என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
- உரிய அனுமதி பெறாமல் ஆட்டோக்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் தலைநகரில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றது. இதில் சிலர் ஓட்டுனர் உரிமம் தகுதிச் சான்று அனுமதிச்சான்று பெறாமல் இயக்குவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாளுக்கு தொடர்ந்து புகார் வந்தது.
இதையடுத்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு மற்றும் போக்குவரத்து போலீசார் திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் தகுதி சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்ட 11 ஆட்டோக்களை பறிமுதல் செய்து போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய அனுமதி பெறாமல் ஆட்டோக்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
- நாகை புத்தூர் பகுதியில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்:
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன் இல்ல திருமண விழா, புதிதாக கட்டி முடிக்கப்பட்ட தி.மு.க. மாவட்ட அலுவலகம் திறப்பு விழா, நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
முதலமைச்சர் வருகையை யொட்டி நாகை புத்தூர் பகுதியில் பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், விழா முன்னேற்பாடு பணிகளிலும் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பணிகள் நடைபெறுவதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். அப்போது முன்னேற்பாடுகள் குறித்தும், போலீசார் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
- ஒரு கழிவறையில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இதனால் மற்ற மாணவர்கள் கதவை தட்டி உள்ளனர்.
- சக மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகில் உள்ள மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே அரசு என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நெல்லை அண்ணாநகரை சேர்ந்த விக்னேஷ் (வயது20) என்பவர் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேசன் பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவர் நேற்று தேர்வு எழுதி விட்டு விடுதிக்கு வந்தார். பின்னர் மாலையில் கழிவறைக்கு சென்றவர் திரும்பவில்லை. மற்ற மாணவர்களும் தூங்க சென்று விட்டனர். நள்ளிரவில் விடுதியின் ஒரு கழிவறையில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இதனால் மற்ற மாணவர்கள் கதவை தட்டி உள்ளனர்.
ஆனால் உள்புறமாக தாழ்பாள் போடப்பட்டிருந்ததால் திறக்கப்படவில்லை. பின்னர் விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது மாணவன் விக்னேஷ் அமர்ந்த நிலையிலேயே இறந்து கிடந்தார்.
இது குறித்து போடி தாலுகா போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவன் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவன் எவ்வாறு இறந்தார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து சக மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவனுக்கு அடிக்கடி வலிப்பு நோய் வரும் என்று கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ள நிலையில் போலீசார் அது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
- கோபாலன் இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் வசிப்பவர் கோபாலன் (வயது70). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி தன்னுடைய சேமிப்பு கணக்கில் வைத்துள்ள பணத்தை தேன்கனிக்கோட்டை ஒசூர் சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்ற போது 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் பணம் எடுத்து தருவதாக கூறி ஏ.டி.எம். கார்டை வாங்கியுள்ளார்.
ஆனால் பணம் வர வில்லை என கூறி வேறு ஒரு கார்டை கொடுத்து அனுப்பி உள்ளார். அவர் சென்ற பின் கோபாலன் கார்டை பயன்படுத்தி ரூ.18,300 பணம் எடுத்து உள்ளார். தன்னுடைய செல்போனுக்கு தகவல் வந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த கோபாலன் இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், கண்ணன், தனிபரிவு தலைமை காவலர் ரமேஷ் ஆகியோர் ஏ.டி.எம். மில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த வாலிபரின் உருவத்தை வைத்து தேடி வந்தனர்.
தொடர்ந்து தேன்கனிக்கோட்டை பகுதியில் இதே போல் புகார்கள் வந்து உள்ளது. இந்நிலையில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது தேன்கனிக்கோட்டை-ஒசூர் சாலையில் உள்ள ஏ.டி.எம். அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்து வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.
அப்போது அஞ்செட்டி அருகே உள்ள எருமுத்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் (20) என்பதும், 10-ம் வகுப்பு படித்து விட்டு, ஓட்டலில் சர்வர் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்த 20 ஏ.டி.எம். கார்டுகள், ரூ.58 ஆயிரம் பணம் பறிமுதல் செய்தனர்.
பின்னர் இது குறித்து தேனிகனிக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில் ஸ்ரீதர் கடந்த 1 வருடங்களாக பணம் எடுக்க வரும் வயதான நபர்களை குறி வைத்து அவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து தன்னிடம் உள்ள போலி ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் நுழைத்து அவர்கள் கூறும் பாஸ் வேர்டை அடித்து பணம் வரவில்லை என கூறி அனுப்பி விட்டு, பின்னர் அவர்கள் கொடுத்த அசல் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுத்து திருடியதாகவும், மேலும் திருடிய பணத்தை சூதாடியும், ஒரு மோட்டர் சைக்கிளையும் வாங்கியதாக ஸ்ரீதர் வாக்கு மூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் ஸ்ரீதர் இது போன்று பலரிடம் மோசடியில் ஈடுப்பட்டுள்ளாரா?
தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஊட்டி, குன்னூர் நகர பகுதிகளில் மொத்தம் 7 ரெயில் நிலையங்கள் உள்ளது.
- இந்த ரெயில் நிலையத்தில் பல்வேறு திரைப்படங்களின் காட்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
காதலுக்கு வயது ஒரு தடையில்லை. எந்த வயதில் வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும் யாருக்கும் காதல் வரலாம்.
ஒருவர் மீது ஒருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதே காதல். அன்பினை வெளிப்படுத்தும் நாளே இந்த காதலர் தினம்.
காதலர்கள் தங்கள் காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு சிறந்த இடமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே லவ்டேல் ரெயில் நிலையத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டி ரெயில் நிறுத்தங்களில் ஒன்றான இது சேலம் ரெயில்வே கோட்டத்தின் கீழ் தெற்கு ரெயில்வே மண்டலத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
ஊட்டி, குன்னூர் நகர பகுதிகளில் மொத்தம் 7 ரெயில் நிலையங்கள் உள்ளது. 7 ரெயில் நிலையங்கள் இருந்தாலும் அதில் வித்தியாசமானதாக உள்ளது லவ்டேல் ரெயில் நிலையம்.சுற்றிலும் மரங்கள், மலை முகடுகள், பள்ளத்தாக்குகள் என இயற்கை அழகுடனும், பறவைகளின் கீச் கீச் சத்தம் என எப்போதும் கண்களுக்கு இனிமையாகவும், அமைதியான சூழ்நிலையில் இந்த ரெயில் நிலையம் காட்சியளிக்கிறது.
இதுமட்டுமின்றி அனைவரும் சுற்றுலா வருவதற்கு ஏற்ற இடமாகவும் இது விளங்குகிறது.
மற்றொரு சிறப்பு ரெயில் நிலையத்தின் கட்டிடக்கலை. இந்த ரெயில் நிலையம் 1854-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்த ரெயில் நிலையம் இன்றும் அப்படியே பழமை மாறாமல் காட்சியளித்து கொண்டிருக்கிறது. இந்த ரெயில் நிலையத்தில் பல்வேறு திரைப்படங்களின் காட்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது. 1854 முதலே இந்த இடம் லவ்டேல் என அழைக்கப்பட்டு வருகிறது. 1916-ம் ஆண்டு ஊட்டியில் உள்ள மிகச் சிறந்த அழகான பகுதியாகவும் இது திகழ்கிறது. 19-ம் நூற்றாண்டின் அழகு எனவும் வர்ணிக்கப்படுகிறது.
இப்படி பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் திகழும் இந்த ரெயில் நிலையத்தை காதலர் தினம் கொண்டாடும் இடமாக மாற்ற வேண்டும் என பாரம்பரிய நீராவி அறக்கட்டளை(எச்.எஸ்.சி.டி.) கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக எச்.எஸ்.சி.டி நிறுவனர் கே.நடராஜன் கூறியதாவது:-
காதலர் தினம் என்பது உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்தக் கூடிய நாள் அல்ல. இது நட்புணர்வையும், ரசிப்புத் தன்மையையும் கொண்டாடும் தினமாகவும் உள்ளது.
இந்த தினத்தை கொண்டாடுவதற்கு சிறந்த இடமாக இந்த லவ்டேல் ரெயில் நிலையம் உள்ளது.
சிறந்த சுற்றுலா தலமாக உள்ளதால், இந்த ரெயில் நிலையத்தை காதலர் தினம் கொண்டாடும் இடமாக மாற்ற வேண்டும்.
அவ்வாறு மாற்றம் செய்து, அனைவரும் அமர்ந்து உணவு அருந்தி கொண்டு பேசும் வகையில் இருக்கைகள் அமைக்க வேண்டும். கலாசார நிகழ்ச்சிகளையும் இங்கு நடத்தலாம். அதுமட்டுமின்றி, நீலகிரியில் விளையக் கூடிய பொருட்களையும் விற்பனை செய்யும் சூழல் உருவாகும். எனவே தெற்கு ரெயில்வே இந்த ரெயில் நிலையத்தை காதலர் தினம் கொண்டாடும் இடமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தி.மு.க. முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
- தி.மு.க. ஆட்சியில் பெண்கள் முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லை.
மதுரை:
மதுரை மாவட்டம் பரவையில் பக்தர்களுக்கு நிழற்குடை அமைக்க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பூமி பூஜை நடத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்களை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே பொதுச் செயலாளர். 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அவர் மேற்கொள்வார். அவர் வழியில் நாங்கள் பணியாற்றுவோம்.
இன்றும் நான் என் மனைவியை காதலிக்கிறேன், என் குழந்தைகள் மீது அன்பு செலுத்துகிறேன். என்னை போல் அனைவரும் அவர்களது மனைவியை காதலியுங்கள் என கூறி அனைவருக்கும் அன்பு தின காதலர் தின வாழ்த்துக்கள்.
வழக்கில் இருக்கும் அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பா? ஜாமீன் மனுவில் வந்தவருக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்து என்ன பயன்? செந்தில் பாலாஜியிடம் சுப்ரீம் கோர்ட் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கின்றது.
தி.மு.க. முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தூக்கிவிட்டு இளைஞர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும்.
ஜாமீன் வாங்கி இருக்கும் அமைச்சர்கள் அனைவரையும் நீக்கிவிட்டு கட்சி பணியை பார்க்க சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆரை, கலைஞர் பேசாத முதலமைச்சர் என்று கூறினார். ஆனால் ஒரே இரவில் 10 அமைச்சர்களை மாற்றியவர் எம்.ஜி.ஆர்.
அ.தி.மு.க.வில் பிளவுகள் இல்லை. விஜய் ஒரு பிரபலமான நடிகர். மக்கள் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. இளைஞர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் அவருக்கு பாதுகாப்பு வழங்கி இருக்கிறார்கள்.
அ.தி.மு.க. ஆட்சி என்றால் பாதுகாப்பாக இருக்கலாம். தி.மு.க. ஆட்சியில் பெண்கள் முதல் மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லை என்பதால் நடிகர் விஜய்க்கு பாதுகாப்பு கொடுப்பது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
- புகாரின் பேரில் போலீசார் ஆசிரியரை தாக்கிய வாலிபர்களை தேடி வருகின்றனர்.
- பல்லடம் போலீஸ் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
நேற்று மாலை பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. உதவி தலைமை ஆசிரியர் மாணிக்கம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது பள்ளி வளாகத்திற்கு வெளியே மாணவர்களை சில வாலிபர்கள் தாக்குவதாக கிடைத்த தகவலின் பேரில் மாணிக்கம் அங்கு சென்றார். அப்போது, மாணவர்களை சிலர் அடித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தடுத்து நிறுத்த முயன்ற போது அந்த இளைஞர்கள் ஆசிரியர் மாணிக்கத்தையும் தாக்கினர்.
இதில் காயமடைந்த அவர் இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஆசிரியரை தாக்கிய வாலிபர்களை தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள், சுமார் 20க்கும் மேற்பட்டோர் பல்லடம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஆசிரியரை தாக்கியவர்கள் மீது உடனடி நடவடிக்கை வேண்டும் என போலீசாரிடம் வலியுறுத்தினர். இதனால் பல்லடம் போலீஸ் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- சட்டசபை தேர்தலுக்கு முன்னர் மண்டல அளவில் 4 மாநாடுகளை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
- எதிர்க்கட்சியாக இருந்தால் தேர்தலுக்கு முன் பிரமாண்ட பொதுக்கூட்டங்களை ஜெயலலிதா நடத்துவார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி கடந்த 2-ந்தேதியுடன் முதல் ஆண்டு முடிவடைந்து 2-ம் ஆண்டு தொடங்கியுள்ளது. கட்சியின் உள் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை விஜய் நியமனம் செய்து வருகிறார்.
இதுவரை 5 கட்டங்களாக மாவட்ட செயலாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அடுத்ததாக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வியூகம் அமைப்பது தொடர்பான பணிகளில் விஜய் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கு முன்னர் மண்டல அளவில் 4 மாநாடுகளை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்க்கட்சியாக இருந்தால் தேர்தலுக்கு முன் பிரமாண்ட பொதுக்கூட்டங்களை ஜெயலலிதா நடத்துவார். அவரது பாணியில் மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் மாநாடுகளை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
விஜயின் அரசியல் சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைத்தவாறு மாநாடுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் தனது சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்குகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
- 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி.
- பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து பா.ஜ.க. பேசட்டும்.
நாகர்கோவில்:
சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை,ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பில் 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நாகர்கோவில் டதி பள்ளியில் இன்று நடந்தது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 15 நாட்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டார்.
பொதுவாக சிறுமிகள் மற்றும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக வெளியே சொல்வதற்கு தயங்குகிறார்கள். பிரச்சனைக்கு பிறகே பெற்றோருக்கு தெரியவருகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது பிரச்சனைகள் குறித்து உடனடியாக பெற்றோர், அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதிக புகார் வருவது நல்லது. இதனால் அதிக குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள். இதுவரை வெளிவராத தகவல்கள் கூட வெளிவரும்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு தெரிந்தவர்கள் மூலமாக தான் அதிக துன்புறுத்தல் வருகிறது. செல்போன் போன்ற பொருட்களை பாதுகாப்பாக கையாள வேண்டும்.
அண்ணா அறிவாலயத்தின் செங்கல்களை உருவுவேன் என அண்ணாமலை வாய் சவடால் பேசுகிறார். பொதுவாக அவர் ஏதேனும் பேசிவிட்டு பின்னர் வாபஸ் வாங்குவார். அவர் சொன்னதை எதையும் சாதித்ததில்லை. இவர்போல பேசியவர்கள் அழிந்தது தான் சரித்திரம். தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது.
மணிப்பூரில் 2 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவருக்கு பாலியல் உள்ளிட்ட வெளியே சொல்ல முடியாத வகையில் துன்புறுத்தல் இழைக்கப்பட்ட நிலையில் பா.ஜ.க.வால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.
அதை சரி செய்த பின்பு தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து பா.ஜ.க. பேசட்டும். நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது நல்லது. மக்களோடு மக்களாக பயணித்தால் தான் மக்கள் பிரச்சனைகளை அறிய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எந்த சூழ்ச்சியாலும் அ.தி.மு.க. சின்னத்தை முடக்க முடியாது.
- தி.மு.க., அ.தி.மு.க.வின் பலத்தை குலைக்க சதி செய்து வருகிறது.
சென்னை:
முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வின் மூத்த உறுப்பினர்களின் ஒருவரான செங்கோட்டையன், எம்.ஜி.ஆர். மறைவின்போது, ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வந்து அவருடன் பணியாற்றிய முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்தவர். செங்கோட்டையன் கட்சியில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தவர்.
அ.தி.மு.க.வில் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்ட போதும் தொடர்ந்து அ.தி.மு.க.வில் பணியாற்றிய அவர், எந்த நேரத்திலும் அ.தி.மு.க. இயக்கத்திற்காக கடைசி வரையில் நிச்சயமாக உறுதுணையாக இருப்பார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
செங்கோட்டையனுக்கு ஜெயலலிதா கொடுத்த அதே மரியாதையை எடப்பாடி பழனிசாமியும் கொடுத்து வருகிறார்.
ஓ.பி.எஸ் நிபந்தனை இன்றி அ.தி.மு.க.வில் இணைய தயார் என்று கூறும் அதே நேரத்தில் மற்றொருபுறம் இரட்டை இலை சின்னத்தை கேவிட் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்கிறார். இதில் என்ன இரட்டை மனநிலை இரட்டை நாக்கு என காட்டமாக கூறினார்.
மேலும் நீதிமன்றம் இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு விசாரிக்கலாம் என்பதில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை.
அ.தி.மு.க.வை பொறுத்த வரையில் ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள், நாடாளுமன்ற, மாநிலங்கள் உறுப்பினர்கள் மற்றும் கட்சியினுடைய அதிகாரமிக்க பொதுக் குழு உறுப்பினர்கள் இருக்கின்ற நிலையில் அ.தி.மு.க. சின்னம் குறித்த எந்த பயமும் எங்களுக்கு இல்லை.
தேவையற்று சிலர் அவுளை மெல்லுவது போல் பேசக் கூடாது என்பதற்காக தான் நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை கேட்டு மனுதாக்கல் செய்தோம்.
மேலும் எந்த சூழ்ச்சியாலும் அ.தி.மு.க. சின்னத்தை முடக்க முடியாது என்றும் கண்டிப்பாக இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி சட்ட முறைப்படி வெல்லுவார்.
தி.மு.க. ஏதாவது ஒரு வகையில் அ.தி.மு.க.வின் பலத்தை குறைக்கவும் ஒற்றுமையை குலைக்க சதி செய்து வருகின்றனர்.
இதேபோல் நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதால் கூட்டம் அதிகமாக சேரும் என்பதால் மத்திய அரசு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது என்பது முழுக்க முழுக்க அவரது பாதுகாப்புக்காக என்றால் அதில் எந்த கருத்தும் இல்லை, சந்தோசம். ஆனால் மாறாக சுயநலமாக பா.ஜ.க. அரசு அவரை தன் வசம் இழுத்துக் கொள்ளு மேயா னால் அது குறித்த கருத்துக் களை பா.ஜ.க.வின் வரலாற்றை திரும்பி பார்த்தால் உங்களுக்கு தெரியும்.
எந்த ஒரு மாற்று அரசியல் கட்சி தலைவர்களின் கருத் துக்களை பெற்று கட்சியை வழிநடத்தக் கூடிய இடத்தில் அ.தி.மு.க. இல்லை. அ.தி.மு.க. கட்சி விவகாரம் குறித்து ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
செங்கோட்டையன் குறித்து மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த உதயகுமாரும் கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், "எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆத்மா எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளது. எனவே அவர் அ.தி.மு.க.வை சிறப்பாக வழி நடத்துவார்.
செங்கோட்டையன் பொறுத்தவரை அ.தி.மு.க.வில் மூத்த தலைவர். அவரை நாங்கள் அனை வரும் மதிக்கிறோம்" என்று கூறினார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மாவட்ட பரவையில் நிரு பர்களுக்கு பேட்டியளிக்கையில், "அ.தி.மு.க.வில் எந்த பிளவும் இல்லை. அனைவரும் ஒற்றுமை யாக இருக்கிறோம்" என்று கூறினார்.
அ.தி.மு.க.வில் செங் கோட்டையன் எழுந்துள்ள சர்ச்சை நாளுக்கு நாள் அதிக ரித்து உள்ளது. அவர் அவர் அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்துவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அவர் அ.தி.மு.க. வை பாதிக்கும் வகையில் எந்த செயலிலும் ஈடுபட மாட்டார் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.
- கடந்த வாரம் ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடத்தப்பட்டது.
- ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஞானசேகரனிடமிருந்து செல்போனை முக்கிய ஆதாரமாக போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு என்பதால் இந்த வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களை போலீசார் முதன்மையானதாக கருதி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த வாரம் ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடத்தப்பட்டது. 3 மணி நேரமாக நடத்தப்பட்ட இந்த பரிசோதனையின்போது பல கோணங்களில் அவரை பேச வைத்து குரலை பதிவு செய்தனர்.
இந்நிலையில் ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.
- தமிழகம் முழுவதும் நகரம், கிராமங்களை மேம்படுத்த திட்டம்.
- போக்குவரத்து நெரிசலை தவிர்க மூன்று புதிய புறநகர் பேருந்து முனையங்கள்.
சென்னை:
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'பேர்புரோ 2025' கட்டுமான வீட்டு மனை கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை சட்டென்று முதலில் உணர்ந்து கொள்வது கட்டிடங்கள்தான். அந்த வகையில், உங்களுடைய அமைப்பையும், நீங்கள் நடத்தி வரும் இந்த கண் காட்சியையும் வளர்ச்சியின் அடையாளமாகதான் நான் பார்க்கிறேன்.
மக்கள்தொகை பெருக்கம் அதிகம் இருக்கக்கூடிய நாட்டில் மக்களின் எல்லாத்தேவைகளையும் அரசே செய்துவிட முடியாது. உங்களை போன்ற அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
நம்முடைய மாநில மக்கள் தொகையில், 48 விழுக்காடு மக்கள் நகர்ப்புறத்தில் வசிக்கிறார்கள். இதனால் நாம் மிகவும் நகரமய மாக்கப்பட்ட மாநிலமாக இருக்கிறோம். இது வரும் ஆண்டுகளில் மேலும் உயரும். இதனால், நீடித்து நிலைக்கக்கூடிய வீட்டு வசதிக்கான தேவைகள் அதிகரிக்கும்.
சென்னை பெருநகர பகுதிக்கான முதல் மற்றும் இரண்டாம் முழுமைத் திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது மூன்றாவது முழுமைத் திட்டத்தையும் நம்முடைய அரசுதான் முனைப்போடு தயாரித்துக் கொண்டு வருகிறது.
நிலையான வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் தொழில்நுட்ப ரீதியான முன்முயற்சிகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகர்ப்புற வளர்ச்சியை முன்னெடுத்து செல்லவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், இந்த திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம்தான் அடுத்த 20 ஆண்டுகளுக்கு சென்னை பெருநகர பகுதியின் வளர்ச்சியை வழிநடத்தப்போகிறது.
அதேபோல், தமிழ்நாடு முழுவதும் நகரம், கிராமங்களை மேம்படுத்த 10 மண்டலத் திட்டங்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கோயம்புத்தூர், மதுரை, ஒசூர், சேலம், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் திருநெல்வேலியை உள்ளடக்கிய 136 நகரங்களுக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஓசூருக்கான முழுமைத் திட்டமும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கான முழுமைத் திட்டம் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மாநகரை சுற்றியிருக்கக்கூடிய 9 வளர்ச்சி மையங்களான மீஞ்சூர், திருவள்ளூர், திருமழிசை, மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மறைமலைநகர், திருப்பெரும்புதூர் மற்றும் பரந்தூர் ஆகிய பகுதிகளுக்கு புதிதாக, புதுநகர் வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. புதுநகர் திட்டங்களின் நோக்கம் என்னவென்றால்…
சென்னையின் நெரி சலைக் குறைக்கவேண்டும், பொருளாதார மையங்களை உருவாக்க வேண்டும், போக்குவரத்து இணைப்புகளை ஏற்படுத்த வேண்டும், சென்னை மாநகரை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்ய வேண்டும். இதுதான் நோக்கம்.
கடந்த 10 ஆண்டுகளில், இப்படிப் பட்ட திட்டங்கள் தயாரிக்கும் பணி தேக்கமடைந்து இருந்தது. அந்த நிலையை மாற்ற நம்முடைய அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. ஒற்றைச் சாளர முறை மற்றும் இணையதள கட்டிட அனுமதி பெறும் முறை தற்போது நிறை வேற்றப்பட்டிருக்கிறது.
இந்த திட்டத்தின்கீழ், மனைப் பிரிவு மற்றும் கட்டிடம் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் திட்ட அனுமதிகளின் எண்ணிக்கை 45 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. ஒப்புதல் வழங்கு வதற்கான கால அளவு 180 நாட்களிலிருந்து 64 முதல் 90 நாட்களாக குறைந்திருக்கிறது.
குடியிருப்பு கட்டிடங்களுக்கு கட்டிட முடிவுறு சான்று பெறுவதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டதால், இதுநாள் வரை 51 ஆயிரம் கட்டிட அனுமதிகள் பெறப்பட்டிருக்கிறது.
அதனால், முன் அனுமதிக்கப்பட்ட 100 கட்டிடத்திட்டங்களை பதிவேற்றி இந்த செயல் முறையை மேலும் செம்மைப்படுத்தி எளிமையாக்கு வதற்கான முயற்சிகளை வீட்டுவசதித் துறை தற்போது மேற்கொண்டு வருகிறது.
சென்னையின் உட்பகுதிகளில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கவும், வெளிவட்ட சாலைகளுக்கு இணைப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து முனையங்களை பரவலாக்கவும், சி.எம்.டி.ஏ மூலமாக கிளாம்பாக்கம், மாதவரம் மற்றும் குத்தம்பாக்கம் ஆகிய இடங்களில் மூன்று புதிய புறநகர் பேருந்து முனையங்களை உருவாக்கியிருக்கிறோம்.
குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.
செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரத்தில் நவீன போக்குவரத்து முனையங்கள் அடுத்த ஆண்டு திறக்கப்பட இருக்கிறது.
சென்னையின் நீண்ட கடற்கரை பகுதியும், ஏரிக ளும் இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் பெரும் கொடைகள். இதை மேம் படுத்த, முதற்கட்டமாக, சென்னை மாநகரில் அமைந்திருக்கும் 12 ஏரிகள் மற்றும் 4 கடற்கரைப் பகுதிகளைத் தேர்வு செய்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் மக்கள் கூடும் இடங்களாக மேம்படுத்த 250 கோடி ரூபாய் செலவில் திட்டம் தயாரித்திருக்கிறது.
இந்தத் திட்டம், பொழுதுபோக்கு சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகள், மழைநீரை சேகரித்து வெள்ளத்தை தடுக்கும் அமைப்போடு உருவாக்கப்படும்.
ஸ்பாஞ்ச் பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், விளையாட்டு வளாகங்கள், பல்நோக்கு மையங்கள் மற்றும் சந்தைகள், பேருந்து முனையங்கள், சுரங்கப்பாதைகளை நவீனபடுத்துதல், புதிய திட்ட சாலை இணைப்பு பகுதிகளை கண்டறிந்து மறுவடிவமைத்து மேம்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழு மத்தால் 196 நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள், சுமார் 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதலீட்டில், கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், செம்மஞ்சேரியில் அமையவுள்ள நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விளையாட்டு நகரம், தீவுத்திடலில் அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த பொருட்காட்சி மையம் மற்றும் போரூர் நகர்ப்புறப் பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட பரந்து விரிந்த நன்செய் நிலப் பூங்கா ஆகியவை குறிப்பிடத்தக்க திட்டங்கள்.
இதனை செயல்வடிவாக்க தற்பொழுது நடைமுறையில் இருக்கும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் 2019-ஐ புதுப்பிக்கும் செயல்பாடுகளில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முழு ஈடுபாட்டோடு செயலாற்றி வருகிறது.
நான் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் போது பல முதலீட்டாளர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அவர்கள் பெரும்பாலும் என்னிடத்தில் கேட்டது என்னவென்றால், சென்னை யிலும், மாநிலம் முழுவதும் இன்னும் கூடுதலாக தொழில் பூங்காக்களும், இன்னும் கூடுதல் அலுவலகக் கட்டிடம் தேவைப்படுகிறது என்று சொன்னார்கள். எனவே, தொழில் துறை கோரிக்கையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.
நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ. அன்பரசன், கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா மற்றும் தொழில் அதிபர்கள், வங்கி அதிகாரிகள், கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.






