என் மலர்
மகாராஷ்டிரா
- மராத்தாக்களுக்கு 21% மற்றும் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கியது.
- இந்த முடிவை ரம்ஜான் பரிசு என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
இந்நிலையில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீட்டை செல்லாது என அறிவித்து மகாராஷ்டிரா அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக, அப்போதைய காங்கிரஸ்-என்சிபி கூட்டணி அரசு அவசரச் சட்டம் மூலம் இந்த 5% இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது.
2014 தேர்தலுக்குப் பிறகு பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு வந்த நிலையில், இந்த அவசரச் சட்டம் சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்படவில்லை. இதனால் அந்த அவசரச் சட்டம் காலாவதியானது.
மேலும், மராத்தாக்களுக்கு 21% மற்றும் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கியது, உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50% இடஒதுக்கீடு உச்சவரம்பை மீறுவதாகக் கூறி மும்பை உயர்நீதிமன்றமும் இதற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இந்நிலையில் நீண்ட காலமாக நீடித்து வந்த இந்த சட்ட ரீதியான இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அந்த இடஒதுக்கீடு இனி செல்லாது என்பதை அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாஜக அரசின் இந்த முடிவை விமர்சித்த காங்கிரஸ் எம்.பி வர்ஷா கெய்க்வாட் "ஒருபுறம் அனைவருக்குமான வளர்ச்சி என்று பேசிக்கொண்டு, மறுபுறம் பின்தங்கிய சமூகத்தினரின் உரிமைகளைப் பறிப்பது இந்த அரசின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் இம்தியாஸ் ஜலீல், இந்த முடிவை ரம்ஜான் பரிசு என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
- ஏழு பேரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
- கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் விடுவிக்க உத்தரவிட்டது.
மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்திய ரூ. 400 கோடி கொள்ளை சமைப்பவத்தில் அதிர்ச்சி உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சந்தீப் பாட்டில் என்ற லாரி ஓட்டுநர், கடந்த அக்டோபர் 22 அன்று கர்நாடகாவிலிருந்து மகாராஷ்டிராவிற்கு செல்லாத 2000 ரூபாய் நோட்டுகளாக ரூ.400 கோடியைக் கொண்டு சென்றபோது, தன்னை ஏழு பேர் கொண்ட கும்பல் தாக்கி, பணத்தைக் கொள்ளையடித்ததாக போலீசில் புகார் அளித்தார்.
சந்தீப் பாட்டில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மகாராஷ்டிர போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் ஏழு பேரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சந்தீப் குறிப்பிட்ட பயண பாதை, சம்பவ நடந்ததாகச் சொல்லப்பட்ட நேரம், அவரது செல்போன் அழைப்பு விவரங்கள் ஆகியவற்றில் பல முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.
எதுவுமே அவர் சொன்ன விவரங்களுடன் ஒத்துப்போகவில்லை. விரிவான விசாரணைக்கு பிறகு, அப்படி ஒரு கொள்ளைச் சம்பவமே நடக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
நேற்று இந்த வழக்கை விசாரித்த மகாராஷ்டிராவின் இகத்புரி நீதிமன்றம், கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் விடுவிக்க உத்தரவிட்டது.
மேலும், தவறான தகவலைக் கொடுத்து போலீசாரையும் நீதிமன்றத்தையும் திசைதிருப்பிய ஓட்டுநர் சந்தீப் பாட்டில் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. சந்தீப் பொய் புகார் அளிக்க என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- அப்துல் சத்தார் மாட்டுக்கறி உண்பவர்.
- அதனால்தான் நாங்கள் கோமியம் தெளித்து சுத்திகரித்தோம்.
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் சில்லோட் பகுதியில் ரஹிமாபாத் கிராமம் அமைந்துள்ளது.
இந்நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவசேனாவை சேர்ந்த சில்லோட் தொகுதியின் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான அப்துல் சத்தார் ரஹிமாபாத் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.
அப்துல் சத்தாரின் வருகைக்கு பாஜக மற்றும் சில அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர் சென்ற பிறகு, கோவிலின் புனிதத்தைக் காப்பதாகக் கூறி அவர்கள் கோவில் வளாகம் முழுவதும் கோமியம் தெளித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
சில்லோட் நகர பாஜக தலைவர் மனோஜ் மொரல்லு இது குறித்துக் கூறுகையில், "அப்துல் சத்தார் மாட்டுக்கறி உண்பவர் என்பதால், அவர் கோவிலுக்குள் வந்தது அதன் புனிதத்தைக் கெடுத்துவிட்டது.
அவர் முஸ்லிம்களையும் இந்துக்களையும் ஏமாற்றி வருகிறார். சமீபத்தில் ஹஜ் பயணம் சென்று வந்தவர், இப்போது கோவிலுக்கு வந்து நாடகமாடுகிறார். அதனால்தான் நாங்கள் கோமியம் தெளித்து சுத்திகரித்தோம்." என்று கூறினார்.
- பெண்ணைக் காதலித்து வந்தபோதும், ஷிபாவுடனும் உறவைத் தொடர்ந்துள்ளார்.
- குண்டு, ஷிபாவின் கன்னம் வழியாகப் பாய்ந்து மண்டை ஓட்டுக்குள் சிக்கிக் கொண்டது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் சிவாஜி நகரைச் சேர்ந்தவர் 19 வயதான ஷிபா ஷேக். இவர் ஒரு இளைஞரைக் காதலித்து வந்தார்.
அந்த இளைஞர் ஏற்கனவே 25 வயதுடைய மற்றொரு பெண்ணைக் காதலித்து வந்தபோதும், ஷிபாவுடனும் உறவைத் தொடர்ந்துள்ளார். இந்த விவகாரம் தெரிந்ததும் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அந்த 25 வயதுப் பெண், ஷிபாவை பேசுவதற்காக புர்கானியா மசூதி அருகே வருமாறு அழைத்துள்ளார்.
அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்தப் பெண் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து ஷிபாவை சுட்டுவிட்டுத் தப்பியோடினார்.
தோட்டா ஷிபாவின் கன்னம் வழியாகப் பாய்ந்து மண்டை ஓட்டுக்குள் சிக்கிக் கொண்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் ஷிபா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளியான 25 வயது பெண்ணையும், அவருக்கு உதவியாக இருந்த 23 வயது இளைஞர் ஒருவரையும் மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
- மகாராஷ்டிராவில் மட்டுமல்ல இந்தியாவிலேயே சாதி இல்லாத கிராமம் என்றால் அது சவுண்டாலாதான்.
- இது ஒரு சிறிய முயற்சி, ஆனால் அது நீண்ட தூரம் செல்லும்
சாதி அரசியல் இந்திய சமூகத்தைப் பிளவுபடுத்தி வரும் நேரத்தில், மகாராஷ்டிராவின் சவுண்டாலா கிராமத்தில் ஒரு சிறிய ஆனால் முக்கிய மாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகவே முற்போக்கு சிந்தனை கொண்ட கிராமமாக திகழ்ந்து வரும் சவுண்டாலா, தற்போது கிராம சபையின் முறையான ஒப்புதலுடன், "அம்சி ஜாத்... மானவ்" (எனது சாதி மனிதநேயம்) என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டு தன்னை சாதி இல்லாத கிராமமாக அறிவித்துள்ளது.
இதன்மூலம் மகாராஷ்டிராவில் மட்டுமல்ல இந்தியாவிலேயே சாதி இல்லாத கிராமம் என்றால் அது சவுண்டாலாதான். அகமதுநகர் என்று முன்னர் அழைக்கப்பட்ட அஹில்யநகர் மாவட்டத்தின் நெவாசா தாலுகாவில் அமைந்துள்ள சவுண்டாலாவில் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக பேசியுள்ள அக்கிராமத்தினர்,
"இது ஒரு சிறிய முயற்சி, ஆனால் அது நீண்ட தூரம் செல்லும். சவுண்டாலா இப்போது சாதி இல்லாத கிராமமாக மாறியுள்ளது. பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களும், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கூட இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அனைவரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கூட்டத்தில், யாரும் சாதியைப் பின்பற்றவோ அல்லது சாதி அடிப்படையிலான நடைமுறைகளில் ஈடுபடவோ கூடாது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு தீர்மானிக்கப்பட்டது. நாங்கள் 'அம்சி ஜாத்... மானவ்' மூலம் வழிநடத்தப்படுவோம். மக்கள் மனிதநேயத்தைப் பின்பற்றுவார்கள்.

கிராம கூட்டத்தின்போது
உண்மையில், எங்களுக்கு சாதியில் நம்பிக்கை இல்லை. மனிதநேயம்தான் மிகப்பெரிய சாதி மற்றும் மதம். அனைவரும் சமம்" என தெரிவித்துள்ளனர்.
முற்போக்கு எண்ணங்களை கொள்கைகளாக கொண்ட தமிழ்நாட்டைவிட பன்மடங்கு முற்போக்கில் சிறந்து விளங்குகின்றனர் சவுண்டாலா கிராம மக்கள். பாலின உணர்திறன், குழந்தை திருமணத்தை தடை செய்தல், கைம்பெண்களின் மறுமணத்தை அனுமதித்தல், குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணைக்கு எதிரான நடவடிக்கை, பெண் கல்வியை ஊக்குவித்தல் மற்றும் அரசியல் செயல்பாட்டில் பெண்கள் பங்கேற்பை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல முற்போக்கான தீர்மானங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே அக்கிராமத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முற்போக்கு கொள்கைகளை பேசுவது மட்டும் மாற்றமில்லை. அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு உதாரணமாய் திகழ்கிறது இந்த சவுண்டாலா கிராமம். கடந்த 2007ல், 'எவ்வித மோதலும் இல்லாத கிராமம்' என்ற விருதை சவுண்டாலா கிராமம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
- 9,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் விஜய் மல்லையா சிக்கியுள்ளார்.
- 2016-இல் இந்தியாவை விட்டு வெளியேறி பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார்.
பொருளாதாரக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதற்கு எதிராகத் தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நேற்று விசாரித்தது.
அவர் இந்தியா திரும்புவதை உறுதி செய்யாமல் வழக்கை விசாரிக்க முடியாது எனத் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுக்க வேண்டுமென்றால், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள விஜய் மல்லையா, நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த டிசம்பர் மாதமே நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.
தற்போது அவருக்கு இது தொடர்பாகப் பதிலளிக்க கடைசி வாய்ப்பு வழங்கப்படுவதாக நீதிபதிகள் சந்திரசேகர் மற்றும் கௌதம் அங்கட் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.
மல்லையா இந்தியா திரும்புவாரா என்பது குறித்த எழுத்துப்பூர்வமான பதிலை வரும் பிப்ரவரி 18-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுமார் 9,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் சிக்கியுள்ள விஜய் மல்லையா, 2016-ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறி பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார்.
அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.
- பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவை சேர்ந்த 20 முதல் 30 பேர் கொண்ட கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது.
- தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அரங்கில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.
மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வேர்ல்ட் பீஸ் யுனிவர்சிட்டி (MIT-WPU) வளாகத்தில் நேற்று சர்வதேச உணவுத் திருவிழா நடைபெற்றது.
பல்வேறு நாடுகளின் கலாச்சாரம் மற்றும் உணவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த சர்வதேச உணவுத் திருவிழா நடைபெற்றது.
இதில் வங்கதேச மாணவர்கள் அமைத்திருந்த உணவு அரங்கின் மீது பாஜகவின் இளைஞர் அணியான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவை சேர்ந்த 20 முதல் 30 பேர் கொண்ட கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அரங்கில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். மாணவர்கள் மற்றும் அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வங்கதேச தேசியக் கொடியைப் பறித்து அதற்குத் தீ வைத்ததுடன், ஆக்ரோஷமான முழக்கங்களையும் எழுப்பினர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனத்தை குவித்து வருகிறது.
பல்கலைக்கழக பதிவாளர் கணேஷ் போகாலே கூறுகையில், வன்முறையில் ஈடுபட்டவர்கள் வெளிநபர்கள் என்றும், அவர்களுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து புனே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 196 ரன்கள் குவித்தது.
மும்பை:
டி20 உலகக் கோப்பை தொடரின் 15-வது லீக் போட்டியில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. ரூதர்போர்டு அதிரடியாக ஆடி 42 பந்தில் 76 ரன்கள் குவித்தார். ரோஸ்டன் சேஸ் 34 ரன்னும், ஹோல்டர் 33 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்தின் அடில் ரஷித், ஓவர்டன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஜேக்கப் பெத்தேல் 33 ரன்னும், பிலிப் சால்ட் 31 ரன்னும் எடுத்தனர். கடைசி வரை போராடிய சாம் கர்ரன் 43 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், இங்கிலாந்து 19 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் குடகேஷ் மோடே 3 விக்கெட்டும், ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ஹெலிகாப்ரில் விமானி, ஒரு பயிற்சி விமானி மற்றும் ஒரு தொழில்நுட்ப பொறியாளர் உட்பட நான்கு பேர் இருந்தனர்.
- சுமார் 40 நிமிடங்கள் அந்த இடத்திலேயே இருந்த பிறகு, ஹெலிகாப்டர் மதியம் 1.10 மணியளவில் பள்ளி மைதானத்தில் இருந்து புறப்பட்டு ஜூஹுவுக்குத் திரும்பியது.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி மைதானத்தில் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுதொடர்பாக சஃபாலே காவல் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளர் தத்தா ஷெல்கே கூறுகையில்,
ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் மும்பையின் ஜூஹுவிலிருந்து குஜராத்தின் சூரத்துக்கு பறந்து கொண்டிருந்தது. அந்த ஹெலிகாப்ரில் விமானி, ஒரு பயிற்சி விமானி மற்றும் ஒரு தொழில்நுட்ப பொறியாளர் உட்பட நான்கு பேர் இருந்தனர்.
ஹெலிகாப்டர் சஃபாலே மற்றும் கெல்வா சாலை நிலையங்களுக்கு இடையில் பறந்து கொண்டிருந்தபோது, ஹெலிகாப்டரில் 'சிவப்பு அலர்ட்' எச்சரிக்கையை விமானி கவனித்தார். இதையடுத்து திறந்தவெளியில் அவசரமாக தரையிறங்க அவர் முடிவு செய்தார்.
ஹெலிகாப்டர் நேற்று மதியம் 12.30 மணியளவில் அப்பகுதியில் உள்ள வித்யா வைபவ் உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் தரையிறங்கியது. விமானப் பொறியாளர் தொழில்நுட்பக் கோளாறை கண்டறிந்து சரிசெய்தார். சுமார் 40 நிமிடங்கள் அந்த இடத்திலேயே இருந்த பிறகு, ஹெலிகாப்டர் மதியம் 1.10 மணியளவில் பள்ளி மைதானத்தில் இருந்து புறப்பட்டு ஜூஹுவுக்குத் திரும்பியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு போலீஸ் குழு அந்த நேரம் முழுவதும் அந்த இடத்தில் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
- டிரோன் கேமரா நெருங்கி வருவதைப் பார்த்து, பலர் அங்கிருந்து தப்பி ஓடுவதும் காட்சிகளில் பதிவாகி உள்ளது.
- கல்வித்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வுகள் நடந்து வருகின்றன. அங்குள்ள சவுசாலாவில் ஒரு மையத்தில் ஆங்கில தேர்வு நடந்து கொண்டிருந்தது. அப்போது தேர்வில் முறைகேடு ஏற்படாமல் கண்காணிக்க அதிகாரிகள் நூதன முயற்சியை மேற்கொண்டனர்.
அதன்படி தேர்வு மையத்தின் மேல் டிரோனை பறக்க விட்டு கேமரா மூலம் கண்காணித்தனர். அப்போது சில பெற்றோர்களும், உறவினர்களும் தேர்வு மையத்தின் சுவர்கள் மற்றும் ஜன்னல்களுக்கு அருகில் நின்று கொண்டு, மாணவர்களுக்கு விடைத்தாள்களை அனுப்ப முயற்சிப்பது டிரோன் காட்சிகள் மூலம் தெரியவந்தது. சிலர் ஜன்னல்களில் ஏறிச் செல்வதையும் காண முடிந்தது.
டிரோன் கேமரா நெருங்கி வருவதைப் பார்த்து, பலர் அங்கிருந்து தப்பி ஓடுவதும் காட்சிகளில் பதிவாகி உள்ளது. தேர்வு மைய வளாகம் திறந்த வெளியில் இருந்ததால் வெளியில் இருந்து மாணவர்களை அணுகுவதை எளிதாக்கியதாகவும், பெற்றோர்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கல்வித்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். டிரோன் மூலம் அடையாளம் கண்டறியப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே தேர்வில் காப்பியடிக்க பெற்றோர் உதவும் டிரோன் காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.
- 6 மாத காத்திருப்புக்கு பிறகு தம்பதி விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர்.
- கொரோனா பரவலுக்கு பிறகு திருமணம், நிச்சயதார்த்தம் போன்றவை காணொலி காட்சி மூலம் நடந்து வருகிறது.
கனடாவில் வேலை பார்க்கும் தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம் மிரா ரோட்டில் திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் அவர்களின் குடும்ப வாழ்க்கை இனிமையாக சென்றது. இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள், 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி முதல் கனடாவில் வெவ்வேறு பகுதியில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
எனவே பிரிந்து வாழும் 31 வயது கணவர், 24 வயது மனைவி விவாகரத்து கேட்டு தானே குடும்பநல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். 2 பேரும் வெளிநாட்டில் இருப்பதால் காணொலி காட்சி மூலம் விவாகரத்து வழக்கு மீதான விசாரணை நடந்தது. 6 மாத காத்திருப்புக்கு பிறகு தம்பதி விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர்.
இதையடுத்து கோர்ட்டு தம்பதிக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. இதுகுறித்து நீதிபதி ஆர்.எஸ்.பகரே அவரது தீர்ப்பில், "பயிற்சி பெற்ற மத்தியஸ்தரால் பேச்சுவார்த்தை நடந்த போதிலும் தம்பதி இணைந்து வாழ ஆர்வம் காட்டவில்லை. மனுதாரர்கள் பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம், நிகழ்கால, எதிர்கால பிரச்சனைகள் குறித்து பரஸ்பரம் தீர்வு கண்டுள்ளனர். அவர்களுக்கு இடையேயான அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுள்ளன" என கூறியுள்ளார்.
கொரோனா பரவலுக்கு பிறகு திருமணம், நிச்சயதார்த்தம் போன்றவை காணொலி காட்சி மூலம் நடந்து வருகிறது. இந்தநிலையில் குடும்ப நல கோர்ட்டு வெளிநாட்டில் வாழும் தம்பதிக்கு காணொலி காட்சி மூலம் விவாகரத்து வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
- பாலிவுட் நடிகரான ரன்வீர்சிங் சமீபத்தில் துரந்தர் படத்தில் நடித்திருந்தார்.
- இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றிருந்தது.
மும்பை:
பாலிவுட் நடிகரான ரன்வீர்சிங், சமீபத்தில் துரந்தர் படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றிருந்தது. அத்துடன் வசூலையும் வாரிக் குவித்தது.
இந்நிலையில், ரன்வீர் சிங்கின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். அதில் கோடிக்கணக்கில் பணம் தரவேண்டும் என கோரியுள்ளார். இதுதொடர்பாக, மும்பை போலீசிடம் ரன்வீர் சிங் புகார் அளித்தார்.
இதையடுத்து, ரன்வீர்சிங் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தனியார் பாதுகாவலர்களும் அதிகப்படுத்தப்பட்டு உள்ளனர்.
மிரட்டல் விடுத்தவர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் என்ற கோணத்தில் போலீசாரும் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






