என் மலர்tooltip icon

    இந்தியா

    முகநூலில் தகவல்களை சேகரித்து கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய வாலிபர் கைது
    X

    முகநூலில் தகவல்களை சேகரித்து கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய வாலிபர் கைது

    • சங்கீத்குமார் முகநூல் பக்கத்தில் கணக்கு வைத்திருக்கும கல்லூரி மாணவிகளின் விவரங்களை முதலில் சேகரிப்பார்.
    • கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் வடக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சங்கீத்குமார்(வயது29). கல்லூரி மாணவிகளின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசார் இவரை கைது செய்தனர்.

    சங்கீத்குமார் முகநூல் பக்கத்தில் கணக்கு வைத்திருக்கும கல்லூரி மாணவிகளின் விவரங்களை முதலில் சேகரிப்பார். பின்பு மாணவிகளின் பக்கத்திற்குள் சென்று அவர்கள் படிக்கும் கல்லூரி, செல்போன் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரித்துக் கொள்வார்.

    அதன்பிறகு மாணவிகளின் செல்போனுக்கு, அவர்கள் படிக்கும் கல்லூரியின் சீனியர் மாணவி என்று கூறி குறுந்தகவல் அனுப்புவார். அவர்களும் சீனியர் மாணவி என்ற அடிப்படையில் குறுந்தகவல் அனுப்பிவிட்டால், அவர்களுடன் நட்பாக பேச ஆரம்பித்து விடுவார்.

    பின்னர் மாணவிகளின் செல்போன்களுக்கு பாலியல் ரீதியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்புவார். இதே போன்று ஏராளமான மாணவிகளுக்கு வாலிபர் சங்கீத்குமார் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி தொல்லை கொடுத்தபடி இருந்துள்ளார்.

    ஆகவே அவரைப்பற்றி சில மாணவிகள் போலீசில் புகார் செய்தனர். அதுகுறித்து கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவாக இருந்த சங்கீத்குமாரை தேடினர். அவரின் இருப்பிடத்தை செல்போன் டவர் மூலமாக கண்டறிந்து சென்று கைது செய்தனர்.

    அவரிடமிருந்து மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்ப பயன்படுத்திய செல்போன் மற்றும் சிம் கார்டை போலீசார் பறிமுதல் செய்தனர். சங்கீத்குமார் மீது இதேபோல் மேலும் சில போலீஸ் நிலையங்களிலும் வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×