என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், நடிகர் எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார்.
- சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், நடிகர் எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து விமர்சித்து ஒரு பதிவை முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது வீட்டின் முன்பு போராட்டங்களும் நடத்தின.
இதனிடையே எஸ்வி சேகருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அப்போது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை, 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு எதிராக தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், நடிகர் எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒருமாத சிறை தண்டனையை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் இன்று உறுதி செய்துள்ளார். மேலும் எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
- அண்ணா பல்கலை கழக மாணவி விவகாரத்தை அரசுக்கு நினைவுபடுத்த வேண்டியது எதிர்கட்சிகளின் கடமை.
- என் கட்சியில் ஒருவர் தவறு செய்தாலும் நான் நிச்சயமாக தட்டிக் கேட்பேன்.
திருச்சி:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்றத்தில் தமாகவின் குரல் பலமாக ஒலிக்கும் நோக்கில் 2025-ம் ஆண்டில் தொடர் களப்பணிகள் நடைபெறும்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் மதுபான கடைகள் தான். மதுபான கடைகளை ஆட்சிக்கு வந்தால் மூடுவோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, அதை செய்யாமல் தவிர்ப்பது கண்டிக்கத்தக்கது.
அண்ணா பல்கலை கழக மாணவி விவகாரத்தை அரசுக்கு நினைவுபடுத்த வேண்டியது எதிர்கட்சிகளின் கடமை. அரசு உண்மை நிலையை வெளிக் கொண்டுவர வேண்டும். குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
தி.மு.க. அரசின் அவலங்களை கண்டித்து போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்று காலை கூட பசுமைத் தாயகம் தலைவர் செளமியா அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் எதிர்க்கட்சிகள் குரலை ஒருபோதும் முடக்கிவிட முடியாது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் வாய் மூடி மவுனமாக இருப்பது வெட்கக்கேடானது. என் கட்சியில் ஒருவர் தவறு செய்தாலும் நான் நிச்சயமாக தட்டிக் கேட்பேன். நடவடிக்கை எடுப்பேன். ஆதரவாக இருக்க மாட்டேன்.
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணியில் ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. "ஒத்த கருத்து" என்பது தேர்தலில் வெற்றி பெறுவது தான். புயல், கன மழையால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு. அரசு இழப்பீட்டை இன்னும் வழங்கவில்லை. ஏக்கர் ஒன்றுக்கு நெற்பயிருக்கு 35,000 ரூபாய், தோட்டப்பயிர்களுக்கு 25,000 ரூபாய் வழங்க வேண்டும்.
பயிர்க்காப்பீட்டுக்கு அரசு வழங்கும் மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு முழுமையான நிதியை ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பள்ளியில் சுமார் 130-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
- தகவலறிந்த அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் சோகத்தூரில் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டுக்காரன் பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சுமார் 130-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதில் சில ஆசிரியர்கள் பள்ளியில் சரிவர பணியை செய்வதில்லை என்பது பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. உடனே அந்த ஆசிரியர்களை வேறு இடத்திற்கு மாற்ற செய்ய வேண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்வி துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சரிவர பணி செய்யாத ஆசிரியர்களை தவிர 3 ஆசிரியர்களை மட்டும் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டதாக தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்காக மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். ஆனால், ஆட்டுக்காரன்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு மட்டும் மாணவர்கள் படிக்க யாரும் வரவில்லை. இதனால் பணியில் இருந்த ஆசிரி யர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது பள்ளியின் முன்பு மாணவர்களின் பெற்றோர்கள் திரண்டு வந்து திடீரென்று போராட் டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தென்றல் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது அதிகாரியிடம் பெற்றோர்கள், 3 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று பள்ளிக்கு மாணவர்களை அனுப்பாமல் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
மேலும், பணியிடமாற்றம் செய்யப்பட்ட 3 ஆசிரியர்களையும் மீண்டும் இதே பள்ளியில் பணியமர்ந்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- அதிகாரிகள் பரிசீலித்து முறையாக புது கார்டு வழங்கி வருகின்றனர்.
- புது ரேசன் கார்டு வழங்குவதை சில மாதத்துக்கு அரசு நிறுத்தியது.
சென்னை:
தமிழ்நாட்டில் ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஒரு குடும்பத்தில் திருமணம் ஆகும் தம்பதியினர் தனிக் குடித்தனம் சென்றால் பழைய முகவரியில் உள்ள பெயரை நீக்கி சான்றிதழ் வாங்கி அதை இணைத்து விண்ணப்பம் செய்வது நடைமுறை வழக்கமாகும்.
இவற்றை அதிகாரிகள் பரிசீலித்து முறையாக புது கார்டு வழங்கி வருகின்றனர்.
ஆனால் சில இடங்களில் ஒரே வீட்டில் இருந்து கொண்டு தனியாக ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது தனித்தனியாக சமையல் எரிவாயு இணைப்பு இல்லாவிட்டால் அதை அதிகாரிகள் நிராகரித்து விடுகின்றனர்.
அந்த வகையில் 2.65 லட்சம் பேர் புது கார்டு கேட்டு விண்ணப்பம் செய்திருந்ததில் 1.36 லட்சம் கார்டுகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தை பொறுத்த வரை ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரேசன் கார்டு என்பது அத்தியாவசியமான ஒன்று. ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்குவது மட்டுமின்றி அரசின் நிதி உதவியை பெறுவதற்கும், வெள்ள நிவாரண உதவியை பெறுவதற்கும் இது முக்கியமாக பயன்படுகிறது.
சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், 100 நாள் வேலைக்கான பணி அட்டை ஆகியவற்றை பெறுவதற்கும், கூட ரேசன் கார்டு தேவைப்படுகிறது. தி.மு.க. ஆட்சியில் இப்போது மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு ரேசன் கார்டு முக்கியம் என்பதால் அதற்காகவே புதிய ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
அதனால்தான் நேரடியாக அந்தந்த பகுதிகளுக்கு சென்று தகுதியானவர்களுக்கு மட்டும் புது கார்டு வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அதனால் தான் புது ரேசன் கார்டு வழங்குவதை சில மாதத்துக்கு அரசு நிறுத்தியது. இப்போது மீண்டும் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் தற்போது 2.25 கோடி ரேசன் கார்டுகள் உள்ளன. அதில் தி.மு.க. ஆட்சி பொறுப் பேற்றதில் இருந்து இதுவரை 16.3 லட்சம் புதிய கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- 7 நாட்களான நிலையில் ஏன் இன்னும் முறையான அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.
- கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?
மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்டியது தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இன்று இது தொடர்பாக விசாரணை நடத்தியது.
அப்போது 390 டன் மருத்துவ கழிவுகளை 30 டிரக்குகள் கொண்டு அகற்றியுள்ளதாக கேரள அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் கேரள வழக்கறிஞரிடம் "7 நாட்களான நிலையில் ஏன் இன்னும் முறையான அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பினர்.
மேலும், "மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்காவிடில் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும். கழிவுகளை தமிழகத்தில் நிறுத்துவதை நிறுத்த வேண்டும்" கேரள அரசுக்கு எச்சரிக்கு விடுத்தனர்.
மருத்துவ கழிவு கொட்டியது தொடர்பாக எல்லை மாவட்டங்களில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கை ஜனவரி 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
குப்பை அகற்றம் தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வழக்கறிஞர் சாய் சத்யஜித் ஆஜரானார்.
- பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் கடும் தண்டனை தரப்பட வேண்டும்.
- விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளின் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதான ஞானசேகரன் சம்பவத்தன்று 'சார்' என்று குறிப்பிட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதனால் யார் அந்த சார்? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு அப்படி யாரும் இல்லை, மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்வதாக தி.மு.க. வை சேர்ந்த அமைச்சர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், யார் அந்த சார்? என்பது தொடர்பாக நேர்மையான விசாரணை நடத்தப்படவேண்டும் என திருமாவளவனும் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் யார் அந்த சார்? என்று நேர்மையான விசாரணை தேவை. பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் உள்நோக்கமின்றி போராட வேண்டும். பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் கடும் தண்டனை தரப்பட வேண்டும். விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளின் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த அனுமதி தரப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளியை சிறையில் வைத்தே புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும். கைதிக்கு உடனே ஜாமின் வழங்க கூடாது என்றும் கூறினார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் திமுகவிற்கும் இடையே அடிக்கடி சச்சரவுகள் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் அந்த சார் என்பதெல்லாம் கிடையாது. எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தில் அரசியல் செய்து வருதாக தி.மு.க. கூறி வரும் நிலையில் தற்போது யார் அந்த சார்? என்ற விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திருமாவளன் கூறியிருப்பது மீண்டும் கூட்டணியில் புயலை கிளப்பும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
- தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் அதாள பாதாளத்திற்கு சென்றுள்ளது.
- முதலமைச்சர் 2 மாதங்களுக்கு ஒரு முறை கலந்தாய்வு மேற்கொள்ள வேண்டும்.
திண்டிவனம்:
பா.ம.க. பொதுக்குழு கூட்டம் புதுவை அருகே உள்ள பட்டானூர் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் கடந்த 28-ந் தேதி நடைபெற்றது.
பொதுக்குழுவில் பா.மக. இளைஞர் அணி தலைவராக முகுந்தனை நியமித்து பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பா.ம.க. பொதுக்குழுவில் மோதல் உருவானது. இது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பா.மக. இளைஞர் அணி தலைவர் முகுந்தன் தான் என திட்டவட்டமாக அறிவித்தார்.
முகுந்தனை இளைஞர் அணி தலைவராக பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்தது தொடரும். அவர் இளைஞரணி தலைவராகவே இருப்பார். இதில் எந்தவித மாற்றமும் இல்லை. பொதுக்குழுவில் அறிவித்தபடி முகுந்தனிடம் நியமன கடிதத்தை வழங்கி விட்டேன்.
அன்புமணியுடன் கருத்து வேறுபாடு இல்லை. இது பேசி சரியாகி விட்டது. பா.ம.க. பொதுக்குழுவில் நடந்தது உட்கட்சி விவகாரம்.
தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் அதாள பாதாளத்திற்கு சென்றுள்ளது. மக்களை கேட்டால் முதலமைச்சரின் திறமையின்மையையே சொல்வார்கள். புலனாய்வு அதிகாரிகள் முதலமைச்சருக்கு சொல்வார்கள். இதற்கு முதலமைச்சர் திறமை இன்மையாக இருக்குமோ. இவரும் இவரது மகனை துணை முதலமைச்சராக்கி உள்ளார்.
தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையாக போற்றப்பட்டது. இப்போது முற்றிலுமாக முடங்கி விட்டது. திறமையான அதிகாரிகள் பலரும் இருக்கிறார்கள்.
வேங்கை வயலில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் 2 ஆண்டுகள் ஆகியும், குற்றவாளிகள் கைது செய்யப்பட வில்லை. அரசு மது கடையில் அருந்திய மதுவில் சயனைடு கலந்துள்ளது என சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டும் 1½ ஆண்டும் கண்டுபிடிக்கவில்லை. காங்கிரஸ் பிரமுகர் ஜெயகுமார் கொலை வழக்கில் 9 மாதம் ஆகியும் குற்றவாளி கண்டு பிடிக்கவில்லை.
திருப்பூர் பல்லடம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு 90 நாட்கள் ஆகியும், 14 தனி படைகள் அமைத்தும் கண்டுபிடிக்கவில்லை. தமிழக போலீசார் திறமையற்று இருக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி அருகே ஒரு பெண், பால் விற்பனை செய்துவிட்டு திரும்பும்போது, கொலை செய்யப்பட்ட நிலையில் இதுவரை குற்றவாளி கண்டு பிடிக்கவில்லை. காவல்துறை பல குழுக்கள் கொண்டுள்ளன. அதிராக மையங்களை வைத்து கொண்டு தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
முதலமைச்சர் 2 மாதங்களுக்கு ஒரு முறை கலந்தாய்வு மேற்கொள்ள வேண்டும். காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். டாஸ்மாக் சந்து, பொந்து கடைகளை மூட வேண்டும் 4,829 அதிகார கடைகள் உள்ளது. சந்து கடைகள் எங்கு உள்ளது என்று காவல்துறைக்கு நன்றாக தெரியும். இந்த கடைகளை மூட வேண்டும். அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
கட்சி நிர்வாகிகள் மற்றும் காவல்துறைக்கும் மாமூல் தருகின்றனர். மாணவர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
மகளிர் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும், மாணவர்கள், சிறுவர்கள் பாதிக்காத வகையில் சந்து கடைகளை மூட வேண்டும். இல்லையெனில் பா.ம.க. முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
மெத்த பெட்டமைன், கஞ்சா, அபின், போதைப்பொருள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டை மது இல்லா மாநிலமாக மாற்றப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது அரசு. இளைஞர்கள் சீரழிவதை வேடிக்கை பார்க்க முடியாது. தவறுகளும், தோல்விகளையும் மறைக்க தங்களது தோல்விகளை மறைக்க போராட்டம் நடத்தப்படும் கட்சிகள் மீது அடக்குமுறை கையில் எடுத்து வருகிறது. போராட்டம் செய்யக்கூடாது என்று கைது செய்யப்படுகின்றனர்.
தி.மு.க. ஆட்சியின் இந்த அடக்குமுறை இந்த ஆட்சியின் தோல்வியை ஒப்புக்கொள்கிறது. எதிர்க்கட்சியை அடக்குவது மூலம் தங்களது தோல்வியை ஒப்புக்கொள்கிறது. தி.மு.க. ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. சட்ட பேரவை தேர்தல் எப்போது நடந்தாலும் தோல்வியை சந்திக்கும். அரசு பள்ளிகளை மேம்படுத்த தனியார் பள்ளிகளிடம் உதவி பெறும் முடிவை அரசு கைவிட வேண்டும்.
அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக தனி ஆணையம் அமைத்து, நிதி பெறுவது தவறில்லை. கட்டாய கல்வி, கண்டனமில்லா கல்வி, தரமான கல்வி-கட்டணத்தை அரசே கட்டவேண்டும்.
நகர்புற உள்ளாட்சிகளுடன் கிராமப்புற உள்ளாட்சிகள் இணைக்கப்படக்கூடாது. 400 மேற்பட்ட கிராம ஊராட்சிகள் கலைக்கப்பட உள்ளது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் அதிகளவு பாதிக்கப்படுவார்கள்.
சொத்து வரி, குடிநீர் வரி உயரும். 100 நாள் வேலை திட்டம் ரத்து செய்யப்படும். அரசு இதனை கைவிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை அரசு நடத்த வேண்டும். 10.5 இட ஒதுக்கீட்டிற்கு பா.ம.க. தொடர்ந்து போராடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 24 மாவட்டங்களில் 25 மாநகராட்சிகள் உள்ளன.
- சென்னை மாநகரட்சியும் விரிவு படுத்தப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் தலா ஒரு மாநகராட்சி இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது 24 மாவட்டங்களில் 25 மாநகராட்சிகள் உள்ளன. ஆகவே மீதம் உள்ள 14 மாவட்டங்களிலும் மாநகராட்சிகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதேசமயம் தற்போது உள்ள மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்யவும் தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளையும் துரிதப்படுத்தி உள்ளது. அதன்படி சென்னை மாநகரட்சியும் விரிவு படுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியானது, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 66.72 லட்சம் மக்கள் தொகையையும், 426 சதுர கி.மீ. பரப்பளவையும் கொண்டதாகும்.
தற்போதுள்ள பெருநகர சென்னை மாநகராட்சியுடன், திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லைக்குள் அமைந்துள்ள அடையாளம்பட்டு மற்றும் வானகரம் ஆகிய கிராம ஊராட்சிகளை இணைத்து எல்லை விரிவாக்கம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
இவ்விரு கிராம ஊராட்சிகளின் பரப்பளவு சுமார் 15.77 சதுர கி.மீ. ஆகும் மற்றும் மக்கள் தொகை சுமார் 32,353 ஆகும். இவ்விணைப்பிற்கு பிறகு பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லை சுமார் 442 சதுர கி.மீ. ஆக விரிவாக்கம் அடையும் மற்றும் மொத்த மக்கள் தொகை 67,04,455 ஆக அதிகரிக்கும். மேற்குறிப்பிடப்பட்டுள்ள 2 கிராம ஊராட்சிகள் இணைப்பால் அப்பகுதி மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதுடன் அடிப்படை வசதிகளும் மேம்படும். இது தொடர்பாக மக்கள் தங்கள் ஆட்சேபனைகளை 6 வாரங்களுக்குள் நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- சேவை வழங்கும் நிறுவனங்களுடன் சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடைபெற்றது.
- நவீன முறையை கொண்டு வந்தால், இந்த வருவாய் இரட்டிப்பாக வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கவும், சென்னை மெரினா மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் வாகன நிறுத்த கட்டணத்தில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும், கட்டணம் செலுத்தாமல் இருப்பதை தடுக்கவும், நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ஸ்மார்ட் வாகன நிறுத்த முறையை அமல்படுத்துமாறு மாநகராட்சி வருவாய்த்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறைக்கு மாநகராட்சி கமிஷனர் குமர குருபரன் உத்தரவிட்டு உள்ளார்.
இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி துணை கமிஷனர் பிரிதிவிராஜ் தலைமையில் மாநகர வருவாய் அலுவலர், சிறப்பு திட்டத்துறை கண்காணிப்பு பொறியாளர், தேனாம்பேட்டை மற்றும் அடையாறு மண்டல அலுவலர்கள், சேவை வழங்கும் நிறுவனங்களுடன் சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடைபெற்றது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
ஆலோசனை கூட்டத்தில், கடற்கரையில் எதை நுழைவு வழியாகவும், எதை வெளியேறும் வழியாகவும் அமைப்பது, கிடைக்கும் வருவாயில் சேவை வழங்கும் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இடையிலான பங்கீட்டு அளவு, கட்டண வசூலில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் குறிப்பாக பாஸ்டேக் முறையை அமல் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதை கொண்டு வந்தால், சுங்கச்சாவடி போல, மெரினா அல்லது பெசன்ட்நகர் கடற்கரை வாகன நிறுத்த பகுதிக்குள் கார் வந்தாலே கட்டணம் பிடித்தம் செய்யப்படும். மேலும் நவீன சென்சார்கள் மூலம் எங்கெங்கு வாகன நிறுத்த இடங்கள் காலியாக உள்ளது என செயலி மூலமாக வாகன ஓட்டிகளே பார்த்து தெரிந்துகொள்ளும் வசதியை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தற்போது மெரினாவில் இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.5, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு வார நாட்களில் சுமார் ரூ.6 ஆயிரம் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் வாகன நிறுத்த கட்டணம் வசூலாகிறது. நவீன முறையை கொண்டு வந்தால், இந்த வருவாய் இரட்டிப்பாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எந்த ஒரு வார்த்தையும் தாமாக கூறவில்லை.
- மனுஸ்மிருதியில் பெண்கள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தே பேசியதாக திருமாவளவன் விளக்கம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலைவர் திருமாவளவன் மீது இந்து பெண்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கடந்த 2020-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.
இந்து பெண்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
மனுஸ்மிருதியில் பெண்கள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தே பேசியதாக உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார். மேலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எந்த ஒரு வார்த்தையும் தாமாக கூறவில்லை எனக் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
மனுதாரருக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்தும் எந்த நோக்கமுல் இல்லை எனத் தெரிவித்த நீதிபதி வேல்முருகன் வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டார்.
- தமிழ்நாட்டில் இன்றைய உடனடித் தேவை பெண்களுக்கான பாதுகாப்பு தான்.
- பெரும்பாலான வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இப்போது வரை நீதி வழங்கப்படவில்லை.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும்; தமிழ்நாட்டில் அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி உள்ளிட்ட பாட்டாளி மகளிர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்களை பாதுகாக்க முடியாத திமுக அரசின் இந்த சர்வாதிகார நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.
மகளிருக்கு பாதுகாப்பு கேட்டு போராடிய பாட்டாளி மகளிர் சங்கத்தினரை கைது செய்வதற்கு எந்த நியாயமும் இல்லை. உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாகப் போற்றப்படும் அண்ணா பல்கலைக் கழகத்தில் அப்பாவி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு நீதி பெற்றுத் தர வேண்டிய தமிழக அரசும், காவல்துறையும் அந்த கொடுங்குற்றத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பாதுகாக்க முயல்கின்றன. இதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமை ஆகும். அந்தக் கடமையை செய்வதற்காகத் தான் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாட்டாளி மகளிர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் அனைவரையும் காவல்துறை சுற்றி வளைத்து கைது செய்திருக்கிறது.
போராட்டத் தலமான சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் எவரும் செல்ல முடியாத அளவுக்கு அனைத்துப் பாதைகளையும் காவல்துறையினர் தடுத்து வைத்திருந்தனர். இப்போராட்டத்தில் பங்கேற்பதற்காக பல மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். போராட்டத்திற்காக வந்த பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணியை அவரது மகிழுந்தில் இருந்து இறங்குவதற்கு கூட அனுமதிக்காமல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அனைத்து வழிகளிலும் காவல்துறை அதன் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்தை முடக்குவதற்காக வள்ளுவர் கோட்டத்தில் குவிக்கப்பட்ட காவல்துறையினரில் ஒரு விழுக்காட்டினரை அண்ணா பல்கலைக்கழகத்தில் நுழைவாயில்களில் நிறுத்தியிருந்தாலோ அல்லது இதில் காட்டிய கெடுபிடியில் ஒரு விழுக்காட்டை அண்ணா பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பில் காட்டி இருந்தாலோ திமுகவினரின் அனைத்து வகையான ஆதரவையும் பெற்ற ஞானசேகரன் போன்ற மனித மிருகங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து அப்பாவி மாணவியை வேட்டையாடியிருக்க முடியாது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கு வக்கில்லாத தமிழக அரசு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டு போராடுபவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு அதன் வீரத்தை வெளிப்படுத்துகிறது. மகளிர் பாதுகாப்புக்காக போராடுபவர்களையும், முதலமைச்சரின் சுவரொட்டி மீது கல் எறிந்ததற்காக வயதான மூதாட்டி ஒருவரையும் கைது செய்வதில் காட்டும் ஆர்வத்தை பெண்கள் மீதான பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழக அரசு காட்ட வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாவிட்டால் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பதவி விலக வேண்டும்.
தமிழ்நாட்டில் இன்றைய உடனடித் தேவை பெண்களுக்கான பாதுகாப்பு தான். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கள்ளக்குறிச்சி திம்மவரத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை, சென்னை வில்லிவாக்கத்தில் 11 வயது சிறுமிக்கு 6 மாதங்களுக்கும் மேலாக பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது, சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, அயனாவரத்தைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் என்.சி.சி முகாமில் பங்கேற்ற 8-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை, திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, சென்னை பூக்கடை பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை கொத்தகம்பட்டியில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, மதுரையை சேர்ந்த 13 வயது சிறுமி சிவகங்கை மாவட்டம், கல்குளம் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை, தஞ்சாவூர் பாப்பாநாட்டில் 45 வயது பெண் கடத்தி பாலியல் வன்கொடுமை, காஞ்சிபுரத்தில் 19 வயதான கல்லூரி மாணவியை 5 பேர் மிரட்டி, கூட்டு பாலியல் வன்கொடுமை என தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இப்போது வரை நீதி வழங்கப்படவில்லை.
திமுக அரசால் மாதாமாதம் வழங்கப்படும் ரூ.1000 உதவித் தொகையையோ மற்றவற்றையோ தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக, தங்களுக்கு பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்; அச்சமின்றி நடமாடுவதற்கான உரிமை வேண்டும் என்பது தான் அவர்களின் உரிமைக்குரலாக உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை அதிக அளவில் திறந்து வைத்தும், கஞ்சா வணிகத்தை ஊக்குவித்தும், போதைப்பொருட்களை தடுக்காமலும் மகளிருக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான குற்றங்களுக்கு உகந்த சூழலை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து வகையான குற்றங்களுக்கும் திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2022-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஓவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு பெண் குழந்தை மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்படுவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 11.12% அளவுக்கும், பெண்களுக்கு எதிரான ஒட்டுமொத்த குற்றங்களின் எண்ணிக்கை 8.31% அளவுக்கும் அதிகரித்துள்ளன. இதற்காக திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
பெண்கள் பாதுகாப்புக்காக போராடும் மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதைக் கைவிட்டு பெண்களின் பாதுகாப்பில் அக்கறை காட்ட வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 'அந்த சார்' உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்சத் தண்டனைப் பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
- பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
- போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
கன்னியாகுமரி:
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.
இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தபடகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதன் மூலம் கடந்த ஒரே ஆண்டில் 20 லட்சத்து 13 ஆயிரத்து 211 பேர் படகில் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டுள்ளனர்.
அதேவேளையில் கடந்த 2023-ம் ஆண்டு 19 லட்சத்து 4 ஆயிரத்து 221 சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் பயணம் செய்துள்ளனர். இதனை ஒப்பிட்டு பார்க்கும் போது 2024-ம் ஆண்டு 1 லட்சத்து 8 ஆயிரத்து 990 பேர் அதிகமாகும்.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தை கடந்த ஆண்டு மாதம் வாரியாக பார்வையிட்ட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
ஜனவரி 2 லட்சத்து 34 ஆயிரத்து 106 பேர், பிப்ரவரி 1 லட்சத்து 58 ஆயிரத்து 802 பேர், மார்ச் 1 லட்சத்து 61 ஆயிரத்து 80 பேர், ஏப்ரல் 1 லட்சத்து 42 ஆயிரத்து 867 பேர், மே 1 லட்சத்து 80 ஆயிரத்து 318 பேர், ஜூன் 1 லட்சத்து 49 ஆயிரத்து 472 பேர் படகில் பயணம் செய்து பார்வையிட்டுள்ளனர்.
ஜூலை 1 லட்சத்து 22 ஆயிரத்து 974 பேர், ஆகஸ்ட் 1 லட்சத்து 40 ஆயிரத்து 710 பேர், செப்டம்பர் 1 லட்சத்து 51 ஆயிரத்து 803 பேர், அக்டோபர் 1 லட்சத்து 69 ஆயிரத்து 489 பேர், நவம்பர் 2 லட்சத்து 9 ஆயிரம் பேர், கடந்த டிசம்பர் 1 லட்சத்து 93 ஆயிரத்து 942 பேர் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வந்துள்ளனர்.
இதில் கடந்த ஆண்டில் ஜனவரி மாதம் மட்டும் அதிக அளவு அதாவது 2 லட்சத்து 34 ஆயிரத்து 106 சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை படகில் பயணம் செய்து பார்வையிட்டு வந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 1½ வருடங்களாக திருவள்ளுவர் சிலையில் கண்ணாடி பாலப்பணிகள் நடைபெற்று வந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.






