என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில்- திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு
- ரூ.9,335 கோடியில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக மெட்ரோ அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபாலிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ரூ.9,335 கோடியில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக மெட்ரோ அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபாலிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதுகுறித்து சிஎம்ஆர்எல் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ இரயில் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர். கே. கோபால், இ.ஆ.ப., அவர்களிடம் சமர்ப்பிப்பு
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-1-ல் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ இரயிலை சாலை மேம்பாலத்துடன் இணைத்து நீட்டிப்பதன் பரிந்துரைக்கான விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report) தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர்.
கே. கோபால், இ.ஆ.ப., அவர்களிடம், அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான திரு.மு.அ.சித்திக், இ.ஆ.ப., அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தார்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு.தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) திரு. டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
மெட்ரோ இரயில் மற்றும் மேம்பாலச் சாலையின் ஒருங்கிணைந்த கட்டுமானத்தை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழ்நாடு அரசுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விரிவானதிட்ட அறிக்கை திருத்தப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையின்படி, மெட்ரோ வழித்தடம் நிலை 2-இல் மற்றும் மேம்பாலச் சாலை நிலை-1-இல் முன்மொழியப்பட்டுள்ளது. இது கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தடையற்ற சாலை போக்குவரத்து மற்றும் மெட்ரோ இணைப்பை வழங்கும்.
வெளிவட்டச் சாலை (Outer Ring Road) உடன் இணைப்பதற்காக தாம்பரம் அருகே இடைநிலை சாய்வுப்பாதைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த மேம்பாலச் சாலை நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வந்து செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும்.
முன்மொழியப்பட்ட நீட்டிப்பு பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும்வண்டலூர் வழியாகச் செல்லும், இது கிளாம்பாக்கம் பேருந்து முனையம், விமான நிலையம் மற்றும் தாம்பரம் இரயில் நிலையம் போன்ற முக்கிய போக்குவரத்து மையங்களுக்கு இணைப்பை வழங்கும்.
விரிவான திட்ட அறிக்கையின் (DPR) முக்கிய அம்சங்கள்:
• வழித்தடத்தின் மொத்த நீளம்: 15.46 கி.மீ
• உயர்த்தப்பட்ட நிலையங்களின் எண்ணிக்கை: 13
• மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு: ரூ. 9,335 கோடி. (மேம்பாலச் சாலை உட்பட).
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.






