என் மலர்
கேரளா
- நாயை துரத்திச் சென்றபோது புலியும் குழிக்குள் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
- புலியை பிடித்த வனத்துறையினர் பெரியார் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்றனர்.
கேரளா மாநிலம் மயிலாடும்பாறை அருகே விவசாயத் தோட்டத்தில் இருந்த 8 அடி ஆழமான குழிக்குள் ஒரு புலி மற்றும் நாய் தவறி விழுந்துள்ளது.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் நாய் மற்றும் புலியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
புலியை பிடித்த வனத்துறையினர் பெரியார் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்றனர். நாயை துரத்திச் சென்றபோது புலியும் குழிக்குள் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
- மதுரையை சேர்ந்த 4 வாலிபர்கள், கேரள மாநிலம் இடுக்கிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
- நெடுங்கண்டம் பகுதியில் உள்ள தூவல் அருவிக்கு அவர்கள் சென்றுள்ளனர்.
சுற்றுலா செல்லும் போது ஆபத்தான பகுதிக்கு செல்லாதீர்கள்....அங்கு நின்று படம் எடுக்காதீர்கள்... என பல சுற்றுலா தலங்களிலும் எச்சரிக்கை பலகைகள் வைத்திருப்பதை அனைவரும் பார்ப்பார்கள். ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் சென்று ஆபத்தை விலை கொடுத்து வாங்கி வருபவர்கள் இன்று பலர்.
சீறி வரும் கடல் அலை களுக்கு மத்தியில் உள்ள பாறைகளில் நின்று செல்பி எடுப்பது, மலை உச்சி, ஓடும் ரெயில், பைக் சாகசம் என பலவற்றையும் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவோர் சில நேரங்களில் ஆபத்தையும் சந்தித்து வருகின்றனர். அந்த வரிசையில் சுற்றுலா சென்ற வாலிபர் ஒருவர் செல்பி மோகத்தால் அருவி பாறையில் சறுக்கி அந்தரத்தில் தொங்கி உள்ளார். அவரை உள்ளூர் மக்கள் உதவியுடன் நண்பர்கள் கயிறு கட்டி மீட்டுள்ளனர்.
மதுரையை சேர்ந்த 4 வாலிபர்கள், கேரள மாநிலம் இடுக்கிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து மகிழ்ந்த அவர்கள், நெடுங்கண்டம் பகுதியில் உள்ள தூவல் அருவிக்கு வந்தனர். இந்தப் பகுதியில் உள்ள பாறைகள் ஆபத்தானவை. இங்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனை மீறி ஆபத்தை உணராமல் 4 வாலிபர்களில் ஒருவர் சென்று அருவி தண்ணீர் விழும் ஆபத்தான பாறையில் நின்று செல்பி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் வழுக்கி உள்ளது. இதனால் அவர் அபய குரல் எழுப்பிய வாறே கீழ்நோக்கி சென்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு அந்தப் பகுதி மக்கள் திரண்டனர்.
அவர்கள் விரைந்து வந்து பார்த்த போது பாறையில் வழுக்கி விழுந்த வாலிபர் பாறையோடு ஓட்டிய நிலையில் அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தார். உடனடியாக கயிறு கட்டி உள்ளூர் மக்கள் உதவியுடன் நண்பர்கள் அவரை மீட்டனர். பாறையோடு வழுக்கிச் சென்ற வாலிபரின் கால் அங்கிருந்த மற்றொரு பாறையில் தட்டியதால் அவர் அந்தரத்தில் நின்றுள்ளார். இதனால் தான் அவரை மீட்க முடிந்தது. இது ஆபத்தான இடம். இந்த பகுதியில் கடந்த 10ஆண்டுகளில் 12 பேர் பலியாகி உள்ளனர் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
- பல்வேறு மாவட்டங்களில் பல கதைகள் கூறி திருமண பந்தம் ஏற்படுத்தி பலரிடம் பணம் பறித்துள்ள தகவல் கிடைத்துள்ளது.
- கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்த ரேஷ்மா, அதற்குள் பஞ்சாயத்து உறுப்பினருடன் திருமண பந்தத்திற்கு தயாராகி உள்ளார்.
திருவனந்தபுரம்:
அழகால் வீழ்த்தி ஆண்களை மயக்கி பணம் பறிக்கும் சில பெண்கள் இதற்காக பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றனர். ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி குடும்பத்தினரையும் வேறு சிலரையும் நம்ப வைத்து டாக்டர் உள்பட பலரிடம் பணம் பறித்த பெண்ணின் செயல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் 10 ஆண்களை திருமண வலையில் வீழ்த்தி இளம்பெண் பணம் பறித்த அதிர்ச்சி தகவல் தற்போது கிடைத்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காஞ்சிரா மட்டம் பகுதியை சேர்ந்தவர் ரேஷ்மா. அழகும் திறமையும் கொண்ட இவருக்கும், பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயமானது. திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ரேஷ்மா முதல் நாள் திருவனந்தபுரம் வேம்பாயம் அழைத்து வரப்பட்டார்.
அவரை தனது நண்பர் வீட்டில் வருங்கால கணவரான பஞ்சாயத்து உறுப்பினர் தங்க வைத்தார். அப்போது அவருக்கு ரேஷ்மா பற்றி சில தகவல்கள் கிடைத்தன. மேலும் அவரது நடவடிக்கையும் சந்தேகத்துக்குரியதாக இருந்தது. இந்த நிலையில் திருமண அலங்காரத்திற்காக ரேஷ்மா அழகு நிலையம் சென்றார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவரது உடமைகளை பஞ்சாயத்து உறுப்பினர் தனது நண்பருடன் சேர்ந்து சோதனை செய்தார். அப்போது ரேஷ்மாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பதற்கான ஆவணங்கள் கிடைத்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஆரியநாடு போலீசில் புகார் செய்தார். இந்த விவரங்கள் தெரியாமல் ரேஷ்மா அலங்காரம் முடித்து திரும்பியபோது போலீசார் அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ரேஷ்மாவுக்கு திருமணம் புதிதல்ல... அவர் பல்வேறு மாவட்டங்களில் பல கதைகள் கூறி திருமண பந்தம் ஏற்படுத்தி பலரிடம் பணம் பறித்துள்ள தகவல் கிடைத்துள்ளது. கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்த ரேஷ்மா, அதற்குள் பஞ்சாயத்து உறுப்பினருடன் திருமண பந்தத்திற்கு தயாராகி உள்ளார்.
மேலும் அடுத்த மாதம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ய பேசி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த தகவலை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஒரே பெண் எப்படி? மாறி மாறி ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்தார்? என விசாரித்த போது, ஆன்லைனில் விளம்பரப்படுத்தியும், அதில் வரும் திருமண வரன் தகவல்களை சேகரித்தும் ரேஷ்மா திருமண பந்தத்தில் ஈடுபட்டுள்ளார்.
திருமணம் செய்த ஒவ்வொருவரிடமும் ஒரு கதையை நம்பும் படி கூறி ஏமாற்றி உள்ளார். ஆனால் பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல தற்போது அவர் சிக்கி உள்ளார். அவரை போலீசார் கைது செய்ய காரணமான பஞ்சாயத்து உறுப்பினர் இது பற்றி கூறுகையில், திருமண விளம்பர குழுவில் எனது செல்போன் நம்பரை நான் பதிவு செய்திருந்தேன். அந்த எண்ணுக்கு கடந்த மாதம் (மே) 29-ந்தேதி அழைப்பு வந்தது.
அதில் பேசியவர் தான் பெண்ணின் தாய் என அறிமுகப்படுத்திக் கொண்டு ரேஷ்மாவின் செல்போன் எண்ணை கொடுத்தார். அதன் மூலம் ரேஷ்மாவிடம் பேசினேன். பின்னர் நாங்கள் 2 பேரும் கோட்டயத்தில் உள்ள ஒரு மாலில் நேரில் சந்தித்து பேசினோம். அப்போது தான் தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்றும், தனக்கு திருமணம் செய்து வைப்பதில் தாய்க்கு ஆர்வம் இல்லை என்றும், அவர் தன்னை துன்புறுத்துவதாகவும் ரேஷ்மா கூறினார்.
இதனை நம்பிய நான் திருமணத்திற்கு சம்மதித்தேன். அப்போது திருமண விழாவில் தனது தரப்பில் இருந்து பெரிதாக யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் ரேஷ்மா தெரிவித்தார். அதன்பிறகே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இருப்பினும் அவரது நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியதாலேயே உடமைகளை சோதனை செய்தேன். அப்போது தான் அவரது திருமணம் தொடர்பான தகவல்கள் கிடைத்தன என்றார்.
இதற்கிடையில் அடுத்த மாதம் திருமணம் செய்ய இருந்த நபரையும் தற்போது அழைத்து வந்ததாக போலீசாரிடம் ரேஷ்மா தெரிவித்தார். இதனை கேட்டு போலீசார் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு மாவட்டத்திற்கு ஒரு கதை சொல்லி பலரை திருமணம் செய்த கல்யாண ராணி ரேஷ்மா, 10-க்கும் மேற்பட்டோரை இதுபோல் ஏமாற்றி திருமண வலையில் வீழ்த்தி பணம் பறித்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முத்தங்காவு பகுதியில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
- பயிர்களை காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க விவசாயிகள் மின்வேலியை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாட்டில் வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமங்களுக்குள் சமீப காலமாக புலி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் புகுந்து தாக்கி வருகிறது. இதில் உயிர்ப்பலியும் நடந்துள்ளது.
இந்த நிலையில் முத்தங்காவு பகுதியில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது 35 வயதான யானை இறந்து கிடந்தது. அந்த யானை மின்வேலியில் சிக்கி இறந்திருக்கலாம் என தெரிகிறது.
அந்த பகுதியில் வன நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், பயிர்களை காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க விவசாயிகள் மின்வேலியை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதில் தான் யானை சிக்கி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தபிறகே இந்த விஷயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுல்தான்பத்தேரி வனசரக அதிகாரி கண்ணன் தெரிவித்தார்.
- நடையை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்து வைத்தார்.
- ஆனி மாத பூஜைக்காக வருகிற 14-ந் தேதி மீண்டும் கோவில் நடை திறக்கப்படும்.
சபரிமலை:
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் தவிர மாதாந்திர வழிபாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம். இது தவிர சிறப்பு நாட்களிலும் நடை திறக்கப்படும். அதன்படி ஆண்டுதோறும் பிரதிஷ்டை தினத்தையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான பிரதிஷ்டை தினம் இன்று வருகிறது.
இதற்காக சபரிமலை கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இந்த நடையை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்து வைத்தார். இன்று அதிகாலையில் பிரதிஷ்டை தின சிறப்பு பூஜை தொடங்கியது. இதனை தொடர்ந்து நடைபெறும் வழிபாடுகளுக்கு பிறகு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆனி மாத பூஜைக்காக வருகிற 14-ந் தேதி மீண்டும் கோவில் நடை திறக்கப்படும். 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
- அங்கன்வாடிகளுக்கான புதிய உணவு முறையை மந்திரி தொடங்கி வைத்தார்.
- குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிரியாணி உள்பட விதவிதமான உணவுகளை அறிமுகம் செய்து வைத்தார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள அங்கன்வாடியில் உப்புமா உள்பட சாதாரண உணவுகள் அன்றாடம் வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து சங்கு என்ற சிறுவன் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணியும், பொரித்த கோழியும் வேண்டும் என கூறி வெளியிட்ட வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசு பொருளானது.
இந்த வீடியோ காட்சியை கண்டு ரசித்த கேரள பொது கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி, சிறுவனின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று அங்கன்வாடி மையங்களில் வகுப்புகள் தொடங்கியது. இதையொட்டி மாநில அளவிலான அங்கன்வாடி வகுப்புகள் தொடக்க விழா நேற்று பத்தனம்திட்டாவில் சுகாதாரத்துறை மந்திரி வீணாஜார்ஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது அங்கன்வாடிகளுக்கான புதிய உணவு முறையை மந்திரி தொடங்கி வைத்தார். அதில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிரியாணி உள்பட விதவிதமான உணவுகளை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்படி வழக்கமாக வழங்கப்படும் இட்லி- சாம்பார், பால், கொழுக்கட்டை, இலையடை, கஞ்சி-பயிறு, பாயாசம், அவித்த தானிய வகைகளுடன் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் மதிய உணவாக முட்டை பிரியாணி அல்லது முட்டை புலாவ் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், சிறுவன் சங்குவின் விருப்பம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக மந்திரி வீணாஜார்ஜ் தெரிவித்தார்.
- பத்மநாப சுவாமி கோவில் வளாகம் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்டுள்ளது.
- கும்பாபிஷேகத்துக்கு முந்தைய பாரம்பரிய சடங்குகள் வரும் நாட்களில் நடைபெறும்.
கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவில். விஷ்ணுவுக்குரிய 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.
இந்த கோவிலின் புனரமைப்பு பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்தநிலையில் பத்மநாப சுவாமி கோவிலில் 270 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இது குறித்து பத்ம நாபசுவாமி கோவிலின் மேலாளர் ஸ்ரீகுமார் கூறியிருப்பதாவது:-
கடந்த 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நியமித்த நிபுணர் குழுவின் அறிவுறுத்தலின்படி கோவிலின் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. கொரோனா தொற்று பரவல் காரணமாக முடங்கிய புனரமைப்பு பணிகள், கடந்த 2021-ம் ஆண்டு முதல் மீண்டும் தொடங்கி நடந்து வந்த நிலையில், தற்போது நிறைவு பெற்றிருக்கிறது.
இதனால் பத்மநாபசுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் வருகிற 8-ந்தேதி நடத்தப்படுகிறது. மூலவர் சன்னதியின் மேல் உள்ள கோபுரத்தில் மூன்று புதிய கலசங்கள், சன்னதியின் முன்புள்ள ஒற்றைக்கல் மண்டபத்தின் மேல் கோபுரத்தில் இருக்கும் கலசம் என 4 கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
புதிய விஷ்வக்சேனன் சிலை பிரதிஷ்டை, கோவில் வளாகத்தில் அமைந்துள்ள திருவம்பாடி ஸ்ரீகிருஷ்ணர் சன்னிதியில் அஷ்டபந்த கலசம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் கும்பாபிஷேக நாளில் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்துக்கு முந்தைய பாரம்பரிய சடங்குகள் வரும் நாட்களில் நடைபெறும்.
பத்மநாப சுவாமி கோவில் வளாகம் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உலகெங்கிலும் உள்ள பத்மநாபசுவாமி பக்தர்களுக்கு கும்பாபிஷேக சடங்குகளை காணும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. கோவிலின் மரபுகளை பின்பற்றி புனித நிகழ்ச்சிகள் நடைபெறுவதை உறுதி செய்ய கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், வயநாடு, கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட 6 மடங்கு மழை பொழிந்து உள்ளது.
- கொச்சியில் கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் ஒருவர் பலியானார்.
திருவனந்தபுரம்:
ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் மே மாதம் இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்குபருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட 8 நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், வயநாடு, கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட 6 மடங்கு மழை பொழிந்து உள்ளது.
மழையுடன் சூறைக்காற்றும் வீசுவதால் மரங்கள் முறிந்து விழுந்து ஏராளமான வீடுகள் சேதம் அடைந்து உள்ளன.
அதேபோல் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் ஆயிரக்கணக்கில் சேதம் அடைந்து உள்ளன. இதனால் கேரள மின்சார வாரியத்திற்கு ரூ.50 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
கேரளாவில் கடந்த 8 நாட்களில் சூறைக்காற்று மற்றும் மழைக்கு 32 பேர் பலியாகி உள்ளனர். நேற்று ஆலப்புழை மாவட்டம் ஹரிப்பாட்டில் குளத்தில் மூழ்கி வாலிபர் ஸ்டீவ் (வயது 24), கண்ணூரில் ஆற்றில் மூழ்கி நளினி (52), காயங்குளத்தில் குளத்தில் மூழ்கி பத்மகுமார் (57) ஆகியோர் இறந்தனர்.
மேலும் கொச்சியில் கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் ஒருவர் பலியானார். இவ்வாறு நேற்று ஒரே நாளில் மழைக்கு 4 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தநிலையில் கேரளாவில் இனி வரும் நாட்களில் மழை குறைய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பெய்து வரும் மழையின் பாதிப்பு தமிழ்நாடு, கர்நாடகத்திலும் எதிரொலிக்கிறது. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
- பல மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கொல்லம் மற்றும் இடுக்கி மாவட்டத்தில் முகா மிட்டு தயார் நிலையில் இருக்கின்றனர்.
கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் நாளை வரை தீவிரத்தன்மை கொண்ட மழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றும் பல மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், வருகிற 3-ந்தேதி வரை வெவ்வேறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் நிலச்சரிவும், ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கேரள மாநிலத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது. முக்கியமாக தமிழகத்தில் இருந்தும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்றுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் இருந்து ஒரு குழு கேரளா சென்றிருக்கும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து 30பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்றுள்ளனர்.
அவர்கள் மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களுடன் கொல்லம் மற்றும் இடுக்கி மாவட்டத்தில் முகாமிட்டு தயார் நிலையில் இருக்கின்றனர்.
- கேரள மாநில மின்சார வாரியத்தின் கீழ் உள்ள அணைகளின நீர்மட்டம் கடந்த 6 நாட்களில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
- வருகிற 3-ந்தேதி வரை வெவ்வேறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கு முன்னதாக இந்த மாதமே தொடங்கிவிட்டது. இதை யடுத்து மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு, கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பருவமழை தொடங்கியதில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதன் காரணமாக பல இடங்களில் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்துவிட்டன.
மாநிலம் முழுவதும் இயல்பை விட அதிக ளவு மழை பெய்து இருக்கிறது. வழக்கமாக எதிர்பார்க்கப்படும் மழையளவு 69.6 மில்லிமீட்டர் மழையாகும். ஆனால் கடந்த ஒரு வாரத்தில் 395.5மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்குவதற்காக 50-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு 1,900பேர் தங்கியிருக்கின்றனர்.
கனமழை காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கேரள மாநில மின்சார வாரியத்தின் கீழ் உள்ள அணைகளின நீர்மட்டம் கடந்த 6 நாட்களில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. மாநிலத்தில் உள்ள 16 முக்கிய அணைகளின் மொத்த நீர் இருப்பு 40 சதவீதமாக இருக்கிறது. அனைத்து அணைகளின் நீர் இருப்பும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிறிய அளவிலான 12 அணைகளில் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் நாளை வரை தீவிரத்தன்மை கொண்ட மழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றும் பல மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், வருகிற 3-ந்தேதி வரை வெவ்வேறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் நிலச்சரிவும், ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கேரள மாநிலத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது. முக்கியமாக தமிழகத்தில் இருந்தும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்றுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் இருந்து ஒரு குழு கேரளா சென்றிருக்கும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்றுள்ளனர்.
அவர்கள் மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களுடன் கொல்லம் மற்றும் இடுக்கி மாவட்டத்தில் முகாமிட்டு தயார் நிலையில் இருக்கின்றனர்.
- பள்ளிகளின் புதிய வகுப்பு நேரம் காலை 9.45 மணி முதல் மாலை 4.15 மணி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கனமழை காரணமாக பள்ளிகள் திறப்பு தேதியை திங்கட்கிழமையில் இருந்து மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
கேரள மாநிலத்தில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகளின் வகுப்பு நேரம் அரை மணி நேரம் அதிகரிக்கப்படுகிறது. கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தலைமையில் நடைபெற்ற மாநில கல்வி தர மேம்பாட்டு மேற்பார்வை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கேரள மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகளின் வகுப்பு நேரம் காலை 15 நிமிடமும், மாலை 15 நிமிடமும் அதிகரிக்கப்படுகிறது. இதனால் பள்ளிகளின் புதிய வகுப்பு நேரம் காலை 9.45 மணி முதல் மாலை 4.15 மணி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கனமழை காரணமாக பள்ளிகள் திறப்பு தேதியை திங்கட்கிழமையில் இருந்து மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இருப்பினும் தற்போதைய நிலையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும், இன்றும் நாளையும் வானிலை முன்னறிவிப்பை மதிப்பிட்ட பிறகு, கடுமையான சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே மாற்றங்கள் பற்றி பரிசீலிக்கப்படும் என்று கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
- கப்பலில் இருந்த 24 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
- மீட்பு பணியில் 2 கப்பல்களும் ராணுவ ஹெலிகாப்டரும் ஈடுபட்டது.
கொச்சிக்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றி வந்த சரக்கு கப்பல் கடலில் சாய்ந்து விபத்துக்குள்ளானது. விழிஞ்சத்திலிருந்து கொச்சி துறைமுகத்திற்கு MSC ELSA3- கப்பலில் பொருட்கள் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது.
கப்பல் கொச்சியிலிருந்து தென்மேற்கு சுமார் 38 மைல் தொலைவில் இருந்ததுபோது கடலில் சாய்ந்தது. அப்போது கப்பலில் இருந்த ரசாயனம் கடலில் வழிந்தது. இதனை தொடர்ந்து கப்பல் நிர்வாகம் உதவி கோரி இந்திய அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து, மீட்பு பணியில் 2 கப்பல்களும் ராணுவ ஹெலிகாப்டரும் ஈடுபட்டது. இந்த மீட்பு பணியில் கப்பலில் இருந்த 24 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கப்பலில் இருந்த ரசாயனம் கடலில் கொட்டியதால் அப்பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கரை ஒதுங்கிய பொருட்களை தொட வேண்டாம் என பொதுமக்களுக்கு கடற்படை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கேரள கடற்கரையில் எம்.எஸ்.சி எல்சா 3 சரக்கு கப்பல் மூழ்கியதை மாநில பேரிடராக பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.






