என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை மத்திய ஜெயில்"

    • இ-சைக்கிள் 3 விதமாக இயங்கும் வகையில் யுகஆதித்தன் உருவாக்கி இருக்கிறார்.
    • இ-சைக்கிளை ஜெயில் வார்டன்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    கோவை:

    ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கவுந்தபாடியை சேர்ந்தவர் யுகஆதித்தன் (வயது 31). இவர் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார்.

    யுகஆதித்தன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டம் அழகாபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    யுகஆதித்தன் ஜெயிலில் இருந்தபடியே தான் படித்த கல்வியை பயனுள்ளதாக்கும் வகையில் இ-சைக்கிள் ஒன்றை உருவாக்கி உள்ளார். இந்த இ-சைக்கிள் 3 விதமாக இயங்கும் வகையில் அவர் உருவாக்கி இருக்கிறார். இந்த சைக்கிளை சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் பெறும் சோலார் பேனல் மூலம் இயக்கலாம். அல்லது சைக்கிளை மிதிக்கும்போது டைனமோவில் இருந்து வரும் மின்சாரத்தை கொண்டு இயக்கலாம். 3-வது பேட்டரியில் சார்ஜ் ஏற்றிக்கொண்டும் ஓட்டலாம். தற்போது இந்த இ-சைக்கிளை ஜெயில் வார்டன்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து கோவை மத்திய ஜெயில்துறை டி.ஐ.ஜி. சண்முக சுந்தரம் கூறியதாவது:-

    யுகஆதித்தன் ஜெயில் வளாகத்துக்குள் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என முயற்சி மேற்கொண்டார். பயன்படுத்தாமல் கிடந்த சைக்கிளை பார்த்த அவர் அதனை சூரிய ஒளி மற்றும் பேட்டரியில் இயங்கும் வகையில் வடிவமைத்து உள்ளார். சைக்கிளில் நடுவில் தகடுகளை வைத்து அங்கு பேட்டரியை பொருத்தினார். மேலும் பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக டைனமோவையும் பொருத்தினார். சைக்கிளை மிதிக்கும்போது டைனமோ மூலமாக பேட்டரி சார்ஜ் ஏறும் வகையில் வடிவமைத்தார். மின்சாரம் மூலமாகவும் பேட்டரியை சார்ஜ் செய்யலாம். கேரியரில் சோலார் பேனலை பொருத்தி அதன் மூலமாகவும் சைக்கிள் இயங்கும் வகையிலும் வடிவமைத்து உள்ளார். மிலிட்டரி பச்சை நிறத்தில் பெயிண்ட் அடித்து எங்களிடம் வழங்கினார். யுகஆதித்தனை நாங்கள் வெகுவாக பாராட்டினோம். இந்த சைக்கிளை தற்போது டவர் பிளாக்கில் ரோந்து செல்லும் வார்டன்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இதுபோல 9 சைக்கிளை தயாரிக்க திட்டமிட்டு உள்ளோம்.

    தற்போது யுக ஆதித்தன் இ-ஆட்டோ ரிக்ஷாவை தயாரிக்கிறார். ஓரிரு மாதங்களில் இந்த பணி முடிவடையும். அதன் பின்னர் மின்சார ஆட்டோவை ஜெயில் வளாகத்தில் ரோந்து பணியில் பயன்படுத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் கோவை மத்திய ஜெயிலில் கைதிகள் பணிபுரியும் நெசவு பிரிவு, பெட்ரோல் பங்க், தையல் பிரிவு, புத்தகம் பைண்டிங் பிரிவு, வெல்டிங் பிரிவு, தச்சுப்பிரிவு ஆகியவை செயல்பட்டு வருகிறது. காந்திபுரத்தில் உள்ள சிறைச்சாலை பஜாரில் பேக்கரி, நர்சரி கார்டன், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை ஜெயில் நிர்வாகம் நடத்தி வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான தண்டனை கைதிகள் வேலை பார்த்து வருகின்றனர்.

    • வார்டன்களுக்கும், கைதிகளும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.
    • காயம் அடைந்த கைதிகள் 7 பேர் ஜெயில் வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாநகரின் மத்தியில் மத்திய ஜெயில் செயல்பட்டு வருகிறது. இந்த ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 2500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

    இங்கு தடையை மீறி புகையிலை பொருட்கள், கஞ்சா, செல்போன் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இதனை தொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகள் ஜெயிலில் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும் அவை பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.

    இதனால் தினமும் ஜெயிலில் உள்ள அத்தனை வளாகங்களிலும் அங்கிருக்கும் வார்டன்கள் அனைவரும் ரோந்து செல்வது வழக்கம்.

    அதன்படி இன்று காலை ஜெயிலில் பணியில் இருந்த 2 வார்டன்கள் மத்திய ஜெயிலில் உள்ள வால்மேடு என அழைக்கப்படும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பிளாக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    ஒவ்வொரு அறையாக சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு அறையில் இருந்த 3 பேர், எந்நேரமும் எங்களிடமே வந்து சோதனை செய்கிறீர்களே என கேட்டு சோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் வார்டன்களுக்கும், கைதிகளும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இவர்களது சத்தம் கேட்டு சக வார்டன்கள் ஓடி வந்தனர். மேலும் ஏராளமான கைதிகளும் திரண்டு விட்டனர்.

    கைதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு, வார்டன்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தகராறு செய்தனர். இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றவே ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.

    கைதிகளில் சிலர் மரங்களின் மீது ஏறி அமர்ந்துகொண்டு இதுபோன்று தொல்லை கொடுத்தால் கைகளை அறுத்து கொள்வோம் என கூறி கைகளை அறுத்து மிரட்டல் விடுத்தனர். மேலும் சில கைதிகள் வார்டன்களை தாக்கினர். இதில் மோகன்ராஜ், பாபு ஜான், விமல்ராஜ், ராகுல் ஆகிய 4 வார்டன்களும் காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் சிறைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த 4 வார்டன்களையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் காயம் அடைந்த கைதிகள் 7 பேர் ஜெயில் வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வார்டன்கள், கைதிகள் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஆத்திரம் அடைந்த 2 கைதிகளும் போலீசாரை சரமாரியாக தாக்கினர்.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    கோவை:

    கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ள ஒரு கைதி நேற்று மாலை டவர் பிளாக் பகுதியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசிடம், நான் மேலதிகாரியை பார்க்க வேண்டும் என கூறினார். இதனை அவர் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.

    தொடர்ந்து அந்த வாலிபர் ஜெயில் அறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரை மீண்டும் அறைக்குள் செல்லும்படி போலீசார் கூறினர். அப்போது அவருடன் மேலும் ஒரு கைதியும் சேர்ந்து கொண்டார்.

    தொடர்ந்து அவர்கள் ஜெயிலில் இருந்து தப்ப முயன்றனர். அப்போது அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த 2 கைதிகளும் போலீசாரை சரமாரியாக தாக்கினர்.

    இதுகுறித்து தகவலறிந்த சிறை வார்டன்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து கைதிகளை சமரசப்படுத்தி மீண்டும் சிறை அறையில் அடைந்தனர்.

    இதற்கிடையே கோவை சிறைச்சாலையில் போலீசார் தாக்கப்பட்டது குறித்து ஜெயில் வார்டன் மனோரஞ்சிதம் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் ஜெயில் அறையில் இருந்து வெளியே வந்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டது ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பாளையம் அருகே உள்ள முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த ஆசிப் என்ற ஆசிப் முஸ்தகீம் (வயது 32) என்பதும், அவருக்கு உடந்தையாக இருந்து போலீசாரை தாக்கியது கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு, புதுத் தெருவை சேர்ந்த அப்துல் சலீம் என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றதாக ஆசிப், அப்துல்சலீம் ஆகியோர் மீது போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூரியஒளி மின்சக்தியால் இயங்கும் சைக்கிளை வடிவமைத்தார்.
    • 2 ஆட்டோக்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் தயாரிக்கவும் சிறைத்துறை திட்டமிட்டு உள்ளது.

    கோவை:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்தவர் யுகஆதித்தன் (வயது 32). ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர். இவர் ஒரு கொலை வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் கடந்த 7 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    மத்திய ஜெயில் தொழிற்கூடத்தில் பணியாற்றி வரும் யுகஆதித்தன் கையில் கிடைக்கும் சாதனங்களை கொண்டு பயன்பாடு உள்ள பொருட்களை உருவாக்குவதில் ஆர்வம் உடையவர்.

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூரியஒளி மின்சக்தியால் இயங்கும் சைக்கிளை வடிவமைத்தார். இது சிறை அதிகாரிகள் மத்தியில் பாராட்டுதல்களை பெற்றது.

    இந்த நிலையில் யுகஆதித்தன் சூரிய ஒளி மின்சக்தியால் இயங்கும் சோலார் ஆட்டோவை வடிவமைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.


    கோவை மத்திய சிறையில் சமையற்கூடம் உள்ளிட்ட பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த ஆட்டோவை சோதனை பயன்பாடு முடிந்த பிறகு ஜெயில் கைதிகளை சந்திக்க வரும் உறவினர்களில் வயதானவர்கள் மற்றும் நடக்க முடியாதவர்கள் அமர்ந்து செல்லும்வகையில் நுழைவுவாயிலில் இருந்து பார்வையாளர் அறை வரை பயன்படுத்துவது என்று அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதுகுறித்து கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.சண்முகசுந்தரம் கூறியதாவது:-

    ஜெயில் கைதி யுகஆதித்தன் உருவாக்கி உள்ள சோலார் ஆட்டோவின் மீது சூரியஒளி மின்உற்பத்திக்காக தகடு பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஆட்டோவில் டிரைவர் இருக்கைக்கு அடியில் பேட்டரி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

    சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் மேற்கண்ட ஆட்டோவில் ஒருமுறை பேட்டரி முழுவதுமாக நிரம்பினால் 200 கி.மீ. வரையிலும் தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். இதில் டிரைவர் உள்பட 8 பேர் வரை அமர்ந்து பயணிக்கலாம்.

    மேலும் எல்.இ.டி. விளக்கு, ஹாரன், ஹேண்ட் பிரேக், டேப் ரிக்கார்டர் போன்ற வசதிகளும் உள்ளன.

    ரூ.1.25 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த ஆட்டோ தற்போது சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர மேலும் 2 ஆட்டோக்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் தயாரிக்கவும் சிறைத்துறை திட்டமிட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்தபோது தான் கஞ்சா கடத்தவில்லை என செந்தில் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • சம்பவம் தொர்பாக ஜெயில் வார்டன் மனோரஞ்சிதம் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    கோவை:

    கோவை மத்திய ஜெயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடிதடி, கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவர்.

    ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகள் மத்தியில் கஞ்சா புழக்கம் இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஜெயில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது திருப்பத்தூரைச் சேர்ந்த ராஜன் என்ற கைதியிடம் இருந்து 8 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தியபோது ஆயுள் தண்டனை கைதியான செந்தில் என்பவர் தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்தார்.

    செந்தில் கோவை கணபதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சிக்கி ஆயுள்தண்டனை பெற்றவர்.

    செந்திலிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. செந்திலுக்கு மத்திய சிறையின் மெயின் வாயிலுக்கு வெளியில் சுத்தம் செய்யும் வேலை ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது சிலர் வெளியே இருந்து வரும்போது அவரிடம் கஞ்சாவை கொடுப்பதும், அதனை அவர் ஆசனவாயிலில் வைத்து சிறைக்குள் கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

    சிறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்தபோது தான் கஞ்சா கடத்தவில்லை என செந்தில் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென அவர் அறையில் இருந்த கண்ணாடி கதவில் வேகமாக தலையால் மோதிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்து ரத்தம் கொட்டியது.

    இதையடுத்து செந்திலை ஜெயில் அதிகாரிகள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செந்திலின் முகத்தில் இரு இடங்களில் வெட்டுக்காயம் இருந்தது. இதற்காக முகத்தில் 16 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சம்பவம் தொர்பாக ஜெயில் வார்டன் மனோரஞ்சிதம் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ராஜன், செந்தில் மற்றும் பார்வையாளர்கள் போல் வந்து அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த பிரபுராஜ் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் பிரபுராஜை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • கோவை காட்டூர் உதவி கமிஷனர் வின்சென்ட தலைமையில் 50 போலீசார் இன்று காலை கோவை மத்திய ஜெயிலுக்கு சென்றனர்.
    • தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகள், அவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் மற்றும் உடமைகளை சோதனை செய்தனர்.

    கோவை:

    கோவை மத்திய ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    ஜெயிலுக்குள் கைதிகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பீடி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்தவும் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனை ஜெயில் அதிகாரிகள் தினமும் கண்காணித்து வருகின்றனர். இதனை மீறி சில கைதிகள் செல்போன் மற்றும் பீடி, சிகரெட்டுகளை மறைத்து வைத்து பயன்படுத்துவதாக புகார்கள் வந்தது.

    இதனையடுத்து கோவை காட்டூர் உதவி கமிஷனர் வின்சென்ட தலைமையில் 50 போலீசார் இன்று காலை 6 மணிக்கு கோவை மத்திய ஜெயிலுக்கு சென்றனர்.

    அவர்கள் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகள், அவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் மற்றும் உடமைகளை சோதனை செய்தனர். இந்த சோதனை 8 மணி வரை நடந்தது. சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

    திடீரென 2 மணி நேரம் நடந்த இந்த சோதனையால் கோவை மத்திய ஜெயிலில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×