என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 2023- 2024ம் ஆண்டிற்கான சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்கப்படுகிறது.
    • பொங்கல் பரிசு வழங்கிட 163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழக அரசு ஊழியர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    2023- 2024ம் ஆண்டிற்கான சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்கப்படுகிறது.

    சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட ரூ.163.81 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    சி,டி பிரிவை சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3000 என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படுகிறது.

    சி, டிபிரிவை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது.

    பொங்கல் பரிசு வழங்கிட 163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    • அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டி உள்ளது.
    • அ.தி.மு.க.வுடன் இணக்கமாக செல்பவர்களை நியமிக்கலாமா என்றும் ஆலோசிக்கப்படுகிறது.

    சென்னை:

    நாடு முழுவதும் பா.ஜ.க உட்கட்சித் தேர்தல் நடந்து வருகிறது. அதன்படி தமிழகத்திலும் கிளைகள் முதல் மாவட்டம் வரை நிர்வாகிகள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    அடுத்ததாக வருகிற 15-ந் தேதிக்குள் புதிய மாநில தலைவரை தேர்வு செய்ய வேண்டும். அதற்கான பணிகள் தொடங்கி உள்ளது.


    தற்போதைய தலைவர் அண்ணாமலை பதவிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. ஒருவர் தலைவர் பதவியில் இருமுறை இருக்கலாம். அந்த வகையில் மீண்டும் அண்ணாமலைக்கே வாய்ப்பு வழங்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது.

    அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டி உள்ளது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமையாமல் போனதற்கு அண்ணாமலை தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. எனவே அ.தி.மு.க.வுடன் இணக்கமாக செல்பவர்களை நியமிக்கலாமா என்றும் ஆலோசிக்கப்படுகிறது. அதன்படி டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பெயரும் பரிசீலிக்கப்படுவதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.


    அகில இந்திய தலைவர் நட்டாவின் பதவிக்காலம் முடிவடைகிறது. புதிய தேசிய தலைவரையும் வருகிற 20-ந் தேதிக்குள் தேர்வு செய்யப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் மாநில தலைவர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட பிறகு மாநில தலைவர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பார்கள்.

    • 'அரசுப் பள்ளிகள் தனியாரால் தத்தெடுப்பு’ என வெளியிட்ட அறிக்கை குறித்து தகவல்.
    • நான் அந்த செய்தியை அடிப்படையாக வைத்து தான் அறிக்கை வெளியிட்டேன்.

    'அரசுப் பள்ளிகள் தனியாரால் தத்தெடுப்பு' என வெளியிட்ட அறிக்கை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:-

    பத்திரிக்கையில் வரக்கூடிய செய்தியை அடிப்படையாக வைத்துதான் அறிக்கையோ அல்லது பதிலோ வழங்கவேண்டி இருக்கிறது.

    அந்த செய்தியில், அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுக்கிறார்கள் என தகவல் கிடைக்கிறது. அவ்வாறு யார் செய்தி போட்டார்களோ அவர்களை தான் கேட்க வேண்டும்.

    நான் அந்த செய்தியை அடிப்படையாக வைத்து தான் அறிக்கை வெளியிட்டேன்.

    இதுபோன்ற செய்தி வந்தவுடன் தமிழக அரசு அல்லது அமைச்சர் மறுப்பு தெரிவித்திருந்தால் நாங்கள் எதுவும் கூறப்போவதில்லை. அரசு, செய்தியை மறுக்காததால் எங்களுக்கு வேறு வழி இல்லை.

    இன்றைக்கு தமிழக அரசு அவ்வாறு செய்யும் முடிவு இல்லை என கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், அவ்வாறு செய்தி வந்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூண்டின் முன்பு ஒரு ஆட்டை உயிருடன் கட்டி வைத்து காண்கணித்து வந்தனர்.
    • சிறுத்தையை வனத்துறையினர் பிடித்த சம்பவத்தால், அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேனிக்கோட்டையில் உள்ள அடிமைசாமிபுரத்தில் சிறுத்தை நடமாடுவதாக வனத்துறையினர் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிறுத்தை பிடிக்க வனத்துறையினர் அந்த பகுதியில் ஒரு கூண்டை வைத்தனர். அந்த கூண்டின் முன்பு ஒரு ஆட்டை உயிருடன் கட்டி வைத்து காண்கணித்து வந்தனர்.

    கூண்டின் முன்பு இருந்த ஆட்டை கடிப்பதற்காக வந்த சிறுத்தை கூண்டுக்குள் லவகமாக சிக்கியது. கூண்டிற்குள் சிக்கிய அந்த சிறுத்தை சுமார் 12 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை என்பது தெரியவந்தது. கடந்த சில தினங்களாக தேன்கனிக்கோட்டை பகுதியை அச்சத்தில் உறைய வைத்திருந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்த சம்பவத்தால், அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.

    • பாலின சமத்துவம் முக்கியமான ஒன்று.
    • பல்வேறு திட்டங்களை நிறைய சொல்லலாம்

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையில் கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    புத்தாண்டு பிறந்து நான் கலந்துகொள்ளக் கூடிய முதல் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி. அதிலே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

    புத்தாண்டுக்கு முன்னாடி நான் பங்கேற்ற நிகழ்ச்சியான புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டம் இருப்பது ஒரு குறிப்பிடத்தக்க வகையிலே பெருமைப்படும் வகையிலே அமைந்திருக்கிறது.

    திராவிட இயக்க சமூகத்தில் இருக்கக்கூடிய ஏற்றத் தாழ்வுகளை நீக்கி சமத்துவத்தை நிலைநாட்ட உருவான இயக்கம்தான் நம்முடைய இயக்கம். அதில் பாலின சமத்துவம் முக்கியமான ஒன்று. பெண்களுடைய உரிமைகளுக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் ஏராளமான திட்டங்களை தி.மு.க. அரசு ஏற்கனவே அண்ணா, கலைஞர் காலத்திலே பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருந்தாலும் அதைத் தொடர்ந்து நம்முடைய அரசு அண்ணா, கலைஞர் வழியில் தந்தை பெரியார் எந்த கனவை கண்டு கொண்டிருந்தாரோ, எதற்காக வாழ்நாள் முழுவதும் போராடினாரோ அந்த எண்ணங்கள் நிறைவேற்றப்பட கூடிய வகையில், இன்றைக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கிறது.

    குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அரசுப் பணிகளில் மகளிருக்கு இட ஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக் குழுக்கள், சொத்தில் பெண்களுக்கு சம உரிமை. இப்படி பல்வேறு திட்டங்களை நிறைய சொல்லலாம்.

    பெண்களின் பொருளாதார தன்னிறைவுக்காகவும், பல திட்டங்களை நமது திராவிட மாடல் ஆட்சியில் நாம் தொடர்ந்து தீட்டி வந்து கொண்டிருக்கிறோம்.

    பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதை தாண்டி அதனுடைய அடுத்த கட்டமாக பெண்களுடைய உயர் கல்வியை உறுதி செய்திடும் வகையில் நாம் திட்டங்களை தீட்டி வருகிறோம்.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அதாவது விடியல் பயணம் திட்டம், புதுமைப்பெண் திட்டம், பணிபுரிந்து கொண்டிருக்க கூடிய பெண்களுக்கான தோழி விடுதி, இப்படி ஒவ்வொரு திட்டமும் பெண்களின் கல்வி அறிவு பெறணும், பெண்கள் நல்ல வேலைக்கு போக வேண்டும், பெண்கள் அதிகாரத்தில் அமர வேண்டும். பெண்கள் உலக அறிவை பெற வேண்டும் என்பதற்காகதான் இதையெல்லாம் இன்றைக்கு செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

    இதற்கு காரணம் பெண்கள் உயர்ந்தால்தான் ஒரு சமூகம் நிமிர்ந்து நிற்க முடியும். பெண் அடிமை தீர்ந்து பெண் அதிகாரம் பெறும் அந்த மாற்றத்தை நோக்கி இன்றைக்கு தமிழ்நாடு மிக வேகமாக போய்க் கொண்டிருக்கிறது.

    அதற்காகத்தான் இத்தனை திட்டங்களை நாம் செயல்படுத்தி வருகிறோம். பெரிய அளவிலான பல திட்டங்களை நம் அரசு செய்து வந்தாலும், சின்ன சின்ன அளவிலான திட்டங்களும் ரொம்ப முக்கியமாக அமைந்திருக்கிறது. அந்த வகையில்தான் என்னுடைய கொளத்தூர் தொகுதியில், நீட் தேர்வின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட அனிதா பெயரில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி ஆரம்பித்து பெண்களுக்கு திறன் பயிற்சி திட்டத்தை நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

    டேலி உள்ளிட்ட கணினி சார்ந்த படிப்புகள், இலவச மடிக்கணினி, தையல் பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சிகளை பெண்கள் முடித்து இன்றைக்கு அவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

    கொளத்தூர் தொகுதியிலே, அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளும் போது, அதை அவர்கள் சொல்லி கேட்கிறபோது, எனக்கு ஏற்படக்கூடிய மகிழ்ச்சி அளவிட முடியாத அளவுக்கு இருக்கும்.

    அதேபோல்தான் இன்று சைதை தொகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னெடுப்பில் கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்படுகிறது.

    நேச்சுரல்ஸ் மூலமாகவும், உஷா நிறுவனம் மூலமாகவும், மகளிருக்கு திறன் பயிற்சி கிடைக்கப் போகிறது.

    கொளத்தூர் அனிதா அச்சீவர்ஸ் போல, இந்த கலைஞர் திறன் மேம்பாட்டு மையத்திலும், டேலி பயிற்சி வழங்கப்படுகிறது. அதுவும் ஒவ்வொரு ஆண்டும், 2 ஆயிரம் பேருக்கு இந்த பயிற்சியை தந்து, அவர்கள் வாழ்க்கையில் ஒரு அடி முன்னேறி நிற்க மா.சுப்பிரமணியன் உதவியிருக்கிறார்.

    2017-ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் பல நீர்நிலைகளை குளங்களை நமது கழகத்தினர் தூர் வாருகின்ற பணியிலே ஈடுபட்டனர். அதை தொடங்கிய இடம் இந்த சைதாப்பேட்டையில்தான்.

    இங்குள்ள கோதண்ட ராமர் குளத்தில்தான் அந்த தூர் வாரும் பணியை நான் வந்து தொடங்கி வைத்தேன். அதை என்னால் மறக்க முடியாது. தமிழ்நாடு முழுவதும் ஒரு இயக்கமாக நாம் செய்தது மக்கள்கிட்ட நமக்கு மிகப்பெரிய நல்ல பெயரை வாங்கித் தந்துள்ளது.

    அதேபோல நடப்படுகிற மரங்கள் ஒழுங்காக பராமரிக்கப்பட்டு, அவை மரங்களாக வளர்வதை உறுதி செய்ய வேண்டும் என அதையும் கவனத்தில் வைத்து முறையாக பராமரிக்கக்கூடியர்களுக்கு பசுமை காவலர் விருதுகளை வழங்கி ஊக்குவித்தவர்தான் அமைச்சர் மா.சுப்பிரமணியன். அதுவும் மிக பாராட்டுக்குரியது.

    மக்கள் பணியானாலும், கழக பணியானாலும் முன்னிலையில் நிற்கக் கூடியவர் அமைச்சர் மா.சுப்பிரமணியன். அவர் எதையும் தொடங்கி வைத்து பாதியில் விடுபவர் அல்ல. மாரத்தான் போல, நீண்ட நெடிய பல காலத்துக்கு நிலைக்கக் கூடிய திட்டமாகத்தான் இருக்கும்.

    அதுபோலதான் இன்றைக்கு தொடங்கி வைத்துள்ள கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையம் இருக்கும் என நிச்சயம் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மைக்கோ பிளாஸ்மா நிமோனியாவால் ஏற்படும் நுரையீரல் தொற்று உள்ளவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக தோன்றலாம்.
    • குழந்தைகள் பலர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகிறார்கள்.

    சென்னை:

    பருவமழை காலத்தில் பரவி வரும் வாக்கிங் நிமோனியா காய்ச்சல் மக்கள் மத்தியில் ஒருவிதமான பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த மைக்கோ பிளாஸ்மா நிமோனியாவால் ஏற்படும் நுரையீரல் தொற்று உள்ளவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக தோன்றலாம். லேசான அறிகுறிகளுடன் இருப்பதால் வீட்டிலோ அல்லது படுக்கையிலோ இருக்க மாட்டார்கள். நடமாடி கொண்டிருப்பார்கள். எனவே தான் வாக்கிங் நிமோனியா என்று பெயர் வைத்துள்ளார்கள்.

    பொதுவான அறிகுறிகளாக உடல் சோர்வு, காய்ச்சல், தலைவலி, இருமல், தொண்டை வலி இருக்கும். குழந்தைகளை பொறுத்தவரை தும்மல், சுவாசிப்பதில் சிரமம், சளி, கண்களில் நீர்வடிதல் காணப்படும்.

    நுரையீரல் தொற்று உள்ளவர்களுக்கு பொதுவாக குளிர், அதிகமான இருமல், சோர்வு காணப்படும். சிலர் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம். இந்த மாதிரி அறிகுறி இருப்பவர்கள் பி.சி.ஆர்., ஆன்டிபாடி பரிசோதனை செய்து கொள்வது அவசியம். தொற்று கண்டறியப்பட்டால் 'அசித்ரோமைசின்' மாத்திரை எடுத்து கொள்கிறார்கள்.

    கடுமையான மூச்சு திணறலுடன் பலர் ஆஸ்பத்திரிகளுக்கு வருவதாகவும் அவர்களுக்கு ஆக்சிஜன் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார். குழந்தைகள் பலர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகிறார்கள்.

    இந்த தொற்று ஏற்பட்டு இருப்பவர்கள் தும்மும் போதும், இருமும் போதும் வெளிப்படும் கிருமிகளால் மற்றவர்களுக்கும் இந்த தொற்று ஏற்படுகிறது.

    நெருக்கமான இடங்களில் செல்பவர்கள், பள்ளி அல்லது கல்லூரி மாணவ-மாணவிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் எளிதில் இந்த தொற்றுக்கு ஆளாகிறார்கள். இந்த தொற்றில் இருந்து தப்பிக்க முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி மட்டுமே தீர்வு என்கிறார்கள்.

    • சென்னையில் மலர் கண்காட்சி வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • கண்காட்சியை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.

    சென்னையில் 4-வது மலர் கண்காட்சியை இன்று செம்மொழிப் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் கண்காட்சியை பார்வையிட்டார்.

    மலர் கண்காட்சியில் யானை, மயில், பறவை, பட்டாம்பூச்சி, ஊட்டி மலை ரயில், படகு, கார், பொம்பைகள் போன்ற வடிவங்களில் குழந்தைகளைக் கவரும் வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    இன்று தொடங்கி உள்ள மலர் கண்காட்சி வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். இதற்காக, பெரியவர்களுக்கு ரூ.150-ம் சிறியவர்களுக்கு ரூ.75-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், கண்காட்சியை பார்வையிட நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி மலர் கண்காட்சியை காணவரும் பெரியவர்களுக்கு ரூ.200, சிறியவர்களுக்கு ரூ.100, கேமரா எடுத்து வந்தால் ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    கடந்தாண்டு வசூலிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் கண்காட்சியை காண வரும் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    கடந்த ஆண்டு கட்டணமே இந்த முறையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறியிருந்த நிலையில், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    • செய்தியின் உண்மைத்தன்மையை அறியாது அரசியல் கட்சியினர் கண்டன அறிக்கை வெளியிடுகின்றனர்.
    • மத்திய அரசு நிதியை தராத நிலையிலும் நிதிக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம்.

    500 அரசு பள்ளிகளை தனியாருக்கு கொடுப்பதாக தகவல் வெளியான நிலையில் இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பள்ளிகளை தத்தெடுப்பு, தாரைவார்த்தல் என்ற வார்த்தையை நான் குறிப்பிடவில்லை.

    * நம்ம ஸ்கூல் நம்ம ஊர் பள்ளியில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பை அளித்தவர்களுக்கு நன்றி என்று தான் கூறினேன்.

    * சிஎஸ்ஆர் நிதி மூலம் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நடவடிக்கைக்கு நன்றி என்றுதான் கூறியுள்ளேன்.

    * அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்கவில்லை. எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.

    * தொடர் வதந்திகளால் நாங்கள் சோர்வடைகிறோம், நம்பகத்தன்மையுடன் செய்தி வெளியிடுங்கள்.

    * எங்களின் பிள்ளையான அரசுப்பள்ளியை மற்றொருவருக்கு தாரைவார்க்கும் அவசியம் எங்களுக்கு இல்லை.

    * தேவையின்றி பிரச்சனைகளை கிளப்பி கண்டன அறிக்கைகளை வெளியிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    * செய்தியின் உண்மைத்தன்மையை அறியாது அரசியல் கட்சியினர் கண்டன அறிக்கை வெளியிடுகின்றனர்.

    * சிஎஸ்ஆர் நிதி மூலமாக தனியார் பங்களிப்புடன் அரசு பள்ளிகளை மேம்படுத்தவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * தமிழ்நாட்டில் உயர்கல்வியை தொடரும் மாணவர்கள் தேசிய சராசரியை விட அதிகம்.

    * கொள்கையை விட்டுக்கொடுத்து SSI நிதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்ற கூறியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    * மத்திய அரசு நிதியை தராத நிலையிலும் நிதிக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம்.

    * மாநில பட்டியலுக்கு எங்களின் கல்வியை தந்துவிடுங்கள். எங்கள் பிள்ளைகளை நாங்கள் பார்த்து கொள்கிறோம். நிதிச்சுமையை தமிழக அரசே ஏற்கும் என்று கூறினார்.

    • ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
    • அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். நீலகிரி மற்றும் கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    7 மற்றும் 8-ந்தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று முதல் 4-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    5-ந்தேதி குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், நடிகர் எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார்.
    • சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், நடிகர் எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார்.

    கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து விமர்சித்து ஒரு பதிவை முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதற்கு பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது வீட்டின் முன்பு போராட்டங்களும் நடத்தின.

    இதனிடையே எஸ்வி சேகருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அப்போது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை, 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு எதிராக தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், நடிகர் எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

    இந்த நிலையில், நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒருமாத சிறை தண்டனையை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் இன்று உறுதி செய்துள்ளார். மேலும் எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். 

    • அண்ணா பல்கலை கழக மாணவி விவகாரத்தை அரசுக்கு நினைவுபடுத்த வேண்டியது எதிர்கட்சிகளின் கடமை.
    • என் கட்சியில் ஒருவர் தவறு செய்தாலும் நான் நிச்சயமாக தட்டிக் கேட்பேன்.

    திருச்சி:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்றத்தில் தமாகவின் குரல் பலமாக ஒலிக்கும் நோக்கில் 2025-ம் ஆண்டில் தொடர் களப்பணிகள் நடைபெறும்.

    தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் மதுபான கடைகள் தான். மதுபான கடைகளை ஆட்சிக்கு வந்தால் மூடுவோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, அதை செய்யாமல் தவிர்ப்பது கண்டிக்கத்தக்கது.

    அண்ணா பல்கலை கழக மாணவி விவகாரத்தை அரசுக்கு நினைவுபடுத்த வேண்டியது எதிர்கட்சிகளின் கடமை. அரசு உண்மை நிலையை வெளிக் கொண்டுவர வேண்டும். குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.

    தி.மு.க. அரசின் அவலங்களை கண்டித்து போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இன்று காலை கூட பசுமைத் தாயகம் தலைவர் செளமியா அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் எதிர்க்கட்சிகள் குரலை ஒருபோதும் முடக்கிவிட முடியாது.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் வாய் மூடி மவுனமாக இருப்பது வெட்கக்கேடானது. என் கட்சியில் ஒருவர் தவறு செய்தாலும் நான் நிச்சயமாக தட்டிக் கேட்பேன். நடவடிக்கை எடுப்பேன். ஆதரவாக இருக்க மாட்டேன்.

    2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணியில் ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. "ஒத்த கருத்து" என்பது தேர்தலில் வெற்றி பெறுவது தான். புயல், கன மழையால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு. அரசு இழப்பீட்டை இன்னும் வழங்கவில்லை. ஏக்கர் ஒன்றுக்கு நெற்பயிருக்கு 35,000 ரூபாய், தோட்டப்பயிர்களுக்கு 25,000 ரூபாய் வழங்க வேண்டும்.

    பயிர்க்காப்பீட்டுக்கு அரசு வழங்கும் மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு முழுமையான நிதியை ஒதுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளியில் சுமார் 130-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • தகவலறிந்த அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் சோகத்தூரில் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டுக்காரன் பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் சுமார் 130-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இதில் சில ஆசிரியர்கள் பள்ளியில் சரிவர பணியை செய்வதில்லை என்பது பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. உடனே அந்த ஆசிரியர்களை வேறு இடத்திற்கு மாற்ற செய்ய வேண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்வி துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் சரிவர பணி செய்யாத ஆசிரியர்களை தவிர 3 ஆசிரியர்களை மட்டும் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டதாக தெரியவந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்காக மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். ஆனால், ஆட்டுக்காரன்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு மட்டும் மாணவர்கள் படிக்க யாரும் வரவில்லை. இதனால் பணியில் இருந்த ஆசிரி யர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது பள்ளியின் முன்பு மாணவர்களின் பெற்றோர்கள் திரண்டு வந்து திடீரென்று போராட் டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தென்றல் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அப்போது அதிகாரியிடம் பெற்றோர்கள், 3 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று பள்ளிக்கு மாணவர்களை அனுப்பாமல் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

    மேலும், பணியிடமாற்றம் செய்யப்பட்ட 3 ஆசிரியர்களையும் மீண்டும் இதே பள்ளியில் பணியமர்ந்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இதுகுறித்து அதிகாரி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×