என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Loan Fraud"

    • இந்த குற்றவாளிகளின் சொத்துக்களில் இருந்து 33 சதவீதம், அதாவது ரூ.19,187 கோடி மீட்கப்பட்டுள்ளது
    • கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா ரூ.11,960 கோடியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

    பிரபல தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட நாட்டை விட்டு தப்பி ஓடிய 15 பொருளாதார குற்றவாளிகள் பொதுத்துறை வங்கிகளுக்கு மொத்தம் ரூ.58,082 கோடி கடன்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

    மக்களவையில் எம்.பி ஒருவர் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி இதனைத் தெரிவித்தார்.

    இந்த மொத்த நிலுவைத் தொகையில், அசல் தொகை ரூ.25,645 கோடி, அதே நேரத்தில் அதற்கான வட்டி ரூ.31,437 கோடியை எட்டியுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    இதுவரை, இந்த குற்றவாளிகளின் சொத்துக்களில் இருந்து 33 சதவீதம், அதாவது ரூ.19,187 கோடி மீட்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.38,895 கோடி வசூலிக்கப்பட வேண்டி உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உட்பட மொத்தம் 12 பொதுத்துறை வங்கிகளுக்கு அவர்கள் கடன்பட்டுள்ளனர்.

    கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா ரூ.11,960 கோடியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்தத் தொகையை அவர் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு மட்டும் கடன்பட்டுள்ளார்.

    அவருக்குப் பிறகு, வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,799 கோடி கடன்பட்டுள்ளார். அவர்களுடன் சேர்ந்து, சந்தேசரா குழுமமும் ரூ.900 கோடி முதல் ரூ.1,300 கோடி வரை கடன் வாங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம், 2018 இன் கீழ் அவர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

    இதற்கிடையே விஜய் மல்லையா, மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி அவ்வப்போது லண்டனில் பார்ட்டி நடத்தி நடனமாடி கொண்டாடும் வீடியோக்கள் வெளியான வண்ணம் உள்ளன.  

    • வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாததால் சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட்டது.
    • 2018-ம் ஆண்டு ஜன ஜாக்ருதி என்ற புதிய கட்சியை தொடங்கினார் கொத்தபள்ளி கீதா

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ராம கோடீஸ்வர ராவ் (வயது55). இவரது மனைவி கொத்தபள்ளி கீதா (50). இவருக்கு 27 வயது இருக்கும்போது அங்குள்ள கிராம வங்கியில் வேலை கிடைத்தது. 2 ஆண்டுகள் வங்கியில் வேலை செய்த கீதா குரூப்-1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.

    இதையடுத்து பல்வேறு இடங்களில் உதவி கலெக்டராக வேலை செய்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து எம்.பி பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்.பி. ஆக இருந்தபோது தனியார் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, அதன் பேரில் வங்கியில் ரூ.42 கோடி கடன் வாங்கினார். வாங்கிய கடனை திருப்பி செலுத்த வில்லை.

    இந்த நிலையில் 2018-ம் ஆண்டு ஜன ஜாக்ருதி என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதன் பின்னர் பா.ஜ.க.வில் இணைந்து அப்பகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாததால் சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட்டது. முன்னாள் எம்.பி. கீதா, அவரது கணவர் ராம கோடீஸ்வரராவ், வங்கி அதிகாரிகள் ஜெயப்பிரகாஷ், அரவிந்த் ஆகியோர் மீது ஆந்திர மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கீதா உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். அதில் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்தது நிரூபணமானதால் முன்னாள் எம்.பி.கீதா, அவரது கணவர் ராம கோடீஸ்வரராவ், வங்கி அதிகாரிகள் ஜெய பிரகாஷ், அரவிந்த் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

    இதையடுத்து 4 பேரும் உஸ்மானிய ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர். உடல் பரிசோதனை முடிந்து 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ரூ.8 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடியில் முக்கிய குற்றவாளியான குஜராத் தொழில் அதிபர் ஹிதேஷ் படேல் அல்பேனியாவில் கைது செய்யப்பட்டார். #Gujarat #BiteshPatel #LoanFraud #Albania
    புதுடெல்லி:

    ரூ.8 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடியில் முக்கிய குற்றவாளியான குஜராத் தொழில் அதிபர் ஹிதேஷ் படேல் அல்பேனியாவில் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    குஜராத்தின் வதோதராவை மையமாக கொண்டு இயங்கி வந்த ‘ஸ்டெர்லிங் பயோடெக்’ நிறுவனம் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் இருந்து ரூ.8,100 கோடி அளவுக்கு வங்கிக்கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளது. இதற்காக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் 300-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களும், பினாமி பெயரில் நிறுவனங்களும் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

    இந்த மோசடி தொடர்பாக ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் உரிமையாளர்களான சந்தேசரா (நிதின், சேத்தன்) சகோதரர்கள், மற்றும் அவர்களின் மைத்துனர் ஹிதேஷ் படேல் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் அவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். தப்பி ஓடியிருக்கும் அவர்கள் அனைவரையும் கைது செய்ய சர்வதேச போலீசாரின் (இன்டர்போல்) உதவி நாடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஹிதேஷ் படேலுக்கு எதிராக இன்டர்போல் அதிகாரிகள் கடந்த 11-ந்தேதி ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து உள்ளனர்.

    தப்பி ஓடிய தொழில் அதிபர்களில் நிதின் சந்தேசரா, ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இருப்பதாக கடந்த ஆண்டு இறுதியில் தகவல் வெளியாகி இருந்தது. அவரை கைது செய்து நாடு கடத்தி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

    இதற்கிடையே சந்தேசரா சகோதரர்களின் மைத்துனரும், இந்த கடன் மோசடியில் முக்கிய குற்றவாளியுமான ஹிதேஷ் படேல், தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் சிக்கியுள்ளார். இன்டர்போல் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் ஹிதேஷ் படேலை அல்பேனிய சட்ட அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.

    சந்தேசரா சகோதரர்கள் போலி நிறுவனங்கள் மற்றும் பினாமி பெயரில் நிறுவனங்களை உருவாக்குவதற்கு முக்கிய கருவியாக விளங்கியவர் ஹிதேஷ் படேல் ஆவார். எனவே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அவர் தேடப்பட்டார்.

    தற்போது அவர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. அதன்படி அவர் விரைவில் நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #Gujarat #BiteshPatel #LoanFraud #Albania 
    ×