என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் ஏரியை தூர்வாருவதாக ஊழல் நடைபெறுகிறது.
- கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவில்லை.
திமுக அரசு மீது அதன் கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். கடலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
* தேர்தல் வரும்போது மட்டும் முக்கியத்துவம் தரப்படும் கூட்டணி தலைவர்கள் தற்போது ஒதுக்கப்படுகின்றனர்.
* மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய துணை முதலமைச்சர் வரும்போது எனக்கு தகவல் அளிக்கவில்லை.
* அமைச்சர்கள் எங்களிடம் பேசினால் கவுரவ குறைச்சல் ஏற்பட்டுவிடுமா?
* தேர்தலின்போது அமைச்சர்கள் பேசுவர்; தேர்தல் முடிந்ததும் அமைச்சரின் உதவியாளர்கள்தான் பேசுவார்கள்.
* தமிழகத்தில் பல தவறுகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதலமைச்சரின் கவனத்திற்கு உண்மை தகவல்கள் செல்லவில்லை.
* அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் ஏரியை தூர்வாருவதாக ஊழல் நடைபெறுகிறது.
* கேள்வி கேட்டால் கூட்டணி கட்சி தலைவர்களை புறக்கணிப்பார்கள். தேர்தலின்போது மக்கள் எதிர்வினையாற்றுவார்கள்.
* திமுக ஆட்சியிலும் கூட அதிகாரிகள் தான்தோன்றி தனமாக செயல்படுகின்றனர்.
* மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
* மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடதமிழகம் என்ன பாவம் செய்தது.
* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,000 மட்டுமே நிவாரணம் வழங்குகின்றனர்.
* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு ஒரு நியாயம் மற்ற மாவட்ட மக்களுக்கு ஒரு நியாயம்.
* மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடதமிழக மாவட்ட மக்களுக்கு ரூ.2,000 பிச்சையா போடுகிறீர்கள்.
* கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவில்லை.
* சட்டசபையை குறைந்தது 10 நாட்களாவது நடத்துங்கள் என கதறினேன். ஆனால் 2 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டது என்று கூறினார்.
- இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
- மணப்பாக்கம் இல்லத்தில் இன்று பிற்பகல் வரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலன் இன்றி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று காலை மரணம் அடைந்தார்.
இதனைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் இருந்து அவரது உடல் பிற்பகல் 1 மணியளவில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டது. வழிநெடுகிலும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு காங்கிஸ் தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மணப்பாக்கம் இல்லத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மனைவி வரலட்சுமிக்கு ஆறுதல் தெரிவித்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய் குமார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் டெல்லியில் இருந்து இன்று சென்னை வர உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல, பல்வேறு மாநிலங்களில் உள்ள தலைவர்களும் வருகை தர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை மணப்பாக்கம் இல்லத்தில் இன்று பிற்பகல் வரை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு மணப்பாக்கம் மின் மயானத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் தகனம் செய்யப்படுகிறது.
- பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார்.
- அ.தி.மு.க. பொதுக்குழு 2-வது முறையாக கூடுகிறது.
சென்னை:
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி இருக்கிறது. அந்த வகையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி செயற்குழுவை கூட்டியது.இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் இன்று காலை 10.35 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமை தாங்குகிறார்.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார். கூட்டம் தொடங்கியதும் முதலில், அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவுக்கும், அரசியல் கட்சி தலைவர்கள் - முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து, மத்திய - மாநில அரசுகளை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. மேலும், 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வலுவான கூட்டணி அமைப்பதற்கான முழு அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூடியபோது, அ.தி.மு.க.வில் இரட்டைத் தலைவர்கள் இருந்தனர். அந்தக் கூட்டத்தில்தான் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதை எதிர்த்து, கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடுத்தும் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை. அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் செல்லும் என கோர்ட்டு அறிவித்ததால், கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அதன்பிறகு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூடியது.
கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட பிறகு, அ.தி.மு.க. பொதுக்குழு 2-வது முறையாக கூடுகிறது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடைபெறும் இன்றைய கூட்டத்துக்கு வரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அ.தி.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் வழங்கப்பட்ட அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை முறையாக அனைவரையும் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், கட்சி நிர்வாகிகள் அடங்கிய கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, சில இடங்களில் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
எனவே, அதுபோன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, பா.வளர்மதி, ஆர்.பி.உதயகுமார், வைகைச்செல்வன், டி.ஜெயக்குமார் ஆகியோரும் பேசுவார்கள் என தெரிகிறது.
கூட்டத்தில் மொத்தம் 20 தீர்மானங்கள் வரை நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. கூட்டத்தில் பங்கேற்கும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்களுக்கு ஏற்கனவே, அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த வகையில், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் 2,523 பேரும், சிறப்பு அழைப்பாளர்கள் 1,000 பேரும் கலந்துகொள்ள இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க. பொதுக்குழு - செயற்குழு கூட்டம் இதே மண்டபத்தில் நடைபெற்று வருவதால், இந்த முறையும் வரவேற்பு பேனர்கள், கொடி, தோரணம் என வானகரம் பகுதி முழுவதும் களைகட்டியுள்ளது.
- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.
- குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து 48 மணி நேரத்தில் தமிழக கடற்கரை நோக்கி நகரும்.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடதமிழகம், தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை காணப்பட்டது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில் மிக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த தாழ்வு பகுதியானது, தமிழக நிலப்பகுதியை கடந்து லட்சத்தீவு, மாலத்தீவு அருகே நகர்ந்தது. இதனால், நேற்றும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.
லட்சத்தீவு, மாலத்தீவு அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றும் அதே பகுதிகளில் நிலவியது. இது, இன்று மேற்கு திசையில் நகர்ந்து, வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது, மேலும் வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 2 நாட்களில் நகரும். இதன்காரணமாக, நாளை ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது.
இந்நிலையில் அந்தமான் கடல் பகுதியில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து 48 மணி நேரத்தில் தமிழக கடற்கரை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
- ஏரல் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலை மழை வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
- சாலைகளில் வெள்ளநீர் செல்வதால் மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருச்செந்தூர்:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் மிக அதிகமாக வெள்ளநீர் வந்து கொண்டிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல இடங்களில் சாலைகளில் வெள்ளநீர் செல்வதால் மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையும், நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும், ஏரல் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் போக்குவரத்தை சீர்செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மழை வெள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு 14 மற்றும் 15-ம் தேதி என 2 நாட்கள் வெளியூரில் இருந்து பொதுமக்கள் வரவேண்டாம் என தெரிவித்துள்ளார்.
- அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
- குட் பேட் அக்லி திரைப்படத்தில் யோகி பாபு நடித்துள்ளார்.
சென்னை:
கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டணி மிகப்பெரிய ஹிட் அடித்தது. அப்படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இதைத்தொடர்ந்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தில் நடிகர் பிரசன்னா, அர்ஜூன் தாஸ் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், இந்த வாழ்நாள் வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி அஜித் சார், கனவு முழுமை அடைந்தது. இன்று அஜித் சாரின் கடைசி நாள் படப்பிடிப்பு என பதிவிட்டுள்ளார்.
- பெரியாரின் பேரன் என்பதே எங்கள் அன்பின் நெருக்கத்துக்குப் போதுமானதாக இருந்தது.
- வயதைப் பொருட்படுத்தாமல் தான் ஈடுபட்ட பணிகளில் அயராது செயல்பட்டவர்.
சென்னை:
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கையாகவும், சமூக வலைதளத்திலும் இரங்கல் செய்தியாகவும் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கமல்ஹாசன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியதாவது:
என் அருமை நண்பர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் என்ற செய்தி மனதைத் தாக்குகிறது. பெரும் பாரம்பரியமுள்ள காங்கிரஸ் பேரியக்கத்தின் தூணாக இருந்தவர் சாய்ந்துவிட்டார்.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், என்பவை இருக்க, அவர் பெரியாரின் பேரன் என்பதே எங்கள் அன்பின் நெருக்கத்துக்குப் போதுமானதாக இருந்தது.
வயதைப் பொருட்படுத்தாமல் தான் ஈடுபட்ட பணிகளில் அயராது செயல்பட்டவர் அன்பு நண்பர் இளங்கோவன் அவர்கள். சட்டமன்ற விவாதங்கள் ஆனாலும் சரி, கட்சி அரசியல் கூட்டங்களானாலும் சரி, களைப்பும் தளர்ச்சியும் இல்லாமல் முழு மூச்சோடு செயல்பட்டவர்.
தகைமையுடைய தலைவரை இழந்து அதிர்ந்து நின்றிருக்கும் காங்கிரஸ் அன்பர்களுக்கும், ஆலமரமாகத் தங்களைக் காத்துவந்த மூத்தவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆறுதல்களை உளப்பூர்வமாகத் தெரிவிக்க விழைகிறேன்.
'நெருநல் உளனொருவன் இன்றில்லை' என்ற வள்ளுவ வாசகமே நெஞ்சில் மோதுகிறது என பதிவிட்டுள்ளார்.
- சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
- சிறை வளாகங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள புழல் மத்திய சிறை மற்றும், திருச்சி, மதுரை மத்திய சிறைகளுக்கு தொலைப்பேசி மூலம் மர்ம நபர் வெடிகுண்டு விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, சிறை வளாகங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், தொலைப்பேசியில் சிறைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கோவையில் குவிந்தனர்.
- ஈஷா யோக மைய வளாகத்தில் 1,00,008 அகல் விளக்குகளை ஏற்றி இருந்தனர்.
அமெரிக்காவில் இருந்து ஏழு மாதங்களுக்கு பிறகு இன்று (14/12/2024) தமிழ்நாடு திரும்பிய சத்குருவிற்கு, கோவை விமான நிலையம் முதல் ஈஷா யோக மையம் வரை வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்து நின்று பிரம்மாண்டமான வரவேற்பினை வழங்கினர்.
அமெரிக்காவில் இருக்கும் ஈஷா யோக மையத்திற்கு கடந்த மே மாதம் சென்ற சத்குரு ஏழு மாதங்களுக்குப் பிறகு இன்று தமிழ்நாடு திரும்பினார். அவரை வரவேற்பதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கோவையில் குவிந்தனர்.
சத்குரு மாலை 6 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு மட்டுமே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். மேலும், சத்குருவுக்கு மக்கள் ஆரத்தி காட்டி வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து கோவை விமான நிலையத்தில இருந்து ஈஷா யோக மையம் வரை பல்வேறு இடங்களில் மக்கள் திரளாக அணிவகுத்து நின்று மலர்களை தூவியும், விளக்குகளை ஏந்தியும், மேள தாளத்துடன் சத்குருவை வரவேற்றனர்.
குறிப்பாக அவிநாசி சாலையில் உள்ள நாகர்கோவில் ஆர்ய பவன் உணவகத்தில் திரண்டு இருந்த மக்கள் அவரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.
ரேஸ் கோர்ஸ் சாலையில் வள்ளி கும்மி நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காளம்பாளையம், மாதம்பட்டி, பூலுவப்பட்டி, ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம், செம்மேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ளூர் கிராம மக்கள் சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பினை வழங்கினர்.

ஈஷா யோக மையத்தின் நுழைவாயிலான மலைவாசலில், ஈஷாவை சுற்றியுள்ள பழங்குடி மக்கள் திரண்டு அவர்களின் பாரம்பரிய இசை, நடனம் மற்றும் வான வேடிக்கைகளுடன் கொண்டாட்டமாக சத்குருவை வரவேற்றனர்.
மேலும் ஆதியோகியில் 10,000-க்கும் அதிகமானோர் திரண்டு இருந்தனர். அவர்கள் சத்குருவை வரவேற்கும் பொருட்டு ஆதியோகி மற்றும் ஈஷா யோக மைய வளாகத்தில் 1,00,008 அகல் விளக்குகளை ஏற்றி இருந்தனர்.
ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் தேவாரம் பாடினர். மேலும் ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரமவாசிகள் பாரம்பரிய இசை மற்றும் நடனங்களுடன் சத்குருவை வரவேற்றனர். ஆதியோகி முன்பு திரண்டு இருந்த மக்கள் முன்பு சத்குரு உரையாற்றினார்.
- ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார்.
- அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் நேரில் வந்து ஈவிகேஎஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கையாகவும், சமூக வலைதளத்திலும் இரங்கல் செய்தியாகவும் வெளியிட்டுள்ளனர்.
அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் நேரில் வந்து ஈவிகேஎஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு த.வெ.க சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
- ரெயில் நிலையத்தில் மழை நீர் தேங்கி இருப்பதன் காரணமாக 5 ரெயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி- நெல்லை, தூத்துக்குடி- வாஞ்சி மணியாச்சி உள்ளிட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் மழை நீர் தேங்கி இருப்பதன் காரணமாக 5 ரெயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, மழை பாதிப்பு காரணமாக தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய 4 ரெயில்கள் மீளவிட்டான் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி-மைசூரு விரைவு ரெயில் (16235) மாலை 05.15க்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும்.
சென்னை செல்லும் முத்துநகர் விரைவு ரயில்(12694) இரவு 08.25க்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும்.
தூத்துக்குடி-பாலக்காடு விரைவு ரயில் (16791) இரவு 10 மணிக்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும்.
தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் விரைவு ரயில் (16766) இரவு 10.50 மணிக்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், தூத்துக்குடி- நெல்லை, தூத்துக்குடி- வாஞ்சி மணியாச்சி உள்ளிட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- புதுச்சத்திரம் இருந்து திருநின்றவூர் வழியாக செல்லும் வாகனங்கள் பூந்தமல்லி சென்று செல்கின்றனர்.
- திருவள்ளூர் மாவட்டத்தில் 581 ஏரிகள் உள்ளன.
திருவள்ளூர்:
வேலுார் மாவட்டத்தில், தக்கோலம் வழியாக வரும் கல்லாறு, திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு என இரு ஆறுகளாக பிரிகிறது.
கேசாவரம் அணைக் கட்டில் நீர் நிரம்பினால் நேரடியாக கொசஸ்தலை ஆற்றில், செல்லும் நீர் பூண்டி ஏரிக்கு செல்கிறது.
இந்த அணைக்கட்டில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையில் தற்போது அணைக்கட்டில் மழைநீர் நிரம்பி நீர் வெளியேறி வருவதால் கொசஸ்தலை, கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதேபோல் இந்த அணைக்கட்டின் இன்னொருபுறம் அமைக்கப்பட்ட 16 ஷட்டர்கள் வழியாக செல்லும் நீர் கூவம் ஆறாக மாறி பேரம்பாக்கம், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம் வழியாக ஜமீன் கொரட்டூர், பருத்திப்பட்டு, மதுரவாயல், கோயம்பேடு வழியாக 75 கிலோ மீட்டர் சென்று நேப்பியர் பாலம் அருகே வங்க கடலில் கலக்கும்.
இந்நிலையில் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை புதுச்சத்திரம் கூவம் ஆற்றின் நடுவே உள்ள புதுச்சத்திரம் தரைப்பாலம் முழ்கி நீர் செல்வதால் புதுச்சத்திரம் இருந்து திருநின்றவூர் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சத்திரம் இருந்து திருநின்றவூர் வழியாக செல்லும் வாகனங்கள் பூந்தமல்லி சென்று செல்கின்றனர். இதேபோல் திருநின்றவூரில் இருந்து புதுச்சத்திரம் வரும் வாகனங்கள் திருவள்ளுவர் வந்து செல்கின்றன.
வாகனங்கள் 20 கி.மீ, துாரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 581 ஏரிகள் உள்ளன. இதில் 311 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. மேலும் 75 சதவீதமும், 185 ஏரிகள் 50 சதவீதமும், 67 ஏரிகள் 25 சதவீதம் 18 ஏரிகள் நிரம்பியுள்ளன.






