என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பழனியில் நா.த.க பொதுக்கூட்டம் மாற்று இடத்தில் நடத்த மதுரை ஐகோர்ட் கிளை அனுமதி
- பொதுக்கூட்டம் நடத்தும் இடம் அருகே 50 அடி தூரத்தில் பெரியார் சிலை இருப்பதால் அந்தப் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது.
- அமைதியான முறையில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி.
பழனியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி திவான் மைதீன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் வரும் ஞாயிற்றுக்கிழமை 16-ந்தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் பழனி மின்வாரிய அலுவலக சாலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி பழனி காவல் நிலையத்தில் விண்ணப்பித்திருந்தோம்.
தைப்பூசத்தை காரணம் காட்டி எங்களுக்கு அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்து உள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே காவல் நிலையத்தின் உத்தரவை ரத்து செய்து வரும் 16-ந்தேதி மாலை அதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி தனபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளோம், அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என்றார்.
தொடர்ந்து, நீதிபதி தற்போது தைப்பூச நிகழ்வு என்பது அங்கே நடைபெற்று வருகிறது. மேலும் பொதுக்கூட்டம் நடத்தும் இடம் அருகே 50 அடி தூரத்தில் பெரியார் சிலை இருப்பதால் அந்தப் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது.
வேறு இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனக் கூறிய நீதிபதி, மனுதாரர் தரப்பில் தகவல் கேட்டு தெரிவிக்க கூறி வழக்கு விசாரணை சிறிது நேரம் ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணையின்போது பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் உள்ள பங்களா தெருவில் 22ம் தேதி பொதுக்கூட்டம் நடத்திட நாம் தமிழர் கட்சிக்கு ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கியுள்ளது.
அமைதியான முறையில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.
பழனி பெரியார் சிலை அருகே நாதக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்த நிலையில், வேறு இடத்தில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






