என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழ்நாட்டில் இன்றைய உடனடித் தேவை பெண்களுக்கான பாதுகாப்பு தான்.
- பெரும்பாலான வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இப்போது வரை நீதி வழங்கப்படவில்லை.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும்; தமிழ்நாட்டில் அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி உள்ளிட்ட பாட்டாளி மகளிர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்களை பாதுகாக்க முடியாத திமுக அரசின் இந்த சர்வாதிகார நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.
மகளிருக்கு பாதுகாப்பு கேட்டு போராடிய பாட்டாளி மகளிர் சங்கத்தினரை கைது செய்வதற்கு எந்த நியாயமும் இல்லை. உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாகப் போற்றப்படும் அண்ணா பல்கலைக் கழகத்தில் அப்பாவி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு நீதி பெற்றுத் தர வேண்டிய தமிழக அரசும், காவல்துறையும் அந்த கொடுங்குற்றத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பாதுகாக்க முயல்கின்றன. இதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமை ஆகும். அந்தக் கடமையை செய்வதற்காகத் தான் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாட்டாளி மகளிர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் அனைவரையும் காவல்துறை சுற்றி வளைத்து கைது செய்திருக்கிறது.
போராட்டத் தலமான சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் எவரும் செல்ல முடியாத அளவுக்கு அனைத்துப் பாதைகளையும் காவல்துறையினர் தடுத்து வைத்திருந்தனர். இப்போராட்டத்தில் பங்கேற்பதற்காக பல மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். போராட்டத்திற்காக வந்த பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணியை அவரது மகிழுந்தில் இருந்து இறங்குவதற்கு கூட அனுமதிக்காமல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அனைத்து வழிகளிலும் காவல்துறை அதன் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்தை முடக்குவதற்காக வள்ளுவர் கோட்டத்தில் குவிக்கப்பட்ட காவல்துறையினரில் ஒரு விழுக்காட்டினரை அண்ணா பல்கலைக்கழகத்தில் நுழைவாயில்களில் நிறுத்தியிருந்தாலோ அல்லது இதில் காட்டிய கெடுபிடியில் ஒரு விழுக்காட்டை அண்ணா பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பில் காட்டி இருந்தாலோ திமுகவினரின் அனைத்து வகையான ஆதரவையும் பெற்ற ஞானசேகரன் போன்ற மனித மிருகங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து அப்பாவி மாணவியை வேட்டையாடியிருக்க முடியாது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கு வக்கில்லாத தமிழக அரசு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டு போராடுபவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு அதன் வீரத்தை வெளிப்படுத்துகிறது. மகளிர் பாதுகாப்புக்காக போராடுபவர்களையும், முதலமைச்சரின் சுவரொட்டி மீது கல் எறிந்ததற்காக வயதான மூதாட்டி ஒருவரையும் கைது செய்வதில் காட்டும் ஆர்வத்தை பெண்கள் மீதான பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழக அரசு காட்ட வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாவிட்டால் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பதவி விலக வேண்டும்.
தமிழ்நாட்டில் இன்றைய உடனடித் தேவை பெண்களுக்கான பாதுகாப்பு தான். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கள்ளக்குறிச்சி திம்மவரத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை, சென்னை வில்லிவாக்கத்தில் 11 வயது சிறுமிக்கு 6 மாதங்களுக்கும் மேலாக பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது, சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, அயனாவரத்தைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் என்.சி.சி முகாமில் பங்கேற்ற 8-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை, திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, சென்னை பூக்கடை பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை கொத்தகம்பட்டியில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, மதுரையை சேர்ந்த 13 வயது சிறுமி சிவகங்கை மாவட்டம், கல்குளம் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை, தஞ்சாவூர் பாப்பாநாட்டில் 45 வயது பெண் கடத்தி பாலியல் வன்கொடுமை, காஞ்சிபுரத்தில் 19 வயதான கல்லூரி மாணவியை 5 பேர் மிரட்டி, கூட்டு பாலியல் வன்கொடுமை என தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இப்போது வரை நீதி வழங்கப்படவில்லை.
திமுக அரசால் மாதாமாதம் வழங்கப்படும் ரூ.1000 உதவித் தொகையையோ மற்றவற்றையோ தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக, தங்களுக்கு பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்; அச்சமின்றி நடமாடுவதற்கான உரிமை வேண்டும் என்பது தான் அவர்களின் உரிமைக்குரலாக உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை அதிக அளவில் திறந்து வைத்தும், கஞ்சா வணிகத்தை ஊக்குவித்தும், போதைப்பொருட்களை தடுக்காமலும் மகளிருக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான குற்றங்களுக்கு உகந்த சூழலை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து வகையான குற்றங்களுக்கும் திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2022-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஓவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு பெண் குழந்தை மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்படுவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 11.12% அளவுக்கும், பெண்களுக்கு எதிரான ஒட்டுமொத்த குற்றங்களின் எண்ணிக்கை 8.31% அளவுக்கும் அதிகரித்துள்ளன. இதற்காக திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
பெண்கள் பாதுகாப்புக்காக போராடும் மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதைக் கைவிட்டு பெண்களின் பாதுகாப்பில் அக்கறை காட்ட வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 'அந்த சார்' உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்சத் தண்டனைப் பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
- பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
- போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
கன்னியாகுமரி:
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.
இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தபடகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதன் மூலம் கடந்த ஒரே ஆண்டில் 20 லட்சத்து 13 ஆயிரத்து 211 பேர் படகில் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டுள்ளனர்.
அதேவேளையில் கடந்த 2023-ம் ஆண்டு 19 லட்சத்து 4 ஆயிரத்து 221 சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் பயணம் செய்துள்ளனர். இதனை ஒப்பிட்டு பார்க்கும் போது 2024-ம் ஆண்டு 1 லட்சத்து 8 ஆயிரத்து 990 பேர் அதிகமாகும்.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தை கடந்த ஆண்டு மாதம் வாரியாக பார்வையிட்ட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
ஜனவரி 2 லட்சத்து 34 ஆயிரத்து 106 பேர், பிப்ரவரி 1 லட்சத்து 58 ஆயிரத்து 802 பேர், மார்ச் 1 லட்சத்து 61 ஆயிரத்து 80 பேர், ஏப்ரல் 1 லட்சத்து 42 ஆயிரத்து 867 பேர், மே 1 லட்சத்து 80 ஆயிரத்து 318 பேர், ஜூன் 1 லட்சத்து 49 ஆயிரத்து 472 பேர் படகில் பயணம் செய்து பார்வையிட்டுள்ளனர்.
ஜூலை 1 லட்சத்து 22 ஆயிரத்து 974 பேர், ஆகஸ்ட் 1 லட்சத்து 40 ஆயிரத்து 710 பேர், செப்டம்பர் 1 லட்சத்து 51 ஆயிரத்து 803 பேர், அக்டோபர் 1 லட்சத்து 69 ஆயிரத்து 489 பேர், நவம்பர் 2 லட்சத்து 9 ஆயிரம் பேர், கடந்த டிசம்பர் 1 லட்சத்து 93 ஆயிரத்து 942 பேர் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வந்துள்ளனர்.
இதில் கடந்த ஆண்டில் ஜனவரி மாதம் மட்டும் அதிக அளவு அதாவது 2 லட்சத்து 34 ஆயிரத்து 106 சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை படகில் பயணம் செய்து பார்வையிட்டு வந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 1½ வருடங்களாக திருவள்ளுவர் சிலையில் கண்ணாடி பாலப்பணிகள் நடைபெற்று வந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
- இசை கச்சேரியில் தந்தை பெரியார், நாராயண குரு, பெருமாள், முருகன் ஆகியோரின் பாடல்களை பாடி கர்நாடக இசை கச்சேரியில் புரட்சியை புகுத்தியவர்.
- பாரம்பரிய உடைகளுக்கு விரோதமாக லுங்கியும், பீச் சர்ட் அணிந்து கச்சேரியில் டி.எம். கிருஷ்ணா பாடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கர்நாடக இசையில் முற்போக்கான சிந்தனைகள், கருத்துகளை பரப்புகிற வகையில் முற்றிலும் மாறுபட்ட இசைக் கச்சேரிகளை நடத்தி, மக்களின் பேராதரவை பெற்று வருகிற டி.எம். கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமியின் 98-வது ஆண்டு மார்கழி கச்சேரியின்போது அவருக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டிருப்பது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன், பாராட்டுகிறேன்.
பாரம்பரிய மரபுகளுக்கு மாறாக, துணிச்சலுடன் இசை கச்சேரிகளை நடத்தி வருபவர் டி.எம். கிருஷ்ணா. குறிப்பாக ஏழை, எளிய மக்கள் வாழ்கிற சேரிகளிலும், மீனவர் பகுதிகளிலும் கர்நாடக இசை கச்சேரிகளை நடத்தி அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றவர். அதேபோல, சமீபத்தில் பாரம்பரிய உடைகளுக்கு விரோதமாக லுங்கியும், பீச் சர்ட் அணிந்து கச்சேரியில் டி.எம். கிருஷ்ணா பாடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சமீபத்தில் கிறிஸ்துமஸ் தினத்தன்று காலை மியூசிக் அகாடமியில் நடந்த கச்சேரியில் அவர் பாடிய பாடல்களை கேட்க அரங்கமே நிரம்பி வழிந்தது. இறுதியாக அரங்கத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி உற்சாகமூட்டியதை எவரும் மறந்திட இயலாது.
அவரது இசை கச்சேரியில் தந்தை பெரியார், நாராயண குரு, பெருமாள், முருகன் ஆகியோரின் பாடல்களை பாடி கர்நாடக இசை கச்சேரியில் புரட்சியை புகுத்தியவர். கர்நாடக இசை என்பது குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைக்கப்பட்டிருந்ததை மீட்டு அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக மாற்றியவர் டி.எம். கிருஷ்ணா. அதனால், அவர்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் மியூசிக் அகாடமி வழங்குகிற எம்.எஸ். சுப்புலட்சுமி சங்கீத கலாநிதி விருதை வழங்கக் கூடாது என்று வழக்கு தொடுத்து தற்போது உச்சநீதிமன்றம் அந்த விருதை வழங்கலாம் என்று தீர்ப்பு வழங்கிய பிறகு தற்போது விருது வழங்கப்படுகிறது.
இத்தகைய துணிச்சல்மிக்க டி.எம். கிருஷ்ணாவுக்கு இந்து குழுமமும், மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளியும் உற்ற துணையாக இருந்து சங்கீத கலாநிதி என்ற விருதை டி.எம். கிருஷ்ணா பெறுவதற்கு ஆதரவாக இருந்ததற்காக அவர்களை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். சமூக, கலாச்சார, சீர்திருத்த கருத்துகளை பொதுவெளியில் துணிந்து பேசக் கூடிய பேராற்றல் மிக்க டி.எம். கிருஷ்ணாவின் பணி சிறக்க தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களால் வனவிலங்குகளுக்கு இடையூறு.
- வனவிலங்குகள் ஆத்திரமடைந்து வாகனஓட்டிகளை தாக்கும் அபாய நிலை உள்ளது.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் உள்ள யானைகள், மான், காட்டு மாடு, காட்டுப்பன்றி, சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊட்டி மற்றும் கோத்தகிரி சாலையை கடந்து வனப்பகுதியின் ஒருபுறத்தில் இருந்து மற்றொரு பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்கின்றன.
நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு குன்னூர், கோத்தகிரி சாலை வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இந்த நிலையில் அந்த சாலைகளில் இரவு நேரங்களில் கோத்தகிரி வியூ பாயிண்ட் செல்வதாக கூறி ஒருசில இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.
மேலும் ரேஸ் செல்லும் மோட்டார் சைக்கிள்களில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

இதன்காரணமாக வனவிலங்குகள் ஆத்திரமடைந்து வாகனஓட்டிகளை தாக்கும் அபாய நிலை உள்ளது. மேலும் வாகன ஓட்டிகளும் விபத்துக்களில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே மேட்டுப்பாளை யம்-கோத்தகிரி சாலையில் வனத்துறையினரும், போலீ சாரும் இணைந்து வாகன சோதனை நடத்துவதுடன் ரோந்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டுமென வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினரும், மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமனன் தலைமையிலான போலீசாரும் இணைந்து மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் இரண்டு-நான்கு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் வாகனங்களில் அதிவேக மாக உலா வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் போலீசார் கூறுகையில், வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ள சாலைகளில் இரவு நேரங்களில் பாதுகாப்பு, கவனம் மற்றும் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும்.
மேலும் வனவிலங்குகளை கண்டால் கூட்டாகவோ, தனியாகவோ சேர்ந்து விரட்ட முயற்சிக்கக் கூடாது. வன விலங்குகளை ஆத்திர மூட்டும் செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.
மேலும் சாகச நோக்கத்துடன் ஊர்வலமாக வந்திருந்த பல்வேறு வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டன.
- திருமணமான சமையல் காண்ட்ராக்டர் ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
- மனவேதனை அடைந்த இளம்பெண் இதுபற்றி புகார் அளிக்க வடபழனி போலீஸ் நிலையத்துக்கு வந்தார்.
போரூர்:
வடபழனி, பகுதியை சேர்ந்த 35வயது இளம்பெண் கிளப்பில் நடனமாடி வருகிறார். இவர் திருமணமாகி கணவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமான சமையல் காண்ட்ராக்டர் ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
அவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னை 2-வதாக திருமணம் செய்து கொள்ளும்படி இளம்பெண், தனது கள்ளக்காதலன் சமையல் காண்டிராக்டரிடம்வற்புறுத்தினார்.
ஆனால் அவர் திருமணத்திற்கு மறுத்தார். இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண் இதுபற்றி புகார் அளிக்க நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் வடபழனி போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது பணியில் இருந்த போலீசார் இளம்பெண்ணுக்கு அறிவுரை கூறினர். எனினும் சமாதானம் அடையாத இளம்பெண் திடீரென தனது மோட்டார் சைக்கிளில் கேனில் வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக் கொண்டு போலீஸ் நிலையம் முன்பு நின்ற படி"தற்கொலை செய்து கொள்ள போகிறேன்" என்று கூறி மிரட்டல் விடுத்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். பின்னர் அவரது கணவரை வரவழைத்த போலீசார் இளம்பெண்ணை எச்சரித்து அவருடன் அனுப்பி வைத்தனர்.
- சென்னை மெட்ரோ ரெயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3.20 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
- 2023-ம் ஆண்டை விட 2024-ம் ஆண்டில் 1.41 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளார்கள்.
சென்னை :
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மெட்ரோ ரெயிலில் ஜூன் 29, 2015 முதல் டிசம்பர் 31, 2024 வரை 35.53 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோ ரெயிலில் 10.52 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதிலிருந்து பொது மக்களுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கும் நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை தொடர்ந்து செய்து வருகிறது.
சென்னை மெட்ரோ ரெயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3.20 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்ட ஒன்பது ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2024-ம் ஆண்டில் மட்டும் 10.52 கோடி பேர் மெட்ரோ ரெயிலில் பயணித்துள்ளார்கள். 2023-ம் ஆண்டை விட 2024-ம் ஆண்டில் 1.41 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளார்கள்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
2015 முதல் 2018 வரை 2,80,52,357 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதேபோல், 2019-ம் ஆண்டில் 3,28,13,628 கோடி பயணிகளும், 2020–ம் ஆண்டில் 1,18,56,982 கோடி பயணிகளும், 2021-ம் ஆண்டில் 2,53,03,383 கோடி பயணிகளும், 2022-ம் ஆண்டில் 6,09,8,7,765 கோடி பயணிகளும், 2023-ம் ஆண்டில் 9,11,02,957 கோடி பயணிகளும், இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டில் 10,52,43,721 கோடி பயணிகளும் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளார்கள்.
ஜூன் 29, 2015 முதல் டிசம்பர் 31, 2024 வரை மொத்தம் 35,53,60,793 பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்.
மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 19 ரெயில்களின் இயக்க நேரம் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரையில் மாற்றம்.
- புதிய ரெயில்வே கால அட்டவணை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கோவை:
தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2025-ம் ஆண்டுக்கான புதிய ரெயில்வே கால அட்டவணை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சேலம் ரெயில்வே கோட்டத்தில் 19 ரெயில்களின் இயக்க நேரம் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய அட்டவணையின் படி கரூர்-சேலம் ரெயில் சேலத்துக்கு காலை 9.45 மணிக்கும், ராஜ்கோட்-கோவை ரெயில் கோவைக்கு இரவு 8.55 மணிக்கும், பொள்ளாச்சி-கோவை ரெயில் கோவைக்கு இரவு 10.50 மணிக்கும், பொள்ளாச்சி-கோவை ரெயில் கோவைக்கு காலை 9.25 மணிக்கும், திருச்சி-கரூர் ரெயில் கரூருக்கு இரவு 8 மணிக்கும், கட லூர் துறைமுகம்-சேலம் ரெயில் சேலத்துக்கு காலை 9.10 மணிக்கும், சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேலத்துக்கு காலை 6.15 மணிக்கு வந்து சேரும்.
சொரனூர்-கோவை ரெயில் கோவைக்கு மாலை 5.35 மணிக்கும், மங்க ளூரு-கோவை ரெயில் கோவைக்கு மாலை 6.25 மணிக்கும், சில்சார்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் கோவைக்கு முற்பகல் 11.55 மணிக்கும், பெங்க ளூரு-கோவை ரெயில் கோவைக்கு இரவு 9.05 மணிக்கும், சேலம்-கரூர் ரெயில் கரூருக்கு காலை 7.15 மணிக்கும் வந்தடையும்.
அதேபோல 7 ரெயில்களின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில் மாலை 5.35 மணிக்கும், மேட்டுப்பாளையம்-போத்தனூர் ரெயில் மதியம் ஒரு மணிக்கும், கோவை-சொரனூர் ரெயில் மாலை 4.25 மணிக்கும், கோவை-ராஜ்கோட் எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 12.45 மணிக்கும், கரூர்-சேலம் ரெயில் இரவு 8.05 மணிக்கும், ஈரோடு-பாலக்காடு டவுன் ரெயில் காலை 7 மணிக்கும், மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி ரெயில் இரவு 7.45 மணிக்கும் புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எங்கள் கட்சி ஜனநாயக கட்சி, பொதுக்குழுவில் காரசாரமான விவாதங்கள் எல்லா கட்சியிலும் நடப்பதுதான்.
- பா.ம.க. பொதுக்குழுவில் அறிவித்தபடி முகுந்தனிடம் நியமன கடிதத்தை வழங்கிவிட்டதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் கடந்த வாரம் நடைபெற்ற பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார்.
இளைஞர் அணி தலைவராக முகுந்தனை முன்மொழிந்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிக்கு உறுதுணையாக இருப்பார் என்று ராமதாஸ் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் இருந்த அன்புமணி இடைமறித்து அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
உடனே குறுக்கிட்ட டாக்டர் ராமதாஸ், ''இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும், கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இல்லாவிட்டால் போங்கள் என்றார்.
இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் அன்புமணி, மேடையில் ஜி.கே.மணியிடம் இருந்து மைக்கை வாங்கி, 'நான் பனையூரில் கட்சி அலுவலகம் அமைத்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம்' என்று ஆவேசமாக கூறினார்.
தொடர்ந்து அந்த மைக்கை தூக்கி வீசிவிட்டு கோபத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பா.ம.க. உட்கட்சி மோதல் தொடர்பாக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை பா.ம.க. தலைவர் அன்புமணி கடந்த 29-ந்தேதி சந்தித்து பேசினார்.
பின்னர் அன்புமணி கூறுகையில், எங்கள் கட்சி ஜனநாயக கட்சி, பொதுக்குழுவில் காரசாரமான விவாதங்கள் எல்லா கட்சியிலும் நடப்பதுதான், எங்களுக்கு ஐயா, ஐயா தான், எங்கள் உட்கட்சி பிரச்சனையைப் பற்றி நீங்கள் பேச எதுவும் தேவை இல்லை, அது எங்கள் பிரச்சனை, நாங்கள் பேசிக்கிறோம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பா.ம.க. இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பா.ம.க. பொதுக்குழுவில் அறிவித்தபடி முகுந்தனிடம் நியமன கடிதத்தை வழங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- 2022-ம் ஆண்டுக்கு பிறகு நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது.
- கடந்தாண்டு மே மாதம் முதல் இ-பாஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்படுவது புள்ளி விவரங்கள் வாயிலாக தெரிய வந்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுவரை சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதன்காரணமாக அங்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது.
தொடர்ந்து 2022-ம் ஆண்டுக்கு பிறகு நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது.
அதிலும் குறிப்பாக 2023 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 28 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றது தெரியவந்து உள்ளது.
இது கடந்த 2022-ம்ஆண்டை காட்டிலும் 4 லட்சம் அதிகம்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு மே மாதம் முதல் இ-பாஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை சற்று குறைந்தே காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2023-ம் ஆண்டு டன் ஒப்பிடுகையில் கடந்தாண்டில் நீலகிரிக்கு சுமார் 4 லட்சம் பயணிகள் குறைவாக வருகை தந்து உள்ளது தெரியவந்து உள்ளது.
அதாவது கடந்த 2024 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் 31-ந்தேதிவரை, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 23 லட்சத்து 95 ஆயிரத்து 894 பயணிகள் மட்டுமே வந்து உள்ளனர். இதனால் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையை சார்ந்து செயல்படும் வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
இதுதொடர்பாக நீலகிரி சுற்றுலா ஆர்வலர்கள் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் பேர் சுற்றுலா வருகின்றனர். ஆனால் இங்கு பயணிகளுக்கான சுற்றுலா திட்டம் இதுவரை வரையறுக்கப்படவில்லை. ஊட்டியை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் குன்னூர், கூடலூர், கோத்தகிரி மற்றும் குந்தா பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். மேலும் மருத்துவம், விளையாட்டு சுற்றுலாக்களையும் திட்டமிடுவது அவசியம்.
ஊட்டியில் நிரந்தர பொருட்காட்சி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கருத்தரங்குகளை நடத்துவதற்காக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஊட்டியில் ரோஜா பூங்காவுக்கு பிறகு சுற்றுலா தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. மேலும் சுற்றுலா பயணிகளை கவர ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து பொருளாதாரமும் உயர வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீலகிரி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாவை நம்பி இருப்பவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் உள்ளூர் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த வணிகத்தில் 45 சதவீதத்துக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே இ-பாஸ் முறையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டு மென கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- மாணவர்களின் நலனில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய வேண்டாம்.
- கவர்னரின் செயல்பாடு என்ன என்பதை இந்தியா உற்று நோக்குகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே இராராமுத்திரைக் கோட்டை ஊராட்சியில் இன்று புதிய பொது விநியோக கட்டிடத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பல்கலை கழக துணைவேந்தர் நியமனத்தில் கவர்னரின் செயல்பாடு என்ன என்பதை இந்தியா உற்று நோக்குகிறது. ஒவ்வொரு மாநில கவர்னர்களுக்கும் உரிமை என்ன, கடமை என்ன என்பதை அரசியலமைப்பு சட்டம் பல்வேறு நெறிமுறைகளில் சொல்லி இருக்கிறது. அதை மீறும் வகையில் துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது.
மூன்று உறுப்பினர்கள் தேர்வுக் குழு என்பதை நான்காக அதிகரிப்பதன் மூலம் அதை செயல்படாமல் தடுப்பது கவர்னரின் நோக்கமாக உள்ளது. இது ஒருபோதும் நிறைவேறாது. முறைப்படி எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டு துணைவேந்தர் பணி நியமனம் செய்யபடும்.
மாணவர்களின் நலனில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய வேண்டாம். மாணவர்கள் நலன் கருதி சிந்திக்கின்ற செயல்படுகின்ற முதலமைச்சர் நமது தமிழக முதலமைச்சர் மட்டும்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அனுமதியின்றி பேரணி நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என காவல்துறை எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
- தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதாக கூறியும் தமிழக பா.ஜ.க. மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் உமாபாரதி தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடைபெற உள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் அறிவித்து இருந்தார்.
இந்த பேரணியானது நாளை தொடங்கி சென்னையில் நிறைவு பெறும்போது தமிழக கவர்னரை சந்தித்து, பாஜ.க. மகளிர் அணி சார்பில் கோரிக்கை மனு வழங்கப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், பா.ஜ.க.வின் நீதி பேரணிக்கு மதுரை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும் அனுமதியின்றி பேரணி நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என காவல்துறை எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக, பாஜக, நாம் தமிழர், பாமக நடத்த இருந்த ஆர்ப்பாட்டங்களுக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையிலும், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இறங்கும் இடத்தில் தடுப்புவேலிகள் அமைத்து அடைக்கப்பட்டுள்ளது.
- கடல் உள்வாங்குவதும், கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டும் வருகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பவுர்ணமி நாட்களில் கோவில் கடற்கரையில் இரவில் குடும்பத்தோடு தங்கி வழிபாடு செய்வார்கள்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் திடீரென உள்வாங்குவதும், வெளியே சீற்றம் அதிகமாக காணப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அமாவாசையாக இருந்ததினால் நேற்று காலையில் இருந்து கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
கடல் சீற்றத்தின் காரணமாக கோவில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சுமார் 20 அடி நீளத்திற்கு 10 அடி ஆழத்திற்கு இந்த கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோவில் முன்புள்ள கடலில் இறங்க அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் பகுதியில் இந்த கடல் அரிப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே படிக்கட்டுகள் வழியாக பக்தர்கள் இறங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிக அளவு கடல் அலைகளின் சீற்றத்தின் காரணமாக 2-வது நாளாக அதிக அளவில் இந்த அரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே படிக்கட்டுகள் வழியாக இறங்கும் இடத்தில் தகரத்தை வைத்தும், தடுப்புவேலிகள் அமைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் இதே போல் பக்தர்கள் கடற்கரையில் இறங்கும் இடத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் மணலை கொட்டி கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தை சீர் செய்தனர். ஆனால் மீண்டும் தற்போது அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒருபுறம் கடற்கரையில் அதிக அலைகள் காரணமாக கடல் அரிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் அதே கடற்கரையில் சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் கடல் உள்வாங்கிய நிலையில் காணப்படுகிறது.
சுமார் 50 அடி கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் பாறைகளும், மணல் திட்டுகளும் அதிகமாக தென்படுகிறது. கோவில் கடற்கரை பணியாளர்கள், காவல்துறையினர் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.






