என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பாஜகவால் நியமிக்கப்பட்ட வெறுப்பு நிறைந்த ஏஜென்ட் மட்டுமே.
- தமிழ்நாடு அரசின் அரசியல் எதிரியாக செயல்பட்டு ஆளுநர் மாளிகையை தவறாக பயன்படுத்தவில்லையா?
தமிழ்நாட்டிற்கு எது சிறந்தது என்று எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் இறையாண்மையை அவமதிக்காதீர்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆளுநரின் கருத்துகள் அரசியல் சட்ட வரம்புகளை ஒவ்வொரு நாளும் மீறி வருகின்றன. அவரது சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகள் தற்போது உச்சநீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கப்பட்டு நீதிமன்றத்தால் எழுப்பப்பட்ட அவதானிப்புகள் மற்றும் கேள்விகள் அனைத்து செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் வெளியானது.
மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநரின் நடத்தை குறித்து இந்து ஆங்கில நாளிதழின் இன்றைய கட்டுரையை முன்னிலைப்படுத்தியதில் என்ன தவறு உள்ளது.? முதலமைச்சர் தனது X தள ட்வீட் பதிவில் நீதிமன்ற நடவடிக்கைகள் எதையும் குறிப்பிடவில்லை.
இருப்பினும் பதிலடி என்ற போர்வையில், பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், வேறு பதவியை பெற நினைக்கும் கவர்னர், டில்லியில் உள்ள உயரதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க, தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
அவரது ட்வீட் ஆளுநராக அவரது கண்ணியம் இல்லாததை வெளிப்படுத்துகிறது மேலும் அரசியலமைப்பு சட்டத்தால் வழங்கிய பதவியை அரசியல்மயமாக்கிக் கொண்டுள்ளார் என்பதை நிரூபிப்பதாக உள்ளது.
தி இந்து பத்திரிக்கையானது நன்மதிப்பை பெற்ற செய்தித்தாள். அதன் வரலாறு முழுக்க சுதந்திரமான மற்றும் அதீத நேர்மையை கடைபிடித்து ஒருமைப்பாட்டினை காக்கும் வகையில் இருந்துவருகிறது. சாவர்க்கரையும் கோட்சேவையும் பின்பற்றுபவர்களுக்கு நேர்மை என்பது அந்நியமானதாக இருந்தாலும், மாநில ஆளுநர் பத்திரிகைகளை அவமதிக்க கூடாது என்பதைத்தான் பொதுமக்கள் எதிர்பார்ப்பர்.
கவர்னர் தனது ட்வீட்டில் எந்த ட்விட்டர் கணக்குகளை குறிப்பிட்டு இணைந்துள்ளார் என்பதை பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது. ஒருவேளை அவர் அந்த தனிநபர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் ஆதரவை எதிர்பார்க்கிறாரா.? அவர் தமிழ்நாடு அரசின் அரசியல் எதிரியாக செயல்பட்டு ஆளுநர் மாளிகையை தவறாக பயன்படுத்தவில்லையா?
அரசியல் பாதுகாப்பின்மை மற்றும் தமிழ்நாட்டு மக்களைப் புரிந்துகொள்வதை பற்றி ஆளுநர் பேசுகிறார். அரசியல் பற்றி வகுப்பெடுக்க இந்தியாவில் எங்காவது ஒரு இடத்தில் தேர்தலில் போட்டியிட்டுள்ளாரா ஆளுநர்.? அவர் பாஜகவால் நியமிக்கப்பட்ட வெறுப்பு நிறைந்த ஏஜென்ட் மட்டுமே.
தமிழ்நாட்டு மக்களையும் திமுகவினையும் உண்மையிலேயே ஆளுநர் புரிந்து கொள்ள விரும்பினால் அவரது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்து அவரே தேர்ந்தெடுக்கும் ஏதாவதொரு சட்டமன்ற தொகுதியில் நின்று தேர்தலில் போட்டியிடுமாறு அழைக்கிறோம். நோட்டாவிற்கு கீழ் வாக்குகள் வாங்குவதையாவது தவிர்ப்பாரா என்று பார்ப்போம்.
கவர்னர் அவர்களே, ஆட்சியைப் பற்றி உங்களிடமிருந்து எங்களுக்கு எந்த விரிவுரைகளும் தேவையில்லை. இந்த மாநிலம் கல்வியில் #1 இடத்தில் உள்ளது.
தொழில், வேலைவாய்ப்பு மற்றும் பிற நல்லாட்சி குறியீடுகளில் முன்னணியில் உள்ளது. நீங்கள் வருவதற்கு முன்பே நாங்கள் ஒரு செழிப்பான நிலையை அடைந்துள்ளோம்.
தமிழ்நாட்டிற்கு எது சிறந்தது என்று எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். அதற்கு பதிலாக அரசியலமைப்பு மற்றும் அதன் விழுமியங்களுக்கு மதிப்பளியுங்கள்.
மாறாக தமிழ்நாட்டு மக்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் இறையாண்மையையும் அவமதிக்காதீர்கள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ரூ.9,335 கோடியில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக மெட்ரோ அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபாலிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ரூ.9,335 கோடியில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக மெட்ரோ அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபாலிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதுகுறித்து சிஎம்ஆர்எல் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ இரயில் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர். கே. கோபால், இ.ஆ.ப., அவர்களிடம் சமர்ப்பிப்பு
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-1-ல் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ இரயிலை சாலை மேம்பாலத்துடன் இணைத்து நீட்டிப்பதன் பரிந்துரைக்கான விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report) தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர்.
கே. கோபால், இ.ஆ.ப., அவர்களிடம், அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான திரு.மு.அ.சித்திக், இ.ஆ.ப., அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தார்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு.தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) திரு. டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
மெட்ரோ இரயில் மற்றும் மேம்பாலச் சாலையின் ஒருங்கிணைந்த கட்டுமானத்தை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழ்நாடு அரசுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விரிவானதிட்ட அறிக்கை திருத்தப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையின்படி, மெட்ரோ வழித்தடம் நிலை 2-இல் மற்றும் மேம்பாலச் சாலை நிலை-1-இல் முன்மொழியப்பட்டுள்ளது. இது கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தடையற்ற சாலை போக்குவரத்து மற்றும் மெட்ரோ இணைப்பை வழங்கும்.
வெளிவட்டச் சாலை (Outer Ring Road) உடன் இணைப்பதற்காக தாம்பரம் அருகே இடைநிலை சாய்வுப்பாதைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த மேம்பாலச் சாலை நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வந்து செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும்.
முன்மொழியப்பட்ட நீட்டிப்பு பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும்வண்டலூர் வழியாகச் செல்லும், இது கிளாம்பாக்கம் பேருந்து முனையம், விமான நிலையம் மற்றும் தாம்பரம் இரயில் நிலையம் போன்ற முக்கிய போக்குவரத்து மையங்களுக்கு இணைப்பை வழங்கும்.
விரிவான திட்ட அறிக்கையின் (DPR) முக்கிய அம்சங்கள்:
• வழித்தடத்தின் மொத்த நீளம்: 15.46 கி.மீ
• உயர்த்தப்பட்ட நிலையங்களின் எண்ணிக்கை: 13
• மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு: ரூ. 9,335 கோடி. (மேம்பாலச் சாலை உட்பட).
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- தனியார் பள்ளிகளில் இருந்து குறைந்தது 20 பெற்றோரை அழைத்து வர வேண்டும் என்றும் வாய்மொழியாக ஆணையிடப்பட்டுள்ளது.
- தனியார் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் நாளிதழ்களில் விளம்பரங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த திருப்பெயர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்றில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறவிருக்கும் பெற்றோரைக் கொண்டாடுவோம் என்ற பெயரிலான மாநாட்டுக்காக கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோர்களை அழைத்து வர வேண்டும் என்று அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரசு அதன் விளம்பரத்திற்காக பெற்றோரையும், ஆசிரியர்களையும் அலைக்கழிப்பது கண்டிக்கத்தக்கது.
அரசு பள்ளி மாணவர்களுக்கான திட்டங்கள் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகக் கூறி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிக்கு 7 மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு அரசு பள்ளியில் இருந்தும் குறைந்தது 50 பெற்றோர்களை அழைத்து வர வேண்டும்; அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து வர வேண்டும் என்று தலைமை ஆசிரியருக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆணையிட்டுள்ளனர். அதேபோல், தனியார் பள்ளிகளில் இருந்து குறைந்தது 20 பெற்றோரை அழைத்து வர வேண்டும் என்றும் வாய்மொழியாக ஆணையிடப்பட்டுள்ளது.
பெற்றோரை விருத்தாசலத்திற்கு அழைத்து வருவதற்காக தனியார் பள்ளிகள் அவற்றிடம் உள்ள பேருந்துகளை இலவசமாக அனுப்பி வைக்க வேண்டும்; விழா செலவுக்கு நன்கொடை வழங்க வேண்டும்; பெரிய பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் நாளிதழ்களில் விளம்பரங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மண்டலத்தில் நடந்த பெற்றோரைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி தோல்வி அடைந்து விட்டதாலும், இது தான் கடைசி மண்டல பெற்றோரைக் கொண்டாடுவோம் மாநாடு என்பதாலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை அழைத்து வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதாக ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பெற்றோரைக் கொண்டாடுவோம் என்ற பெயரில் மாநாடு நடத்த வேண்டும் என்று எந்த பெற்றோரும் கோரிக்கை விடுக்கவில்லை. பெற்றோர்களை சந்திக்க வேண்டும் என்று முதலமைச்சரோ, அமைச்சர்களோ நினைத்தால் பள்ளிகள்தோறும் சென்று பெற்றோரை சந்திக்கலாம். அதை விடுத்து 7 மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரை விருத்தாசலத்திற்கு அழைத்து வருவது மனித உரிமை மீறல் ஆகும்.
மாநாடு நடைபெறும் இடத்திற்கும், திருவண்ணாமலை மாவட்டத்தின் வடகோடி எல்லைக்கும் இடையிலான தொலைவு 170 கி.மீ ஆகும். மாநாடு காலை 8.30 மணிக்கு தொடங்கும் என்றும், பெற்றோர்கள் காலை 7 மணிக்குள் வந்து விட வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. காலை 7 மணிக்கு விருத்தாசலம் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது அதிகாலை 3.00 மணிக்கு பெற்றோர்கள் புறப்பட வேண்டும். இந்தக் கொடுமைகளையெல்லாம் பெற்றோர் விரும்பாத நிலையில் அவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வது நியாயமல்ல.
பெற்றோரைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாநாடு நடத்துவதன் பின்னணியில் புனிதமான நோக்கங்கள் எதுவும் இல்லை. விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் பரப்புரைக்கான வாய்ப்பாகவே இந்த மாநாட்டை ஆளும் திமுக பயன்படுத்திக் கொள்ளப்பார்க்கிறது.
அதற்காக ஆசிரியர்களையும், பெற்றோரையும் அலைக்கழிப்பது சரியல்ல. எனவே, விருத்தாசலத்தில் வரும் 22-ஆம் தேதி நடத்தப்படவுள்ள பெற்றோரைக் கொண்டாடுவோம் மாநாட்டை ரத்து செய்ய வேண்டும். அதற்கு பதிலாக வட்ட அளவில் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- பல்வேறு மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
- போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து பணம் மற்றும் நகையை மீட்டனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் அருகே உள்ள அண்ணாநகரில் கடந்த மாதம் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் தங்கநகை, ரூ.70 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவடமுத்து தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
வீட்டிற்கு அருகே பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் குற்றவாளியை தேடியபோது இதில் தொடர்புடையவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்துள்ள தளவாய்புரம் வன்னியன்காடு பகுதியை சேர்ந்த முத்து மகன் பிரபாகரன் (வயது 42) என தெரியவந்தது. இவர் மீது சென்னை, திருச்சி. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து திருச்செந்தூர் சென்ற தனிப்படை போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து பணம் மற்றும் நகையை மீட்டனர். பின்னர் அவரை ஒட்டன்சத்திரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த நபர் பல வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பொதுக்கூட்டம் நடத்தும் இடம் அருகே 50 அடி தூரத்தில் பெரியார் சிலை இருப்பதால் அந்தப் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது.
- அமைதியான முறையில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி.
பழனியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி திவான் மைதீன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் வரும் ஞாயிற்றுக்கிழமை 16-ந்தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் பழனி மின்வாரிய அலுவலக சாலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி பழனி காவல் நிலையத்தில் விண்ணப்பித்திருந்தோம்.
தைப்பூசத்தை காரணம் காட்டி எங்களுக்கு அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்து உள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே காவல் நிலையத்தின் உத்தரவை ரத்து செய்து வரும் 16-ந்தேதி மாலை அதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி தனபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளோம், அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என்றார்.
தொடர்ந்து, நீதிபதி தற்போது தைப்பூச நிகழ்வு என்பது அங்கே நடைபெற்று வருகிறது. மேலும் பொதுக்கூட்டம் நடத்தும் இடம் அருகே 50 அடி தூரத்தில் பெரியார் சிலை இருப்பதால் அந்தப் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது.
வேறு இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனக் கூறிய நீதிபதி, மனுதாரர் தரப்பில் தகவல் கேட்டு தெரிவிக்க கூறி வழக்கு விசாரணை சிறிது நேரம் ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணையின்போது பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் உள்ள பங்களா தெருவில் 22ம் தேதி பொதுக்கூட்டம் நடத்திட நாம் தமிழர் கட்சிக்கு ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியுள்ளது.
அமைதியான முறையில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.
பழனி பெரியார் சிலை அருகே நாதக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்த நிலையில், வேறு இடத்தில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஆண்டு முதல் டி.புதூர் கிராமத்திற்கு புதிய பஸ் இயக்கப்பட்டது.
- ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதம் செய்தனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.புதூர் மலை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பஸ் வசதி இல்லாமல் கிராம மக்கள் விடுத்து வந்த தொடர் கோரிக்கையால் 35 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு முதல் நாள்தோறும் 2 முறை தேனியில் இருந்து டி.புதூர் கிராமத்திற்கு புதிய பஸ் இயக்கப்பட்டது.
தினசரி 2 முறை மட்டுமே இயக்கப்பட்ட அந்த அரசு பஸ்சும் தற்போது சரியாக இயக்கப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் ஊருக்குள் வராமல் விலக்கு பகுதியிலேயே பொதுமக்களை இறக்கி விட்டு செல்வதால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் உள்பட அனைவருமே 2 கி.மீ. தூரம் நடந்து ஊருக்குள் வரும் நிலை உள்ளது.
பெண்கள் ஊருக்குள் வரும்படி பஸ் ஓட்டுநர், நடத்துனர்களிடம் கேட்டால் ஓசியில்தானே பஸ்சில் செல்கிறீர்கள், அப்படியெல்லாம் இறக்கி விட முடியாது என ஏளனமாக பேசுவதாக குற்றம் சாட்டினர். இந்த நிலையில் கிராமமக்கள், பள்ளி மாணவர்கள் ஊருக்குள் வந்த அரசு பஸ்சை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிபட்டி போலீசார் அவர்களை சமாதானம் செய்து பஸ்சை முறையாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். மீண்டும் பஸ் முறையாக வராத பட்சத்தில் குமுளி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போராட்டம் நடத்தப் போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
- கடந்த 2017-ம் ஆண்டு வைகை அணையை பாதுகாக்க வலியுறுத்தி ஏற்கனவே போராட்டம் நடத்தினார்.
- மழைக்காலங்களில் விரைவில் தண்ணீர் நிரம்பி உபரியாக வீணாகி செல்கிறது.
ஆண்டிபட்டி:
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் நர்மதா (வயது 46). இவருக்கு திருமணமாகி நந்தகுமார் என்ற கணவரும், 18 வயது மகனும் உள்ளனர். ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்ட இவரது தந்தை ரெயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
சமூக ஆர்வலரான இவர் நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு வைகை அணையை பாதுகாக்க வலியுறுத்தி ஏற்கனவே போராட்டம் நடத்தினார்.
தற்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து வைகை அணை போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து நிறைவேற்றப்படாமல் இருந்த அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினார். மேலும் கண்ணகி நகர் மக்கள் பிரச்சனை உள்பட பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தியுள்ளார்.
இந்நிலையில் தேனி மாவட்டத்துக்கு வந்த நர்மதா வைகை அணை நீரில் இறங்கி வழிபட்டு தனது போராட்டத்தை தொடங்கினார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக உள்ள வைகை அணையை பாதுகாக்கவும், இதனை தூர்வாரினால் கூடுதல் தண்ணீர் தேக்க முடியும் என்பதை அரசுக்கு வலியுறுத்தி ஏற்கனவே போராட்டம் நடத்தினேன். ஆனால் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து 8 ஆண்டுகளாக எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை.
இதே போல் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அந்த திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்து ஒரு பகுதியை நிறைவேற்றி உள்ளனர். ஆனால் வைகை அணையை தூர் வார ரூ.89 லட்சம் ஒதுக்கினாலே போதுமானது. ஆனால் இந்த நிதியை ஒதுக்காமல் வைகை அணையை தூர் வாராமல் வைத்துள்ளனர்.
இதனால் மழைக்காலங்களில் விரைவில் தண்ணீர் நிரம்பி உபரியாக வீணாகி செல்கிறது. மேலும் வைகை அணை நீர் வெளியேறும் வரத்து வாய்க்கால் பகுதிகளும் தூர் வாரப்படாமல் உள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். அதிகாரிகள் உத்திரவாதம் அளிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டேன் என்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
- தேனிலவு கொண்டாட வந்துள்ள பறவைகளால் கூந்தன்குளம் களை கட்டி உள்ளது.
- ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தாய் நாடுகளுக்கு திருப்பி செல்லும்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தை சார்ந்தே பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இங்குள்ள குளத்தில் தான் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. கூந்தன்குளம் விவசாயிகளுக்கு மட்டுமின்றி, பறவைகளுக்கும் வாழ்வு கொடுத்து வருகிறது.
ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் ஆயிரக்கணக்கான பறவைகள் முட்டையிட்டு, குஞ்சு பொறித்து, அந்த குஞ்சுகள் பறக்க பழகியதும் தாய் நாட்டுக்கு திரும்பிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.
அதுபோல இந்த ஆண்டிலும் சைபீரியா, மியான்மர், ஐரோப்பியா நாடுகளில் இருந்து அரிவாள்மூக்கன், ஊசிவால் வாத்து, பட்ட தலை வாத்து, பட்டை வாயன், கரண்டி வாயன், செங்கல்நாரை, பாம்பு தாரா, வெள்ளை ஐஸ்பீஸ், கிங்பிஷரஸ், பெலிகன்ஸ், கிரேட்டர் பிளமிங்கோ, கிரே பெலிகன்ஸ் உள்பட 43 வகையிலான ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு குவிந்துள்ளன.
இந்த பறவைகள் முட்டையிட்டு, குஞ்சு பொறித்ததும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தங்களது தாய் நாடுகளுக்கு திருப்பி செல்லும். இவ்வாறு தேனிலவு கொண்டாட வந்துள்ள பறவைகளால் கூந்தன்குளம் களை கட்டி காணப்படுகிறது.
குளத்தில் உள்ள மரங்களில் மட்டுமின்றி ஊருக்குள் உள்ள மரங்களிலும் பறவைகள் கூடு கட்டி வாழ்வதை காணமுடிகிறது. ஊருக்குள் நுழைந்ததுமே முதலில் வரவேற்பது பறவைகளாகத்தான் இருக்கும்.
கூந்தன்குளத்தில் வட்டமிடும் பறவைகளை காண கண்கள் கோடி போதாது. சர், சர் என விமானங்கள் பறந்து செல்வதை போல பறவைகள் பறந்து செல்வது தனி அழகாகும். எங்கு பார்த்தாலும் பறவைகள் கூட்டம், கூட்டமாக உலா வருவதைதான் காண முடிகிறது.
கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பறவைகளின் தேனிலவு மையமாக திகழும் கூந்தன்குளத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 1994-ம் ஆண்டு பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பறவைகளை பராமரிக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அழையா விருந்தாளிகளான பறவைகளை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
- நகராட்சி நிர்வாக துறை தமிழ்நாட்டில் நல்ல முறையில் வளர்ந்துள்ளது.
- 48 சதவீதமாக இருந்த நகர்ப்புற மக்கள்தொகை 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சென்னை:
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர்கள் ஆவடி நாசர், சி.வெ கணேசன், துணை சபாநாயகர் பிச்சாண்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
எப்போதும் இல்லாத அளவிற்கு நகராட்சி நிர்வாக துறை சீரியப் பணிகளை செய்து வருகிறது, மற்ற மாநிலங்களை காட்டிலும் நகராட்சி நிர்வாக துறை தமிழ்நாட்டில் நல்ல முறையில் வளர்ந்துள்ளது, 48 சதவீதமாக இருந்த நகர்ப்புற மக்கள்தொகை 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தொடங்கப்பட்டு நிலுவையில் உள்ள முடியாத பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், ஏன் பணிகளுக்கு கால தாமதம் ஆகிறது என்று அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக கூற வேண்டும்.
பஸ் நிலையங்கள், சந்தைகளில் கழிப்பறைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகளை தருவதற்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
ஒன்று, இண்டு ஆண்டாக நிலுவையில் உள்ள பணிகள் என்ன என்பது குறித்து தெரிவிக்க வேண்டும். பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவடையாமல் இருந்ததால் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் திட்டமிடல் வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏழாவது முறையாகக் கழகத்தை ஆட்சியில் அமர்த்தும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
- திராவிட மாடல் அரசு பல முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
களையெடுப்பல்ல.. கட்டுமானச் சீரமைப்பு!
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
நாளுக்கு நாள் திராவிட மாடல் அரசுக்குத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்த ஆதரவு வெற்றியாய் எதிரொலிக்க உங்களில் ஒருவனான நான் நம்புவது உடன்பிறப்புகளான உங்களின் உழைப்பைத்தான். அந்த உழைப்பே தி.மு.க.வை ஆறாவது முறையாக ஆட்சிக்குக் கொண்டு வந்தது.
ஆட்சியில், மக்கள் நலனுக்கான திட்டங்களை அறிவித்து, அதனை முழுமையாகச் செயல்படுத்திடும் வகையில் அயராமல் உழைக்கின்ற காரணத்தினால்தான் மக்களிடம் ஆதரவு பெருகியுள்ளது. உடன்பிறப்புகளின் உழைப்பும் பொதுமக்களின் ஆதரவும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏழாவது முறையாகக் கழகத்தை ஆட்சியில் அமர்த்தும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
தமிழ்நாட்டு மக்கள் நமக்கு வழங்கிய ஆட்சியை அவர்களுக்கான ஆட்சியாக நாம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நமது திராவிட மாடல் அரசு பல முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற இலட்சிய நோக்கத்துடன் நமது திராவிட மாடல் அரசு செயலாற்றி வரும் நிலையில், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு நமக்குரிய நிதியை வழங்காமல் தமிழ்நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது.
மாநில உரிமைக்கு எதிரான பா.ஜ.க அரசின் பழிவாங்கும் போக்கையும் எதிர்கொண்டு இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம்.
ஒன்றிய அரசின் நிறுவனங்களும், நிதி ஆயோக் போன்ற அமைப்புகளும் வெளியிடும் புள்ளிவிவரங்களில் தமிழ்நாடு பல்வேறு இலக்குகளில் சிறந்து விளங்குகிறது. அப்படியிருந்தும் நமக்குரிய நிதிப் பங்களிப்பு கிடைக்கவில்லை.
நமக்கான திட்டங்களை பா.ஜ.க. அரசு முன்னெடுப்பதில்லை. தமிழ்நாட்டை பா.ஜ.க. வஞ்சித்தாலும், தி.மு.க மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு வாழ்வளிக்கும் வகையில் திராவிட மாடல் அரசின் நலத் திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பயனளித்து வருகின்றன.
இந்தியாவின் முதன்மை முதலமைச்சர் என்பதைவிட இந்தியாவின் முதன்மை மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையை எல்லாத் துறைகளிலும் எட்டுவதே நமது இலக்காகும். அந்த இலக்கை அடைவதற்கு ஏழாவது முறையும் தி.மு.க.வின் ஆட்சி தொடரவேண்டும்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில், அ.தி.மு.க. ஆட்சியில் பின்னோக்கித் தள்ளப்பட்ட தமிழ்நாட்டை மீட்டு, வலிமையும் செழிப்புமிக்க மாநிலமாக மாற்றிடுவதற்கான தி.மு.க.வின் 7 அம்சத் திட்டங்களை வெளியிட்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கு 10 ஆண்டுகள் தேவை என்பதைக் குறிப்பிட்டு, அந்த வாய்ப்பைத் தி.மு.க.வுக்கு வழங்குங்கள் என்று கேட்டேன். முதல் 5 ஆண்டுகாலத்தை நம்பிக்கையுடன் வழங்கிய மக்கள், நமது திராவிட மாடல் ஆட்சியின் திறன்மிகு நிர்வாகத்தையும், சிறப்பான திட்டங்களையும் உணர்ந்து தொடர்ச்சியான வாய்ப்பை வழங்கிடத் தயாராக இருக்கிறார்கள்.
தி.மு.க.வுக்கு நல்வாய்ப்பு அமைகிறதென்றால் அதனைக் கெடுப்பதற்கான சதிகளைச் செய்யும் அரசியல் சக்திகள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முகமூடியுடன் வெளியே வரும்.
தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான, தமிழ்நாட்டுக்கு எந்தப் பயனுமில்லாத, கள்ளக் கூட்டணி வைத்திருக்கிற, காசு வாங்கிக் கொண்டு கூவுகிற அந்த முகமூடிகளைக் கிழித்தெறிந்து கழகத்தின் தலைமையிலான அணியின் வெற்றியை உறுதி செய்வோம்.
அந்த வெற்றியை அடைவதற்கான நிர்வாக வசதிக்காகத்தான் மாவட்டக் கழக நிர்வாகத்தில் மாற்றங்கள் தொடங்கியுள்ளன.
திருநெல்வேலி மத்திய மாவட்டக் கழகப் பொறுப்பாளராக திரு.மு.அப்துல் வகாப் எம்.எல்.ஏ., திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக திரு.எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக திரு.பழனிவேல், நீலகிரி மாவட்டக் கழகப் பொறுப்பாளராக திரு.கே.எம்.ராஜு, ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதுபோலவே ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான மாவட்டப் பொறுப்பாளர்களாக மாண்புமிகு அமைச்சர் சு.முத்துசாமி, மாண்புமிகு அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாண்புமிகு அமைச்சர் பி.மூர்த்தி, திரு.செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ, திரு.க.செல்வராஜ் எம்.எல்.ஏ., டாக்டர்.ஆர்.லட்சுமணன் எம்.எல்.ஏ., திரு.கோ.தளபதி எம்.எல்.ஏ., திரு என்.நல்லசிவம், திரு.தோப்பு வெங்கடாசலம், திரு.கௌதமசிகாமணி, திரு.இல.பத்மநாபன், திரு என்.தினேஷ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு அவர்களின் பொறுப்பிலான சட்டமன்றத் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
சட்டமன்றத் தேர்தலுக்கு ஓர் ஆண்டுகாலமே இடையில் உள்ளதால் அதற்கேற்ப களப்பணிகள் அமைந்திட வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றங்களும் அதற்கேற்ற வகையிலான நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோல இன்னும் சில அறிவிப்புகளையும் உடன்பிறப்புகள் எதிர்பார்க்கக்கூடும்.
உங்களில் ஒருவனான என்னைப் பற்றி கழக நிர்வாகிகள் நன்கறிவீர்கள். ஒரு பொறுப்பிலிருந்து ஒருவரை மாற்றுவது குறித்து ஒன்றுக்கு நூறு முறை யோசித்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் பல சுற்றுகள் ஆலோசித்து, கழகத்தின் நன்மை கருதியே இறுதி முடிவெடுப்பேன். இப்போதும் அப்படித்தான் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கழகத்தின் நலன் கருதி இத்தகைய முடிவுகள் தொடரும்.
இயக்கம் என்பது தேவைக்கேற்ற மாற்றங்களுடன் இயங்கிக் கொண்டிருந்தால்தான், காலத்திற்கேற்ற வளர்ச்சியைப் பெற முடியும். இந்த மாற்றங்களினால் கழகத்தில் ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்களுக்கும் புதிதாகப் பொறுப்புக்கு வந்திருப்பவர்களுக்கும் என் இதயத்தில் நிறைந்துள்ள அன்பில் அணுவளவும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. எப்போதும் போல நாம் எல்லோரும் கலைஞரின் உடன்பிறப்புகள்தான்.
முன்பு பொறுப்பில் இருந்தவர்கள் தற்போது பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கடமையாற்ற வேண்டும். புதிதாகப் பொறுப்புக்கு வந்திருப்பவர்கள், ஏற்கனவே பொறுப்பில் உள்ளவர்களை அரவணைத்து, மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் - கிளைக் கழகங்கள் வரை எல்லாரையும் ஒருங்கிணைத்துச் செயலாற்றிட வேண்டும்.
இருநூறு தொகுதிகள் இலக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியினை உறுதி செய்யும் வகையில், களத்திற்கேற்ற வியூகம் அமைத்து, வெற்றிப் பாதையில் பயணிப்பதற்காக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது களையெடுப்பு அல்ல, கட்டுமானச் சீரமைப்பு. தி.மு.கழகம் எனும் 75 ஆண்டுகால இயக்கத்தின் உறுதிமிக்க கட்டுமானம் மேலும் வலிவுடனும் பொலிவுடனும் திகழ்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு நடவடிக்கை.
நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட கழகத்தின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், உடன்பிறப்புகளின் உழைப்பு எனும் அடித்தளத்தில் இன்றளவும் வலிமையாகத் திகழ்கிறது. அதனால் நம் எதிரிகளின் கண்களை உறுத்துகிறது.
முத்தமிழறிஞர் கலைஞரின் சிந்தனையிலும் செயலிலும் உருவான கழகத்தின் கற்கோட்டையான அறிவாலயத்திலிருந்து செங்கல்லை உருவலாம் எனக் கனவு காண்பவர்கள் தரையில் விழுந்து தலையில் அடிபட்டபின், கனவு கலைந்து விழித்துக் கொள்ளலாமே தவிர, அறிவாலயத்தின் ஒரு துகளைக் கூட எவராலும் அசைக்க முடியாது என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருமை மிக்க வரலாறு.
தமிழ்நாட்டு மக்கள் மனதில், குறிப்பாகப் பெண்கள் - இளைஞர்கள் ஆகியோரிடம் பெரும் செல்வாக்குப் பெற்றுள்ள இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கொள்கைக் கூட்டணியினரான தோழமைக் கட்சியினரும் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி முத்திரை பதிப்பதைத் தடுக்க முடியாது என்பது அரசியல் எதிரிகளுக்கும் நன்றாகத் தெரியும். அதனால்தான் கள்ளக்கூட்டணி, திரைமறைவுக் கூட்டணி, வாக்கைச் சிதறடிக்க நினைக்கும் கூட்டணி என நம்மை எதிர்ப்பவர்கள் எத்தனை 'கெட்டப்' போட்டு வந்தாலும் களம் நமதே! மக்களின் ஆதரவு நம் பக்கமே! மக்களுக்குத் துணையாக நிற்போம்! கவனமாக உழைப்போம்! வெற்றி நமதே!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
- உரிய அனுமதி பெறாமல் ஆட்டோக்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் தலைநகரில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றது. இதில் சிலர் ஓட்டுனர் உரிமம் தகுதிச் சான்று அனுமதிச்சான்று பெறாமல் இயக்குவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாளுக்கு தொடர்ந்து புகார் வந்தது.
இதையடுத்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு மற்றும் போக்குவரத்து போலீசார் திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் தகுதி சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்ட 11 ஆட்டோக்களை பறிமுதல் செய்து போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய அனுமதி பெறாமல் ஆட்டோக்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
- நாகை புத்தூர் பகுதியில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்:
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன் இல்ல திருமண விழா, புதிதாக கட்டி முடிக்கப்பட்ட தி.மு.க. மாவட்ட அலுவலகம் திறப்பு விழா, நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
முதலமைச்சர் வருகையை யொட்டி நாகை புத்தூர் பகுதியில் பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், விழா முன்னேற்பாடு பணிகளிலும் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பணிகள் நடைபெறுவதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். அப்போது முன்னேற்பாடுகள் குறித்தும், போலீசார் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.






