என் மலர்
நீங்கள் தேடியது "கடல் அரிப்பு"
- கடந்த சில மாதங்களாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.
- இதனைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில தி.மு.க. அரசுக்கு உள்ளது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருச்செந்தூர் கடற்கரையைப் பொறுத்தவரையில், பவுர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் கடல் உள் வாங்குவதும், பிற நாட்களில் கடற்கரையை தாண்டி கடல் நீர் வருவதும் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், கடந்த சில மாதங்களாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலை நீடித்தால் அடுத்த நான்கைந்து ஆண்டுகளுக்குள் கோயிலில் உள்ள கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக்கிணறு வரை கடல் அலை வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில தி.மு.க. அரசுக்கு உள்ளது.
முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, கடல் அரிப்பைத் தடுக்கவும், பக்தர்களுக்கு விரைந்து தரிசனம் கிடைக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
- கோவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆன்மீக தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றம் அதிகமாக காணப்பட்டு கடற்கரையில் இருந்து சுமார் 50 அடி தூரம் வரை 7 அடியில் இருந்து 10 அடி வரை பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடல் அரிப்பை தடுத்து கோவிலை பாதுகாக்கும் பொருட்டு இன்று காலை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன் வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் இளம் பகவத் ஆகியோர் கடற்கரையில் அரிப்பு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலையொட்டி உள்ள கடற்கரை தொடர்ந்து காலநிலை மாற்றத்தால் அரிப்பு ஏற்பட்டு பக்தர்கள் நீராட முடியாத நிலை உள்ளது. கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்து கடல் அரிப்பு பாதிப்பு ஏற்படுவது ஒரு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடற்கரை குறைந்து கொண்டே வருகிறது. அதை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக வந்துள்ளோம்.
இதற்கு நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு முன்பாக கடற்கரை அரிப்பை தடுக்க ஐ.ஐ.டி. நிபுணர்கள் மற்றும் சிறந்த வல்லுனர்கள் மூலமாக ஆய்வு செய்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு நிரந்தரமான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், ஆணையாளர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையாளர் சுகுமாரன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, தலைமை பொறியாளர் பெரியசாமி, திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், மண்டல இணை ஆணையாளர் அன்புமணி, கோவில் பொறியாளர் வெங்கட சுப்பிரமணியன், தாசில்தார் பாலசுந்தரம், ஐ.ஐ.டி. பேராசிரியர் சன்னாசிராஜ், மீன்வளத்துறை இணை இயக்குநர் சந்திரா, உதவி இயக்குநர் புஷ்ரா சற்குணம், செயற்பொறியாளர் கணபதி ரமேஷ், தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் உமரி சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கடல் அரிப்பால் சரிந்து விழும் அபாய நிலையில் உள்ளன.
- கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குலசேகரன்பட்டினம்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது. கோவிலில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில் சுமார் 200 அடி தூரத்துக்கு 8 அடி ஆழத்துக்கும் அதிகமாக அரித்து சென்றது. அங்கு பாறைகள் தென்படுவதால் அவற்றில் நின்று புனித நீராடும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
இந்த நிலையில் திருச்செந்தூர்- குலசேகரன்பட்டினம் இடையிலும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. குலசேகரன்பட்டினம் வடக்கூரை அடுத்த காட்டு பகுதியில் கடற்கரையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பனை மரங்களை கடல் அலைகள் வாரி சுருட்டின. சரிந்த சில பனை மரங்களை கடல் அலைகள் இழுத்து சென்றன. மேலும் சில பனை மரங்கள் சரிந்து விழும் நிலையில் உள்ளன.
குலசேகரன்பட்டினத்தில் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் கடற்கரையோரத்தில் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் உள்ளன. இவைகளும் கடல் அரிப்பால் சரிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- இறங்கும் இடத்தில் தடுப்புவேலிகள் அமைத்து அடைக்கப்பட்டுள்ளது.
- கடல் உள்வாங்குவதும், கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டும் வருகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பவுர்ணமி நாட்களில் கோவில் கடற்கரையில் இரவில் குடும்பத்தோடு தங்கி வழிபாடு செய்வார்கள்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் திடீரென உள்வாங்குவதும், வெளியே சீற்றம் அதிகமாக காணப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அமாவாசையாக இருந்ததினால் நேற்று காலையில் இருந்து கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
கடல் சீற்றத்தின் காரணமாக கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சுமார் 20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு இந்த கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோவில் முன்புள்ள கடலில் இறங்க அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் பகுதியில் இந்த கடல் அரிப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே படிக்கட்டுகள் வழியாக பக்தர்கள் இறங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிக அளவு கடல் அலைகளின் சீற்றத்தின் காரணமாக 2-வது நாளாக அதிக அளவில் இந்த அரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே படிக்கட்டுகள் வழியாக இறங்கும் இடத்தில் தகரத்தை வைத்தும், தடுப்புவேலிகள் அமைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் இதே போல் பக்தர்கள் கடற்கரையில் இறங்கும் இடத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் மணலை கொட்டி கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தை சீர் செய்தனர். ஆனால் மீண்டும் தற்போது அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒருபுறம் கடற்கரையில் அதிக அலைகள் காரணமாக கடல் அரிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் அதே கடற்கரையில் சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் கடல் உள்வாங்கிய நிலையில் காணப்படுகிறது.
சுமார் 50 அடி கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் பாறைகளும், மணல் திட்டுகளும் அதிகமாக தென்படுகிறது. கோவில் கடற்கரை பணியாளர்கள், காவல்துறையினர் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.
- மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், ஊராட்சி தலைவர் சாமுண்டீஸ்வரி உடன் இருந்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு பகுதியில் கடல் அரிப்பை தடுக்க ரூ.9.62கோடி செலவில், 60மீட்டர் நீளத்தில் தடுப்புகற்கள் மற்றும் மீன் இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜனார்த்தனன், திருக்கழுகுன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், ஊராட்சி தலைவர் சாமுண்டீஸ்வரி உடன் இருந்தனர்.
- ஏழு நேர்கல் தடுப்பு அமைக்கும் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- பணிகளை திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி ஆய்வு செய்தார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சிக்கு உள்பட்ட கொக்கிலமேடு மீனவர் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் நீண்டகாலமாக கடல் சீற்றத்தால் ஏற்படும் கடலரிப்பால், தங்களது படகு, வலை, எந்திரங்கள் உள்ளிட்டவைகளை பாதுகாக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இதை தடுப்பதற்காக கடற்கரை ஓரத்தில் நேர்கல் தடுப்பு மற்றும் மீன் இறங்குதளம் அமைத்து தரவேண்டும் என அரசிடம் அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதற்கு அரசு 9.62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. தற்போது மீன்வளத்துறை சார்பில், கடலில் பாறை கற்கள் கொட்டப்பட்டு ஏழு நேர்கல் தடுப்பு அமைக்கும் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி ஆய்வு செய்தார். பின்னர் அப்பகுதி மீனவர்களிடம் நேர்கல் தடுப்பு பணிகள் குறித்தும், அவர்களது மீன்பிடி தொழில் வளம் சார்ந்த குறைகளையும் கேட்டறிந்தார்.
- உவரி, கூட்டப்பனை, கூடுதாழை கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
- சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு செய்து சேத விவரம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்ட கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்பு அதிகமாக உள்ளது. உவரி, கூட்டப்பனை, கூடுதாழை கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதன் காரணமாக கூட்டப்பனை மீனவர் கிராமத்தில், அரசால் கடற்கரையில் கட்டப்பட்டு இருந்த மீன் ஏலக்கூடம் மற்றும் வலைபின்னும் கூடத்தில் கடல்நீர் புகுந்தது. இதனால் அந்த கட்டிடம் சரிந்து விழுந்தது.
இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு செய்து சேத விவரம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
- கடல் அலைகள் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டது.
- ரூ. 6 கோடியே 83 லட்சம் மதிப்பில் மீன் இறங்கு தளம் அமைக்க உள்ளது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூர் மீனவர் கிராமம் அமைந்துள்ளது.
இந்த மீனவர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகுகள் மற்றும் விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் .
தரங்கம்பாடியில் மீன் பிடி துறைமுகம் அமைக்கப்பட்ட நிலையில் அருகில் உள்ள குட்டியாண்டியூர் கிராமத்தில் கடல் அலைகள் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டது.
இதனால் கரையில் படகுகளை நிறுத்த முடியாத நிலைமை உண்டானது. கரை அரிப்பை தடுக்கும் வகையில் கருங்கல் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனை ஏற்று தமிழக அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 6 கோடியே 83 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
கரையில் கருங்கல் கொட்டி தடுப்புச் சுவர் அமைக்கப்படுவது உடன் மீன் இறங்க தளமும் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான பூமி பூஜை குட்டியாண்டியூர் கடற்கரையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தரங்கை பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி, மீன்வளத்துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பங்கேற்று பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
உதவி செயற்பொறியாளர் ரவீந்திரன் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் பங்கேற்றனர்.
- மீன்வளத்துறை அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து, அரசின் பார்வைக்கு கொண்டு சென்றது.
- நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணி சீமான் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அருகே உள்ள புதுகல்பாக்கம் மீனவர் பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டு, மணல்பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வந்தது., இதனால் மீனவர்கள் படகுகளை நிறுத்தி வைக்கவும், மீன்களை இறக்கவும், சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து, அரசின் பார்வைக்கு கொண்டு சென்றது. அரசு 8 கோடி ரூபாய் மதிப்பில், 4 வரிசைகளில் நேர்கல் தடுப்புகளும், 2 வலை பின்னும் கூடங்களும் அங்கு கட்ட முடிவு செய்து அதற்கான கட்டுமான பணிகளை செய்து வந்தனர்., தற்போது பணிகள் நிறைவடைந்தது. அப்பகுதியை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி, திருப்போரூர் ஆத்ம வேளாண்மைக் குழுத் தலைவர் பையனூர் சேகர், நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணி சீமான் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
- வீடுகள் இடியும் அபாயம்
- கடந்த 4 நாட்களாக குளச்சல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது
கன்னியாகுமரி :
குளச்சல் அருகே கொட்டில்பாட்டில் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் ராட்சத அலைகள் எழுந்து கடலரிப்பு தடுப்பு சுவரை தாண்டி விழுந்தது. இதில் ஆலயத்தின் அருகில் ஏற்பட்ட கடலரிப்பில் அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சுமார் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்ததில் மேற்கு சாலையில் துண்டிப்பு ஏற்பட்டது. மேலும் கிழக்கு பகுதியில் 2 இடங்களில் அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து கடலில் விழுந்தது. அங்கு மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக குளச்சல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. நேற்று மீண்டும் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் பள்ளத்தில் கொட்டப்பட்ட மணல் முழுவதும் ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் கொட்டில்பாடு கடற்கரை செல்லும் கிழக்கு சாலையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து எழும் ராட்சத அலைகளினால் சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டு அருகில் உள்ள வீடுகள் இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கொட்டில்பாட்டில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மீனவர்கள் இன்று காலை மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.
குளச்சலில் ஏற்பட்ட கடலரிப்பில் துறைமுக பழைய பாலம் பகுதியில் மணலரிப்பு ஏற்பட்டுள்ளது. பாலத்தின் அஸ்திவாரம் பகுதியில் சுமார் 7 அடி ஆழத்திற்கு மணலரிப்பு ஏற்பட்டு தூண்கள் வெளியே தெரிகிறது. மணற்பகுதியிலும் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் மாலை வேளையில் பொழுது போக்கிற்கு கடற்கரை வரும் பொதுமக்கள் மணற்பரப்பில் அமர முடியாமல் உள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளையொட்டி மாலை கடற்கரை வந்த பொதுமக்கள் மணற்பரப்பில் உட்கார முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். இன்று கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதியினை கல்குளம் தாசில்தார் கண்ணன் தலைமையில் குளச்சல் வருவாய் ஆய்வாளர் முத்து பாண்டி ஆகியோர் பார்வை யிட்டனர். இதைத்தொடர்ந்து குளச்சல் நகராட்சியினரும் சென்று பார்வை யிட்டனர்.
- மீன்பிடி வலைகளை பாதுகாக்க வைக்கப்படும் 2 களமும் கடல் சீற்றத்தில் சிக்கியுள்ளது.
- மீனவர்கள் தங்களது மீன் வலை, படகு போன்றவற்றை கடற்கரை பகுதியில் உள்ள சுடுகாட்டில் நிறுத்தி வைத்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை பிள்ளைச்சாவடி கிராமம் கடலோரப் பகுதியில் உள்ளது. இங்கு ஏற்கனவே கடல் அரிப்பு காரணமாக 10-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் பேரில் கல் கொட்டும்பணியை அரசு மேற்கொண்டது.
ஆனால், தமிழக பகுதியில் கொட்டப்பட்டுள்ளது போல கடல் நோக்கி தூண்டில் வளைவு அமைக்காமல் சாலை போடுவது போல் கல் கொட்டப்பட்டது.
இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக கல் கொட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக பிள்ளைச்சாவடியின் வடக்குப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து கடலில் அடித்து செல்லப்பட்டன. மேலும் கடலோர பகுதியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் அடித்து செல்லப்பட்டன.
மீன்பிடி வலைகளை பாதுகாக்க வைக்கப்படும் 2 களமும் கடல் சீற்றத்தில் சிக்கியுள்ளது. எந்த நேரத்திலும் இந்த 2 களங்களும் கடலுக்குள் விழும் என்ற அபாய நிலையில் உள்ளது.
இதனால் கடலோரப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மீனவர்கள் தங்களது மீன் வலை, படகு போன்றவற்றை கடற்கரை பகுதியில் உள்ள சுடுகாட்டில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி பிள்ளைச்சாவடி மீனவ கிராமம், ஆதிதிராவிடர் பகுதி குடியிருப்பு பஞ்சாயத்தார், பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட திரண்டனர்.
தகவலறிந்த கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசி மறியல் நடத்தவிடாமல் கைவிட செய்தார்.
மேலும் அவர்களோடு, கடல் அரிப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டார். கடல் அரிப்பை தடுப்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ராட்சத கற்கள் கொட்டப்படும் மற்றும் தூண்டில் முள் வளைவு போல கற்கள் கொட்டப்படும் என வாக்குறுதி அளித்தார்.
இதையேற்று பொதுமக்கள் போராட்ட முடிவை கைவிட்டனர். மறியலுக்காக மீனவர்கள், கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டதால் சிறிதுநேரம் பதட்டம் நிலவியது.
- கடல் சீற்றத்தின் போதும் இந்த தடுப்புச்சுவர் கரைகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.
- 2 ஆயிரம் கான்கிரீட் கற்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
சென்னை:
சென்னை நேப்பியர் பாலம் அருகே கடல் முகத்துவாரத்தில் கடல் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் கூவம் ஆற்றின் தண்ணீரும் கடலுக்குள் செல்ல வழியில்லாமல் தேங்கி காணப்படுகிறது.
இந்நிலையில் கடல் அரிப்பை தடுக்க சென்னை நேப்பியர் பாலம் அருகே கடல் முகத்துவார பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.
இந்த பணிகளுக்காக நேப்பியர் பாலம் அருகே 200 கான்கிரீட் டெட்ராபாட் கற்கள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் 3 ஆயிரம் கான்கிரீட் டெட்ராபாட் கற்கள் கொண்டுவரப்பட உள்ளன. இந்த கான்கிரீட் கற்கள் கடலுக்குள் வேலி போல அமைக்கப்படும். இந்த தடுப்புச்சுவர் பெரிய அலைகளை தடுத்து நிறுத்தி கடல் அரிப்பை தடுக்கும். பெரிய அலைகள் இந்த தடுப்புச் சுவர் மீது மோதி சிதறடிக்கப்படும். இதனால் அலைகளின் தாக்கம் குறையும். கடல் சீற்றத்தின் போதும் இந்த தடுப்புச்சுவர் கரைகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.
இந்த தடுப்புச்சுவர் பெரிய அலைகளை தாங்கும் வகையில் உறுதியாக அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. தற்போது 2 ஆயிரம் கான்கிரீட் கற்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 3 ஆயிரம் கான்கிரீட் கற்கள் கொண்டு வரப்படும். இது கூவத்தை சுத்தப்படுத்தும் திட்டமாகும். குறைந்த அளவிலான அலையின்போது கூவம் ஆற்றின் தண்ணீர் சீராக கடலில் கலக்கும். பெரிய அலைகளின் போது கடலில் உள்ள நீர் கூவத்தில் பாயும். இதனால் கூவம் ஆற்றின் நீர் இயற்கையாகவே சுத்தமாகிறது.
பெரிய அலைகள் ஒன் றன்பின் ஒன்றாக ஏற்பட்டு கரையை அடையும்போது இந்த தடுப்புச்சுவர் அலையின் வேகத்தை குறைக்கின் றன. இதனால் கரையில் மண் அரிப்பு ஏற்படாது.
ஏற்கனவே கடலும் ஆறும் சந்திக்கும் முகத்துவாரத்தில் ஆற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மணலை கொண்டு வருகிறது. இதனால் எந்திரத்தை பயன்படுத்தி மண் மற்றும் சேற்றை அகற்ற வேண்டும். அப்போதுதான் கூவம் தண்ணீர் கடலுக்குள் செல்லும்.
இந்த தடுப்பு சுவர் அமைப்பதால் கடலில் இருந்து வரும் மண்ணின் அளவு குறையும். இதனால் கூவத்தில் உள்ள தண்ணீர் தடையின்றி கடலில் கலக்கிறது. பொதுப்பணித்துறை, சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த கட்டமைப்பை மேற்கொண்டு வருகிறது. 3 முதல் 4 மாதங்களில் இந்த பணிகள் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.