என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசியில்தானே செல்கிறீர்கள்?- என கேட்டதால் அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
- கடந்த ஆண்டு முதல் டி.புதூர் கிராமத்திற்கு புதிய பஸ் இயக்கப்பட்டது.
- ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதம் செய்தனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.புதூர் மலை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பஸ் வசதி இல்லாமல் கிராம மக்கள் விடுத்து வந்த தொடர் கோரிக்கையால் 35 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு முதல் நாள்தோறும் 2 முறை தேனியில் இருந்து டி.புதூர் கிராமத்திற்கு புதிய பஸ் இயக்கப்பட்டது.
தினசரி 2 முறை மட்டுமே இயக்கப்பட்ட அந்த அரசு பஸ்சும் தற்போது சரியாக இயக்கப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் ஊருக்குள் வராமல் விலக்கு பகுதியிலேயே பொதுமக்களை இறக்கி விட்டு செல்வதால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் உள்பட அனைவருமே 2 கி.மீ. தூரம் நடந்து ஊருக்குள் வரும் நிலை உள்ளது.
பெண்கள் ஊருக்குள் வரும்படி பஸ் ஓட்டுநர், நடத்துனர்களிடம் கேட்டால் ஓசியில்தானே பஸ்சில் செல்கிறீர்கள், அப்படியெல்லாம் இறக்கி விட முடியாது என ஏளனமாக பேசுவதாக குற்றம் சாட்டினர். இந்த நிலையில் கிராமமக்கள், பள்ளி மாணவர்கள் ஊருக்குள் வந்த அரசு பஸ்சை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிபட்டி போலீசார் அவர்களை சமாதானம் செய்து பஸ்சை முறையாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். மீண்டும் பஸ் முறையாக வராத பட்சத்தில் குமுளி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போராட்டம் நடத்தப் போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.






