search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sea erosion"

    • உவரி, கூட்டப்பனை, கூடுதாழை கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
    • சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு செய்து சேத விவரம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்ட கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்பு அதிகமாக உள்ளது. உவரி, கூட்டப்பனை, கூடுதாழை கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

    இதன் காரணமாக கூட்டப்பனை மீனவர் கிராமத்தில், அரசால் கடற்கரையில் கட்டப்பட்டு இருந்த மீன் ஏலக்கூடம் மற்றும் வலைபின்னும் கூடத்தில் கடல்நீர் புகுந்தது. இதனால் அந்த கட்டிடம் சரிந்து விழுந்தது.

    இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு செய்து சேத விவரம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • கடல் அலைகள் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டது.
    • ரூ. 6 கோடியே 83 லட்சம் மதிப்பில் மீன் இறங்கு தளம் அமைக்க உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூர் மீனவர் கிராமம் அமைந்துள்ளது.

    இந்த மீனவர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகுகள் மற்றும் விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் .

    தரங்கம்பாடியில் மீன் பிடி துறைமுகம் அமைக்கப்பட்ட நிலையில் அருகில் உள்ள குட்டியாண்டியூர் கிராமத்தில் கடல் அலைகள் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டது.

    இதனால் கரையில் படகுகளை நிறுத்த முடியாத நிலைமை உண்டானது. கரை அரிப்பை தடுக்கும் வகையில் கருங்கல் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    அதனை ஏற்று தமிழக அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 6 கோடியே 83 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்தது.

    கரையில் கருங்கல் கொட்டி தடுப்புச் சுவர் அமைக்கப்படுவது உடன் மீன் இறங்க தளமும் அமைக்கப்பட உள்ளது.

    இதற்கான பூமி பூஜை குட்டியாண்டியூர் கடற்கரையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் தரங்கை பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி, மீன்வளத்துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பங்கேற்று பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

    உதவி செயற்பொறியாளர் ரவீந்திரன் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் பங்கேற்றனர்.

    • வைத்திலிங்கம் எம்.பி. மத்திய அரசிடம் மனு
    • மீனவர்கள் உடமைகளை காத்திடும் வகையில் கிரானைட் கல் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் பாராளுமன்ற கூட்டத்தொடரில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை, காரைக்கால் கடற்கரையோர கிராமங்களில் பல ஆண்டாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. புதுவையின் பிராதன நகர பகுதியை பாதுகாக்க 2 கி.மீ. தூரத்துக்கு கடற்கரையில் கருங்கற்கள் கொட்டி பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது. கிராமப்பற கடற்கரைகளில் பாதுகாப்பு இல்லாததால் கடல் அரிப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது.

    மாநில அரசு திட்டமிடல் இன்றி கடல் அரிப்புக்கு எதிரான பணிகளை ஆங்காங்கே செய்துவருவது, தவிர்க்க க்கூடிய செலவினங்களுக்கு வழி வகுக்கிறது.

    மத்திய அரசு நிலையை உணர்ந்த புதுவை, காரைக்கால் கடற்கரையோர பாதுகாப்புக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்கரைகளை ஆய்வு செய்து மீனவர்கள் உடமைகளை காத்திடும் வகையில் கிரானைட் கல் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    • மணலை தடுக்க தெற்கு பகுதியில் திட்டமிட்டப்படி பணிகள் நடக்கவேண்டும்.
    • புதுவை கடற்கரையில் தலைமைச்செயலகம் உள்ள வடக்கு கடற்கரை பகுதியில் பணிகள் முடிந்தாலும், தென்மேற்கு பகுதியில் திட்டமிட்டப்படி பணிகள் முடிக்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவையில் தலைமை செயலகம் எதிரே கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி கடந்த 2017-ம் ஆண்டு மார்ச்சில் ரூ.20 கோடியில் தொடங்கப்பட்டது.

    கடலில் 200 மீட்டர் நீளத்துக்கு கற்கள் கொட்டப்பட்டன. அதையடுத்து மணல் பரப்பு இப்பகுதியில் உருவானது. 2017-ம் ஆண்டு ஆகஸ்ட்

    10-ம் தேதி கடற்கரையில் மணல் பரப்பு உருவாகும் வகையில் முக்கோண அமைப்பு உருவாக்கப் பட்டது. பெரிய இரும்பு தகடுகள் முக்கோணம் போல் வடிவமைக் கப்பட்டது.

    கடலில் பள்ளம் தோண்டி அதன் மீது கற்கள் கொட்டி இரும்பினால் உருவான முக்கோண அமைப்பு வைக்கப்பட்டது. இது கடலின் மட்டத்துக்கு இணையாக இருந்தது. இந்த முக்கோண அமைப்பு கடலின் சீற்றத்தை தடுத்து வலு குறைத்ததால் கரையில் மணல் குவிந்தது. இந்த பணி 2019-ல் முடிவடைந்தது.

    புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மணல் பரப்பில் இறங்கி விளையாடி மகிழ்கின்றனர். இந்த மணல்பரப்பு கடல் சீற்றம் ஏற்பட்டால் மாயமாகும். புதுவை கடற்கரையில் தலைமைச்செயலகம் உள்ள வடக்கு கடற்கரை பகுதியில் பணிகள் முடிந்தாலும், தென்மேற்கு பகுதியில் திட்டமிட்டப்படி பணிகள் முடிக்கவில்லை.

    இதனால் தெற்கு பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இப்பகுதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ளது. இத்திட்டத்தில் பணிகள் நடந்தால்தான் கடல் அரிப்பு குறைந்து, மணல்பரப்பு உருவாகும்.

    இதுகுறித்து தேசியகடல் தொழில்நுட்ப இயக்குநர் ரமணமூர்த்தி கூறும்போது, வடகிழக்கு பருவமழையின் போது வடக்கிலிருந்து வரும் மணலை தடுக்க தெற்கு பகுதியில் திட்டமிட்டப்படி பணிகள் நடக்கவேண்டும். தலைமைச்செயலகம் அருகே மணல்பரப்பு உருவாக்கியதுபோல முக்கோணப்பரப்பு உருவாக்கி பணிகள் நடந்தால் துறைமுகத்துக்கு திரும்பும் மணலின் அளவு குறையும். கடற்கரையில் மணல்பரப்பு உருவாகும். இந்த திட்டம் நிறைவடைந்தால் அனைத்து பருவகாலங்களிலும் புதுவை கடற்கரையில் மணல்பரப்பு நீடித்து இருக்கும் என தெரிவித்தார்.

    இதையடுத்து ஸ்மார் சிட்டி திட்டத்தில் தெற்கு பகுதியில் மணல் பரப்பு உருவாக்க திட்டம் தயாரிக்கப்பட்டு, அதன் அறிக்கையை புதுவை அரசிடம் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் சமர்பித்துள்ளது.

    இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் இத்திட்டம் செயல்பாட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    • கடல் சீற்றத்தின் போதும் இந்த தடுப்புச்சுவர் கரைகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.
    • 2 ஆயிரம் கான்கிரீட் கற்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

    சென்னை:

    சென்னை நேப்பியர் பாலம் அருகே கடல் முகத்துவாரத்தில் கடல் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் கூவம் ஆற்றின் தண்ணீரும் கடலுக்குள் செல்ல வழியில்லாமல் தேங்கி காணப்படுகிறது.

    இந்நிலையில் கடல் அரிப்பை தடுக்க சென்னை நேப்பியர் பாலம் அருகே கடல் முகத்துவார பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.

    இந்த பணிகளுக்காக நேப்பியர் பாலம் அருகே 200 கான்கிரீட் டெட்ராபாட் கற்கள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் 3 ஆயிரம் கான்கிரீட் டெட்ராபாட் கற்கள் கொண்டுவரப்பட உள்ளன. இந்த கான்கிரீட் கற்கள் கடலுக்குள் வேலி போல அமைக்கப்படும். இந்த தடுப்புச்சுவர் பெரிய அலைகளை தடுத்து நிறுத்தி கடல் அரிப்பை தடுக்கும். பெரிய அலைகள் இந்த தடுப்புச் சுவர் மீது மோதி சிதறடிக்கப்படும். இதனால் அலைகளின் தாக்கம் குறையும். கடல் சீற்றத்தின் போதும் இந்த தடுப்புச்சுவர் கரைகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.

    இந்த தடுப்புச்சுவர் பெரிய அலைகளை தாங்கும் வகையில் உறுதியாக அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. தற்போது 2 ஆயிரம் கான்கிரீட் கற்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 3 ஆயிரம் கான்கிரீட் கற்கள் கொண்டு வரப்படும். இது கூவத்தை சுத்தப்படுத்தும் திட்டமாகும். குறைந்த அளவிலான அலையின்போது கூவம் ஆற்றின் தண்ணீர் சீராக கடலில் கலக்கும். பெரிய அலைகளின் போது கடலில் உள்ள நீர் கூவத்தில் பாயும். இதனால் கூவம் ஆற்றின் நீர் இயற்கையாகவே சுத்தமாகிறது.

    பெரிய அலைகள் ஒன் றன்பின் ஒன்றாக ஏற்பட்டு கரையை அடையும்போது இந்த தடுப்புச்சுவர் அலையின் வேகத்தை குறைக்கின் றன. இதனால் கரையில் மண் அரிப்பு ஏற்படாது.

    ஏற்கனவே கடலும் ஆறும் சந்திக்கும் முகத்துவாரத்தில் ஆற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மணலை கொண்டு வருகிறது. இதனால் எந்திரத்தை பயன்படுத்தி மண் மற்றும் சேற்றை அகற்ற வேண்டும். அப்போதுதான் கூவம் தண்ணீர் கடலுக்குள் செல்லும்.

    இந்த தடுப்பு சுவர் அமைப்பதால் கடலில் இருந்து வரும் மண்ணின் அளவு குறையும். இதனால் கூவத்தில் உள்ள தண்ணீர் தடையின்றி கடலில் கலக்கிறது. பொதுப்பணித்துறை, சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த கட்டமைப்பை மேற்கொண்டு வருகிறது. 3 முதல் 4 மாதங்களில் இந்த பணிகள் முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குமரி மாவட்டத்தில் கடல் அரிப்பை தடுக்க ரூ.200 கோடியில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். இதில் மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் மீனவ பிரதிநிதிகள் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட கடல் அரிப்பு, கடல் நீர் ஊருக்குள் புகுந்தது, அலை தடுப்பு சுவர்கள் சேதம், தூண்டில் வளைவுகள் நாசமானது குறித்து பேசினர்.

    தேங்காய்பட்டினம் மீன் பிடி துறைமுகத்தில் மணல் சேர்ந்து இருப்பதாகவும், இதனால் தடை காலம் முடிந்து கடலுக்கு செல்லும் படகுகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவித்தனர். எனவே துறைமுகத்தில் குவிந்துள்ள மணலை அகற்ற வேண்டும், கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒகி புயலில் காயம் அடைந்த மீனவர் களுக்கு நிவாரண நிதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினர்.

    மீனவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசியதாவது:-

    குமரி மாவட்டம் 72 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரை கிராமங்களை கொண்டுள்ளது. இங்கு கடல் அரிப்பு மற்றும் அலை சீற்றம் காரணமாக அடிக்கடி பாதிப் புகள் ஏற்படுகிறது. இதற்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி போதவில்லை. எனவே இம் மாவட்டத்தில் கடல் அரிப்பை தடுக்க ரூ.200 கோடியில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதுபோல ஒகி புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் 32,500 பேருக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில் சிலருக்கு கிடைக்க வில்லை என இப்போது கூறப்பட்ட புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் குவிந்து உள்ள மணலை அகற்றவும் ஏற்பாடு செய்யப்படும். மீனவர்கள் அளிக்கும் புகார் மனுக்களுக்கு தபால் மூலம் பதில் அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் குறைதீர்க்கும் கூட்டத்திலும் பதில்கள் வழங்கப்படுகிறது. இதில் தாமதம் ஏற்பட்டால் அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    குறை தீர்க்கும் கூட்டத்தில் இன்று வழக்கத்தைவிட அதிகமான மீனவர்கள் மற்றும் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதனால் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கு நிரம்பி வழிந்தது. கூட்ட அரங்கிற்கு வெளியேயும் ஏராளமான மீனவர்கள் திரண்டு நின்றனர். இதனால் அடுத்த கூட்டத்தை இதைவிட பெரிய அரங்கில் நடத்திட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    ×