என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர - வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 05.30 மணி அளவில், அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, காலை 08.30 மணி அளவில் மேலும் வலுவிழந்தது.
இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
28-ந்தேதி முதல் 1-ந்தேதி வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- தமிழகத்தின் தனிப்பெரும் சமூக, அரசியல் அடையாளமாக உயர்ந்து நிற்பவர்.
- நம் தலைமுறைக்கான நேர்மையான அரசியல் பாதையாகவும் பாடமாகவும் திகழ்பவர்.
சென்னை :
த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்
அரசியலைத் தங்கள் அடையாளமாக ஆக்கிக் கொண்டவர்கள் மத்தியில், அரசியலுக்கே ஒரு தனித்த பெரும் அடையாளமாகத் திகழ்பவர், மரியாதைக்குரிய திரு.நல்லக்கண்ணு அய்யா. சுதந்திரப் போராட்டக் களத்தில் நின்றவர். பிறகு பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர். சிறைக் கொட்டடிகளைச் சிரித்துக்கொண்டே சிநேகித்தவர். தடைகளைத் தகர்த்த தனிப்பெரும் தளகர்த்தர்.
சாதிய வன்மத்திற்கு எதிராகக் களமாடியவர் மட்டுமன்று. வாழ்ந்து காட்டியவர். சமூக நீதியை, சமத்துவத்தை நிலைநாட்டியவர். தன் வாழ்நாள் முழுமைக்கும் அதை வாழ்ந்து காட்டியே நிரூபித்துக் கொண்டிருப்பவர். தமிழகத்தின் தனிப்பெரும் சமூக, அரசியல் அடையாளமாக உயர்ந்து நிற்பவர்.
தங்களுக்கான நிதியை மட்டுமே திரட்டும் அரசியலாளர்கள் இடையே, தனக்குக் கிடைத்த நிதி அனைத்தையும் தான் சார்ந்த இயக்கத்திற்கும் விவசாயிகளுக்கும் அரசுக்கும் கொடுத்த உத்தமர்.
தலைவனாக வருவது முக்கியமன்று. தலைவனாக வாழ்ந்து காட்டுவதே முக்கியம் என்ற இலக்கணத்திற்கு இன்றுவரை ஒற்றை உதாரணம், நேர்மையின் ஊற்றுக்கண்ணான திரு.நல்லக்கண்ணு அய்யா மட்டுமே. அவரே, நம் தலைமுறைக்கான நேர்மையான அரசியல் பாதையாகவும் பாடமாகவும் திகழ்பவர்.
நூற்றாண்டு காணும் அவரைப் போற்றிப் புகழ்ந்து வணங்குவோம். அய்யாவின் உடல்நலம், மனநலம், சிந்தனை வளம் நீடித்து நிலைக்க இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
- அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் கைதானவருக்கும் தி.மு.க.வுக்கும் சம்பந்தம் இல்லை.
- இட ஒதுக்கீடு கொடுத்தால் நிபந்தனையற்ற ஆதரவு தருவோம் என அன்புமணி கூறியுள்ளது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
வேலூர்:
வேலூர் அடுத்த ஜங்காலப்பள்ளி பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் கைதானவருக்கும் தி.மு.க.வுக்கும் சம்பந்தம் இல்லை. எதிர்க்கட்சிகள் செய்வது சில்லித்தனமான வேலை இது.
இட ஒதுக்கீடு கொடுத்தால் நிபந்தனையற்ற ஆதரவு தருவோம் என அன்புமணி கூறியுள்ளது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- 12 வகையான அரிய பறவை இனங்கள் வந்து குவிந்து உள்ளன.
- சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சிறப்பு பெற்றது. ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து பலவகை பறவைகள் வருகை தந்து கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சுகள் பொறிக்கும்.
பின்னர் குடும்பத்துடன் பறவைகள் தங்களது தாய்நாட்டிற்கு திரும்பிச் செல்லும். ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கிலோமீட்டர்களை தாண்டி பறவைகள் வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வந்து செல்கின்றன.
வழக்கமாக வடகிழக்கு மழைக்குப் பின்னர் நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் பறவைகளின் வருகை தொடங்கி 6 மாதங்கள் வரை இருக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாத இறுதியில் தொடங்கி தொடர்ந்து அவ்வப்போது பெய்து வருகிறது.
இதனால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் உள்ள வேடந்தாங்கல் ஏரி முழுவதும் நிரம்பி உள்ளது. பறவைகளுக்கு ஏற்ற சூழல் நிலவுவதால் வெளிநாட்டு பறவைகள் சரணாலயத்திற்கு வரத்தொடங்கி உள்ளன.
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் இலங்கை பாகிஸ்தான், சைபீரியா, பங்களாதேஷ், பர்மா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மிளிர் உடல் அரிவாள் மூக்கன், நத்தைகுத்தி நாரை, கூழைக்கிடா, பாம்புதாரா, கரண்டி வாயன், தட்டைவாயன், நீர்காகம், முக்குளிப்பான், வக்கா மற்றும் வாத்து இனங்கள் உள்ளிட்ட 12 வகையான அரிய பறவை இனங்கள் வந்து குவிந்து உள்ளன. அவை சரணாலயத்தில் உள்ள மரங்களின் மீது கூட்டம் கூட்டமாக இருப்பது பார்ப்பதற்கு ரம்யமாக உள்ளது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு இதுவரை 15 ஆயிரம் பறவைகள் வந்திருப்பதாகவும், அவை ஏரியில் உள்ள மரங்களில் முட்டையிட்டு கூடுகள் கட்டி வருவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சரணாலயத்தில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.10, சிறியவர்களுக்கு ரூ.5, கேமராவுக்கு ரூ.50, செல்போன் கேமராக்களுக்கு ரூ50, மற்றும் வீடியோ கேமராவுக்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
சீசன் தொடங்கி உள்ளதால் வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அவர்கள் பறவைகளை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
- 31-வது முக்தி தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
- அதிஷ்டானங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.
காஞ்சிபுரம்:
காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியாக திகழ்ந்த மகாபெரியவா என்று அழைக்கப்படும் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா சுவாமிகளின் 31-வது முக்தி தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி ஆராதனை மகோற்சவம் நேற்று தொடங்கி முதல் நாள் நிகழ்ச்சியாக சதுர்வேத பாராயணம் நடைபெற்றது. ரிக் வேதத்தின் முதுநிலைப் பாடத்தைத் தொடர்ந்து 40 நாட்களாக அதிஷ்டானத்தில் பாஸ்கர கன பாடிகள் என்பவரால் பாடப்பட்டு வந்தது.
அதிஷ்டானத்தில் மகா பெரியவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
நாளை ஸ்ரீ ருத்ர பாராயணம், பூஜை, ஹோமங்கள் நடைபெறும். மகா பூரணா ஹுதி தீபாராதனைக்கு பிறகு, மகா பெரியவா சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.
பின்னர் கணபதி சேது லாரா குழுவினரின் புல்லாங்குழல் இன்னிசை, மாலை மாண்டலின் வித்வான் யு.ராஜேஷ் குழுவினரின் இன்னிசை நடைபெறுகிறது.
- விபத்தில் சிக்கிய மற்றொரு காரில் வந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
- விபத்து குறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
சென்னை நெற்குன்றம், அழகம்மாள் நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் கணபதி(வயது35). இவர் தனது மனைவி சரண்யா, மகள் ரியா மற்றும் உறவினர்கள் ஜெயா அவரது மகள் ஹேமா(13) மகன் பாலா(10), ஆகியோருடன் திண்டுக்கல் நோக்கி நேற்று இரவு காரில் புறப்பட்டனர். அவர்கள் வத்தலகுண்டு அருகே உள்ள கோவிலுக்கு சென்றதாக தெரிகிறது. காரை கணபதி ஓட்டினார்.
நள்ளிரவு செங்கல்பட்டு அடுத்த புக்கத்துறை கூட்டுச்சாலை அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது லேசாக மழை பெய்து கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் கணபதி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை தாண்டி எதிரே சென்னை நோக்கி வந்த காருடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் கணபதி குடும்பத்தினர் வந்த கார் சாலையை விட்டு இறங்கி அருகில் உள்ள முட்புதரில் மோதி நின்றது. இந்த விபத்தில் காரில் இருந்த கணபதி, சிறுவன் பாலா, சிறுமி ஹேமோ ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஜெயா, சரண்யா, 1 1/2 வயது குழந்தை ரியா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் சிக்கிய மற்றொரு காரில் வந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவர்களை பற்றிய விபரம் உடனடியாக தெரியவில்லை.
விபத்து பற்றி அறிந்ததும் படாளம் போலீசார் விரைந்து வந்த பலியான கணபதி உள்ளிட்ட 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த ஜெயா உள்பட 3 பேரும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மழை பெய்து கொண்டு இருந்த போது அதிவேகத்தில் கார் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தீபாவளி பண்டிகைக்கு போதுமான ஆர்டர்கள் வராததால் வெள்ளி தொழிலாளர்கள் போதிய வருமானம் இன்றியும், வேலை இல்லாமலும் தவித்தனர்.
- பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் தமிழகம் கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் இருந்து வெள்ளி பொருட்களுக்கு ஆர்டர்கள் வர தொடங்கி உள்ளது.
சேலம்:
சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செய்யப்படும் கலை நயமிக்க வெள்ளி கொலுசுகளுக்கு பெரும் மவுசு உண்டு. இதனால் இங்கு தயாரிக்கப்படும் வெள்ளி கொலுசுகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதையொட்டி சேலம் செவ்வாய்ப்பேட்டை, சிவதாபுரம், பனங்காடு, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான வெள்ளி பொருட்கள் உற்பத்தி பட்டறைகள் உள்ளன. இந்த பட்டறைகளில் பல ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பண்டிகை காலங்களில் தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்பட வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் ஆர்டர்கள் குவியும். ஆனால் கடந்த தீபாவளி பண்டிகைக்கு போதுமான ஆர்டர்கள் வராததால் வெள்ளி தொழிலாளர்கள் போதிய வருமானம் இன்றியும், வேலை இல்லாமலும் தவித்தனர்.
தொடர்ந்து தமிழகத்தில் பொங்கல் பண்டிகை காலங்களில் வெள்ளி கொலுசு, அரைஞான் கொடி, மெட்டி உள்பட வெள்ளி விற்பனை அதிகரிக்கும் என்பதால் அப்போது ஆர்டர்கள் வரும் என வெள்ளி தொழிலாளர்கள் எதிர்பார்த்தனர்.
அதன் தொடர்ச்சியாக பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் வெள்ளி கொலுசு, அரைஞான் கொடி உள்பட வெள்ளி பொருட்களுக்கான ஆர்டர்கள் தற்போது வர தொடங்கி உள்ளன. இதனால் அதனை தயாரிக்கும் பணியில் வெள்ளி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை சங்க தலைவர் ஆனந்தராஜன் கூறியதாவது-
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் தமிழகம் கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் இருந்து வெள்ளி பொருட்களுக்கு ஆர்டர்கள் வர தொடங்கி உள்ளது. இந்த ஆர்டர்களை தயாரிக்க தொடங்கி உள்ளோம். முன்பு பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே 75 சதவீத ஆர்டர்கள் கிடைத்து விடும். ஆனால் தற்போது 25 சதவீத ஆர்டர்கள் மட்டும் கிடைத்துள்ளன.
அதாவது ஒரு லட்சம் வெள்ளி கொலுசுகளுக்கு ஆர்டர் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது 25 ஆயிரம் வெள்ளி கொலுசுகளுக்கு மட்டுமே ஆர்டர் கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் ஆர்டர்கள் குறைந்துள்ளது. மீதி ஆர்டர் விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
வெள்ளி விலை ஒரு கிராம் கடந்த சில நாட்களுக்கு முன்பு 110 ரூபாய் வரை சென்ற நிலையில் தற்போது விலை குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் வெள்ளி பொருட்களை பொது மக்கள் வாங்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்கள் அதிகம் கூடும் கழக அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
- நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய; சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 27.12.2024 வெள்ளிக் கிழமை காலை 10.30 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும்; மக்கள் அதிகம் கூடும் கழக அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும், மக்கள் அதிகம் கூடும் கழக அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களிலும், நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும்.
திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- டேட்டா செயல்பாடும் மெதுவாக இருந்தது.
- ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பிற நெட் ஒர்க்கில் தொடர்பு கொண்டாலும் பேச முடியவில்லை.
சென்னை:
சென்னையில் சில பகுதிகளில் ஏர்டெல் செல்போன் சேவை இன்று காலையில் இருந்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி பகுதியில் இந்த பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
ஏர்டெல் செல்போன்கள் செயல்படவில்லை. போனில் அழைத்தால் எதிர் முனையில் உள்ளவர்களுக்கு பேசுவது கேட்கவில்லை. ஒரு சில நேரங்களில் பேசுவது விட்டு விட்டு கேட்டது. டேட்டா செயல்பாடும் மெதுவாக இருந்தது.
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பிற நெட் ஒர்க்கில் தொடர்பு கொண்டாலும் பேச முடியவில்லை. ஏர்டெல் நெட் ஒர்க்கில் உள்ள எண்களை தொடர்பு கொண்டாலும் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
இதுகுறித்து ஏர்டெல் நெட் ஒர்க் அலுவலகத்தில் கேட்டபோது, நெட் ஒர்க் மெதுவாக உள்ளது. அதனை சரி செய்யும் பணி நடக்கிறது. விரைவில் நெட் ஒர்க் சீராகிவிடும் என்றனர்.
- கோவையில் ரேஸ்கோர்ஸ், வாலாங்குளம், உக்கடம் குளம் போன்ற இடங்களில் அதிகளவில் மக்கள் திரண்டு புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
- அனுமதி இல்லாமல் பொது இடத்தில் வைத்து புத்தாண்டு கொண்டாடக்கூடாது.
குனியமுத்தூர்:
2025 புத்தாண்டு பிறக்க இன்னும் 5 நாட்களே உள்ளன. தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய நகரமான கோவையும் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தை விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இன்னிசை கச்சேரி, சிறப்பு பாடகர்கள் வருகை, பபே உணவு முறை, வாணவேடிக்கை என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான முன்பதிவும் தொடங்கி நடந்து வருகிறது.
இதேபோல கோவையில் ரேஸ்கோர்ஸ், வாலாங்குளம், உக்கடம் குளம் போன்ற இடங்களில் அதிகளவில் மக்கள் திரண்டு புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். இதில் பெண்கள், சிறுவர், சிறுமிகள் என ஏராளமானோர் பங்கேற்பார்கள்.
அந்த சமயங்களில் இளைஞர்கள் பைக்ரேஸ், பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவது, கூட்டத்தை பயன்படுத்தி ஜேப்படி செய்வது, போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதனை தடுக்கும் விதமாக கோவையில் புத்தாண்டு அன்று இரவு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட மேம்பாலங்களில் நள்ளிரவில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கவும் போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். இளைஞர்கள் மேம்பாலங்களை குறிவைத்து பைக்ரேஸ் நடத்த வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும், ஹெல்மெட் அணியாமல் செல்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுக்கும் வகையில் ஓட்டல், லாட்ஜ்களில் தீவிர சோதனையும் நடத்தப்படுகிறது. சந்தேக நபர்கள் யாராவது வந்து சென்றால் தகவல் தெரிவிக்குமாறு ஓட்டல் ஊழியர்களிடம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையே சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதன்காரணமாக எப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பை அதிகரிக்கவும், புத்தாண்டு கொண்டாட்டங்களில் கட்டுப்பாடு விதிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக கோவை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் அஜய் தங்கத்திடம் பேசியபோது அவர் கூறியதாவது:-
புத்தாண்டு கொண்டாட்டம் என்பது அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய ஒன்று. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதே சமயத்தில் அது எல்லை மீறுவதாக இருக்கக் கூடாது. பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம்வயதினர் நள்ளிரவு 12 மணி வரும்போது, உற்சாக மிகுதியில் புத்தாண்டை கொண்டாட முயல்வார்கள். நடுரோட்டில் வைத்து கேக் வெட்டி கொண்டாடுவது மற்றும் பைக் ரேஸ் போன்ற சாகச செயல்களில் ஈடுபட்டு, பொது மக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு எல்லை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது. அதிவேகமாக வாகனங்களை இயக்கக் கூடாது. அனுமதி இல்லாமல் பொது இடத்தில் வைத்து புத்தாண்டு கொண்டாடக்கூடாது.
மேலும் சிலர் புத்தாண்டு கொண்டாட குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு, வெளியே கோவில் மற்றும் பொது இடங்களுக்கு சென்று மகிழ்வது உண்டு. அவ்வாறு வீட்டை பூட்டி விட்டு செல்லும்போது காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விலை உயர்ந்த நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை வீட்டில் வைத்து விட்டுச் செல்லக்கூடாது. நாமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பிறர்க்கும் தொந்தரவு கொடுக்காத நிலையில் புத்தாண்டை கொண்டாட வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் சட்டத்தை மீறுவதை காவல்துறை ஒருபோதும் அனுமதிக்காது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், அசம்பாவித செயல்களை தடுக்கும் பொருட்டு, அன்றைய தினம் நள்ளிரவு கோவை மாநகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. எனவே பொதுமக்களின் அமைதியை சீர்குலைக்க முயல்பவர்கள், சட்டத்தின் முன் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு அரசை கண்டித்து அதிமுக, பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக மாணவி அளித்த புகார் அடிப்படையில் பதிவு செய்த F.I.R. ( முதல் தகவல் அறிக்கை) இன்று காலை வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்டிருக்கிறார்கள். ஒரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து தவறியிருக்கிறது திமுக. இது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதச் செயல்பாடு என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வெளியான F.I.R. (முதல் தகவல் அறிக்கை) விவரங்களை காவல்துறை முடக்கி உள்ளது. மேலும் வழக்கு தொடர்பான F.I.R.- ஐ பகிர்ந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் ஒளிபரப்பப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவருமான தோழர் நல்லகண்ணுவின் 100-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
- நல்லகண்ணு பிறந்த திருவைகுண்டம் அரசு மருத்துவமனையை சி.டி.ஸ்கேன் வசதியுடன் தரம் உயர்த்தப்படும்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் முதுபெரும் பொதுவுடைமைச் சிந்தனையாளரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவருமான தோழர் நல்லகண்ணுவின் 100-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
நமது மாநிலத்திற்கும், தமிழ் மக்களுக்கும் அன்னார் அவர்கள் ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும்விதமாக, தமிழ்நாடு அரசு 2022-ஆம் ஆண்டு 'தகைசால் தமிழர்' விருது வழங்கிச் சிறப்பித்தது. இன்று அவரது நூறாவது பிறந்த நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தியபோது, அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று, அவர் பிறந்த திருவைகுண்டம் அரசு மருத்துவமனையை சி.டி.ஸ்கேன் வசதியுடன் தரம் உயர்த்தி, கூடுதல் வசதிகளுடன் புதிய மருத்துவமனைக் கட்டடம் அமைத்திட உத்தரவிட்டுள்ளார்கள்.
கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியையே எப்போதும் தனது தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னலமற்ற தகைசால் தமிழர் தோழர் இரா. நல்லகண்ணுவின் பெருமையைப் போற்றும்வகையில், திருவைகுண்டத்தில் அமையவிருக்கும் புதிய மருத்துவமனைக் கட்டடத்திற்கு "தோழர் நல்லகண்ணு நூற்றாண்டுக் கட்டடம்" எனப் பெயரிடவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






