search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் கடல் அரிப்பை தடுக்க ரூ.200 கோடியில் திட்டம்- கலெக்டர் தகவல்
    X

    குமரி மாவட்டத்தில் கடல் அரிப்பை தடுக்க ரூ.200 கோடியில் திட்டம்- கலெக்டர் தகவல்

    குமரி மாவட்டத்தில் கடல் அரிப்பை தடுக்க ரூ.200 கோடியில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். இதில் மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் மீனவ பிரதிநிதிகள் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட கடல் அரிப்பு, கடல் நீர் ஊருக்குள் புகுந்தது, அலை தடுப்பு சுவர்கள் சேதம், தூண்டில் வளைவுகள் நாசமானது குறித்து பேசினர்.

    தேங்காய்பட்டினம் மீன் பிடி துறைமுகத்தில் மணல் சேர்ந்து இருப்பதாகவும், இதனால் தடை காலம் முடிந்து கடலுக்கு செல்லும் படகுகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவித்தனர். எனவே துறைமுகத்தில் குவிந்துள்ள மணலை அகற்ற வேண்டும், கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒகி புயலில் காயம் அடைந்த மீனவர் களுக்கு நிவாரண நிதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினர்.

    மீனவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசியதாவது:-

    குமரி மாவட்டம் 72 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரை கிராமங்களை கொண்டுள்ளது. இங்கு கடல் அரிப்பு மற்றும் அலை சீற்றம் காரணமாக அடிக்கடி பாதிப் புகள் ஏற்படுகிறது. இதற்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி போதவில்லை. எனவே இம் மாவட்டத்தில் கடல் அரிப்பை தடுக்க ரூ.200 கோடியில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதுபோல ஒகி புயலில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் 32,500 பேருக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில் சிலருக்கு கிடைக்க வில்லை என இப்போது கூறப்பட்ட புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் குவிந்து உள்ள மணலை அகற்றவும் ஏற்பாடு செய்யப்படும். மீனவர்கள் அளிக்கும் புகார் மனுக்களுக்கு தபால் மூலம் பதில் அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் குறைதீர்க்கும் கூட்டத்திலும் பதில்கள் வழங்கப்படுகிறது. இதில் தாமதம் ஏற்பட்டால் அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    குறை தீர்க்கும் கூட்டத்தில் இன்று வழக்கத்தைவிட அதிகமான மீனவர்கள் மற்றும் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதனால் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கு நிரம்பி வழிந்தது. கூட்ட அரங்கிற்கு வெளியேயும் ஏராளமான மீனவர்கள் திரண்டு நின்றனர். இதனால் அடுத்த கூட்டத்தை இதைவிட பெரிய அரங்கில் நடத்திட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    Next Story
    ×