என் மலர்tooltip icon

    பஞ்சாப்

    • திருமண நிகழ்ச்சிகளில் வீண் செலவுகளில் ஈடுபட வேண்டாம்.
    • திருமணம் நிகழ்ச்சிகளில் மதுபானம் பரிமாறப்படுவதாலும், டி.ஜே. நிகழ்ச்சிகளாலும் அதிக அளவில் சண்டை சச்சரவுகள் ஏற்படுகிறது.

    ஒரு காலத்தில் மதுக்கடைக்கு செல்பவர்கள் ஒளிந்து, மறைந்து சென்று வந்தார்கள். ஆனால் இன்று மது பாட்டில்களுடன் செல்பி எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு பெருமை கொள்ளும் நிலை வந்துவிட்டது.

    திருமண நிகழ்ச்சி என்றாலும், துக்க நிகழ்ச்சி என்றாலும் மது இல்லாமல் இருப்பதில்லை என்ற காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். அதுவும் திருமண வீடுகளில் மதுவிருந்து, டிஸ்க் ஜாக்கி எனப்படும் டி.ஜே. இசை நடன நிகழ்ச்சி முக்கிய இடத்தை வகிக்கிறது. இதற்காக அதிக அளவில் பணம் செலவழிக்கப்படுகிறது. பெரிய நகரங்களில் மட்டுமின்றி கிராமங்கள் வரை இந்த கலாச்சாரம் வந்துவிட்டது.

    இந்த சூழ்நிலையில் பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் உள்ள பல்லோ கிராம ஊராட்சி மது விருந்து கலாச்சாரத்தை கட்டுப்படுத்த புதிய உத்தியை கையில் எடுத்து, வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுபற்றி ஊராட்சி தலைவரான சர்பாஞ்ச் அமர்ஜித் கவுர் கூறியதாவது:-

    திருமண நிகழ்ச்சிகளில் வீண் செலவுகளில் ஈடுபட வேண்டாம். மது அருந்துவதைத் தடுக்கவும் இந்த முயற்சியை நாங்கள் எடுத்துள்ளோம். திருமணம் நிகழ்ச்சிகளில் மதுபானம் பரிமாறப்படுவதாலும், டி.ஜே. நிகழ்ச்சிகளாலும் அதிக அளவில் சண்டை சச்சரவுகள் ஏற்படுகிறது. இதனால் பகை ஏற்படுவதுடன், அதிக ஒலி காரணமாக மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்படுகிறது.

    எனவே திருமண நிகழ்ச்சிகளில் மதுபான விருந்து இல்லாமல், டிஜே இசையை இசைக்காமல் இருந்தால் அந்த திருமண வீட்டாருக்கு ரூ.21 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை அறிவிப்பாகவும் வெளிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போக்குவரத்து முழுமையாக முடங்கியது.
    • இன்று பஞ்சாபில் முக்கிய நகரங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன.

    சண்டிகர்:

    பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, பஞ்சாப்-அரியானா எல்லையில் உள்ள கனவுரி பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இங்கு கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயி ஜகஜீத் சிங் தலேவால் கால வரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். ஜகஜீத் சிங்கின் உண்ணாவிரதம் நேற்றுடன் 34-வது நாளாக நீடித்தது.

    இந்த விவகாரத்தில் பஞ்சாப் அரசு மீதும், ஜக ஜீத்தை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல விடாமல் தடுக்கும் பிற விவசாயிகள் மீதும் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) அதிருப்தி தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, டிசம்பர் 31-ந் தேதிக்குள் (நாளை) அவரை மருத்துவமனையில் அனுமதிக்க பஞ்சாப் அரசுக்கு கெடு விதித்தது.

    இந்த விஷயத்தில் தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியைக் கோரலாம் என்றும் பஞ்சாப் அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு ஆலோசனை தெரிவித்தது.

    இந்தச் சூழலில், ஜகஜீத் சிங்கை அரசின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசியுள்ளனர். டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஜகஜீத் சிங்கை மருத்துவ மனையில் அனுமதிக்க பஞ்சாப் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கெடு விதித்துள்ள நிலையில், காந்திய வழியில் தங்களின் போராட்டம் தொடரும் என்று விவசாய அமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் தலேவாலுக்கு ஆதரவாக பஞ்சாபில் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. அதன்படி இன்று பஞ்சாபில் முக்கிய நகரங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன.

    அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் பஞ்சாப் விவசாயிகள் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடங்களில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    அமிர்தசரசில் விவசாயிகள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினார்கள். பஞ்சாப்-அரியானா எல்லையிலும் ஏராளமான விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக பஞ்சாபில் சில இடங்களில் போக்குவரத்து முழுமையாக முடங்கியது.

    • இந்த விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் தல்வாண்டியில் இருந்து பதிண்டா நோக்கி நேற்று பயணிகளை ஏற்றிவந்த பேருந்து, பாலத்தில் இருந்து ஓடையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. பலத்த மழை பெய்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    தகவலறிந்த உள்ளூர் மக்கள் விரைந்து சென்று பேருந்திற்குள் சிக்கியவர்களை மீட்டனர். போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அரசு உதவிகள் வழங்கப்படும் என பதிண்டா துணை கமிஷனர் தெரிவித்தார்.

    இந்நிலையில், பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • பஞ்சாப்பில் போலீசாருடன் இணைந்து எல்லை பாதுகாப்பு படை தேடுதல் வேட்டை நடத்தியது.
    • இதில் டி.ஜே.ஐ. மேவிக் 3 கிளாசிக் ரக ஆளில்லா விமானம் பறிமுதல் செய்யப்பட்டது.

    சண்டிகர்:

    எல்லை பாதுகாப்பு படை மற்றும் பஞ்சாப் போலீசார் கூட்டாக இணைந்து பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் ஊடுருவல் மற்றும் கடத்தல் முயற்சிகளை முறியடிக்கும் வகையில், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உத்தர் தரிவால் கிராமத்தில் வயல்வெளி ஒன்றில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் ஒன்று போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது. படையினர் பஞ்சாப் போலீசாருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் முயற்சிகளின் ஒரு பகுதியாக மற்றொரு ஆளில்லா விமானம் மற்றும் ஹெராயின் போதை பொருள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே அமிர்தசரஸ் மாவட்டத்தில் பச்சிவிந்த் கிராமத்தில் வயல்வெளியில் இருந்து 460 கிராம் எடை கொண்ட ஹெராயினை போலீசார் கைப்பற்றினர். இதேபோன்று, தார்ன் தரன் மாவட்டத்தில் கெம்கரண் கிராமத்தில் வயல்வெளி ஒன்றில் இருந்து டி.ஜே.ஐ. மேவிக் 3 கிளாசிக் ரக ஆளில்லா விமானம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக எல்லை பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கையில், எல்லைப் பகுதியில் சட்டவிரோத ஆளில்லா விமானம் ஊடுருவல் மற்றும் கடத்தல் முயற்சியானது முறியடிக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.

    • முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை கொன்றுவிட்டு அவரின் முதுகில் 'Dhokebaaz' (ஏமாற்றுபவர்) என்று எழுதி வைத்துள்ளார்
    • கொலை செய்த பிறகு அவர்களின் பாதங்களைத் தொட்டு, வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டதாக தெரிவித்தார்

    பஞ்சாபில் கடந்த 18 மாதங்களுக்குள் 11 ஆண்களை கொன்ற சீரியல் கில்லர் கொலையாளி போலீசில் பிடிபட்டுள்ளார்.

    ஹோஷியார்பூரில் உள்ள கர்ஷங்கரின் சௌரா கிராமத்தில் வசித்து வருபவர் 33 வயதான ராம் சரூப். போலீஸ் கூற்றுப்படி கொலை செய்யப்பட்ட அனைவருக்கும் தனது வாகனத்தில் லிப்ட் கொடுத்து அழைத்து சென்று அவர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி, அதன்பின் அவர்களை கொலை செய்து கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

    பெரும்பாலான சந்தர்ப்பங்களில், துணியால் அவர்களின் கழுத்தை நெரித்ததாகவும்,சிலருக்குத் தலையில் காயங்கள் இருந்ததாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.

    அவ்வாறு தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை கொன்றுவிட்டு அவரின் முதுகில் 'Dhokebaaz' (ஏமாற்றுபவர்) என்று எழுதி வைத்துள்ளார் ராம் சரூப்.

    ஆகஸ்ட் 18 அன்று மோத்ராவில் உள்ள சுங்கச்சாவடி அருகே டீ மற்றும் தண்ணீர் விற்கும் 37 வயது நபரை கொன்ற வழக்கில் ரூப்நகர் மாவட்டத்தில் வைத்து நேற்று [செவ்வாய்க்கிழமை] ராம் சரூப் கைது செய்யப்பட்டார். அதன்பின் நடந்த விசாரணையில்தான் அவர் மேலும் 10 பேரை கொலை செய்துள்ளது அம்பலமாகி உள்ளது.

    இவற்றில் 5 கொலை வழக்குகள் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய கொலைகளைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

    ஆகஸ்ட் 18 அன்று டோல் பிளாசா மோத்ராவில் டீ மற்றும் தண்ணீர் பரிமாறப் பழகிய 37 வயது நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் முதலில் கைது செய்யப்பட்டார்.

    விசாரணையில் சரூப் மேலும் 10 பேரைக் கொன்றது தெரியவந்தது. இவற்றில் ஐந்து வழக்குகள் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய கொலைகளைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஹோஷியார்பூர் மற்றும் ஃபதேகர் மாவட்டங்களில் இந்த கொலைகள் நடந்துள்ளன.

    ஏப்ரல் 5 ஆம் தேதி 34 வயதான டிராக்டர் பழுதுபார்ப்பவரின் கொலை மற்றும் ஜனவரி 24 அன்று காரில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட இளைஞன் ஒருவரின் கொலை ஆகியவற்றையும் ராம் சரூப் தான் செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

     

    கூலித் தொழிலாளியாக பணிபுரிந்த ராம் சரூப் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குடிபோதையில் தான் குற்றங்களை செய்ததாக அவர் ஒப்புக்கொண்ட நிலையில் கொலை செய்த பிறகு அவர்களின் பாதங்களைத் தொட்டு, வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டதாக விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

    ராம் சரூப் -க்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் ஓரினச்சேர்க்கை காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது குடும்பத்தினரால் கைவிடப்பட்டுள்ளார்.  

     

    பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தர பிரதேச மற்றும் அரியானாவின் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த மாத தொடக்கம் முதலே பலமுறை டெல்லி நோக்கி செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் குண்டுகளை வீசியும் தண்ணீர் பீய்ச்சியும் தாக்குதல் நடத்தினர். இருப்பினும் மத்திய அரசு செவி சாய்க்கும் வரை போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில எல்லையான கானௌரியில் பஞ்சாப் விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால்[70 வயது], நவம்பர் 26 முதல் நடத்தும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இன்று [டிசம்பர் 25] 29வது நாளை எட்டியுள்ளது.

    உண்ணாவிரதம் தொடங்கியதில் இருந்து அவர் 15 கிலோ வரை வரை எடை குறைந்துள்ளார். புற்றுநோயாளியான தலேவால் விடாப்பிடியாக உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ள நிலையில் அவருக்கு எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு ஏற்படலாம் என்றும் உறுப்புக்கள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கடந்த வியாழன் அன்று (டிசம்பர் 19) அவர் மயங்கி விழுந்தார்.

    இரத்த அழுத்தம் தொடர்ந்து குறைந்து வருவதாலும், எலக்ட்ரோலைட் சமநிலையின்மையாலும் டல்வாலின் நிலை மோசமாக உள்ளது. அவரது நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். ஆனால் அவர் எந்த வித சிகிச்சையையும் மறுத்து வருகிறார்.

     

     

    விவசாயிகளின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்கும் அல்லது தனது கடைசி மூச்சு வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரும் என்ற தனது நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்கிறார் என்று விவசாய சங்க உறுப்பினரான அவ்தார் சிங் தெரிவித்துள்ளார் . பட்டினியால் அவரது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்துள்ள அவருக்கு அதிகரித்து வரும் குளிர் காலநிலையும் சவாலாக உள்ளது. 

     முன்னதாக கடந்த டிசம்பர் 2 ஆம் வாரத்தில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்த தலேவால், தாம் நாட்டின் சாதாரண விவசாயி என்றும், பிப்ரவரி 13-ம் தேதி முதல் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு மத்தியில் கனத்த இதயத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

    பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். இந்த போராட்டத்தில் நான் இறந்தால் மத்திய அரசுதான் அதற்கு பொறுப்பு. போராட்டங்கள் நடக்கும் இடத்தில் போலீசார் ஏதாவது செய்தால் அந்த பொறுப்பும் அரசின் மீதுதான் விழும் என்று எழுதியிருந்தார்.

     

    தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாகி வரும் நிலையில் தலேவாலின் உயிரைக் காப்பாற்ற விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு ஜனாதிபதியிடம் முறையிடுவது என்று விவசாயிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அவருக்கு ஆதராக கனௌரி மற்றும் ஷம்பு எல்லையில் மெழுகுவர்த்தி பேரணி நடந்தது. இதற்கிடையே டிசம்பர் 30-ம் தேதி பஞ்சாப் பந்த் நடத்துவதற்காக, டிசம்பர் 26-ம் தேதி கானௌரி எல்லையில் அனைத்து சமூக, வணிக, கலாச்சார மற்றும் மத அமைப்புகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். 

    • மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதம் நடைபெற்றது.
    • அப்போது, அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    சண்டிகர்:

    மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தின்போது அம்பேத்கர் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து, உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

    இந்நிலையில், சண்டிகர் மாநகராட்சியில் அமித்ஷா ராஜினாமா செய்யக்கோரி காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

    அப்போது, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரி தாக்கிக் கொண்டனர்.

    ஜவகர்லால் நேரு ஆட்சியின்போது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரை காங்கிரஸ் சிறுமைப்படுத்த முயற்சிப்பதாக பா.ஜ.க. கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். இது காரசாரமான வாக்குவாதங்களுக்கு வழிவகுத்தது.

    தொடர்ந்து கோஷமிட்ட காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் நியமன கவுன்சிலர் அனில் மசிஹ்வை "வாக்கு திருடன்" எனக்கூறியதால் அடுத்து மோதல் தீவிரமடைந்தது.

    அப்போது பேசிய மசிஹ், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி (நேஷனல் ஹெரால்டு வழக்கில்) ஜாமினில் வெளியே இருக்கிறார் என பதிலளித்தார்.

    கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரியாக இருந்த அனில் மசிஹ், தேர்தல்களை பா.ஜ.க.வுக்கு சாதகமாக மாற்றுவதற்காக 8 வாக்குச்சீட்டுகளை மாற்றியதாக கூறப்படுகிறது. அதன்பின், சுப்ரீம் கோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆம் ஆத்மி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இதே வீடியோவை பா.ஜ.க.வும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.

    சண்டிகர்:

    ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலின் வீடியோவைப் பகிர்ந்ததற்காக சில சமூக ஊடக பயனர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் டெல்லியைச் சேர்ந்த விபோர் ஆனந்த் என்ற வழக்கறிஞர் உள்பட 5 சமூக ஊடக பயனர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அந்த வீடியோவில், எந்தத் தொழிலாளியும் மது அருந்தக்கூடாது என காங்கிரஸ் கட்சியின் அரசியல் சாசனம் கூறுகிறது. அரசியலமைப்பை எழுதியவர் அதை எழுதும்போது குடிபோதையில் இருந்திருக்க வேண்டும் என எங்களில் ஒருவர் கூறினார் என பேசுவதாக பதிவாகி உள்ளது.

    லூதியானாவில் 5 மற்றும் பஞ்சாபில் 12 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வீடியோக்கள் கெஜ்ரிவாலின் இமேஜை கெடுத்து விட்டதாகவும், எஸ்சி, எஸ்டி சமூகத்தினர் உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இதே வீடியோவை பா.ஜ.க. எம்.பி மனோஜ் திவாரியும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

    • சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    பஞ்சாப் மாநிலத்தின் மொகாலியில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 20 வயது பெண் உள்பட இருவர் உயிரிழந்தனர். மேலும், பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    குறைந்தபட்சம் நான்கு பேர் இடிபாடுகளுக்குள் 17 மணி நேரத்திற்கும் மேல் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுவரை இடிபாடுகளில் இருந்து 60 சதவீத குப்பைகள் அகற்றப்பட்டதாக மீட்பு பணிகளை மேற்கொள்ளும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • போராட்டத்தில் பஞ்சாப் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தன.
    • எல்லைப் பகுதியில் கடந்த மூன்று வாரங்களாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரப் பிரதேசம் , பஞ்சாப்- அரியானா, டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிப்ரவரி 13 முதல் பஞ்சாப்- அரியானா எல்லையான ஷம்புவில் விவசாயிகள் முகாமிட்டுள்ளனர். அவர்களை டெல்லி நோக்கி முன்னேற விடாமல் போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் தடுத்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் இன்று [புதன்கிழமை] பஞ்சாபில் பல இடங்களில் ரயில் பாதைகளை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

     

    சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் இந்த ரெயில் மறியல் போராட்டத்தில் பஞ்சாப் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தன.

    கிசான் மஸ்தூர் மோர்ச்சா தலைவர் சர்வான் சிங் பந்தேர் கூறுகையில், மதியம் 12 மணி முதல் விவசாயிகள் பல இடங்களில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மதியம் 3 மணி வரை அங்கேயே இருப்பார்கள் என்று தெரிவித்தார்.

    குர்தாஸ்பூரில் உள்ள மோகா, ஃபரித்கோட், கடியான் மற்றும் படாலா, ஜலந்தரில் பில்லூர்; ஹோஷியார்பூரில் தண்டா, தசுயா, மகில்பூர்; ஃபெரோஸ்பூரில் மகு, தல்வண்டி பாய், லூதியானாவில் சாஹ்னேவால், பாட்டியாலாவில் ஷம்பு, மொஹாலி, மற்றும் சங்ரூரில் சுனம் மற்றும் லெஹ்ரா ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதன்படி விவசாயிகள் ரெயில்வே தண்டவாளத்தில் நின்றும்,படுத்தும் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அம்மாநிலத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பஞ்சாப் விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கிடையேயான கானௌரி எல்லைப் பகுதியில் கடந்த மூன்று வாரங்களாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 

    • உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷ்க்கு அவர் கடந்த சனிக்கிழமை நடந்த கன்சர்ட்டை அர்ப்பணித்திருந்தார்.
    • நீங்கள் மதுபானங்களை தடை செய்யும் வரை நான் அதுகுறித்து படுவதை நிறுத்தமாட்டேன்

    நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படாத வரை இந்தியாவில் இனி நேரலை இசைக் கச்சேரிகளை நடத்த மாட்டேன் என்று பிரபல பஞ்சாப் பாடகர் தில்ஜித் தோசன்ஜ் அதிரடியாக அறிவித்துள்ளார்.

    ரசிகர்களை கலங்கடிக்கும் இந்த அறிவிப்பை அவர் ஏன் வெளியிட்டார் என்றால் கடந்த சனிக்கிழமை சண்டிகரில் அவர் நடத்திய லைவ் கன்சர்ட்டில் போதுமான வசதிகள் இல்லாமல் திண்டாடியுள்ளார். கான்செர்ட்டின்போது அதிகாரிகளிடம் அவர் காட்டமாக நடந்துகொள்ளும் வீடியோவும் வெளியானது.

    எங்களை (கலைஞர்களை) தொந்தரவு செய்வதற்குப் பதிலாக, உங்கள் கச்சேரி உள்கட்டமைப்பை மேம்படுத்துங்கள் அல்லது இந்தியாவில் நான் நிகழ்ச்சி நடத்த மாட்டேன். இதை நிர்வாகத்திடம் கூற விரும்புகிறேன். நேரலை நிகழ்ச்சிகளுக்கு இங்கு சரியான வசதிகள் இல்லை.

    இது பெரிய வருவாய் ஆதாரமாகும். நிறைய பேர் இந்த நிகழ்வுகளில் வேலை செய்கிறார்கள் மற்றும் அதன் காரணமாக வேலைவாய்ப்பு பெறுகிறார்கள் என்று சமூக வலைத்தளம் வாயிலாக அவர் தெரிவித்துள்ளார்.

    சனிக்கிழமை சண்டிகரில் நடந்த தில்ஜித் இசைக் கச்சேரி அவரது "தில்-லுமினாட்டி இந்தியா டூர் 2024" இன் ஒரு பகுதியாகும். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷ்க்கு அவர் கடந்த சனிக்கிழமை நடந்த கன்சர்ட்டை அர்ப்பணித்திருந்தார்.

    முன்னதாக ஐதராபாத்தில் இசைக் கச்சேரி நடத்தியபோது மதுபானங்களை குறித்து பாடக் கூடாது என்று நிர்வாகம் தெரிவித்தது. நீங்கள் மதுபானங்களை தடை செய்யும் வரை நான் அதுகுறித்து படுவதை நிறுத்தமாட்டேன் என்று தில்ஜித் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதனால் அதிகாலை முதல் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது
    • காவல் நிலையத்தில் கேட்ட பயங்கர சத்தம் குறித்து போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமாபாத் காவல் நிலையத்தில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பீதியில் உறைந்தனர்.

    காவல் நிலையத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதாக நினைந்து உள்ளூர் மக்கள் அங்கு திரண்டனர். இதனால் அதிகாலை முதல் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது

    இந்நிலையில் காவல் நிலையத்தில் கேட்ட பயங்கர சத்தம் குறித்து போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

    வெடி விபத்து எதுவும் நிகழவில்லை என்றும், காவல் நிலையத்திற்கு வெளியே உள்ள தற்காலிக சோதனை சாவடியின் இரும்பு ஷீட்டினால் மேற்கூரை மீது கனமான பொருள் விழுந்ததால் அந்த சத்தம் எழுந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அவர்கள் விளக்கம் அளித்தனர். 

    ×