என் மலர்
கேரளா
- கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துள்ள மாவட்ட கலெக்டர்கள், இரவு நேர பயணங்களுக்கும் தடை விதித்துள்ளனர்.
- பத்தனம் திட்டாவில் வருகிற 1-ந் தேதி வரை மலைப்பகுதிகளுக்கு இரவு பயணம் செய்ய அனுமதி இல்லை.
திருவனந்தபுரம்:
தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து கேரளாவில் கடந்த சில நாட்களாக விடாது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒடிசா கடற்கரைக்கு அருகில் வடமேற்கு வங்காள விரிகுடாவில் தற்போது அமைந்துள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு நோக்கி நகரும் போது 24 மணி நேரத்திற்குள் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும் என்றும், இதனால் அடுத்த 5 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை (30-ந் தேதி) திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கும், மறுநாள் (31-ந் தேதி) திருவனந்தபுரம், கொல்லம், பததனம் திட்டா, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களை மறு அறிவிப்பு வரும் வரை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துள்ள மாவட்ட கலெக்டர்கள், இரவு நேர பயணங்களுக்கும் தடை விதித்துள்ளனர். பத்தனம் திட்டாவில் வருகிற 1-ந் தேதி வரை மலைப்பகுதிகளுக்கு இரவு பயணம் செய்ய அனுமதி இல்லை. மூணாறு இடைவெளி சாலை மற்றும் நேரியமங்கலம்-அடிமாலி பகுதியில் நாளை (30-ந் தேதி) வரை பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டுக்கான பிரதிஷ்டை தினம் வருகிற 5-ந் தேதி ஆகும்.
- ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை ஜூன் 14-ந் தேதி திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் தவிர மாதாந்திர வழிபாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம். இது தவிர சிறப்பு நாட்களிலும் நடை திறக்கப்படும்.
அதன்படி ஆண்டுதோறும் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான பிரதிஷ்டை தினம் வருகிற 5-ந் தேதி ஆகும்.
இதற்காக சபரிமலை கோவில் நடை 4-ந் தேதி திறக்கப்படுகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மறுநாள் (5-ந் தேதி) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பிரதிஷ்டை தின பூஜைகள் தொடங்குகிறது.
தொடர்ந்து நடைபெறும் வழிபாட்டுக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. அதன் பிறகு ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை ஜூன் 14-ந் தேதி திறக்கப்படுகிறது.
- யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் திருச்சூரில் பிறந்தவர் ஹிரந்தாஸ் முரளி.
- பிரதமர் மோடியை அடிக்கடி வேடன் அவமதிக்கிறார்.
கேரளாவைச் சேர்ந்த மலையாள ராப் பாடகரான 'வேடன்' சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.
சமூக பிரச்சனைகளை குறித்த கூர்மையான வரிகளை கொண்டதாக வேடனின் பாடல்கள் அமைத்துள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் திருச்சூரில் பிறந்தவர் ஹிரந்தாஸ் முரளி. இவரே பின்னணியில் வேடன் ஆனார்.
2020 கொரோனா காலத்தில், யூடியூபில் வெளிவந்த இவரின் முதல் ஆல்பம் பாடலான 'வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' மூலம் கவனம் பெற்றார்.
"நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்று சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக இப்பாடலில் அவர் பேசியிருந்தார். தொடர்ந்து சில படங்களிலும் பாடல்களை இவர் பாடியுள்ளார்.
'மஞ்ஞும்மல் பாய்ஸ்', 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' உள்ளிட்ட புகழ் பெற்ற படங்களிலும் இவர் பாடியுள்ளார்
டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் அண்மையில் வெளியான 'நரிவேட்டை' படத்தில் பழங்குடியினரின் போராட்டம் பற்றி 'வாடா வேடா' என்ற பாடலை எழுதி பாடியிருந்தார். திரைப்படங்களை தவிர்த்து சுயாதீன இசை ஆல்பங்களிலும் வேடன் கவனம் செலுத்தி வருகிறார்.

2021-ஆம் ஆண்டு வேடனுக்கு எதிராக 'மீ டூ' பாலியல் புகார் முன்வைக்கப்பட்டது. தன் தவறை ஒப்புக்கொண்ட வேடன் அதற்கு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம், கஞ்சா வைத்திருந்ததாக கூறி வேடனை கொச்சியில் போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் சில மணி நேரத்திலேயே சிறுத்தை புலியின் பல் பொருத்தப்பட்ட செயின் அணிந்திருந்ததாக கேரள வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இவரது பாடல்களில் பாடல்களின் இந்து மதத்தையும், பிரதமர் மோடியையும் அடிக்கடி வேடன் அவமதிக்கிறார் என பாஜகவினர் அண்மையில் வேடன் மீது புகார் அளித்தனர். இதனிடையே வேடனுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகி பெருகி வருகிறது.
- ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்தில் நடைபெறும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள்.
- மேல் தளத்தில் 50 படுக்கைள் கொண்ட தங்கும் விடுதி இருக்கும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் மாலையணிந்து விரதமிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்தில் நடைபெறும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள். ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகளை தேவசம்போர்டு செய்து வருகிறது.
இந்தநிலையில் சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் நவீன சிறப்பு மருத்துவமனை கட்டப்படும் என்று கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
யாத்திரை காலத்தில் சபரிமலை வரக்கூடிய ஐயப்ப பக்தர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு மருத்துவ சேவை வழங்க திருவிதாங்கூர் தேவசம்போர்டில் ஒதுக்கப்பட்ட நிலத்தில் 3 மாடி கட்டிடத்தில் நவீன மருத்துவம் மற்றும் ஆய்வு அமைப்புகளுடன் மருத்துவமனை கடடப்படுகிறது. அதற்காக பட்ஜெட்டில் ரூ.9 கோடி ஒதுக்கப்படும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்த மருத்துவமனையின் தரை தளத்தில் 12 படுக்கைகள் கொண்ட விபத்து பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, 7 படுக்கைகள் கொண்ட கண்காணிப்பு வார்டு, வரவேற்பு அறை, ஆய்வகம், மாதிரி சேகரிப்பு மையம், மருந்தகம், காவல் உதவி மையம் உள்ளிட்டைகள் இருக்கும்.
அதேபோல் முதல் தளத்தில் 8 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு, ஒரு சிறிய அறுவை சிகிச்சை அரங்கம், எக்ஸ்ரே அறை, 13 படுக்கைகள் கொண்ட பொது வார்டு, மருத்துவர்கள் மற்றும் செலிவிலியர்கள் அறை, ஒரு மாநாட்டு மண்டபம் மற்றும் அலுவலகங்கள், மேல் தளத்தில் 50 படுக்கைள் கொண்ட தங்கும் விடுதி இருக்கும். இந்த மருத்துவமனை கட்டுமான பணி விரைவில் தொடங்கப்படும். அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி கட்டுமான பணி விரைந்து முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
- பலத்த காற்று மற்றும் மழை நீடித்தபடி இருப்பதால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
- கனமழைக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதமடைந்திருக்கும் நிலையில், உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கு முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
மேலும் பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வருகிறது. நேற்று 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சூர், மலப்புரம், கசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்வது மட்டுமின்றி காற்றும் வேகமாக அடிப்பதால் ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் விழுந்து விட்டன. அவை சாலைகள் மற்றும் வாகனங்களின் மீது விழுந்ததால் பல இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கடந்த 2 நாட்களில் மட்டும் காற்றுடன் பெய்த கனமழைக்கு ஏராளமான மின்கம்பங்கள் முறிந்து விழுந்துவிட்டன. மாநிலத்தில் உள்ள 25 வட்டங்களில் 48 மணி நேரத்திற்குள் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் விழுந்துள்ளன. மேலும் 48 மின்சார டிரான்ஸ்பார்மர்களும் சேதமடைந்திருக்கின்றன.
இதன் காரணமாக மாநிலம் முழுவதும் கடுமையான மின்தடை ஏற்பட்டுள்ளது. மின் தடையால் 18ஆயிரத்து 100 மின்மாற்றி பகுதிகளில் சுமார் 30 லட்சம் மின் நூகர்வோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8.6லட்சம் நூகர்வோர்களுக்கு இன்று காலை வரை மின்சாரம் வழங்கப்படவில்லை.
பலத்த காற்று மற்றும் மழை நீடித்தபடி இருப்பதால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடும் சிரமத்ததுக்கு மத்தியில் முறிந்துவிழுந்த மின்கம்பங்கள் மற்றும் சேதமடைந்த டிரான்ஸ்பார்மர்களை மாற்றியமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் முறிந்து விழுந்திருப்பதால் ரூ56.7கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கேரள மின்வாரியம் தெரிவித்துள்ளது. சீரமைப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் மின் வினியோகம் விரைவில் சீராகும் என்றும் மின்வாரியம் கூறியி ருக்கிறது.
கனமழைக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதமடைந்திருக்கும் நிலையில், உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. மின்னல் தாக்கியது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது, மின்சாரம் தாக்கியது உள்ளிட்ட காரணங்களால் நேற்று ஒரே நாளில் மட்டும் 5 பேர் பலியாகியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மத்திய அமைப்பின் உண்மையான நோக்கத்தை மாநில மக்கள் புரிந்து கொள்வார்கள்.
- கட்சியின் முக்கிய தலைவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்ற பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதற்கான அரசியல் சதி.
கேரள மாநிலம் கருவண்ணூர் கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பான பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) வழக்கில் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் பெயர் இடம் பிடித்துள்ளது.
இந்த நிலையில் கட்சியின் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம் பிடித்துள்ளது அரசியல் நோக்கம் கொண்டது. இதை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய அமைப்பின் உண்மையான நோக்கத்தை மாநில மக்கள் புரிந்து கொள்வார்கள். இந்த வழக்கில் கட்சியின் முக்கிய தலைவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்ற பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதற்கான வேண்டுமென்றே செய்யப்பட்ட அரசியல் சதி இது எனத் தெரிவித்துள்ளது.
- ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த மாவட்டங்கள் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.
- பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது. இன்றும் பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், கண்ணூர், திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், பத்தினம்திட்டா, காசர்கோடு ஆகிய 10 மாவட்டங்களுக்கு இன்று "ரெட் அலார்ட்" விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 மாவட்டங்களில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே கேரளாவில் பலத்த காற்றுடன் மழை பெய்கிறது. இதனால் பல இடங்களில் மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன.
பலத்த காற்று காரணமாக மின்கம்பி அறுந்து விழந்ததால் ஓடையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் மின்சாரம் தாக்கி இறந்தனர்.
கோழிக்கோடு தாமரச் சேரி அருகே உள்ள கோடஞ்சேரி பகுதியை சேர்ந்த பிஜூ சந்திரன்-ஷீபா பிஜூ தம்பதியரின் மகன்களான நிதின்(13), இவின்(11) ஆகிய இருவரும் அரக்கல்பாடிதொடு என்ற இடத்தில் உள்ள ஓடையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது பலத்த காற்று காரணமாக அங்கிருந்த ஒரு பெரிய மரத்தின் கிளை முறிந்து மின்கம்பியின் மீது விழுந்தது. இதனால் மின்கம்பி அறுந்து சிறு வர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஓடைக்குள் விழுந்தது. இதனால் ஓடை தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து சிறுவர்களை தாக்கியது. இதில் சிறுவர்கள் இருவரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்து விட்டனர்.
கோழிக்கோட்டில் பலத்த காற்று காரணமாக தென்னை மரம் முறிந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பவித்ரன்(வயது64) என்ப வரின் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
இவர்களையும் சேர்த்து கேரளாவில் மழைக்கு இது வரை 9 பேர் பலியாகி இருக்கின்றனர். ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த மாவட்டங்கள் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்கின்றனர்.
- கிரிஷூடனும் பிரவீனாவுக்கு தகராறு ஏற்பட்டிருக்கிறது.
- பிரவீனா மற்றும் அவரது மகள் வெட்டப்பட்டதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் இடையூர் குன்னு பகுதியை சேர்ந்தவர் பிரவீனா(வயது34). இவருக்கு முதலில் சதீஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்தநிலையில் அவருக்கு கிரிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து பிரவீனா, தனது கணவரை விட்டு பிரிந்து கிரிஷுடன் சென்று விட்டார்.
தனது மகள்களான அனர்கா(14), அபினா(9) ஆகிய இருவரையும் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். கிரிஷூடன் வயநாடு மானந்தவாடி பகுதியில் வாடகை வீடு ஒன்றில் குடித்தனம் நடத்தி வந்தார். இதற்கிடையே கிரிஷூடனும் பிரவீனாவுக்கு தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இதனால் அவரை பிரிந்து செல்ல அவர் முடிவு செய்தார். இதனையறிறந்த கிரிஷ் நேற்று அவருடன் தகராறு செய்திருக்கிறார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. அப்போது அவர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பிரவீனாவை சரமாரியாக குத்தினார்.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பிரவீனாவை மட்டுமின்றி அவரது மூத்த மகளான அனர்காவையும் கிரிஷ் கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதில் சிறுமியின் கழுத்து, காது உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
இந்தநிலையில் பிரவீனா மற்றும் அவரது மகள் வெட்டப்பட்டதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பிரவீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சிறுமி அனர்காவை மீட்டு சிகிச்சைக்காக மானந்தவாடி தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பிரவீனா மற்றும் அவரது மூத்த மகள் வெட்டப்பட்ட நிலையில், அவரது இளைய மகளான அபினா எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. வீடு மற்றும் அதனை சுற்றியுளள பகுதிகளில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. அவர் தனது தாய் மற்றும் அக்காவை கிரிஷ் கத்தியால் வெட்டுவதை பார்த்து பயத்தில் அங்கிருந்து எங்காவது சென்றிருக்கலாம் என்று கருதப்பட்டது.
இதையடுத்து தாயை கொலை செய்தபின், சிறுமியை கிரீஷ் காட்டிற்குள் கடத்தி சென்றது தெரிய வந்தது.
அடர்ந்த வனப்பகுதிக்குள் கடத்திச் செல்லப்பட்ட சிறுமியை ட்ரோன் மூலம் தேடிய போலீசார், சிறுமியை கண்டுபிடித்து கிரீஷை கைது செய்தனர்.
- கரை ஒதுங்கியுள்ள கண்டெய்னர்கள் அனைத்தும் காலியாக இருக்கின்றன.
- கடலில் மிதக்கும் பொட்களை யாரும் தொடக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருப்பதால் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று அரபிக்கடலில் பயங்கரமாக காற்று அடித்தபடி இருந்தது.
அப்போது கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து சென்ற லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் கொச்சி அருகே நடுக்கடலில் கவிழ்ந்தது. 630 கண்டெய்னர்களுடன் அந்த கப்பல் கடலில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த கடற்படையினர் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து அந்த கப்பலில் இருந்த கேப்டன், 20 ஊழியர்கள் என 24 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
இந்தநிலையில் கடலில் கவிழ்ந்த கப்பல் கடலுக்குள் முழுவதுமாக மூழ்கியது. அதில் இருந்த 630 கண்டெய்னர்களும் கடலுக்குள் விழுந்தன. அவற்றில் 73 கண்டெய்னர்கள் பொருட்கள் எதுவும் இல்லாமல் வெற்றாகவும், 13 கண்டெய்னர்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்களும், 12 கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைடும் இருந்திருக்கிறது.
மேலும் அந்த கப்பலில் 84.44 மெட்ரிக் டன் டீசல், 367.1 மெட்ரிக் டன் உலை எண்ணையும் இருந்திருக்கிறது. அவை அனைத்துடன் கப்பல் முழுமையான மூழ்கியதால் அவை கடலில் கசிந்து ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது. கடலில் சுமார் 3.7 கிலோமீட்டர் அகலம் மற்றும் நீள பரப்பில் எண்ணெய் பரவியது.
கடலில் பரவியிருக்கும் எண்ணெய் படலத்தை நீக்கும் பணி அகச்சிவப்பு கேமராக்களின் உதவியுடன் கண்டு பிடிக்கப்பட்டு அகற்றும் பணி கடலோர காவல் படையினரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடல் பகுதியில் தொடர்ந்து பலத்த காற்று அடித்து வருவதால் இந்த பணிகள் மிகவும் சிரமத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் கடலுக்குள் விழுந்த கண்டெய்னர்கள் கடற்கரைகளில் கரை ஒதுங்கி வருகின்றன. கொல்லம் மற்றும் ஆலப்புழா கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொல்லம் மற்றும் ஆலப்புழாவில் 4 இடங்களில் கண்டெய்னர்கள் குவிந்து கிடக்கின்றன.
கரை ஒதுங்கியுள்ள கண்டெய்னர்கள் அனைத்தும் காலியாக இருக்கின்றன. தொடர்ந்து கண்டெய்னர்கள் கரை ஒதுங்கியபடி இருப்பதால் கொச்சி மற்றும் ஆலப்புழா கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகளில் வசித்துவரும் கடலோர கிராம மக்கள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
கால்சியம் கார்பைட் தண்ணீருடன் வினைபுரிந்து அசிட்டிலின் வாயுவை உருவாக்கும். அது எரியும் தன்மை கொண்டது என்பதால் கடற்கரைகளில் ஒதுங்கி கிடக்கும் கண்டெய்னர்களின் அருகாமையில் யாரும் செல்லக்கூடாது எனவும், கடலில் மிதக்கும் பொட்களை யாரும் தொடக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
கப்பலில் இருந்து கடலுக்குள் விழுந்த கண்டெய்னர்கள் எங்கெல்லாம் ஒதுங்குகின்றன? அவற்றில் இருக்கும் ஆபத்தான பொருட்கள் எதுவும் கடலில் மிதக்கிறதா? என்று சுங்கத்துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
அவர்கள் கடலோர பகுதிகளில் தொடர்ந்து உஷார் நிலையில் இருந்து கண்காணித்து வருகிறார்கள். மேலும் கப்பல் மூழ்கிய பகுதியில் இருந்து 20 கடல்மைல் தொலைவு, அதாவது 37 கிலோமீட்டர் தூரத்துக்கு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வயநாடு மாவட்டத்தில் உள்ள எடக்கல் குகைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
- இடுக்கியில் உள்ள நீர்நிலைகளில் நீர் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்னதாக இன்று தொடங்கி உள்ளது.
கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து சில நாட்கள் பலத்தமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமின்றி இன்று அனைத்து மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு இன்று "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது. மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர் கோடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோல் வருகிற 26-ந்தேதி 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கனமழை தொடர்ந்து பல நாட்கள் நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால் அங்கு நிலச்சரிவு, பாறை சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அங்குள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் கூறப்பட்டு உள்ளது.
இதேபோல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, பல இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள எடக்கல் குகைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. குருவா, காந்தன்பாரா, பூக்கோடு உள்ளிட்ட இடங்களில் படகு சவாரி நிறுத்தப்பட்டு இருக்கிறது.
இடுக்கியில் உள்ள நீர்நிலைகளில் நீர் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் மலையேற்றம் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் இரவு நேர பயணத்துக்கு தடை போடப்பட்டு இருக்கிறது.
- தமிழகத்தில் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.
- நெய்யாற்றின்கரை மற்றும் கட்டக்கடா தாலுகாவில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்தன.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்னதாக இன்று தொடங்கி உள்ளது.
தமிழகத்திலும் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.
பருவமழை தொடங்கப்போகும் அறிகுறியாக கடந்த ஒரு வார காலமாகவே கேரள மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. வயநாடு, கோழிக்கோடு, காசர்கோடு உள்ளிட்ட வட மாவட்டங்களில் மட்டும் பலத்த மழை பெய்தது.
அதன்படி நேற்று பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. முக்கியமாக திருவனந்தபுரத்தில் கடும் காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பலத்த காற்று காரணமாக பல இடங்களில மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. மேலும் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரிக்கு முன்பு இருந்த மரம் விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார்.
நெய்யாற்றின்கரை மற்றும் கட்டக்கடா தாலுகாவில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பல இடங்களில் மின்கம்பங்களும் விழுந்ததால் மணிக்கணக்கில் மின்சார வினியோகம் தடைபட்டது.
கண்ணூரில் பலத்தமழை காரணமாக அங்குள்ள ஒரு கல்குவாரியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் பலியானார். அங்கிருந்த டிரைவர் ஒருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து நிலச்சரிவு ஏற்பட்ட கல்குவாரி மூடப்பட்டது. மேலும் பல கல்குவாரிகளின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
- மேற்கு தொடர்ச்சி மலை இருக்கும் குமரி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பொழியும்.
- கேரளா கடலோர பகுதிகள், தெற்கு கர்நாடகா மற்றும் கொங்கன், கோவா ஆகிய இடங்களில் இன்று அதிகனமழை பெய்யும்.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும். அப்போது கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் பல மாவட்டங்களில் மழை பெய்யும். இது ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும்.
முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மலை இருக்கும் நீலகிரி, குமரி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பொழியும்.
தென்மேற்கு பருவமழை இந்த மாதம் 27-ந்தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. பின்னர் தென்மேற்கு பருவமழை அதற்கு முன்னதாகவே தொடங்கி விடும் என்று அறிவிக்கப்பட்டது.
தென்மேற்கு பருவமழை தொடங்குவதன் அறிகுறியாக தற்போதே பல மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா கடலோர பகுதிகள், தெற்கு கர்நாடகா மற்றும் கொங்கன், கோவா ஆகிய இடங்களில் இன்று அதிகனமழை பெய்யும்.
தமிழ்நாடு, வடக்கு கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா பகுதிகளில் மிக கனமழையும், குஜராத்தில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.






