என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூந்தன்குளத்தில் குவிந்துள்ள ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள்
    X

    கூந்தன்குளத்தில் குவிந்துள்ள ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள்

    • தேனிலவு கொண்டாட வந்துள்ள பறவைகளால் கூந்தன்குளம் களை கட்டி உள்ளது.
    • ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தாய் நாடுகளுக்கு திருப்பி செல்லும்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தை சார்ந்தே பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

    இங்குள்ள குளத்தில் தான் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. கூந்தன்குளம் விவசாயிகளுக்கு மட்டுமின்றி, பறவைகளுக்கும் வாழ்வு கொடுத்து வருகிறது.

    ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் ஆயிரக்கணக்கான பறவைகள் முட்டையிட்டு, குஞ்சு பொறித்து, அந்த குஞ்சுகள் பறக்க பழகியதும் தாய் நாட்டுக்கு திரும்பிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.

    அதுபோல இந்த ஆண்டிலும் சைபீரியா, மியான்மர், ஐரோப்பியா நாடுகளில் இருந்து அரிவாள்மூக்கன், ஊசிவால் வாத்து, பட்ட தலை வாத்து, பட்டை வாயன், கரண்டி வாயன், செங்கல்நாரை, பாம்பு தாரா, வெள்ளை ஐஸ்பீஸ், கிங்பிஷரஸ், பெலிகன்ஸ், கிரேட்டர் பிளமிங்கோ, கிரே பெலிகன்ஸ் உள்பட 43 வகையிலான ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு குவிந்துள்ளன.

    இந்த பறவைகள் முட்டையிட்டு, குஞ்சு பொறித்ததும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தங்களது தாய் நாடுகளுக்கு திருப்பி செல்லும். இவ்வாறு தேனிலவு கொண்டாட வந்துள்ள பறவைகளால் கூந்தன்குளம் களை கட்டி காணப்படுகிறது.

    குளத்தில் உள்ள மரங்களில் மட்டுமின்றி ஊருக்குள் உள்ள மரங்களிலும் பறவைகள் கூடு கட்டி வாழ்வதை காணமுடிகிறது. ஊருக்குள் நுழைந்ததுமே முதலில் வரவேற்பது பறவைகளாகத்தான் இருக்கும்.

    கூந்தன்குளத்தில் வட்டமிடும் பறவைகளை காண கண்கள் கோடி போதாது. சர், சர் என விமானங்கள் பறந்து செல்வதை போல பறவைகள் பறந்து செல்வது தனி அழகாகும். எங்கு பார்த்தாலும் பறவைகள் கூட்டம், கூட்டமாக உலா வருவதைதான் காண முடிகிறது.

    கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பறவைகளின் தேனிலவு மையமாக திகழும் கூந்தன்குளத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 1994-ம் ஆண்டு பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பறவைகளை பராமரிக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அழையா விருந்தாளிகளான பறவைகளை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    Next Story
    ×