என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கடம்பூர் வனப்பகுதியில் குன்றி சாலை மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது.
- குன்றி பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
கடம்பூர் வனப்பகுதியில் குன்றி சாலை மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது. கடம்பூர் வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் அவ்வப்போது கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் குன்றி செல்லும் வழியில் கடந்த 2 நாட்களாக ஒற்றை யானை சாலையில் உலா வந்தபடி வாகனங்களை துரத்தி வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர். யானை பார்ப்பதற்கு மிகவும் பெரிய தோற்றத்தில் பெரிய தந்தங்களுடன் இருப்பதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தற்போது யானைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக திம்பம், ஆசனூர், குன்றி போன்ற வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக உணவு ஏதாவது உள்ளதா என காலையில் வரும் வாகனங்களை நிறுத்தி பார்த்து வருகிறது.
தற்போது குன்றி சாலையில் அடர்ந்த வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று கடந்த 2 நாட்களுக்கும் மேலாக அந்தப் பகுதியில் முகாமிட்டு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. எனவே குன்றி பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் வாகனங்களை எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் நிறுத்த வேண்டாம் என்றனர்.
இந்நிலையில் சாலை ஓரமாக சுற்றி வரும் ஒற்றை யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மனசாட்சியற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலினையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
- பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியிருப்பதற்கு வெட்கப்படுங்கள் ஸ்டாலின்.
சென்னை:
அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவி.னர் கைது செய்ததற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தச் சென்ற, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகளை, வலுக்கட்டாயமாகக் கைது செய்திருக்கிறது காவல்துறை.
குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்டிருக்கிறார்கள். ஒரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து தவறியிருக்கிறது திமுக. இது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதச் செயல்பாடும் ஆகும். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு பொறுப்பு.
திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்க, இத்தனை கீழ்த்தரமான, மனசாட்சியற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலினையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியிருப்பதற்கு வெட்கப்படுங்கள் ஸ்டாலின் என்று கூறியுள்ளார்.
- குகேஷூக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
- குகேஷை நேரில் அழைத்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு தெரிவித்திருந்தார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் குகேஷ், சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார். இதன்மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து குகேஷூக்கு ஜனாதிபதி, பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து சென்னை திரும்பிய குகேஷூக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது குகேஷூக்கு 5 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி இருந்தார்.
இந்த நிலையில், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷை தனது வீட்டிற்கு நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.மேலும் இச்சந்திப்பின்போது குகேஷிற்கு புத்தகம் ஒன்றையும் பரிசாக அவர் வழங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை குகேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக குகேஷை நேரில் அழைத்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
- மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
நாகப்பட்டினம்:
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுனாமி பேரலை தாக்கியது.
இதனால் கடலோர கிராமங்கள் முற்றிலும் பாதிக்கபட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் நாகை மாவட்டத்தில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு வேளாங்கண்ணி கடற்கரையில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் மீனவர்கள், வணிகர்கள், பொதுமக்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டைய அணிந்து அமைதி பேரணியாக 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றனர்.
பின்னர் சுனாமியால் உயிர் இழந்தவர்களை அடக்கம் செய்த நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மும்மதத்தினரும் உயிரிழந்ததின் நினைவாக அங்கு பகவத் கீதை, குரான், விவிலியம் உள்ளிட்டவைகளில் இருந்து வாசகங்களை அந்தந்த மதத்தினர் வாசித்து ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர்.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அவர்களுக்கு பிடித்த காரம், இனிப்பு, குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவு வகைகளை வைத்து மாலை அணிவித்து மலர் தூவி அங்கு கண்ணீர் அஞ்சலி செய்து வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள 25 மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லாமல் அந்தந்த மீனவர் கிராமங்களில் உள்ள நினைவு ஸ்தூபியில் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் அடைக்கப்பட்டுள்ளது.
- தமிழக பா.ஜ.க. சார்பில் இன்று நடைபெற இருந்த வாஜ்பாய் பிறந்தநாள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடூரத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த நிர்வாகிகளுக்கு பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தியது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுக்கு பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தியதின் பேரில் தமிழக பா.ஜ.க. சார்பில் இன்று நடைபெற இருந்த வாஜ்பாய் பிறந்தநாள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தமிழக பா.ஜ.க.. சார்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்க நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்வதை கண்டித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் ஒரு பெண் பாதிக்கப்பட்டு இருக்கிறார். ஒரு பெண் மட்டுமல்ல தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதற்கு போராடி தான் வருவேன். அதாவது போராட்டத்திற்கு இங்க வந்த போலீசார் அங்கு பாதுகாப்பு கொடுத்து இருக்கலாம். பாதுகாப்பு கொடுத்து இருந்தால் பெண் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டாங்களே. இது என்ன அடக்குமுறையா... நாங்கள் எல்லாம் தீவிரவாதியா? என்றார்.
- தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- மில்லில் இருந்த எந்திரங்கள், பஞ்சு நூல்கள் சேதமடைந்தன.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் தீத்தாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 50). இவருக்கு சொந்தமான நூல் மில் சேரன் நகர் பகுதியில் உள்ளது. இந்த மில் 2 ஷிப்டுகளாக இயங்கி வருகிறது. 60 பேர் வேலை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று காலை மின்கசிவு காரணமாக திடீரென பில்டர் பகுதியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து வெள்ள கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்குள் வராததால் காங்கயத்தில் இருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது.
மேலும் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இருப்பினும் தீயில் மில்லில் இருந்த எந்திரங்கள், பஞ்சு நூல்கள் சேதமடைந்தன. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
- இதே நபர் நீண்டகாலமாகப் பல மாணவிகளை பாலியல் ரீதியாக அச்சுறுத்தி வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது.
- குற்றவாளிக்கு உடனடியாகக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.
சென்னை :
தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிகழ்வு நெஞ்சைப் பதற வைக்கிறது. இதே நபர் நீண்டகாலமாகப் பல மாணவிகளை பாலியல் ரீதியாக அச்சுறுத்தி வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த குற்றவாளிக்கு உடனடியாகக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.
பெண்களுக்கெதிரான எந்த வகை குற்றமாக இருப்பினும் அதைப் பொறுத்துக்கொண்டு இருக்காமல், துணிச்சலுடன் வெளிக்கொண்டு வருவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தித் தருவதும், அனைத்து தளங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்று கூறியுள்ளார்.
- அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான போர்க்களத்தில் முன்னின்று வாழ்ந்துகாட்டிக்கொண்டிருக்கிறார் ஐயா.
- சிறந்த சமூக சீர்திருத்தவாதியான ஐயா நல்லக்கண்ணு, நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், மக்கள் பணிகள் தொடர வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நூறாண்டு காணும் தொண்டு.
எல்லோரும் சமமென்னும் காலம் வரவேண்டும்; நல்லோர் பெரியர் என்னும் காலம் வரவேண்டும் என்பது பாரதியின் கனவு. அதன் நனவான வடிவமே மாபெரும் தோழர் நல்லகண்ணு அவர்களின் வாழ்வு.
சமூகத்தில் சமத்துவம் நிலவவேண்டும் என்பதற்காகவே தன் வாழ்நாள் மொத்தத்தையும் அர்ப்பணித்து, அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான போர்க்களத்தில் முன்னின்று வாழ்ந்துகாட்டிக்கொண்டிருக்கிறார் ஐயா.
இப்படி ஒருவர் இருக்க இயலுமா என்று வியக்கும் வண்ணம் தன் வாழ்வை அமைத்துக்கொண்ட பெருந்தகை தோழர் நல்லகண்ணு எளியோரின் வாழ்த்துப்படி நூறாண்டு காண்கிறார்.
அவருக்கு என் வாழ்த்து என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இன்றைய தினம், நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், ஐயா நல்லகண்ணுக்கு, இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறந்த சமூக சீர்திருத்தவாதியான ஐயா நல்லக்கண்ணு, நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தமது மக்கள் பணிகள் தொடர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- பல வழக்குகளில் தொடர்புடைய ஞானசேகரன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் எப்படி அனுமதிக்கப்பட்டான்?
- தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சமுதாயத்தை சீரழிக்கும், அனைத்து விதமான குற்றச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக ஆளும் தி.மு.க திகழ்கிறது என்பதற்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தேறிய பாலியல் சம்பவமே சான்றாக அமைந்துள்ளது.
மாணவியை சீரழித்தாக கைதான சரித்திர பதிவேடு குற்றவாளி ஞானசேகரன் என்ற காமக்கொடூரன் ,திமுக உறுப்பினர் என்று செய்திகள் வருகின்றன. துணை முதல்வர், மருத்துவத்துறை அமைச்சர் ஆகியோருடன் எடுத்த புகைப்படங்கள் செய்திகளில் வருகின்றன. சமூக வலைதளங்களிலும் வலம் வருகின்றன.
தமிழ்நாட்டின் மிக முக்கியமான பல்கலைக்கழகத்தில் சிசிடிவி செயல்பாட்டில் இல்லை என்பதை எப்படி நம்புவது?
அண்ணா பல்கலைக்கழகத்தில் சிசிடிவி வேலை செய்யவில்லை என்று மு.க.ஸ்டாலின் மாடல் அரசு சொல்வது "சர்க்கரையை எறும்பு தின்றது, சாக்கு பையை கரையான் தின்று விட்டது" என சொல்வது போலிருக்கிறது .
அந்த அளவிற்கு பாதுகாப்பு குறைபாட்டுடன் தான் அண்ணா பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறதா திமுக அரசு?
பல வழக்குகளில் தொடர்புடைய ஞானசேகரன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் எப்படி அனுமதிக்கப்பட்டான்?
பல்கலைகழகங்களை உயர் கல்வி பயிலும் பாடசாலைகளாக நடத்துவதற்கு பதில், பாலியல் குற்றவாளிகளின் கூடாரமாக இந்த அவல ஆட்சியும் அதை நடத்தும் கட்சியினரும் மாற்றி வைத்திருப்பது உலகக் கொடுமைகளின் உச்சம்.
ஒரு ட்வீட் போட்டு கருத்து சொல்லுபவர்களை தேடி தேடி கைது செய்யும் காவல்துறை ஏற்கனவே பல வழக்கில் தொடர்புடைய ஞானசேகரனை கைது செய்யாதது ஏன்? ஆளுங்கட்சியான திமுகவை சேர்ந்தவர் என்பதாலா?
போதைப்பொருள் புழக்கம், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என எல்லா கொடுஞ்செயலுக்கும் பின்னால் திமுக நிர்வாகிகள் இருப்பது என்பது, மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசு தான் குற்றவாளிகளை ஊக்குவித்தும், காப்பாற்றவும் செய்கிறதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே வலுவாக எழுப்பியுள்ளது.
அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கில் உயர்நீதிமன்றமே தானாக முன்வந்து மாநில காவல் துறை விசாரணை போதாது என்று சிபிஜயை விசாரிக்க உத்தரவிட்டது, சிபிஐ விசாரணை வேண்டாம் என்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டீர்கள்,
ஒரு பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் அரசாங்கமே உச்சநீதிமன்றம் வரை சென்று உறுதுணையாக இருக்குமானால், பாலியல் குற்றங்கள் புரிபவர்க்கு இந்த அரசின் மீது எப்படி அச்சம் வரும் ?
இது தான் உண்மை என்றால், உங்களிடம் சட்டம் ஒழுங்கைக் காக்கக் கோரி வலியுறுத்துவதில் எந்தப் பயனும் இல்லை
மு.க.ஸ்டாலின் அவர்களே!
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமையினை எளிதில் கடந்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தால், அதனை இப்போதே கைவிட்டு விடுங்கள் மு.க.ஸ்டாலின் அவர்களே! மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்; அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இன்று அதிமுக சார்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முன் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி நடந்த போராட்டதில், மக்களுக்காக போராடிய அதிமுக நிர்வாகிகளையும் , தொண்டர்களையும் , ஸ்டாலினின் திமுக அரசாங்கம் அடக்குமுறைக்கு ஆளாக்கி கைது செய்ததற்கு எனது கடும் கண்டனங்கள்.
பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ?
இந்த மு.க.ஸ்டாலின் ஆட்சியின் அலட்சியத்தால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது,
இனி இந்த திமுக அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் ஒன்றே , தமிழ்நாட்டை காப்பதற்காண ஒரே வழி.. என்று கூறியுள்ளார்.
- ஜீரண மண்டல பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- முறையாக சுத்தம் செய்யப்படாமல், வேகவைக்காமல் உண்ணும்போது பாதிப்பு ஏற்படுகிறது.
சென்னை:
மழைப் பொழிவு காரணமாக சென்னையில் கடந்த சில நாள்களாக உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளை நாடுவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு வருவோரில் 40 சதவீதம் பேருக்கு அத்தகைய பாதிப்பு இருப்பதாக மருத்துவா்கள் கூறியுள்ளனா். அதில், பெரும்பாலானோருக்கு 'இ-கோலி' எனப்படும் தீங்கு விளைவிக்கும் ஜீரண மண்டல பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஜீரண மண்டல சிகிச்சை நிபுணா் எம்.மணிமாறன் கூறியதாவது:-
எஸ்கெரிச்சியா கோலி எனப்படும் 'இ-கோலி' என்பது மனிதா்கள் மற்றும் பாலூட்டி விலங்குகளின் குடலில் வளரும் பாக்டீரியா. இதில் பல வகைகள் உள்ளன.
அவற்றில் பல பாக்டீரியாக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்றாலும், சில வகை பாக்டீரியாக்கள் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்.

அசுத்தமான இறைச்சி, காய்கறி, பழங்கள், குடிநீா், பால் உள்ளிட்டவற்றின் மூலமாக மனித உடலுக்குள் அவை செல்கின்றன. முறையாக சுத்தம் செய்யப்படாமலும், வேகவைக்காமலும் அவற்றை உண்ணும்போது பாதிப்பு ஏற்படுகிறது.
வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்று வலி, காய்ச்சல் போன்றவை அதன் முக்கிய அறிகுறிகள். உரிய சிகிச்சை பெறாவிடில் ஒரு கட்டத்தில் அது சிறுநீரக செயலிழப்புக்கு வழி வகுக்கும்.
அண்மைக்காலமாக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில் வயிற்றுப்போக்கு பாதிப்பு 40 சதவீதம் பேருக்கு உள்ளது. அவா்களுக்கு 'இ-கோலி' பாதிப்பு இல்லை என்றாலும், பெரும்பாலா னோருக்கு அதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

'இ-கோலி' பாதிப்பை பொருத்தவரை மலப் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, சிறுநீா் பரிசோதனை மூலமாக உறுதி செய்யலாம். அதன் அடிப்படையில், நீா்ச்சத்தை தக்க வைக்கும் சிகிச்சைகளும், ஆன்ட்டிபயாடிக் சிகிச்சைகளும் வழங்கப்படும். அதனை முறையாக பின்பற்றினால் முழுமையாக குணமடையலாம் என்றாா் அவா்.
இது தொடா்பாக பொதுசுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மழை வெள்ள காலங்களில் காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, எலிக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவ அதிக வாய்ப்புள்ளன. அதை கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அதன் தொடா்ச்சியாக மருத்துவக் குழுக்கள் மூலமாக நோய் எதிா்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாசுபட்ட குடிநீா், உணவுகள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்து மாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மழை பாதித்த பகுதிகளில் குடிநீரின் தரத்தை உறுதி செய்யுமாறும், குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை மற்றும் நோய்த்தொற்றுகள் குறித்த விவரங்களை பொது சுகாதாரத் துறைக்கு அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் பொதுமக்கள் காய்ச்சிய நீரை மட்டுமே பருக வேண்டும். சுகாதாரமான உணவுகளையே உட்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனா்.
- போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் சாலையில் அமர்ந்து அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.
- கிண்டி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் எதிரே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் சாலையில் அமர்ந்து அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இச்சம்பவத்தால் கிண்டி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோகுல இந்திரா உள்பட அதிமுகவினர் 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
- பிப்ரவரி 26-ந்தேதி மகா சிவராத்திரி.
- 50 இடங்களில் நேரலைக்கு ஏற்பாடு
சென்னை:
கோவை ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி மாதம் 26-ந்தேதி மகா சிவராத்திரி விசேஷமாக கொண்டாடப்பட உள்ளது.
தென் கைலாய பக்தி பேரவையின் சார்பில் கொண்டாடப்படும். இந்த விழாவில் பொது மக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கும் விதமாக கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் தங்கள் சொந்த ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காக ரத யாத்திரை தொடங்கி உள்ளது.
4 திசைகள் நோக்கி இந்த ரத யாத்திரை செல்கிறது. கடந்த 22-ந்தேதி பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், சிரவை ஆதீனம் குமரகுருபா சுவாமிகளும் தொடங்கி வைத்தனர்.

இந்த ரதங்கள் மகா சிவராத்திரி வரையிலான 2 மாதங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக 30 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்கிறது.
இந்த ரதங்கள் செல்லும் இடங்களில் அங்குள்ள முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள், பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு வழங்க திட்டமிட்டுள்ளனர். ஆதியோகிக்கு விருப்பம் உள்ள மக்கள் தீபாராதனை, மலர்கள், பழங்கள், நைவேத்தியங்களை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய இடங் களுக்கு ஆதியோகி ரதம் இன்று வருகை தர உள்ளது. சென்னைக்கு வருகிற 30-ந் தேதி வருகிறது. ஜனவரி 10-ந் தேதி வரையில் ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, கோடம்பாக்கம், அண்ணா நகர், புரசைவாக்கம், நங்க நல்லூர் உள்ளிட்ட இடங் களுக்கு ரதம் செல்கிறது.
ஆதியோகி ரதங்கள் திட்டமிட்டபடி அனைத்து பகுதிகளையும் வலம் வந்த பின்னர் இறுதியாக பிப்ரவரி 26-ந்தேதி மகா சிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோகா மையத்தை சென்றடையும்.
இதனுடன சிவ யாத்திரை எனும் பாத யாத்திரையையும் சிவசங்கர பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகாவில் இருந்து ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய 6 தேர்களை இழுத்தபடி வருகிறார்கள் என்று தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேரலை செய்யப்பட உள்ள 50 இடங்களில் பக்தர்கள் திரளாக பங்கேற்க இருக்கிறார்கள். அங்கு அவர்களுக்கு இலவச ருத்ராட்சம், சத்குருவின் ஆனந்த அலை புத்தகம் மற்றும் மஹா அன்னதானம் வழங்கப்பட உள்ளது.






