search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மீனவ கிராமத்தில் கடல் அரிப்பால் 10 வீடுகள் இடிந்து விழுந்தது- கிராம மக்கள் மறியல் செய்ய முயற்சி
    X

    மீனவ கிராமத்தில் கடல் அரிப்பால் 10 வீடுகள் இடிந்து விழுந்தது- கிராம மக்கள் மறியல் செய்ய முயற்சி

    • மீன்பிடி வலைகளை பாதுகாக்க வைக்கப்படும் 2 களமும் கடல் சீற்றத்தில் சிக்கியுள்ளது.
    • மீனவர்கள் தங்களது மீன் வலை, படகு போன்றவற்றை கடற்கரை பகுதியில் உள்ள சுடுகாட்டில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை பிள்ளைச்சாவடி கிராமம் கடலோரப் பகுதியில் உள்ளது. இங்கு ஏற்கனவே கடல் அரிப்பு காரணமாக 10-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் பேரில் கல் கொட்டும்பணியை அரசு மேற்கொண்டது.

    ஆனால், தமிழக பகுதியில் கொட்டப்பட்டுள்ளது போல கடல் நோக்கி தூண்டில் வளைவு அமைக்காமல் சாலை போடுவது போல் கல் கொட்டப்பட்டது.

    இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக கல் கொட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக பிள்ளைச்சாவடியின் வடக்குப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து கடலில் அடித்து செல்லப்பட்டன. மேலும் கடலோர பகுதியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் அடித்து செல்லப்பட்டன.

    மீன்பிடி வலைகளை பாதுகாக்க வைக்கப்படும் 2 களமும் கடல் சீற்றத்தில் சிக்கியுள்ளது. எந்த நேரத்திலும் இந்த 2 களங்களும் கடலுக்குள் விழும் என்ற அபாய நிலையில் உள்ளது.

    இதனால் கடலோரப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    மீனவர்கள் தங்களது மீன் வலை, படகு போன்றவற்றை கடற்கரை பகுதியில் உள்ள சுடுகாட்டில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி பிள்ளைச்சாவடி மீனவ கிராமம், ஆதிதிராவிடர் பகுதி குடியிருப்பு பஞ்சாயத்தார், பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட திரண்டனர்.

    தகவலறிந்த கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசி மறியல் நடத்தவிடாமல் கைவிட செய்தார்.

    மேலும் அவர்களோடு, கடல் அரிப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டார். கடல் அரிப்பை தடுப்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ராட்சத கற்கள் கொட்டப்படும் மற்றும் தூண்டில் முள் வளைவு போல கற்கள் கொட்டப்படும் என வாக்குறுதி அளித்தார்.

    இதையேற்று பொதுமக்கள் போராட்ட முடிவை கைவிட்டனர். மறியலுக்காக மீனவர்கள், கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டதால் சிறிதுநேரம் பதட்டம் நிலவியது.

    Next Story
    ×