என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இறங்கும் இடத்தில் தடுப்புவேலிகள் அமைத்து அடைக்கப்பட்டுள்ளது.
- கடல் உள்வாங்குவதும், கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டும் வருகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பவுர்ணமி நாட்களில் கோவில் கடற்கரையில் இரவில் குடும்பத்தோடு தங்கி வழிபாடு செய்வார்கள்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் திடீரென உள்வாங்குவதும், வெளியே சீற்றம் அதிகமாக காணப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அமாவாசையாக இருந்ததினால் நேற்று காலையில் இருந்து கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
கடல் சீற்றத்தின் காரணமாக கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சுமார் 20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு இந்த கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோவில் முன்புள்ள கடலில் இறங்க அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் பகுதியில் இந்த கடல் அரிப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே படிக்கட்டுகள் வழியாக பக்தர்கள் இறங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிக அளவு கடல் அலைகளின் சீற்றத்தின் காரணமாக 2-வது நாளாக அதிக அளவில் இந்த அரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே படிக்கட்டுகள் வழியாக இறங்கும் இடத்தில் தகரத்தை வைத்தும், தடுப்புவேலிகள் அமைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் இதே போல் பக்தர்கள் கடற்கரையில் இறங்கும் இடத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் மணலை கொட்டி கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தை சீர் செய்தனர். ஆனால் மீண்டும் தற்போது அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒருபுறம் கடற்கரையில் அதிக அலைகள் காரணமாக கடல் அரிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் அதே கடற்கரையில் சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் கடல் உள்வாங்கிய நிலையில் காணப்படுகிறது.
சுமார் 50 அடி கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் பாறைகளும், மணல் திட்டுகளும் அதிகமாக தென்படுகிறது. கோவில் கடற்கரை பணியாளர்கள், காவல்துறையினர் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.
- தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற சௌமியா அன்புமணி உள்ளிட்ட பாமக-வினரை போலீசார் கைது செய்தனர்.
- போராட்டத்திற்கு அனுமதி தர உத்தரவிட முடியாது.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தனர். இருப்பினும் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்காததால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கும் போலீசார் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் இன்று தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற சௌமியா அன்புமணி உள்ளிட்ட பாமக-வினரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நடைபெற இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து பாமக வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். அப்போது பேசிய நீதிபதி, போராட்டத்திற்கு அனுமதி தர உத்தரவிட முடியாது. அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை அரசியலாக்குவது ஏன்? பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் அரசியலாக்குவதாக வேதனை தெரிவித்த நீதிபதி, போராட்டம் நடத்தும் ஒவ்வொருவரும் தங்கள் மனதில் கை வைத்து கூறுங்கள் என்று தெரிவித்தார்.
- அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
- ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்ற வேண்டும்.
சென்னை:
தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா வெளிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வரும் வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பெண்களுக்கும், மாணவிகளுக்கும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கவும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரண தொகை வழங்கவும், போதை மற்றும் கஞ்சா இல்லாத தமிழகத்தை உருவாக்கவும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள் தலைமையில் அனைத்து மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், கழக தொண்டர்கள், விவசாய பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மக்கள் பிரச்சனைக்காக நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பொங்கல் என்றாலே வீடுகள் தோறும் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.
- ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு பயிரிட்டால் 100 கொப்பரை வரை வெல்லம் தயாரிக்கலாம்.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுக்கு மட்டும் பெயர் பெற்றதல்ல. இந்த பகுதியில் தயாராகும் வெல்லத்திற்கு தனி மவுசு உண்டு. குறிப்பாக செம்புகுடிப்பட்டி, அய்யனகவுண் டன்பட்டி, வலசை, கொண்டையம்பட்டி, கல்லணை, சம்பக்குலம் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் ஆலை கரும்புகளை சாகுபடி செய்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடை செய்த கரும்புகளை விவசாயிகள் நாட்டு வெல்லம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். தைப் பொங்கல் என்றாலே வீடுகள் தோறும் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்து வழிபடுவது வழக்கம். வெல்லம் பொங்கல் வைக்க பயன்படும் முக்கிய பொருளாகும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணிகள் இருந்து வந்தாலும் அலங்காநல்லூர் பகுதியில் தயார் செய்யப்படும் வெல்லத்திற்கு தனி மதிப்பும் சிறப்பும் உண்டு.
இதுகுறித்து கரும்பு விவசாயி கல்லணையை சேர்ந்த ஆலை உரிமையாளர் ராஜா கூறியதாவது:-
எங்களுக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து கிட்டத்தட்ட பரம்பரை பரம்பரையாக கரும்பு சாகுபடி செய்து வருகிறோம். கடந்த 50 ஆண்டுகளாக ஆலையில் வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு நாளைக்கு 5 முதல் 6 கொப்பரை வரை வெல்லம் தயாரிப்போம். தினம்தோறும் 500 கிலோ வரை வெல்லம் தயார் செய்து வருகிறோம். ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.65 வரை மொத்த மார்க்கெட்டில் விலை போகிறது. 10 கிலோ கொண்ட ஒரு மணு ரூ.550 முதல் 700 வரை விலை போகிறது.
ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு பயிரிட்டால் 100 கொப்பரை வரை வெல்லம் தயாரிக்கலாம். 20 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்து ஆலையில் நாட்டு வெல்லம் தயாரித்து வருகிறோம். வருடத்தில் 10 மாதம் வரை வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தவிர வேறு விவசாயிகளிடம் கரும்பு வாங்கி வெல்லம் தயாரிக்கிறோம். ஒரு ஏக்கருக்கு 40 டன் வரை கரும்பு அறுவடை செய்து வெல்லம் தயாரித்து வருகிறோம். ஒரு கொப்பரை வெல்லம் தயாரிப்பில் சுமார் 90 முதல் 95 கிலோ வரை வெல்லம் கிடைக்கும்.
வெல்லம் தயாரிக்கும் பணிக்கு சுமார் 6 நபர்கள் வரை தேவைப்படுகிறது. ஒரு ஏக்கர் கரும்பு பயிரிட உழுவது, பார் போடுவது, தோகை உரிப்பது, இரண்டு முறை உரம் வைப்பது உள்ளிட்ட பராமரிப்பு செலவு மட்டும் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை ஆகிறது. கரும்பு வெட்டு கூலி, ஆலை ஆட்டு கூலி செலவு போக ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். கரும்பு நடவிலிருந்து ஆலை அரவைக்கு கரும்பு தயாராக சுமார் 10 மாதங்கள் வரை ஆகிறது. இந்த ஆலை கரும்பு அறுவடை செய்து அதை வெல்லமாக காய்ச்சி பக்குவப்படுத்தப்பட்டு மண்டை வெல்லங்களாக தயாரித்து மொத்த வியாபாரத்திற்கு மதுரைக்கு அனுப்பப்படுகிறது.
அங்கிருந்து கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் இந்த மண்டை வெல்லத்தை சர்க்கரை நோய் உள்ளவர்கள் கூட சாப்பிடலாம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெல்லம் தயாரிக்கப் பட்டாலும் பிற மாநிலங்களில், அலங்காநல்லூர் பகுதியில் தயாரிக்கப்படும் வெல்லத்திற்கு தனி மவுசு தான். வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு போதிய ஊதியம் கொடுக்க முடியவில்லை. இதனால் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை.
வியாபாரிகள் எங்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கிறார்கள். இதனால் இந்த தொழில் நலிவடைந்து போகிறது. அரசு நெல் கொள்முதலுக்கு விலை நிர்ணயித்தது போல இந்த நாட்டு வெல்லத்திற்கும் அரசே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் எங்களைப் போன்ற நேரடி விவசாயிகள் கரும்பு ஆலை தொழிலாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலையிலேயே போலீசார் குவிக்கப்பட்டனர்.
- அரசை கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கக் கோரியும் பா.ம.க. மகளிர் அணியினர் கோஷம் எழுப்பினார்கள்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அருகே கடந்த 26-ந்தேதி அ.தி.மு.க.வினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய திரண்டனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அண்ணா பல்கலைக்கழகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.வளர்மதி உள்பட 1000-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் கடந்த 30-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலை நகரங்களில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதேபோல் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பா.ஜ.க. சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கடந்த 26-ந்தேதி தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அதன்பிறகு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக கட்சி நிர்வாகிகள் கடந்த 31-ந்தேதி வள்ளுவர் கோட்டம் அருகே திரண்டனர். இதையடுத்து சீமான் உள்பட நிர்வாகிகள் 200 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து 4-வது கட்சியாக பா.ம.க. இன்று போராட்டம் நடத்தியது. பா.ம.க. மகளிர் சங்கம் சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து போலீஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பா.ம.க.வினர் அறிவித்தனர். எனவே போராட்டம் நடத்த வரும் பா.ம.க.வினரை கைது செய்வதற்காக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலையிலேயே போலீசார் குவிக்கப்பட்டனர். சுமார் 350-க்கும் மேற்பட்ட போலீ சார் அங்கு குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே 10.45 மணி அளவில் சவுமியா அன்புமணி தலைமையில் பா.ம.க. மகளிர் அணியினர் வள்ளுவர் கோட்டம் அருகே திரண்டனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்
என்றாலும், தடையை மீறி சவுமியா அன்புமணி உள்பட பா.ம.க. மகளிர் அணி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். இதையடுத்து சவுமியா அன்புமணி உள்பட பா.ம.க. மகளிர் அணியினர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் அனைவரும் போலீஸ் வேனில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டனர். அப்போது அரசை கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கக் கோரியும் பா.ம.க. மகளிர் அணியினர் கோஷம் எழுப்பினார்கள்.
- பிரமாண்ட கலைவிழா கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது.
- மெல்லிசை கலைஞர்களின் கலைநிகழ்ச்சியும் நடக்கிறது.
சென்னை:
சென்னையில் தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் நாட்களில் "சென்னை சங்கமம்-நம்ம ஊர் திருவிழா" என்ற பிரமாண்ட கலைவிழா கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது.
கிராமங்களில் பொங்கல் திருவிழா மிக உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், மரபுகளை பின்பற்றி கிராமப்புறங்க ளில் நாட்டுப்புற கலைகள் இன்றளவும் நடைபெற்று வருகின்றன. கிராமங்களில் காலங்காலமாக நடைபெற்று வரும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் இன்றைய இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் தெரியாமல் போய்விடுகின்றன.
குறிப்பாக சென்னை போன்ற நகரப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் நாட்டுப்புற கலைகளை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. இன்றைய இளைய சமுதாயத்திற்கு தமிழர்களின் பண்பாட்டை, கலாச்சாரத்தை விளக்கும் வகையில் சென்னையில் "நம்ம ஊர் திருவிழா" நடத்தப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ள சென்னை வாசிகளை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த திருவிழா ஏற்பாடு செய்யப்படுகிறது.
சென்னை சங்கமம்-நம்ம ஊர் திருவிழா 4 நாட்கள் நடைபெறுகிறது. 14-ந்தேதி (பொங்கல்) முதல் 17-ந்தேதி வரை நடத்துவதற்கு தமிழக அரசு கலை மற்றும் பண்பாட்டுத் துறை திட்டமிட்டுள்ளது.
முன்னதாக இந்த திருவிழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 13-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரஸ்வரர் கோவில் திடலில் தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் 18 இடங்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. தமிழ்நாட்டின் முன்னணி கலைஞர்களுடன் 200 கிராமிய கலைஞர்களும் இணைந்து மாபெரும் இசை நடன நிகழ்ச்சியை நடத்து கிறார்கள்.
பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சென்னை இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், கிண்டி கத்திப்பாரா வளாகம், சைதாப்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத்திடல், தி.நகர் நடேசன் பூங்கா.
நுங்கம்பாக்கம் விளை யாட்டு மைதானம், எழும்பூர் அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலிமாறன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், அண்ணாநகர் கோபுர பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா.
கொளத்தூர் மாநகராட்சி திடல், அம்பத்தூர் எஸ்.வி.விளையாட்டு திடல் ஆகிய இடங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கிராமிய கலைநிகழ்ச்சி கள் நடைபெறும்.
நம்ம ஊர் திருவிழாவில் 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பை யாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம் ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம்.
சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சென்னையின் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசை கலைஞர்களின் கலைநிகழ்ச்சியும் நடக்கிறது.
இவற்றுடன் மராட்டிய மாநில லாவணி, ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் துர்சி நிருத்தியா, கோவாவின் விளக்கு நடனம், மிசோரம் மூங்கில் நடனம் ஆகியவை இடம்பெறுகிறது.
இது தொடர்பாக இன்று தலைமை செயலகத்தில் கனிமொழி எம்.பி. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுற்றுலா பண்பாடுத்துறை செயலாளர் சந்திரமோகன், முதல்-அமைச்சரின் செயலாளர்கள் எம்.எஸ்.சண்முகம், கோ.லட்சுமிபதி, கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் காந்தி, சுற்றுலாத்துறை ஆணையர் ஷில்பா பிரபா கர் சதீஷ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னை வாழ் பொதுமக்கள் நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை விழாவை கண்டு மகிழ பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
- சுகாதார சீர்கேடுகளை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
- ரெயிலடி தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவி வரும் நிர்வாகச் சீர்கேடுகள், சுகாதார சீர்கேடுகள், பல்வேறு வகை வரி உயர்வு, ஆதாய நோக்கத்துடன் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மடை மாற்றம் செய்து ஸ்டிக்கர் ஒட்டுதல் முதலான மக்கள் விரோதச் செயல்களை கண்டும் காணாமல் இருந்து வரும் தி.மு.க. அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, அ.தி.மு.க. தஞ்சாவூர் மாநகரக் கழகத்தின் சார்பில், வருகிற 8-ந் தேதி (புதன் கிழமை) காலை 10 மணியளவில், ரெயிலடி தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செ.செம்மலை தலைமையிலும், தஞ்சாவூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் ஆ.சேகர், தஞ்சாவூர் மாநகரக் கழகச் செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பனிக்கட்டிகள் வீடுகள் மீதும், வாகனங்கள் மீதும் உறைந்து காணப்படும்.
- கடந்த சில நாட்களாக கொடைக்கானலுக்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானில் டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை கடும் பனிக் காலம் நிலவும். இந்த சீசனில் கொடைக்கானலுக்கு உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.
டிசம்பர் மாத இறுதியில் உறை பனி சீசன் நிலவுவதால் காஷ்மீரில் இருப்பது போன்று பனிக்கட்டிகள் வீடுகள் மீதும், வாகனங்கள் மீதும் உறைந்து காணப்படும். இது போன்ற சீதோஷ்ணத்தை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவார்கள்.
இதன்படி கடந்த சில நாட்களாக கொடைக்கானலுக்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அரையாண்டு விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடும் பனியையும் பொருட்படுத்தாது அனைத்து சுற்றுலா தலங்களிலும் தங்கள் பொழுதை உற்சாகமாக கழித்து வந்தனர்.
நேற்று இரவு முதல் கொடைக்கானலில் மீண்டும் உறை பனி தொடங்கியுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் உறை பனி படர்ந்து வெள்ளை கம்பளம் விரித்தது போல காணப்பட்டது. செடிகள் மீதும் உறை பனி படர்ந்து இருந்ததால் பச்சை நிறம் தெரியாத அளவுக்கு காணப்பட்டது. உறை பனியால் சாலையோர வியாபாரிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளான நிலையில் குப்பைகளை எரித்து குளிர் காய்ந்து வந்தனர்.
மேலும் சுற்றுலா பயணிகளும் அதிகாலை நேரத்தில் வெளியே வராமல் விடுதியிலேயே முடங்கி கிடந்தனர். இன்று காலை நிலவரப்படி கொடைக்கானலில் 7 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை காணப்பட்டது. வரும் நாட்களில் இது மேலும் 0 டிகிரியாக குறையலாம் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் ஓரளவு குறைந்துள்ள நிலையில் பகல் பொழுதில் வெளியே வர முடியாமல் மதிய நேரத்துக்கு பிறகே வெளியே வருகின்றனர்.
மேலும் கொடைக்கானலில் அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையால் கடும் பனி மூட்டம் நிலவி எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடும் உறை பனி, பனி மூட்டத்தால் பள்ளிக்கு செல்லும மாணவ-மாணவிகளும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் நகர மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
- இன்று தொடங்கி உள்ள மலர் கண்காட்சி வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- பெரியவர்களுக்கு ரூ.150-ம் சிறியவர்களுக்கு ரூ.75-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 4-வது மலர் கண்காட்சியை இன்று செம்மொழிப் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் கண்காட்சியை பார்வையிட்டார்.
மலர் கண்காட்சியில் யானை, மயில், பறவை, பட்டாம்பூச்சி, ஊட்டி மலை ரயில், படகு, கார், பொம்பைகள் போன்ற வடிவங்களில் குழந்தைகளைக் கவரும் வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இன்று தொடங்கி உள்ள மலர் கண்காட்சி வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ.150-ம் சிறியவர்களுக்கு ரூ.75-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- டி.டி.எப்.வாசன் சமீபத்தில் மலைப்பாம்பை கையில் வைத்துக்கொண்டு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
- சென்னையில் உள்ள வீட்டில் மட்டுமே பாம்பு உள்ளிட்டவற்றை வைத்து பராமரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் காரமடை அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் யூடியூபர் டி.டி.எப்.வாசன். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டுவது, காரை அஜாக்கிரதையாக இயக்குவது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இந்த நிலையில் டி.டி.எப்.வாசன் சமீபத்தில் மலைப்பாம்பை கையில் வைத்துக்கொண்டு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அந்த வீடியோவில் தான் அந்த பாம்பை உரிமம் பெற்று வளர்த்து வருவதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
டி.டி.எப்.வாசன் உரிமம் பெற்றிருந்தாலும் பாம்பை துன்புறுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டது குறித்து சென்னை வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே டி.டி.எப்.வாசனின் வெள்ளியங்காடு இல்லத்துக்கு காரமடை வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் வேறு ஏதாவது விலங்குகளை வளர்த்து வருகிறாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது சென்னையில் உள்ள வீட்டில் மட்டுமே பாம்பு உள்ளிட்டவற்றை வைத்து பராமரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரமடை வனத்துறையினர் கூறுகையில், இங்குள்ள வீட்டில் சோதனை நடத்தினோம். ஆனால் இங்கு விலங்குகள் எதுவும் இல்லை. இது தொடர்பான விவரங்களை சென்னை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து விட்டோம் என்றனர்.
- 82 பேருடன் வந்த தனியார் பேருந்து திருமங்கலம் நகர் பகுதியில் ஆனந்தா தியேட்டர் நிறுத்தத்தில் நின்றது.
- அனைவரும் திருமங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமக்கப்பட்டு உள்ளனர்.
திருமங்கலம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு தனியார் பேருந்து ஒன்று 82 பயணிகளுடன் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தை டிரைவர் வைரமுத்து என்பவர் ஓட்டி வந்தார்.
சங்கரன்கோவில், சிவகிரி, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 82 பேருடன் வந்த தனியார் பேருந்து காலை ஆறு மணிக்கு திருமங்கலம் நகர் பகுதியில் ஆனந்தா தியேட்டர் நிறுத்தத்தில் நின்றது.
அங்கு பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பேருந்து நிலையம் நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இதில் பாரத ஸ்டேட் வங்கி அருகே எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலை நடுவே இருந்த தடுப்பில் மோதி சுவர் மீது ஏறி நின்றது.
திடீரென ஏற்பட்ட இந்த விபத்தில் பேருந்தில் வந்த பயணிகள் ஒவ்வொருவரும் முன் இருக்கை கம்பியில் மோதியதில் பெண்கள் 8 பேர் உட்பட 12 பேர் காயம டைந்தனர்.
அவர்கள் அனைவரும் திருமங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமக்கப்பட்டு உள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஆய்வினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
- மாநகராட்சி சார்பில் சாலை பராமரிப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுடன் இணைந்து மக்களின் கோரிக்கைகளை அறிந்து, மக்களுடன் பயணிக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இன்றைக்கு சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 44 மாமன்ற உறுப்பினர் வார்டுகளிலும், 83 வட்ட வாரியான வார்டுகளிலும் ஆய்வினை தொடங்கி உள்ளோம். இந்த ஆய்வினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
ஆய்வின்போது அப்பகுதிக்குட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள், வட்ட கழக செயலாளர்கள், மாநகராட்சி துறை சார்ந்த செயலாளர்கள், மெட்ரோ துறை சார்ந்த அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் உடன் வருகிறார்கள். ஒவ்வொரு தெரு வாரியாக, வீடு வாரியாக இந்த ஆய்வினை மேற்கொண்டு உள்ளோம்.
பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கைகளை கண்டறிந்து, அந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலே இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளோம். இப்பகுதியில் காணப்படும் சிறுசிறு குறைகளை உடனே தீர்க்கும் வகையில் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளோம்.

வருகின்ற வழியில் அங்கன்வாடியை பார்த்தோம். அங்கு என்னென்ன தேவைகள், குறைபாடுகள் என்பதை கேட்டு கண்டறிந்தோம். அந்த குறைபாடுகள் வரும் நாட்களில் தீர்க்கப்படும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
சிறுசிறு குறைகளை பொதுமக்களிடம் நேரடியாக கேட்டு, கண்டறிந்து அந்த குறைகளை அந்த துறையினருடன் இணைந்து குறைகளை தீர்க்கும் வகையில் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளோம்.

2022-ம் ஆண்டு சொத்து வரியை உயர்த்தப்பட்டது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் நம்முடைய மாநிலத்தில் வரி வசூலிப்பது குறைவாகவே உள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் அரசு சார்பில் அதிகமாக உள்ளது.
மாநகராட்சி சார்பில் சாலை பராமரிப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
நவம்பர், டிசம்பர் மாதத்தில் பெய்யும் மழை காரணமாக சில பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறக்கூடிய சூழல் உள்ளது.
இப்போது வரை 5000 பகுதிகள் கண்டறியப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகிறது. சீரமைக்க முடியாத பகுதிகளில் புதிதாகவே சாலைகள் போடுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்போது தான் மழைக்காலம் முடிந்துள்ளது. இந்த மாதம் முதல் தொடர்ந்து சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என்று கூறினார்.






