என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அனைத்து மதத்தினரையும் சமமாக பார்த்தவர் எம்.ஜி.ஆர்.
- பாஜகவின் கொள்கையே மதத்தால் பிரிவினையை தூண்டுவதுதான்.
அ.தி.மு.க. நிறுவனத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 37-வது நினைவு நாளான இன்று சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் மோடியை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் எம்.ஜி.ஆரை யாருடனும் ஒப்பிட முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக பேசினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இதை எந்தநிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவருடன் ஒப்பிடவே முடியாது. எம்ஜிஆரையும் மோடியையும் ஒப்பிடுவது மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம். அனைத்து மதத்தினரையும் சமமாக பார்த்தவர் எம்ஜிஆர். பாஜகவின் கொள்கையே மதத்தால் பிரிவினையை தூண்டுவதுதான். அவருடன் மோடியை ஒப்பிடலாமா?
என ஜெயக்குமார் கூறினார்.
- 2008 ஆம் ஆண்டு 495 கோடி ருபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது
- பறக்கும் ரெயில் சேவையானது தற்போது சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்படுகிறது.
வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் விரிவாக்க திட்டம் 2008-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் 2025, மார்ச் முதல் இந்த தடத்தில் ரெயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2008 ஆம் ஆண்டு 495 கோடி ருபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்த விரிவாக்க திட்டத்தின் செலவு தற்போது ரூ.734 கோடியாக உயர்ந்துள்ளது. பறக்கும் ரெயில் சேவையானது தற்போது சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்படுகிறது.
இந்நிலையத்தில் விரிவாக்க திட்டம் நிலம் நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை காரணமாக இடையில் முடங்கியது. நீதிமன்ற தலையீட்டின்பின் 2022 இல் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் மேம்பாலம் இணைப்பு பணிகள் முடிந்து ரெயில் பாதை போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இறுதிக்கட்ட பணிகள் முடிந்ததும் மார்ச் 2025 மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த சேவை தொடங்கும்பட்சத்தில் சென்னையில் சுமார் 5 லட்சம் மக்கள் பயனடைவர் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலும் வெகுவாக குறையும்.
- சாதிய ஆதிக்க சக்திகளுக்கு சமாதி கட்டிய நபராக திகழ்ந்தவர் தந்தை பெரியார்.
- மீண்டும் பெரியாரின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.
சென்னை:
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சாதிய ஆதிக்க சக்திகளுக்கு சமாதி கட்டிய நபராக திகழ்ந்தவர் தந்தை பெரியார். சாதிய ஆதிக்கத்திற்கு எதிராக தனது வாழ்நாள் முழுவதும் போராட்டம் நடத்தியவர். பகுத்தறிவு சிந்தனையை பரப்பி பெண்ணடிமை கூடாது என மறுத்தவர்.
பெரியாரின் வழிவந்த திராவிடர் இயக்கங்கள் தான் அரை நூற்றாண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது. ஆனாலும் தமிழகத்தில் சாதிய ஆணவ கொலைகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. சாதிய கொலைகள் அதிக அளவில் நடைபெறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. சாதிய உணர்வுகளும் சாதிய அணிசேர்க்கையும் கொடி கட்டி பறக்கின்ற மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தலித்துகள் மீதான தாக்குதலும் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது.அன்றாடம் தலித் மக்களுக்கு கொடுமைகளை இழைக்கின்ற மாநிலமாக தமிழகம் உள்ளது.
பெரியாரின் கொள்கைகளை திராவிட கட்சிகள் முழுமையாக பின்பற்றவில்லை. அவரது கருத்தில் இருந்து திராவிட கட்சிகள் நழுவி விட்டனர். மீண்டும் பெரியாரின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் கூறினார்.
- திருச்சி ஜங்ஷன் அருகில் அமைந்துள்ள மற்றொரு பாலமும் அகற்றப்பட்டுவிட்டது.
- கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அனைவரும் 3 முதல் 5 கிலோ மீட்டர் வரை சுற்றிச் செல்லும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருச்சி மாநகரின் மையப் பகுதியில் உள்ள மாரீஸ் பாலத்தை அகற்றுவதற்காக, கடந்த மார்ச் மாதம் முதல் அப்பாலத்தின் மீதான போக்குவரத்து நிறுத்தப்பட்டு இன்று வரை அந்தப் பாலம் அகற்றப்படாமல் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதே போல், திருச்சி ஜங்ஷன் அருகில் அமைந்துள்ள மற்றொரு பாலமும் அகற்றப்பட்டுவிட்டது. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அனைவரும் 3 முதல் 5 கிலோ மீட்டர் வரை சுற்றிச் செல்லும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தி.மு.க. அரசைக் கண்டித்தும்; நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், அ.தி.மு.க. திருச்சி மாநகர் மாவட்டத்தின் சார்பில், வருகிற 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில், சிந்தாமணி அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன் குடும்பத்தில் இருந்து அவரது மகன் சஞ்சயை போட்டியிட வைக்க திட்டமிட்டார்கள்.
- ஈரோடு கிழக்கு தொகுதியின் நிலவரத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் டெல்லி மேலிடத்துக்கும் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
மூத்த அரசியல்வாதியான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1948-ம் ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவர் ஈ.வி.கே.சம்பத்தின் மகனும், பெரியார் ஈ.வெ.ராமசாமியின் சகோதரர் கிருஷ்ணசாமியின் பேரனும் ஆவார். இவருக்கு மனைவியும், சஞ்சய் மற்றும் திருமகன் என இரண்டு மகன்கள்.
அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன்பின்னர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த ஆட்சியில் மத்திய அரசின் ஜவுளித் துறை அமைச்சராக இருந்தார். இதனை தொடர்ந்து 2009-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு 49,336 வாக்குகள் வித்தியாசத்தில் ம.தி.மு.க. வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அதனை தொடர்ந்து 2014-ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதனிடையே, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இளங்கோவனின் மகனும் தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளருமான திருமகன் ஈ.வெ.ரா போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியின் சார்பில் த.மா.கா. இளைஞரணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா போட்டியிட்டார். அந்த தேர்தலில் 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். 41 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோட்டில் காங்கிரஸ் வெற்றிபெற்று, பெரியாரின் கொள்ளுப்பேரன் திருமகன் ஈவெரா சட்டப்பேரவைக்கு சென்றார். இருப்பினும் மாரடைப்பு காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமகன் காலமானார்.

இதையடுத்து நடைபெற்ற இடைதேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து கட்சி பணியிலும், தொகுதி பணியிலும் ஈடுபட்டு வந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 14-ந்தேதி காலமானார்.
இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவித்து தேர்தல் ஆணையத்துக்கு சட்டசபை செயலகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஜனவரி அல்லது பிப்ரவரியில் டெல்லிக்கு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலோடு ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரே ஆட்சியில் மூன்றாவது முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் வாக்களிக்க போகின்றனர்.
இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கு கொடுப்பதை விட தி.மு.க.வே போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின் பேரில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார். அப்போது தலைவர் என்ற ரீதியில் தி.மு.க.- காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பணியாற்றினார்கள்.
ஆனால் இந்த தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் தரப்பில் பலமான வேட்பாளர்கள் இல்லை. ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன் குடும்பத்தில் இருந்து அவரது மகன் சஞ்சயை போட்டியிட வைக்க திட்டமிட்டார்கள். ஆனால் அவர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறி விட்டார். அத்துடன் தனது முடிவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தெரிவித்து விட்டார்.
இந்த சூழ்நிலையில் காங்கிரசில் இருந்து வேறு நபர்களை தேர்வு செய்வதிலும் பிரச்சனை உள்ளது. இடைத்தேர்தலை சந்திக்க செலவு அதிகமாகும். அதற்கு தகுதியானவர்கள் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே தி.மு.க.வுக்கு விட்டுக் கொடுத்து விடலாம் என்ற முடிவுக்கு காங்கிரஸ் வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியின் நிலவரத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் டெல்லி மேலிடத்துக்கும் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ் தாத்தா, அப்பா மாதிரி தானும் அரசியலுக்கு வருவேன் என ஈ.வி.கே.எஸ் பேத்தி சமணா ஈவெரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ஈவிகேஎஸ் இளங்கோவனின் பேத்தியும், திருமகனின் மகளுமான சமணா ஈ.வெ.ரா. கூறியதாவது:-
என் அப்பா இறந்து ஒரு வருடம்தான் ஆகுது. அந்த வலியும் வேதனையும் ஆறுவதற்குள்ளேயே தாத்தா எங்களைவிட்டுப் போனது பேரிழப்பு. அப்பாவோட மரணத்தால் அவர் ரொம்பவே பாதிக்கப்பட்டார். அந்த வலியை எங்கக்கிட்ட காட்டிக்கொள்ளாமல் தைரியம், நம்பிக்கை கொடுத்து இருக்கிறார்.
தாத்தாக்கிட்ட ரொம்ப பிடித்த விஷயமே அவரோட தைரியம்தான். தாத்தாவைப் பார்க்க வீட்டுக்கு அரசியல்வாதிகள் வந்தாங்கன்னா, சின்ன வயசுல நான் பயப்படுவேன். அந்த பயத்தைப் போக்கணும்ங்குறதுக்காக என்னை மடியில உட்கார வச்சுப் பேசுவார். அதனாலேயே, எனக்கும் அரசியல் மீது ஒருவித ஈர்ப்பு வந்துடுச்சு. அப்பாவோட மறைவுக்குப் பிறகு தாத்தா என்னிடம் அதிகமாகப் பேச ஆரம்பித்தார். அவர்க்கிட்ட அரசியலுக்கு வரப்போகிற என்னோட ஆர்வத்தை வெளிப்படுத்தினபோது மிகவும் ஆச்சர்யப்பட்டார்.
என்னிடமிருந்து அப்படிப்பட்ட ஆர்வத்தை அவர் எதிர்பார்க்கவே இல்லை. விளையாட்டுல சாதிச்சமாதிரி, அரசியலிலும் சாதிப்பேன்-னு சொன்னார். அரசியலிலும் துணிவு ரொம்ப முக்கியம். அதேமாதிரி, மக்களை அணுகுவதில் கனிவு, பணிவு ரொம்ப முக்கியம்-னு சொன்னார். அரசியலில் எனக்கு பிரியங்கா காந்தி மேடம் தான் இன்ஸ்பிரேஷன். ஒரு பெண்ணா ரொம்ப துணிவா இருக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். மக்களுக்கான அவங்களோட ஓயாத களப்பணியும், தெளிவான பேச்சுகளும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்றார்.
குதிரையேற்று வீராங்கனையான சமணா ஈ.வெ.ரா. சமீபத்தில் தென்னிந்திய அளவில் நடைபெற்ற குதிரையேற்ற போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றார். இவருடைய தாய் காஸ்ட்யூம் டிசைனர் பூர்ணிமா ராமசாமி ஆவார். இவர் பாலா இயக்கத்தில் வெளியான 'பரதேசி' படத்திற்காக தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மூத்த குடிமக்கள் சம்பந்தமான தகவலை மறைப்பதன் மூலம் அவர்களின் கோபத்தையும் வடித்து விட முடியாது.
- மூத்த குடிமக்கள் எத்தனை முறை பயணம் செய்தனர் என்பதையே தர மறுக்கிற ரெயில்வே அமைச்சகம் பயணச்சலுகையை திருப்பித் தந்தவர்களின் விபரத்தை எங்கிருந்து எடுத்தது?
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நான் பாராளுமன்றத்தில் 2021 - 2024 மற்றும் 2025 நிதியாண்டின் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் எத்தனை முறை மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்துள்ளார்கள், மூத்த குடிமக்களுக்கான ரெயில் கட்டண சலுகையை திரும்ப பெற்றதன் மூலம் இதே காலகட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எவ்வளவு தொகை சேமிப்பாக கிடைத்துள்ளது என்ற கேள்வியை (231/13.12.2024) எழுப்பி இருந்தேன். அதற்கு ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.
அந்த பதிலில் மூத்த குடிமக்கள் எத்தனை முறை பயணம் செய்துள்ளார்கள் என்ற விவரம் தரப்படவில்லை. மாறாக 2021 நிதியாண்டில் துவங்கி 2024 அக்டோபர் வரை மொத்த பயணிகள் 2230 கோடி முறை பயணித்துள்ளனர் என்று பதில் அளித்துள்ளார். 2022 - 23 ஆம் ஆண்டில் பயணிகளின் கட்டண சலுகையாக 57 ஆயிரம் கோடி ரூபாய் தரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது சராசரியாக ரெயில்வே கட்டணத்தில் 46 சதவீதம் என்றும் தெரிவித்துள்ளார்.
கேள்வியின் நோக்கமே மூத்த குடிமக்கள் செய்கிற ரெயில் பயணங்களின் விவரங்களை பெறுவதும், கோவிட் காரணத்தை பயன்படுத்தி திரும்ப பெறப்பட்ட மூத்த குடிமக்களின் ரெயில் கட்டண சலுகைகளின் காரணமாக எவ்வளவு தொகை அரசுக்கு மிச்சமாகி இருக்கிறது என்பதை அறிவதற்குதான்.
ஆனால் அமைச்சரோ வேண்டுமென்றே அந்தக் கேள்விக்கு பதில் அளிக்காமல் மொத்த பயணிகள் எவ்வளவு, மொத்த மானியம் எவ்வளவு என்று கணக்குத் தந்துள்ளார். எல்லோருக்குமான மானியத்தைக் கடந்துதான் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. ஆகவே அரசு இந்த கேள்விக்கான பதிலை தவிர்ப்பதன் மூலம் மூத்த குடிமக்களின் கட்டணச் சலுகை ரத்தானதால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எவ்வளவு என்கிற தகவலை மறைத்துள்ளது.
சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தை நிறுத்த முடியாது; மூத்த குடிமக்கள் சம்பந்தமான தகவலை மறைப்பதன் மூலம் அவர்களின் கோபத்தையும் வடித்து விட முடியாது.
அதே நேரம், இம்மாதம் வெளிவந்துள்ள ஒன்றிய அரசின் "நியூ இந்தியா சமாச்சார்" இதழில் மூத்த குடிமக்கள் 63 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாங்களாகவே முன் வந்து ரெயில் பயண சலுகையை விட்டுக்கொடுத்துள்ளனர் என்று கூறியுள்ளனர்.
மூத்த குடிமக்கள் எத்தனை முறை பயணம் செய்தனர் என்பதையே தர மறுக்கிற ரெயில்வே அமைச்சகம் பயணச்சலுகையை திருப்பித் தந்தவர்களின் விபரத்தை எங்கிருந்து எடுத்தது?
அதுமட்டுமல்ல, பறிக்கப்பட்டதை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்? இந்த 63 லட்சம் பேர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- தங்கராஜ் பிரபல வங்கியில், வங்கிக்கணக்கு வைத்துள்ளார்.
- வங்கி பெயரில் வரும் எந்தவிதமான செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் தங்கராஜ். தனியார் நிதி நிறுவன உரிமையாளர். இவர் பிரபல வங்கியில், வங்கிக்கணக்கு வைத்துள்ளார். அவருக்கு அடையாளம் தெரியாத செல்போன் எண்ணில் இருந்து, வங்கி கணக்கு வைத்துள்ள வங்கியின் லோகோ பெயர் உள்ளிட்டவையுடன் வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி வந்துள்ளது.
அதில், உங்களது வங்கி கணக்கு கே.ஒய்.சி. அப்டேட் செய்ய வேண்டும். இன்று கடைசிநாள். அப்டேட் செய்யவில்லை என்றால் உங்கள் வங்கி கணக்கு பிளாக் செய்யப்படும். உடனடியாக கே.ஒய்.சி. அப்டேட் செய்யுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வங்கியில் இருந்து தான் குறுஞ்செய்தி வந்துள்ளது என நம்பி தங்கராஜ், வாட்ஸ்அப்பில் வந்த செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து அதில் தனது பெயர், பிறந்த தேதியை பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவருடைய வங்கிக்கணக்கில் இருந்து 4 பரிவர்த்தனைகளில் ரூ.7 லட்சத்து 47 ஆயிரத்து 799 எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரை பெற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, பொதுமக்கள் யாரும் வங்கியின் பெயரில் வாட்ஸ்அப் அல்லது வேறு வகையில் ரிவார்ட் பாயிண்ட் செய்ய கடைசி நாள் என்றோ அல்லது வங்கி கணக்கு கே.ஒய்.சி. விவரங்களை அப்டேட் செய்ய சொல்லியோ வரும் செயலிகளை பதிவிறக்கம் செய்தால் உங்களது வங்கிக்கணக்கில் உங்கள் அனுமதியில்லாமல் மோசடி நபர்களால் பணம் எடுக்கப்படும். எனவே வங்கி பெயரில் வரும் எந்தவிதமான செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.
- தந்தை பெரியாரின் 51வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
- முதல்வர் மு.க. ஸ்டாலின் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் 51வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் இன்று காலை முதலே தந்தை பெரியாருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், த.வெ.க. தலைவர் விஜய் தந்தை பெரியார் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்."
"அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் ஒற்றை யானையால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
- பந்தலூர் பகுதியில் கூடுதல் தலைமை வனபாதுகாவலர் நாகநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் சேரம்பாடி, பிதர்காடு வனச்சரகத்தில் சேரங்கோடு டேன்டீ, சின்கோனா, நர்சரி, படச்சேரி, சேரங்கோடு பஜார், தட்டாம்பாறை, அய்யன்கொல்லி, மூலைக்கடை, சேரம்பாடி டேன்டீ உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இந்த பகுதிகளில் 35-க்கும் மேற்பட்ட வீடுகளையும், விளைநிலங்களையும் புல்லட் என்ற ஒற்றை காட்டு யானை சேதப்படுத்தி வருகிறது. அத்துடன் கண்ணில் பட்ட வாகனங்களை தாக்குவது, பொதுமக்களை ஆக்ரோஷமாக துரத்துகிறது. இப்படி குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் ஒற்றை யானையால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
புல்லட் யானையை வனத்துறையினர் 75 வனப்பணியாளர்கள் மூலம் 5 குழுக்களாக பிரிந்து டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கின்றனர். கும்கி யானைகள் உதவியுடனும் அடிக்கடி ரோந்து சென்று யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். புல்லட் யானை இருக்கும் இடத்தை கண்டறிந்து, அந்த யானை கும்கி யானைகள் உதவியுடன் அடர்ந்த வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புல்லட் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தெப்பக்காடு போன்ற யானைகள் முகாம்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிளன்ராக் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் புல்லட் யானையை சேரம்பாடி டேன்டீ தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளை குறி வைத்து தாக்கி சேதப்படுத்தி வருகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் பந்தலூர் பகுதியில் கூடுதல் தலைமை வனபாதுகாவலர் நாகநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.
அத்துடன் காட்டு யானைகள் குடியிருப்புக்குள் நுழையாமல் இருக்க மதம் பிடித்த யானைகளின் சாணத்தை கரைத்து வீட்டு முன்பு தெளிக்கவும், மிளகாய் தூளை வேப்ப எண்ணெயில் கலந்து துணிகளில் நனைத்து அதனை வீடுகள் முன்பு கட்டவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து வனத்துறையினர் சேரம்பாடி டேன்டீ பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் வீடுகள் மற்றும் கடைகள் முன்புள்ள கதவுகளில் மிளகாய் கரைசலில் ஊற வைத்த துணிகளை தோரணங்களாக கட்டி வருகின்றனர்.
அத்துடன் வீட்டின் முன்பு மதம் பிடித்த யானை சாணத்தை கரைத்து தெளிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மதம்பிடித்த ஆண் யானையின் நடமாட்டம் இருக்கும் பகுதிகளை மற்றொரு ஆண் யானை தவிர்க்கும்.
இதனால் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் தற்போது மஸ்தில் இருக்கும் யானைகளின் சாணத்தை சேகரித்து பல பகுதிகளில் தெளித்து வருகிறோம். யானை சாணத்தை நெருப்பில் போட்டு புகை உண்டாக்கப்படுகிறது.
வீடுகளின் கதவுகள், ஜன்னல்களில் மிளகாய் தூள் தடவப்பட்ட துணிகளால் தோரணம் கட்டியுள்ளோம். இதனால் அந்த யானை ஊருக்குள் நுழையாமல் இருக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வனத்துறையின் இந்த முயற்சி பலன் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- வாகன ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை:
மருத்துவக் கழிவுகள் கொட்டுதல், சட்டவிரோதமாக விலங்குகள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுத்திட கோவை மாவட்டத்தில் உள்ள 14 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டின் எல்லைக்குள் பயோ மெடிக்கல் கழிவுகள் கொட்டுதல், சட்டவிரோதமாக விலங்குகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுத்திட கோவை மாவட்டத்தில் உள்ள 14 சோதனைச் சாவடிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் போக்குவரத்து மற்றும் பயோமெடிக்கல் கழிவுகள் கொட்டப்படுவதை கண்காணித்திடவும், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுத்திடவும், சப்-கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர்கள் தங்களது கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து சுழற்சி முறையில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள், தரகர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் தமிழக எல்லையில் இருந்து விலங்குகள் கொண்டு செல்லும் போது, உரிய மருத்துவரின் சான்று பெற்றும், உரிய வழிமுறைகளைப் பின்பற்றியும் விலங்குகள் வாகனம் மூலம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க சப்-கலெக்டர், வருவாய் கோட்டாட்சியளர்கள் மற்றும் தாசில்தார்கள் திடீர் தணிக்கை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தை நெருங்கியது.
- மேலும் நகர்ந்து தற்போது வடதமிழக கடலோர பகுதிகளை நெருங்கியது.
சென்னை:
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தை நெருங்கியது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று அதிகாலை சென்னைக்கு கிழக்கே 500 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடல் பகுதிக்கு இடையே நிலை கொண்டிருந்தது. அது மேலும் நகர்ந்து தற்போது வடதமிழக கடலோர பகுதிகளை நெருங்கியது.
இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் வருகிற 26-ந்தேதி காலை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அதிகாலையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு குளிர் காற்றே அதிக அளவில் வருவதால் தமிழகத்தில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. ஆனாலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால் இன்று முதல் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு நோக்கி நகர்ந்து வலுவிழந்து வருகிற 26-ந்தேதி டெல்டா மாவட்டங்களுக்கு அருகே கரையை கடந்து தமிழக நிலப்பரப்பு வழியாக அரபிக்கடலுக்கு செல்லும்.
இதன் காரணமாக வருகிற 26 மற்றும் 27-ந்தேதிகளில் தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வருகிற 28-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம், அண்ணாநகர், குரும்பபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் விவசாயக் கூலித்தொழிலாளர்களாக உள்ளனர். இலவச வீட்டுமனை பட்டா கேட்டு சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் ஏற்கனவே பலமுறை மனு அளித்திருந்தனர்.
ஆனால் பல ஆண்டுகளாகியும் பட்டா வழங்காததால் அப்பகுதி மக்கள் ஆத்திரத்தில் இருந்தனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் தொப்பம்பாளையம், கணபதி நகர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைக்க பொருட்களுடன் நேற்று திரண்டு வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து பவானிசாகர் போலீசார் சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் சமாதானம் அடையாமல் தங்களுக்கு பிடித்த இடத்தை பிடித்து குச்சிகளை நடும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் டி.எஸ்.பி சரவணன், சத்தியமங்கலம் தாசில்தார் சக்திவேல் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள் கூறும்போது, வருமானத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதால் அரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்து இருந்தோம்.
சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று எப்போது கேட்டாலும் இடம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம் என்று கூறி அனுப்பிவிடுகின்றனர். உடனடியாக எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்றனர்.
விண்ணப்பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட குரும்பாளையத்தில் அரசுக்கு சொந்தமான நத்தம் நிலத்தை அளவீடு செய்து, தகுதியானவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் உறுதி அளிக்கவே பொதுமக்கள் அதனை ஏற்று அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.






