்தை சேர்ந்த சங்கர் சர்கார் என்பவர் 9 பேரை லாவோஸ் நாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்து உள்ளார்.
இதுபோன்று வேலைக்கு சேர்ந்தவர்கள் அங்கு சைபர் அடிமைகளாக மாற்றப்பட்டு தவித்து வருவதாக எழுந்த புகாரின் பேரில் சேலம் தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அப்துல் காதர், சையது ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சங்கர் சர்காரை பிடிக்க போலீசார் வலை விரித்தனர்.
இது தொடர்பாக விமான நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டு லுக் அவுட் நோட்டீசும் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொல்கத்தா விமான நிலையத்தில் வைத்து சங்கர் சர்கார் கைது செய்யப்பட்டார்.
அவரை போலீசார் அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி அழைத்து வந்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவரது பின்னணியில் உள்ள சீன மோசடிக் கும்பலை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- அரியலூர் வரை மின்பாதைகள் அமைக்கப்பட உள்ளன.
- தமிழ்நாடு மின்வாரியம் ஏற்கனவே கடுமையான இழப்புகளை சந்தித்து வருகிறது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் 132 ஏக்கர் நிலப்பரப்பில் 765 கிலோ வோல்ட் திறன்கொண்ட துணை மின்நிலையம் அமைக்கப்படவுள்ளது. அங்கிருந்து அரியலூர் வரை மின்பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இந்தப் பணிகளை செய்து முடிக்க ரூ.4,500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், இந்தத் திட்டத்தை தனியார் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த தமிழக அரசு தீர்மானித்திருக்கிறது.
கடந்த ஆட்சியிலேயே பல துணை மின்நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இப்போது ரூ.4500 கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையமே அமைக்கப்பட்டால், அது படிப்படியாக மின்சார வாரியம் தனியார் மயமாகவே வழிவகுக்கும்.
தமிழ்நாடு மின்வாரியம் ஏற்கனவே கடுமையான இழப்புகளை சந்தித்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் கூட மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இத்தகைய சூழலில், மின்சாரத்தை கொண்டு செல்வதற்காகவும் தனியாருக்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் தமிழ்நாடு மின்சார வாரியத்தை இலாபத்தில் இயக்குவது எப்படி சாத்தியமாகும்? மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதற்கு மட்டும் தான் இது வழிவகுக்கும். எனவே, 765 கிலோ வோல்ட் துணை மின்நிலையம் அமைக்கும் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். அந்தத் திட்டத்தை மின்தொடரமைப்புக் கழகமே சொந்த முதலீட்டில் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 10-ந்தேதி மகா தேரோட்டம் நடைபெறுகிறது.
- சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திரு விழா, கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 5-ம் நாள் உற்சவம் இன்று விமரிசையாக நடந்தது. நாளை மறுநாள் 10-ந்தேதி மகா தேரோட்டம் நடைபெறுகிறது. ஒரே நாளில் 5 தேர்கள் வலம் வரும்.
தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 13-ந் தேதி காலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மலையில் ஏற்றப்படும் மகா தீபம்தொடர்ந்து 11 நாட்களுக்கு காட்சியளிக்கும்.

அதையொட்டி, தொடர்ந்து 11 நாட்களும் மலையில் தீபம் ஏற்றப்படும். அதற்காக, 4,500 கிலோ தூய நெய் ஆவினிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, 1,500 மீட்டர் திரியும் தயார் நிலையில் உள்ளது.
இதில், மகா தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் மகா தீப கொப்பரை சீரமைக்கப்பட்டு, புதிய வண்ணம் தீட்டி ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்துள்ளனர்.
மேலும், தீப கொப்பரையில் உமையாளுக்கு இடபாகம் அருளிய அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலம் காட்சியளிக்கிறது.
இந்த நிலையில், மகா தீப கொப்பரைக்கு வருகிற 12-ந் தேதி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும். மலையில் தற்போது பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருப்பதால், தீப கொப்பரையை மலை உச்சிக்கு கொண்டு செல்ல கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிட்டு வருகிறது.
தீப திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வெளியூர்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவியத் தொடங்கியுள்ளனர்.
மாட வீதிகள், கிரிவலப் பாதைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி உள்ளனர். நாளை மறுநாள் நடைபெறும் தேர் திருவிழாவில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையொட்டி 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். போலீசார் தங்குவதற்காக திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப் பாதைகளில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சுமார் 40 லட்சம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படைகளை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள், ஆட்டோக்கள் கட்டணங்கள் குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் நிறுத்தவும் ஆங்காங்கே பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலையில் பெய்த வரலாறு காணாத கனமழையின் காரணமாக தீபம் ஏற்றும் மலையில் பல்வேறு இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும், அடுத்தடுத்து பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, வருகிற 13-ந் தேதி நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மலை மீது பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக வல்லுனர் குழு நேரடி ஆய்வு நடத்தி அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் அறிவித்தனர்.
அதன்படி, சென்னை ஐ.ஐ.டி. புவியியல் துறை பேராசிரியர்கள் 8 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத் திற்கு வந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை 7 மணி அளவில் திருவண்ணாமலை தீபமலையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு தொடர்பாக வல்லுநர்குழு கள ஆய்வை தொடங்கினர்.
இந்த குழுவுடன் பாதுகாப்பு பணிக்காக போலீசார், பாம்புக்கடி மற்றும் விஷப்பூச்சி எதிர் மருந்து, ரத்த அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன் கருவிகள், தூக்குப்படுக்கை உள்ளிட்டவை அடங்கிய மருத்துவர் தலைமையிலான மருத்துவக் குழு, வனத்துறை குழு, தீயணைப்புத்துறை சார்பாக தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் 20 நபர்கள் கொண்ட மீட்புக்குழுவும் உடன் சென்றனர்.
மலை அடிவாரத்தில் பாதுகாப்பு கருதி அவசரகால ஊர்தியுடன் கூடிய மருத்துவக்குழுவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வல்லுநர் குழு இன்று மலைப்பகுதியில் ஆய்வு நடத்தி அங்குள்ள மண்ணின் தன்மை மற்றும் பாறைகளின் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.
பக்தர்கள் மலையேறினால் மண்சரிவு மீண்டும் ஏற்பட்டு ஆபத்து ஏற்படுமா? என்பது குறித்தும் அறிக்கையில் தெரிவிக்க உள்ளனர்.
அதன் அடிப்படையில், மலையேற பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை 2 நாட்களில் அரசு அறிவிப்பு வெளியிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்திருப்பதாகவும், ஐந்து பேர் தலைமறைவு ஆகிவிட்டதாகவும் கூறுகின்றனர்.
- மன நலம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருப்பதை, எத்தனை எளிதாகக் கடந்து சென்றிருக்கிறார்கள்?
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னை அயனாவரம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியை, ஏழு பேர் கொண்ட கும்பல், கடந்த பல மாதங்களாகப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து, மாணவியின் தந்தை, சென்னை அயனாவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், குற்றவாளிகளை வெறும் எச்சரிக்கையோடு விடுதலை செய்திருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
மாணவியின் உறவினர் ஒருவர் முயற்சியால், தற்போது மீண்டும் வழக்குப் பதிவு செய்து, இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்திருப்பதாகவும், ஐந்து பேர் தலைமறைவு ஆகிவிட்டதாகவும் கூறுகின்றனர்.
பாலியல் வன்முறை குறித்த புகாருக்கு, வெறும் எச்சரிக்கையோடு மட்டும் விடுதலை செய்யும் அதிகாரம், காவல்துறைக்கு யார் கொடுத்தது? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏற்கனவே அதல பாதாளத்தில் கிடக்கும்போது, பெண்கள், குறிப்பாக மன நலம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருப்பதை, எத்தனை எளிதாகக் கடந்து சென்றிருக்கிறார்கள்?
நாட்டில் பிற மாநிலங்களில் நடக்கும் குற்றச் செயல்களுக்கெல்லாம், முழு விவரம் தெரியும் முன்னரே நான்கு பக்கத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் இந்தச் சம்பவம் குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார்?
தன் பொறுப்பில் இருக்கும் தமிழகக் காவல்துறையை அவர் என்ன ரீதியில் கையாண்டு கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. உடனடியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்வதற்கான சட்டரீதியான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.
- திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடைபெற்றது.
கவுண்டம்பாளையம்:
கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த சாமிசெட்டிபாளையத்தை சேர்ந்த ஒய்வுபெற்ற வேளாண்அதிகாரி சுப்பிரமணியம்-விஜயலட்சுமி தம்பதியின் மகன் கே.எஸ்.வைஷ்ணவ்ராஜ். சுற்றுசூழல் பாதுகாப்பு பொறியாளர்.
இவர் தைவான் நாட்டில் எம்.எஸ். படித்து அங்கு வேலை பார்த்து வந்தார். அப்போது அந்நாட்டை சேர்ந்த ஜிம்மிசாங்-மிக்கிவாங் தம்பதியர் மகளும் ஆசிரியையுமான கிளாடியா சாங் என்பவருடன் ஒருங்கிணைந்து சமூகசேவை பணியில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மலர்ந்தது.
தொடர்ந்து அவர்கள் குடும்பத்தினரிடம் காதலை தெரிவிக்க, இருதரப்பு பெற்றோருடன் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டனர். பின்னர் பெண் வீட்டார் கோவைக்கு புறப்பட்டு வந்தனர். தொடர்ந்து வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்வதற்கான சட்டரீதியான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர் சாமிசெட்டிபாளையம் பகுதியில் காதலர்களுக்கு சில நாட்களுக்கு முன்பு திருமண நாள் குறிக்கப்பட்டது. தொடர்ந்து மங்கலவாத்தியங்கள் முழங்க மணமகன் தாலிக்கயிற்றை மணமகள் கழுத்தில் அணிவித்தார்.
பின்னர் மேட்டுப்பாளையம் ரோடு லட்சுமி திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் தைவான் நாட்டில் இருந்து பெண்ணின் உறவினர்கள், நண்பர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் வந்திருந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் தமிழர் முறைப்படி விருந்து பரிமாறப்பட்டது.
இதுகுறித்து மணமக்கள் கூறுகையில், சமூக சேவை பணியில் ஈடுபட்டபோது எங்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டு காதலித்து வந்தோம். தொடர்ந்து எங்களுக்கு தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.
- உரையாடல்கள் அனைத்தும் ஓபன் மைக்கில் நடந்ததால் மாநகரம் முழுவதும் போலீசாரிடையே இந்த சம்பவம் பேசு பொருளாக அமைந்துள்ளது.
- கடந்த வாரம் இரவு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதலுக்கு கும்பல் ஒன்று முயன்றது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் இரவு நேரங்களில் போலீஸ் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) மூர்த்தி மேற்பார்வையில் நெல்லை மாநகர சரகத்தில் இரவு ரோந்து பணியில் பெண் இன்ஸ்பெக்டர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
டவுன், சந்திப்பு, பாளை, மேலப்பாளையம் ஆகிய 4 இடங்களிலும் பெண் இன்ஸ்பெக்டர்கள் பணி செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு தலைமையாக உதவி போலீஸ் கமிஷனர் ஒருவர் பணியில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் அவர் தனது ரோந்து வாகனத்தில் சந்திப்பு உடையார்பட்டி பகுதியில் உள்ள தியேட்டருக்கு சென்றுள்ளார். அங்கு புஷ்பா-2 திரைப்படம் பார்ப்பதற்காக சென்ற உதவி கமிஷனர், ஜீப்பில் காவலுக்கு டிரைவரை அமர்த்திவிட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் மூர்த்தி, மைக்கில் வந்து உதவி கமிஷனரை கூப்பிட்டுள்ளார். ஆனால் சுமார் 15 நிமிடங்கள் வரையிலும் அவர் திருப்பி கமிஷனரை தொடர்பு கொள்ளவில்லை.
இதனால் கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார், உதவி கமிஷனரின் செல்போனில் சென்று தகவல் தெரிவிக்கவே, பதறி யடித்துக்கொண்டு தியேட்டரில் இருந்து வெளியே வந்த உதவி கமிஷனர், மைக்கில் கமிஷனரை தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது கமிஷனர் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு தச்சநல்லூர் பகுதியில் ஒரு பிரச்சனை என்று சொன்னார்கள். அதனால் அங்கு நிற்கிறேன் என்று பொய் சொல்லி உள்ளார். இதனால் உண்மை நிலவரத்தை ஏற்கனவே அறிந்திருந்த கமிஷனர் மூர்த்தி, ஓபன் மைக்கில் இரவு பணி பார்க்காமல் தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்த்து கொண்டிருக்கிறீர்கள். மாநகரில் இன்று இரவு பணியில் முழுவதுமாக பெண் இன்ஸ்பெக்டர்கள் இருக்கும் நிலையில், நீங்கள் எந்தவித பொறுப்பும் இன்றி இப்படி செயல்படுவது நியாயமா? என்று கூறி கண்டித்துள்ளார்.
இந்த உரையாடல்கள் அனைத்தும் ஓபன் மைக்கில் நடந்ததால் மாநகரம் முழுவதும் போலீசாரிடையே இந்த சம்பவம் பேசு பொருளாக அமைந்துள்ளது.
கடந்த வாரம் இரவு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதலுக்கு கும்பல் ஒன்று முயன்றது. இந்நிலையில் பெண் இன்ஸ்பெக்டர்கள் இரவு ரோந்து பணியில் இருந்த நேரத்தில், உதவி கமிஷனர் புஷ்பா-2 படம் பார்த்தது குறித்து துறை ரீதியாகவும் விசாரணை நடந்து வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.






