என் மலர்
உள்ளூர் செய்திகள்
- புதுச்சத்திரம் இருந்து திருநின்றவூர் வழியாக செல்லும் வாகனங்கள் பூந்தமல்லி சென்று செல்கின்றனர்.
- திருவள்ளூர் மாவட்டத்தில் 581 ஏரிகள் உள்ளன.
திருவள்ளூர்:
வேலுார் மாவட்டத்தில், தக்கோலம் வழியாக வரும் கல்லாறு, திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு என இரு ஆறுகளாக பிரிகிறது.
கேசாவரம் அணைக் கட்டில் நீர் நிரம்பினால் நேரடியாக கொசஸ்தலை ஆற்றில், செல்லும் நீர் பூண்டி ஏரிக்கு செல்கிறது.
இந்த அணைக்கட்டில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையில் தற்போது அணைக்கட்டில் மழைநீர் நிரம்பி நீர் வெளியேறி வருவதால் கொசஸ்தலை, கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதேபோல் இந்த அணைக்கட்டின் இன்னொருபுறம் அமைக்கப்பட்ட 16 ஷட்டர்கள் வழியாக செல்லும் நீர் கூவம் ஆறாக மாறி பேரம்பாக்கம், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம் வழியாக ஜமீன் கொரட்டூர், பருத்திப்பட்டு, மதுரவாயல், கோயம்பேடு வழியாக 75 கிலோ மீட்டர் சென்று நேப்பியர் பாலம் அருகே வங்க கடலில் கலக்கும்.
இந்நிலையில் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை புதுச்சத்திரம் கூவம் ஆற்றின் நடுவே உள்ள புதுச்சத்திரம் தரைப்பாலம் முழ்கி நீர் செல்வதால் புதுச்சத்திரம் இருந்து திருநின்றவூர் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சத்திரம் இருந்து திருநின்றவூர் வழியாக செல்லும் வாகனங்கள் பூந்தமல்லி சென்று செல்கின்றனர். இதேபோல் திருநின்றவூரில் இருந்து புதுச்சத்திரம் வரும் வாகனங்கள் திருவள்ளுவர் வந்து செல்கின்றன.
வாகனங்கள் 20 கி.மீ, துாரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 581 ஏரிகள் உள்ளன. இதில் 311 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. மேலும் 75 சதவீதமும், 185 ஏரிகள் 50 சதவீதமும், 67 ஏரிகள் 25 சதவீதம் 18 ஏரிகள் நிரம்பியுள்ளன.
- நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.
- சூர்யா 45 படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளார்.
கங்கா படத்திற்கு அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சூர்யா மற்றும் திரிஷா ஜோடியாக மௌனம் பேசியதே மற்றும் ஆறு திரைப்படங்களில் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், தனது முதல் படத்தில் நாயகனாக நடித்த சூர்யாவுடனே மீண்டும் அவர் ஹீரோயினாக தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகை த்ரிஷா தற்போது கோவையில் உள்ள மருத மலை முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
- கனமழை எச்சரிக்கை, நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதன் காரணமாகவும் கூட்டம் ஒத்திவைப்பு.
- கூட்டம் நடைபெறும் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னையில் வரும் 18ம் தேதி நடைபெற இருந்த திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கூட்டம் நடைபெறும் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கனமழை எச்சரிக்கை காரணமாகவும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதன் காரணமாகவும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் நமது கழக உறுப்பினர்கள் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளதாலும், 18.12.2024 அன்று சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம் தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.
தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்து கொலை செய்ததாக தகவல்.
- போலீசாருடன் சேர்ந்து கருப்பசாமியும் சிறுவனை தேடியது போல் நடித்ததும் அம்பலமாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் முருகன். தொழிலாளி. இவரது மனைவி பாலசுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளையமகன் கருப்பசாமி அப்பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 9-ந்தேதி கருப்பசாமிக்கு உடல்நிலை சரி இல்லாததால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டில் இருந்த மாணவன் திடீரென மாயமானார்.
இது தொடர்பான புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சிறுவனை தேடி வந்த நிலையில் சிறுவனின் வீட்டின் அருகே இருந்த பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுவன் கருப்பசாமி சடலமாக மீட்கப்பட்டார்.
சிறுவன் மாயமான போது அவர் அணிந்திருந்த 1½ பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. மேலும் அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் சிறுவன் நகைக்காக கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதிபடுத்தினர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கருப்பசாமி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில், சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்து கொலை செய்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீசார் தேடுவதற்கு சிறுது நேரத்திற்கு முன்புதான் சடலத்தை அதே இடத்தில் கருப்பசாமி விட்டுச் சென்றுள்ளார். மேலும், போலீசாருடன் சேர்ந்து கருப்பசாமியும் சிறுவனை தேடுவது போல் நடித்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
- தொடர் கனமழையினால் பல பகுதிகளில் உள்ள கிராமப்புற சாலைகள் பெரிதும் சேதமடைந்துள்ளன.
- சில தனிநபர்கள் சுயநலமாக அடைத்து வைப்பதால் சில குளங்கள் நீர் நிரம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான ஆவுடையானூர், நாட்டார்பட்டி, திப்பணம்பட்டி கல்லூரணி, மேலப்பாவூர், குறுங்காவனம், கீழப்பாவூர், பெத்தநாடார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில் நெல் நடவு செய்யப்பட்டுள்ள வயல்வெளிகள் முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கியது.
சாலைப்புதூர், நவநீதகிருஷ்ணபுரம், நாகல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வெண்டை செடிகள் பாரவி இருந்த நிலையில் தண்ணீர் செல்லும் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதுவும் மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அரசு உரிய நிவாரணம் வழங்குமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் பகுதியில் இருந்து மேலப்பாவூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் தொடர்ந்து பெய்த கனமழையினால் தண்ணீர் முழுவதுமாக தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களிலோ, நடந்தோ பயணிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர் கனமழையினால் பல பகுதிகளில் உள்ள கிராமப்புற சாலைகள் பெரிதும் சேதமடைந்துள்ளன.
நாகல்குளம் பகுதி வழியாக குளங்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களை ஒரு சில தனிநபர்கள் சுயநலமாக அடைத்து வைப்பதால் சில குளங்கள் நீர் நிரம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே அதில் அதிகாரிகள் தலையிட்டு குளங்களுக்கு செல்லும் தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தொடர் மழை காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது.
- சங்கரன்கோவில் மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைவாக உள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
அதனால், தொடர் மழை காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. இதன் விளைவாக சங்கரன்கோவில் மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைவாக உள்ளது.
இந்நிலையில், இன்று சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 7 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேசமயம் கன்னியாகுமரி தோவாளை மலர்சந்தையில் ரூ.4000-க்கு விற்பனையாகிறது.
நாளை இந்தாண்டின் கடைசி முகூர்த்த நாள் என்பதும் மல்லிகைப்பூ விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கடந்த சில தினங்களுக்கு முன்பு வாணியாறு நீர்த்தேக்க பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது.
- போலீசார் வரவழைக்கப்பட்டு இரும்பு தடுப்பு வேலி மூலம் போக்குவரத்து தடுத்து நிறுத்தப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி:
தொடர் மழை காரணமாக பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தென்கரைக்கோட்டை ஏரி நிரம்பிய நிலையில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் பாதுகாப்புக் கருதி போக்குவரத்து நிறுத்தம் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு ஏரியை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தென்கரைக்கோட்டை ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 107 ஏக்கர் பரப்பளவில் 13 மில்லி கன அடி தண்ணீர் தேக்கி வைக்கவும், 20 அடி உயரத்தைக் கொண்டது.
ஃபெஞ்சல் புயல் மூலமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வாணியாறு நீர்த்தேக்க பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் வாணியாறு அணை அதன் முழு கொள்ளளவான 63.30 அளவை எட்டியது. தற்போது அணைக்கு 375கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்புக்கு கருதி தினமும் 1125 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் மூலம் வெங்கட சமுத்திரம் ஏரி, ஆலாபுரம் ஏரி, பறையப்பட்டி ஏரி நிரம்பி வாணியாற்று நீர் தற்போது தென்கரைக் கோட்டை ஏரியின் முழு அளவை எட்டியுள்ளது.
இதை அடுத்து திடீரென நேற்று அணையின் கிழக்குப் பகுதியில் சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு திடீரென விரிசல் ஏற்பட்டது. இதை அறிந்த அப்பகுதி கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில்அரூர் கோட்டாட்சியர் சின்னசாமி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி, கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஏரி பகுதிக்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டு தீவிர பாதுகாப்பு பணியை எடுக்க தொடங்கினர்.
அதன்படி உடனடியாக ராமியமபட்டி- ஏ. பள்ளிப்பட்டி நெடுஞ்சாலை உடனடியாக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது,
போலீசார் வரவழைக்கப்பட்டு இரும்பு தடுப்பு வேலி மூலம் போக்குவரத்து தடுத்து நிறுத்தப்பட்டது, அந்த வழியாக பொதுமக்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
மேலும் உடனடியாக ஏரியில் தாழ்வான பகுதியில் உள்ள விவசாயிகள், கால்நடைகள், பொதுமக்கள் குடியிருப்புகளில் இருந்து வெறியேற்றப்பட்டனர். அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
தென்கரைக்கோட்டை ஏரியில் பாதுகாப்புக் கருதி ஏரிக்கு வரும் நீர் பெருமளவு உபர் வெளியேற்றும் கால்வாய் வழியாக சில அடைப்புக்களை எடுத்து விட்டு கல்லாற்றில் தண்ணீர் அனுப்பப்பட்டு அரூர் ஏரிக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொதுப்பணித் துறையினர் விரிசலை தடுக்கும் பொருட்டு உடனடியாக 500-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை தயார் செய்து ஏரியில் விரிசல் பகுதியில் அடுக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
தென்கரைக்கோட்டை ஏரியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது என்ற செய்தி காட்டுத் தீயாக இந்தப் பகுதியில் பரவியதால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
- ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
- ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறையனைப் பிரார்த்திக்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று காலமானார்.
அவரது மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
அன்புச் சகோதரர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அணுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறையனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
- சமூக நீதி என்பது குறிப்பிட்ட இயக்கத்திற்கு, அரசியல் கட்சிக்கு மட்டுமே சொந்தமானது இல்லை.
தமிழ்நாடு மாநில ஆளுநராக கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஆர்.என். ரவி பணியாற்றி வருகிறார். அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை தெரிவிப்பது, அரசு ஆவணங்களுக்கு பதில் அளிக்க காலதாமதம் செய்வது என ஆளும் அரசின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகிறார்.
ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகை தரப்பில் அழைப்பிதழ் வெளியிடப்பட்டது. அந்த அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ஆளுநர் ஆர்.என் ரவி கூறி வரும் கருத்துக்கள் தொடர்ந்து சர்ச்சையாகிவரும் நிலையில் தற்போது இந்திய அரசியலமைப்பில் பிரதானமான மதச்சார்பின்மையே தேவையற்றது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆளுநரின் கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்தது.
தமிழ்நாடு பல்கலைக்கழங்களின் வேந்தரான ஆளுநருக்கும் உயர்கல்வித்துறைக்கும் இடையே அவ்வப்போது வெளிப்படையாகவே பிரச்சனை வெடித்தது. உயர்கல்வி துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது நடந்த சர்ச்சைகளே இதற்கு உதாரணம். அப்போது ஆளுநர் பங்கேற்ற விழாக்களை அமைச்சர் பொன்முடி புறக்கணித்த சம்பவமும் நிகழ்ந்தன.
தேசிய அரசியலமைப்பு தினத்தையொட்டி, சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் சட்ட கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆளுநர், சமூக நீதி என்பது குறிப்பிட்ட இயக்கத்திற்கு, அரசியல் கட்சிக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அது அனைவருக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை என்று கூறினார்.

சமீபத்தில் சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'இந்தி மாத' நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம் பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இது பாடியவர்களின் கவனக்குறைவால் நடந்த தவறு என விளக்கம் அளிக்கப்பட்டது.

திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் தவிர்த்துவிட்டு பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
ஆசிரியர் தினத்தையொட்டி நடந்த நிகழ்வில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "அரசு பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் கீழே சென்றுள்ளது. தேசிய சராசரியைவிட அது குறைவாக உள்ளது," என்று கூறினார்.
இதற்கு பதில் தரும் விதமாக சபாநாயகர் அப்பாவு, "ஆளுநர் ரவி இதுபோன்ற தர்க்கமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது என பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளேன். தமிழ்நாட்டின் பாடதிட்டம் குறித்து ஆளுநருக்கு முழுமையாகத் தெரியுமா அல்லது சந்தேகக் கண்களுடன் பார்க்கிறாரா எனத் தெரியவில்லை என்று கூறினார்.
இவ்வாறாக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில், ஆளுநர் ரவியை திரும்ப பெறக்கோரி கூட்டணிக் கட்சிகளோடு தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது தி.மு.க. அரசு.
- அமராவதி அணையில் இருந்து ஆற்றில் 36ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
- கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ச்சியாக கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக அமராவதி அணை முழு கொள்ளளவான 90அடியை எட்டியது. இதையடுத்து அமராவதி அணையில் இருந்து ஆற்றில் 36ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் ஆற்று பாலத்தின் அருகே பழனியில் இருந்து சண்முக நதி ஆற்றில் திறந்து விடப்பட்ட 20 ஆயிரம் கன அடி தண்ணீர் அலங்கியம் அருகே அமராவதி ஆற்றில் கலந்து சுமார் 57 ஆயிரம் கன அடி தண்ணீர் அமராவதி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி செல்கிறது.
இதன் காரணமாக தாராபுரம் ஈஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள படித்துறை மூழ்கியது. ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள கிருஷ்ணர் கோவிலை சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் அலங்கியம்-கொங்கூர் தரைப்பாலம் மற்றும் வீராச்சிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஆத்துக்கால்புதூரில் உள்ள ஆற்றுப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அமராவதி ஆற்றில்வெள்ளப்பெருக்கு காரணமாக ஈஸ்வரன் கோவில் அருகில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- எதிர்கட்சி தலைவர் நின்று கொண்டிருக்கின்ற அரசியல் தளம் அப்படிப்பட்டது.
- பாதிப்பு இருந்தால் உண்மையாக எங்கெல்லாம் அபயக் குரல் கேட்கின்றதோ, அங்கெல்லாம் ஆதரவு கரம் நீட்டுபவர் எங்களுடைய முதலமைச்சர்.
சென்னை:
சென்னை, வால்டாக்ஸ் ரோடு, தண்ணீர் தொட்டி தெருவில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்டு, நடைபெற்று வரும் 700 புதிய குடியிருப்புகளுக்கான பணிகளையும் மற்றும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, தங்கசாலை மேம்பாலம் அருகில் நடைபெற்று வரும் 776 புதிய குடியிருப்புகளுக்கான பணிகளையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு களஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் கடந்த 14.03.2024 அன்று சென்னை, தங்க சாலையில் ரூபாய் 2,097 கோடி மதிப்பீட்டிலான 87 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இத்திட்டமானது பல்வேறு துறைகளின் சார்பில் விரிவடைந்து தற்போது ரூபாய் 6,309 கோடி மதிப்பீட்டில் 252 திட்டங்களாக அதிகரித்து உள்ளது.
முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்டப் பணிகள் அனைத்தையும் நேரடியாக களத்திற்கு சென்று, அனைத்து பணிகளையும் முடக்கி விடுகின்ற சூழலை உருவாக்கிக் கொண்டு, தினந்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இந்த திட்டங்கள் என்பது ஒட்டுமொத்தமாக 252 திட்டங்கள் என்றாலும் இந்த 252 திட்டங்களில் பெரும்பாலான திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு டிசம்பர் 2025 இறுதிக்குள் கொண்டு வருவதற்கு உண்டான அனைத்து பணிகளும் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், பெருநகர சென்னை மாநக ராட்சி, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம் போன்ற அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து இந்த திட்டப்பணிகளை விரைவுப்படுத்துகின்ற முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம்.
எதிர்கட்சி தலைவர் நின்று கொண்டிருக்கின்ற அரசியல் தளம் அப்படிப்பட்டது. அவர் குறைகளை சொல்லிக் கொண்டுதான் இருக்க வேண்டும். அவர் சொல்லுகின்ற குறைகள் உண்மை இருப்பின் முதலமைமைச்சர் குறைகள் யாரிடம் வருகிறது என்பது பேச்சு முக்கியமில்ல, பாதிப்பு இருந்தால் உண்மையாக எங்கெல்லாம் அபயக் குரல் கேட்கின்றதோ, அங்கெல்லாம் ஆதரவு கரம் நீட்டுபவர் எங்களுடைய முதலமைச்சர். ஃபெஞ்சல் புயலின் பாதிப்புக்கு ஏற்றார் போல் நிச்சயம் முதலமைச்சர் ஒன்றிய அரசு வஞ்சித்தாலும் நிவாரண நிதி வழங்குவதில் தடை ஏதும் இருக்காது.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவது சூழ்நிலைக்கு ஏற்றார் போல் முதலமைச்சர் எடுப்பார். நிச்சயம் எல்லோருக்கும் எல்லாம் என்ற அரசு தான் இந்த அரசு.
இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
- ரெயில்வே சுரங்கப்பாதையில் சாதாரண மழை பெய்தாலே அதிக அளவு தண்ணீர் தேங்கி போக்குவரத்து தடை ஏற்பட்டு விடும்.
- ரெயில்வே நிர்வாகம் அலட்சியப் போக்கால் பொதுமக்கள் கோரிக்கை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே பெட்டி நாயக்கன்பட்டியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த அய்யாவு (வயது75) என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடலை உறவினர்கள் எவ்வாறு எடுத்துச் செல்வது என்று தெரியாமல் விழித்தனர். இவர்கள் மயானத்திற்கு உடலை எடுத்து செல்லும் பாதையில் உள்ள சுரங்கத்தில் தண்ணீர் அதிக அளவு தேங்கி இருந்தது. இன்று காலையும் இடைவிடாமல் மழை பெய்ததால் வேறு வழியின்றி பெட்டி நாயக்கன்பட்டி ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக இடுப்பளவு தண்ணீரில் உடலை தூக்கி பிடித்து ஆற்றைக் கடப்பது போல் கடந்து சென்றனர். பின்னர் திண்டுக்கல்-திருச்சி சாலை ஓரம் உள்ள தங்களது மயானத்தில் வைத்து இறுதிச்சடங்கை செய்தனர்.
இந்த ரெயில்வே சுரங்கப்பாதையில் சாதாரண மழை பெய்தாலே அதிக அளவு தண்ணீர் தேங்கி போக்குவரத்து தடை ஏற்பட்டு விடும். திண்டுக்கல் மாவட்டத்தில் 3 நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து வருவதால் இடுப்பளவு தண்ணீர் தேங்கி உள்ளது.
ரெயில்வே நிர்வாகம் அலட்சியப் போக்கால் பொதுமக்கள் கோரிக்கை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. வேடசந்தூர், குஜிலியம்பாறை, எரியோடு, கோவிலூர், பாளையம், அய்யலூர் ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள பகுதிகளில் சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழை நீரை ரெயில்வே துறை மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நின்றாலும் அந்த தண்ணீர் பல நாட்கள் அகற்றப்படாமல் இருப்பதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






