என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஃபெஞ்சல் புயல் மழை பாதிப்பு காரணமாக 3 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
- விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
ஃபெஞ்சல் புயல் மழை பாதிப்பு காரணமாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த பாதிப்பில் இருந்து அந்த மக்கள் மீண்டு வந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
3 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 2 ஆதி திராவிட நல தொடக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருவெண்ணெய்நல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளிகளில் தண்ணீர் வடியாத காரணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. மழைநீர் வடிந்து சகஜநிலை திரும்பிய நிலையில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக வந்தனர்.
- கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
- கூடுதல் நிதி ஒதுக்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது.
சென்னை:
தமிழக சட்டசபையில் துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்காக ஜூன் 20-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை 10 நாட்கள் கூட்டம் நடந்தது.
பேரவை விதிகளின்படி, சட்டசபை கூட்டம் முடிவுற்ற நாளில் இருந்து 6 மாதத்துக்குள் மீண்டும் கூடியாக வேண்டும்.
அந்த வகையில், பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டசபை தொடங்கியது. மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
- இலங்கை தமிழகம் கடலோரப் பகுதிகளையொட்டி நிலவக்கூடும்.
- கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 11 -ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை தமிழகம் கடலோரப் பகுதிகளையொட்டி நிலவக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (டிசம்பர் 10) துவங்கி நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தி இருக்கிறது. இதே போல் சென்னை மாநகராட்சி ஆணையருக்கும் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறது.
நிலையான வழிகாட்டு விதிமுறைகளின் படி பேரிடர்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்றால் உடனடியாக பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
- முடிச்சூரில் ஆம்னி பஸ்கள் நிறுத்தும் இடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- இந்தப் பஸ் நிறுத்துமிடத்தில் அதிகபட்சமாக 150 பேருந்துகள் வரை நிறுத்தலாம்.
சென்னை:
அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகில் முடிச்சூரில் ரூ.42.70 கோடியில் ஆம்னி பஸ்கள் நிறுத்தும் இடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தப் பஸ் நிறுத்துமிடத்தில் அதிகபட்சமாக 150 பேருந்துகள் வரை நிறுத்தலாம்.
ஆம்னி பஸ்கள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களின் பணிமனைகள் மற்றும் போரூர் சுங்கச்சாவடி அருகில் இருந்தும் தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு இயக்க சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளதன்படி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஈசிஆர் சாலை வழியாக புதுச்சேரி, பூந்தமல்லி சாலை வழியாக கிருஷ்ணகிரி, பெங்களூரு செல்லும் வாகனங்கள் கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை ஐகோர்ட்டின் அடுத்த உத்தரவு வரும் வரை ஆம்னி பஸ்கள் கோயம்பேடு மற்றும் போரூர் சுங்கச்சாவடியில் இருந்து தமிழகத்தின் தென்பகுதிகளுக்கு இயக்கப்படும்.
மேலும், தமிழக அரசால் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள பஸ் நிலையம் அந்தப் பகுதியை சேர்ந்த மற்றும் ஈசிஆர் பகுதியை சேர்ந்த பயணிகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது.
இந்த பஸ் நிலையத்தை சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து ஆம்னி பஸ்களும் பயன்படுத்தி 20 சதவீதத்துக்கு மேல் பயணிகளை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து ஏற்றிச்செல்கிறோம். இந்த பஸ் நிலையம் அந்தப் பகுதி மக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த பஸ் நிலையத்துடன் மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து இணைக்கும் பயணிகளுக்கு அதிக பயன்களை தரும்.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டின் அடுத்த உத்தரவு வரும் வரை தமிழக தென்பகுதிகளுக்குச் செல்லும் ஆம்னி பஸ்கள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள் மற்றும் போரூர் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தாம்பரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்றார்.
- அப்போது, லாட்டரி டிக்கெட்டுக்கும், பிளாக் டிக்கெட்டுக்கும் இடையே போட்டி நடக்கிறது என்றார்.
சென்னை:
சென்னையை அடுத்த தாம்பரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
அரசியலில் புதிது புதிதாக பலரும் வருவார்கள். அதற்கு எல்லாம் பயப்படவே கூடாது.
நாம் எவ்வளவு பேரை பார்த்துள்ளோம். அதெல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும். நாம் அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது இல்லை.
இப்போது நிலைமை என்ன என்றால் லாட்டரி சீட்டுக்கும், பிளாக் டிக்கெட்டுக்கும் போட்டி நடக்கிறது. அது சில பேருக்கு புரியும், சில பேருக்கு புரியாது.
தமிழகத்தில் எப்படியாவது லாட்டரி சீட்டை கொண்டுவர வேண்டும் என துடிக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் அது வேகாது.
2026ல் தி.மு.க. வராது என சொல்கிறார்கள். தி.மு.க.காரர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கிவிட்டான் என்றால் வேலையை முடிக்காமல் வரமாட்டார்கள்.
இப்போது பெற்றுள்ள வெற்றியைவிட அதிக வெற்றி பெற்று மீண்டும் ஸ்டாலின் முதல்வராவார். அதை செய்யாமல் விடமாட்டோம்.
புயல், மழை, வெள்ளம், கொரோனா என எதுவாக இருந்தாலும் மக்களுக்காக உழைப்பதுதான் அரசியல் கட்சிகளின் முக்கிய கடமை. அதை எல்லா காலத்திலும் சரியாக செய்யும் ஒரே கட்சி தி.மு.க. மட்டும் தான்.
தி.மு.க, திராவிட மாடல் என்றால் வயிறு எரிகிறது என்கிறார்கள். நம்மை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். எனவே கட்சி நிர்வாகிகள் எச்சரிக்கையாக, பொறுப்பாக, கடுமையாக வேலை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
- ஆந்திர ஐயப்ப பக்தர்கள்ரயிலில் கற்பூரம் ஏற்றி வழிபட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- ரெயிலில் கற்பூரம் கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும்.
திருப்பதியில் இருந்து கொல்லம் சென்ற ரெயிலில் ஆபத்தை உணராமல் ஆந்திர ஐயப்ப பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
திருப்பதியில் இருந்து கொல்லம் சென்ற ரெயில் சேலம் வழியாக சென்ற போது தடையை மீறி கற்பூரம் ஏற்றி ஐயப்ப பக்தர்கள் வழிபாடு செய்தனர். இணையத்தில் வெளியான வீடியோவை வைத்து போலீசார் அவர்கள் மீது மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஐயப்ப பக்தர்கள் தரிசனம் முடித்து திரும்பிய பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ரெயிலில் கற்பூரம் கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஈஷா சார்பில் ஆண்டுதோறும் கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
- திருச்சியில் நடைபெற்ற வாலிபால் போட்டிகளை அமைச்சர் KN நேரு துவக்கி வைத்தார்.
ஈஷா சார்பில் நடைபெறும் 'பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தை' முன்னிட்டு, மண்டல அளவிலான போட்டிகள் தமிழகத்தில் மொத்தம் 6 இடங்களில் நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களை மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் KN நேரு அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
ஈஷா சார்பில் ஆண்டுதோறும் கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்தாண்டிற்கான முதற்கட்ட கிளஸ்டர் அளவிலான போட்டிகள் கடந்த நவம்பர் மாத வார இறுதி நாட்களில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான வாலிபால் போட்டிகளும், பெண்களுக்கான த்ரோபால் போட்டிகளும் நடத்தப்பட்டன.

அந்த வகையில் முதல் கட்ட கிளஸ்டர் அளவிலான போட்டிகள் 5 தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் ஒரு யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் நடைபெற்றது. 162 இடங்களில் நடைபெற்ற முதற்கட்டப் போட்டிகளில் 5,000 அணிகள் மற்றும் 43,144 வீரர் வீராங்கணைகளும் பங்கேற்றனர். இதில் 10,311 பேர் கிராமங்களில் வசிக்கும் குடும்ப பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளஸ்டர் அளவில் தேர்வான அணிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, வேலூர் ஆகிய 6 இடங்களில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் மொத்தம் 136 அணிகளும், ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கணைகளும் கலந்து கொண்டனர்.
இதில் திருச்சி அண்ணா மைதானத்தில் நடைபெற்ற வாலிபால் போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் KN நேரு அவர்கள் வாழ்த்து தெரிவித்து துவக்கி வைத்தார். இதில் சின்னத்திரை நகைச்சுவை கலைஞர்களான KPY பாலா, வினோத் மற்றும் விக்னேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கிராமத்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலியில் நடைபெற்ற போட்டிகளை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் துவங்கி வைத்தார். இதில் பிரபல நகைச்சுவை நடிகர் புகழ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதே போல் கோவையில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பு விருந்தினராக பிரபல சின்னத்திரை தொகுப்பாளரும், நடிகருமான ரக்ஷன் பங்கேற்றார்.
வேலூரில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளை வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி துணைத் தலைவர் செல்வம் துவக்கி வைத்தார். இதில் சின்னத்திரை கலைஞர் ஈரோடு மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் மதுரையில் வெற்றி பெற்ற அணிகளுக்கு உதவி ஆணையர் திரு. ராஜேஷ்வரன் பரிசுகள் வழங்கினார். அதோடு சேலத்தில் நடைபெற்ற போட்டிகளில் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.
இந்த விளையாட்டுப் போட்டிகளுடன் சிலம்பம், வள்ளி கும்மி, படுகர் நடனம், மயிலாட்டம், மாடு ஆட்டம், அறுவடை ஒயிலாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும், அனைவருக்கும் இலவச யோக வகுப்புகளும், பார்வையாளர்களுக்கான கேளிக்கை விளையாட்டுகளும் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மண்டல அளவில் நடைபெற்ற போட்டிகளில் தேர்வான அணிகள் கோவையில் ஆதியோகி முன்பு டிசம்பர் 28-ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.
கிராம மக்களின் வாழ்வியலில் விளையாட்டு போட்டிகள் மூலம் புத்துணர்வு மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரவும், விளையாட்டை கிராம மக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாற்றவும் கிராமோத்சவ திருவிழாவை ஈஷா ஆண்டுதோறும் நடத்துகிறது.
விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதால் கிராமப்புற இளைஞர்கள் போதை பழக்கங்களுக்கு அடிமையாவதில் இருந்து விடுபடுகின்றனர், மேலும் கிராமங்களில் சாதி, மத, இன வேறுபாடுகளைத் தாண்டி மக்கள் ஒன்றிணையும் வாய்ப்பு மேம்படுகிறது. குறிப்பாக கிராமப்புற பெண்கள் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு விளையாடுவது இல்லை, இந்த நிலையை மாற்றி அவர்களும் விளையாடுவதற்கான களத்தை கிராமோத்சவ விழா அமைத்து தருகிறது.
- டிடிவி தினகரன் திருப்பூரில், மாரத்தான் போட்டி பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.
- நிகழ்ச்சியில், மாணவர்களில் ஒரு தரப்பினர் ’கடவுளே அஜித்தே’ என கோஷம் எழுப்பினர்
திருப்பூரில் மராத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரிசுகளை வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில், மாணவர்களில் ஒரு தரப்பினர் 'கடவுளே அஜித்தே' என கோஷம் எழுப்பினர்
இதனால், டிடிவி தினகரன் ஒருநிமிடம் பேச்சை நிறுத்திவிட்டு, மாணவர்கள் என்ன சொல்கிறார்கள் என நிர்வாகிகளிடம் கேட்டார். பிறகு கோஷம் ஓய்ந்தபிறகு பேச்சை தொடர்ந்தார்.
சமீப காலங்களில் அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் "கடவுளே அஜித்தே" என்று கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் வந்தால் முறையாக விசாரிக்க வேண்டும்
- பெண்களுக்கு எதிரான வழக்குகளை மெத்தனப் போக்குடன் கையாளும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மனநலம் குன்றிய கல்லூரி மாணவியை 10க்கும் மேற்பட்டோர் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஏற்கனவே காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், விடியா திமுக அரசின் காவல்துறை வழக்கம் போல மிகவும் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு புகாரளித்தவர்கள் அலைக்கழிக்கப்பட்டதால், இக்குற்றம் தொடர்ந்து நடைபெற்றதாக தகவல்கள் வருகின்றன.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் வந்தால், அதன் தீவிரத்தன்மை உணர்ந்து, முறையாக விசாரிக்க வேண்டும் என்பது மு.க.ஸ்டாலின் அரசின் காவல்துறைக்கு தெரியாதா?
பெண்களுக்கு, குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படும் நிலையை உருவாக்கியதோடு மட்டும் அல்லாமல், பெண்களுக்கு எதிரான வழக்குகளை மெத்தனப் போக்குடன் கையாளும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இவ்வழக்கில் தொடர்புள்ள கயவர்கள் அனைவருக்கும் கடுமையான சட்டபூர்வ தண்டனை கிடைப்பதை உறுதிசெய்வதுடன், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தவிர்க்கவும், அத்தகைய புகார்கள் மீது தாமதமின்றி தீவிர விசாரணை மேற்கொள்ளவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- லிங்கில் சென்று மின் கட்டணத்தை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
- சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
சென்னை:
ஆன்லைன் மூலமாக ஏதாவது ஒரு வழியில் பணம் பறிக்கப்படும் சம்பவங்கள் சென்னையில் தினந்தோறும் அரங்கேறி கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் மின்கட்டணம் செலுத்தவில்லை என்று ஏமாற்றி லிங்க் அனுப்பி பணத்தை சுருட்டும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இதுபோன்ற மோசடி மூலமாக ரூ.4½ லட்சம் பணம் பறிக்கப்பட்டு உள்ளது.
சென்னை கோட்டூர் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது செல்போன் எண்ணுக்கு லிங்க் ஒன்று வந்துள்ளது. அதில் நீங்கள் மின் கட்டணம் செலுத்தாமல் இருக்கிறீர்கள். அதனால் உங்களது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது.
அதனை தவிர்க்க லிங்கில் சென்று மின் கட்டணத்தை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பி ராஜசேகரன் லிங்கில் சென்று பார்த்துள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே ராஜசேகரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜசேகரன் போலீசில் புகார் செய்தார்.
இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- "XXI Chennai District Masters Athletic Championship 2024" தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினர்களாக SJ சூர்யா, சூரி, சித்தார்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான "XXI Chennai District Masters Athletic Championship 2024" தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium) நடைபெற்றது
இப்போட்டியை சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் திரு M.செண்பகமூர்த்தி, செயலாளர் திருமதி ருக்மணி, பொருளாளர் திருமதி சசிகலா மற்ற கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து கலந்து எடுத்த முடிவின் படி நடைபெற்றது

திரு மேகநாத ரெட்டி IAS இந்த போட்டியின் முதல் நாளை துவக்கி வைக்க (டிசம்பர் 8, 2024) சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் இயக்குனருமான SJ சூர்யா, நடிகர் சூரி, நடிகர் சித்தார்த், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் R.அர்ஜூன் துரை, லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ்குமரன், Dr. R ஆனந்த் குமார் IAS , தயாரிப்பாளர் சாமுவேல் மேத்தியு, தொழிலதிபர் சூர்யபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.

விருதுகள் விவரம்
60+ வயதினருக்கான 100 மீட்டர் ஆண்களுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் திரு M.செண்பகமூர்த்தி 13.2 நொடிகளில் முதலாவதாக வந்து வெற்றி பெற்றார்
John Devasir Memorial Award - Life time Achievement Award - திரு.விஸ்வாம்பரன் PU (National Master Athlete)
Daisy Victor Memorial Award - Life Time Achievement Award - திருமதி கிருஷ்ணவேனி N (Longing Standing National Athlete)

Appreciation Awards to Master Athletes பரிசு வென்றவர்கள் விவரம்:
ஆண்கள் பிரிவில் பரிசு வென்றவர்கள் - கலாநிதி N, ஆறுமுகம் K, வரதன் V
பெண்கள் பிரிவில் பரிசு வென்றவர்கள் - எஸ்தர் பிரேம பாக்கியதாய், சாந்தா சுந்தர், சியமந்தகம் MK
சுவீடனில் ஆக்ஸ்ட் மாதம் 2024ல் நடைபெற்ற World Masters Meet போட்டியில் வென்றவர்களுக்கு சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பாக ரொக்க பரிசு வழங்கப்பட்டது

பரிசு வென்றவர்கள் விவரம்:
20000 ருபாய் பரிசு - ஜான்சன் ரத்தினராஜ் - 45+ Silver Medalist, Pole Vault
20000 ருபாய் பரிசு - சாந்தி சந்தோஷ் - 45+ Hammer Throw
20000 ருபாய் பரிசு - VS சின்னசாமி - 85+ - Gold 4x400 Relay, Bronze 4x100 ரிலே

சுவீடனில் ஆக்ஸ்ட் மாதம் 2023ல் நடைபெற்ற Asian Masters Meet போட்டியில் வென்றவர்களுக்கு சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவர் திரு M.செண்பகமூர்த்தி அவர்கள் ரொக்க பரிசு வழங்கினார்
இன்றும், நாளையும் நடைபெறும் இந்த போட்டியில் மேலும் பல தடகள வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.


- யு.பி.ஐ. பின் நம்பரை பயன்படுத்தி ரூ. 5 ஆயிரத்தை திருப்பி அனுப்பி விட்டீர்கள் என்றால் அவ்வளவுதான்.
- மொத்த பணமும் சுருட்டப்பட்டு விடும் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சென்னை:
இணைய தள மோசடிகள் நாடு முழுவதும் இன்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உங்கள் பெயரில் போதைப்பொருள் பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. நீங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதில் தொடங்கி பல்வேறு வழிகளில் மோசடி பேர் வழிகள் இருந்த இடத்தில் இருந்து நமது வங்கி பணத்தை மொத்தமாக சுருட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
அந்த வகையில் 'கூகுள் பே' மூலமாக சிறிய தொகையை அனுப்பி உங்களது பின் நம்பரை தெரிந்து கொண்டு வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் சுருட்டும் நூதன மோசடி தற்போது அரங்கேறி வருகிறது. குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு ரூ.5 ஆயிரம் பணத்தை மோசடி ஆசாமிகள் எங்கிருந்தோ உங்களுக்கு அனுப்புவார்கள்.
அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து இந்த பணம் வந்த சில நிமிடங்களிலேயே உங்களை தொடர்புக் கொண்டு பேசும் நபர் எனது செல்போனில் இருந்து உங்களுக்கு தவறாக ரூ.5 ஆயிரம் பணத்தை அனுப்பிவிட்டேன். அதனை திருப்பி அனுப்பி விடுங்கள் என்று கூறுவார். நீங்களும் அதை நம்பி அடுத்தவர் பணம் நமக்கு எதற்கு? என நினைத்து யார் என்றே தெரியாத அந்த நபரது வங்கிக் கணக்குக்கு உங்களது யு.பி.ஐ. பின் நம்பரை பயன்படுத்தி ரூ. 5 ஆயிரத்தை திருப்பி அனுப்பி விட்டீர்கள் என்றால் அவ்வளவுதான்.
இதன் பிறகு உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணமும் சுருட்டப் பட்டிருக்கும். எதிர்முனையில் இருக்கும் நபர் உங்களது யு.பி.ஐ. பின் நம்பரை அப்படியே ஹேக் செய்து வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் எடுத்திருப்பார்.
இந்த மோசடியில் இருந்து தப்புவது எப்படி? என்பது பற்றி சைபர் கிரைம் போலீசார் விரிவாக விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
அதன் விவரம் வருமாறு:-
உங்களுக்கு சிறிய தொகையை தெரியாமல் அனுப்பி இருப்பவர் யார் என்றே தெரியாதவராக இருந்தால் நீங்கள் உடனடியாக அந்த பணத்தை திருப்பி அனுப்ப வேண்டியது இல்லை.
பணத்தை அவர் திருப்பி கேட்கும் பட்சத்தில் அதற்கு மாறாக உங்களது பின் நம்பரை மாற்றி போட்டு அவரை குழப்பம் அடைய செய்யலாம்.
இதுபோன்று தவறான பின் நம்பரை அடிப்பதன் மூலம் எதிர்முனையில் இருப்பவர் நீங்கள் அடித்திருப்பது உண்மையான பின் நம்பர் தான் என்று அவரும் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடுவதற்கு முயற்சிப்பார்.
ஆனால், அது நடக்காது. அவரது முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்து விடும். இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகு நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தொடர்பு கொண்டு இது போன்று அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து பணம் வந்திருப்பதாக கூறி புகார் அளிக்க வேண்டும்.
அதன் பின்னர் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று புகார் அளிக்கலாம். அதற்கு நேரமில்லை என்றால் 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
இப்படி உஷாராக நீங்கள் செயல்படாமல் அவசரப்பட்டு உண்மையான பின் நம்பரை தெரிவித்து விட்டால் அடுத்த நொடியே உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணமும் சுருட்டப்பட்டு விடும் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்து உள்ளனர்.






