என் மலர்
கர்நாடகா
- எம்.எல்.ஏக்கள் 50 பேருக்கு தலா ரூ.50 கோடி தருவதாக விலை பேசியது.
- காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யாரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் மைசூருவில் முதல் மந்திரி சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கர்நாடக அரசை கவிழ்க்க நினைக்கும் பா.ஜ.க, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 50 பேருக்கு தலா ரூ.50 கோடி தருவதாக விலை பேசுகிறது.
அதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. அதனாலேயே என் மீது வழக்குகளை பதிவு செய்கிறது.
பா.ஜ.க.விற்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?
முன்னாள் முதல் மந்திரிகள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக், பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா ஆகியோர் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கின்றனரா?
அவையனைத்துமே ஊழல் பணம், லஞ்சப் பணம். ஊழல் செய்து கோடிக்கணக்கில் பணம் சேர்த்து வைத்துள்ளனர்.
அந்தப் பணத்தின் மூலம் ஒரு எம்.எல்.ஏவிற்கு ரூ.50 கோடி கொடுப்பதாக பா.ஜ.க. அணுகியுள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒப்புக்கொள்ளாததால் எப்படியாவது ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதால் பல்வேறு பொய் புகார்களை கூறி வருகின்றனர் என தெரிவித்தார்.
- மாணவரின் பெயரை சேர்ப்பதற்கு முன் பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம்.
- மாணவரின் வாழ்நாள் அடையாள எண்ணாக இருக்கும்.
பெங்களூரு:
மத்திய பள்ளிக் கல்வி அமைச்சகத்தின் தேசிய கல்விக் கொள்கை- 2020 திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க, `ஒரே நாடு, ஒரே மாதிரியான மாணவர் அடையாள அட்டை' பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, அனைத்து மாணவர்களுக்கும் `அபார்' சிறப்பு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

'அபார்' அடையாள அட்டைக்கு மாணவரின் பெயரை சேர்ப்பதற்கு முன் பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம். பெற்றோரின் ஆதார், தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை இணைப்பதன் மூலம் மாணவர் ஐடி உருவாக்கப்படுகிறது.
மாணவர்களின் பெயர்களை பதிவு செய்ய கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், பெற்றோர் கூட்டத்தை அழைத்து சம்மதம் பெற தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டுள்ளது.
மாநிலத்தின் அனைத்து அரசு, உதவிபெறும் மற்றும் உதவிபெறாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரிடம் ஒப்புதல் பெறும் பணி ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வந்தது.
இதையடுத்து முதற்கட்டமாக மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, 'ஆதார்' எண் மாதிரி 12 இலக்க 'அபார்' தனித்துவ அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
'ஏபிஏஆர்' என்பது தானியங்கி நிரந்தர கல்வி கணக்குப் பதிவு என்பதை குறிக்கிறது. இது மாணவரின் வாழ்நாள் அடையாள எண்ணாக இருக்கும்.
ஏற்கனவே மாநில அரசின் எஸ்டிஎஸ் அடையாள அட்டை மற்றும் மத்திய அரசின் பிஇஎண் ஆகியவை மாநில பாடத்திட்டப் பள்ளிகளின் மாணவர்களுக்கு நடைமுறையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர்.
- வாக்குச்சாவடிகளில் பெண் ஊழியர்கள் மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த 3 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 7 லட்சத்து 4 ஆயிரத்து 673 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 3 தொகுதிகளிலும் 557 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் காலை முதலே வாக்காளர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் 5 சக்தி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பெண் ஊழியர்கள் மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இந்த தேர்தலில் 45 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 23-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
3 தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக இன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்களுக்கு அரசு விடுமுறை விடப்பட்டு இருந்தது.
- பாதிக்கப்பட்ட நபர் கார் ரெண்டல் இணையதளங்களை கூகுளில் தேடியுள்ளார்.
- சக்தி கார் ரெண்டல் இணையதளத்தின் தொலைபேசி எண்ணிற்கு அவர் அழைத்துள்ளார்.
கர்நாடகாவில் போலியான கார் புக்கிங் இணையதளத்தில் கார் புக் செய்த நபர் தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ. 4.1 லட்சத்தை இழந்துள்ளார்.
மேற்குவங்கத்தை சேர்ந்த நபர் ஒருவர் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள கார் ரெண்டல் இணையதளங்களை கூகுளில் தேடியுள்ளார். அப்போது அவரின் கண்ணில் தென்பட்ட சக்தி கார் ரெண்டல் இணையதளத்தின் தொலைபேசி எண்ணிற்கு அழைத்துள்ளார்.
அப்போது அவரிடம் பேசிய நபர், எங்கள் இணையதளத்தில் 150 ரூபாய் செலுத்தி காரை புக்கிங் செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
அவரும் தனது டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை உபயோகித்து பணம் செலுத்த முயன்றுள்ளார். ஆனால் அவரால் பணம் செலுத்தமுடியவில்லை. அப்போது தான் அவரது வங்கிக்கணக்கில் இருந்து லட்சக்கணக்கான பணம் எடுக்கப்பட்டுள்ளதாக அவருக்கு வங்கியில் இருந்து மெசேஜ் வந்துள்ளது.
எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டில் இருந்து ரூ. 3.3 லட்சமும் கனரா வங்கி டெபிட் கார்டில் இருந்து 80,056 ரூபாயும் என மொத்தமாக 4.1 லட்சம் ரூபாயை அவர் இழந்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள உடுப்பி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- திருமண அழைப்பிதழ் மார்ச் மாதம் அச்சிடப்பட்டது.
- மனுதாரர் தரப்பில் வாதிட்ட வக்கீல் எம்.வினோத் குமார், மோடிக்கு ஓட்டு போட்டால், பரிசு கொடுப்பது போல் மனுதாரர் அழைப்பு கடிதம் அச்சடித்திருந்தார்.
பெங்களூரு:
கர்நாடகாவில் நடந்த முடிந்த பாராளுமன்ற தேர்தலின்போது திருமண அழைப்பிதழில் பிரதமர் நரேந்திர மோடி படத்தை அச்சிட்டு அவருக்கு ஆதரவாக தட்சிண கன்னடா மாவட்டம் சூல்யா பகுதியை சேர்ந்த சிவபிரசாத் என்பவர் ஓட்டு கேட்டார். இது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக புகார் கூறப்பட்டது. மேலும் சிவபிரசாத் மீது தட்சிண கன்னடா மாவட்டத்தின் சூல்யா சட்டமன்ற தொகுதியின் பறக்கும் படை அதிகாரி சந்தேஷ் வழக்குப் பதிவு செய்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை புத்தூர் ஜே.எம்.எப்.சி. நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிவபிரசாத் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணை வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வாதிட்ட வக்கீல் எம்.வினோத் குமார், மோடிக்கு ஓட்டு போட்டால், பரிசு கொடுப்பது போல் மனுதாரர் அழைப்பு கடிதம் அச்சடித்திருந்தார்.
திருமண அழைப்பிதழ் மார்ச் மாதம் அச்சிடப்பட்டது. மனுதாரர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 16-ந் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அது சட்டவிரோதமானது. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும்'' என நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து நீதிபதி "அழைப்புக் கடிதம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முன்பே அச்சிடப்பட்டது. எனவே, புத்தூர் ஜே.எம்.எப்.சி. நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது,'' என உத்தரவிட்டார்.
- வெடிபொருட்கள் அல்லது ரசாயன பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
- வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு சம்பங்கி ராமநகரில் நட்சத்திர ஓட்டலான ஐபிஸ் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் நேற்று இரவு வந்தது. அதில் ஓட்டல் வளாகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளோம். இன்னும் சில மணி நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று எழுதப்பட்டிருந்தது. இந்த செய்தியை பார்த்த ஓட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு, வெடிகுண்டு கண்டறியும் பிரிவு மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஓட்டல் வளாகத்தை ஆய்வு செய்தனர். வெடிபொருட்கள் அல்லது ரசாயன பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது போலி வெடிகுண்டு மிரட்டல் என்பது தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய 3 தொகுதிகள் காலியாக உள்ளன.
- தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபையில் சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய 3 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த 3 தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
சென்னபட்டணாவில் பா.ஜ.க கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், மத்திய மந்திரி குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி, காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி யோகேஷ்வர், சிக்காவியில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் மகன் பரத் பொம்மை, காங்கிரஸ் சார்பில் யாசிர் அகமதுகான் பதான், சண்டூரில் காங்கிரஸ் சார்பில் துகாராம் எம்.பி.யின் மனைவி அன்னபூர்ணா துகாராம், பா.ஜ.க. சார்பில் பங்காரு ஹனுமந்து ஆகியோர் உள்பட 45 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
3 தொகுதிகளிலும் சேர்த்து 7 லட்சத்து 4 ஆயிரத்து 673 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 557 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
- ஆத்திரம் அடைந்த மனு, மனைவி கவுரம்மாவிடம் தகராறில் ஈடுபட்டார்.
- கவுரம்மாவின் பெற்றோர் சிகாரிப்புரா போலீசில் புகார் அளித்தனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகாவை அடுத்த அம்பிளிகொளா பகுதியை சேர்ந்தவர் மனு. இவரது மனைவி கவுரம்மா (வயது 28). கவுரம்மா சிகாரிப்புராவில் உள்ள தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மனு அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலை மனு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் மனைவியிடம் உணவு பரிமாறும்படி கேட்டுள்ளார்.
ஆனால் கவுரம்மா நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதற்கிடையே ஒரு கட்டத்தில் நீங்களே உணவு பரிமாறி சாப்பிட்டு கொள்ளுங்கள் என்று கவுரம்மா கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனு, மனைவி கவுரம்மாவிடம் தகராறில் ஈடுபட்டார்.
மேலும் கடும் கோபமடைந்த மனு, மனைவியின் கழுத்தை நெரித்து உள்ளார். இதில் கவுரம்மா மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மனு, மனைவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு உங்களது மகள் எனக்கு உணவு பரிமாறாமல் செல்போனில் மூழ்கி இருந்தார். இதனால் ஆத்திரத்தில் கவுரம்மாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து கவுரம்மாவின் பெற்றோர் சிகாரிப்புரா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதையடுத்து கவுரம்மாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தப்பி ஓடிய மனுவை போலீசார் தேடிவந்தனர்.
இந்தநிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மனுவை நேற்று போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து சிகாரிப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- துப்பாக்கி சுடும் பயிற்சி அளிப்பதாக கூறி யோகா ஆசிரியையை சதீஷ் ரெட்டி அழைத்து சென்றார்.
- ஹாலிவுட் இயக்குநர் குவெண்டின் டேரண்டினோ இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான படம் 'கில் பில்'(Kill Bill).
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா திப்புரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பிந்துஸ்ரீ. இவரது கணவருக்கும், அதேப்பகுதியில் வசித்து வரும் யோகா ஆசிரியை ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக பிந்துஸ்ரீ சந்தேகித்தார்.
இதையடுத்து அவர் பெங்களூர் கூலிப்படையை சேர்ந்த சதீஷ் ரெட்டி என்பவரை தொடர்புகொண்டு யோகா ஆசிரியையை கொலை செய்ய வேண்டும் என்ற தனது திட்டத்தை தெரிவித்தார்.
அதன்படி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சதீஷ் ரெட்டி, அந்த பெண் நடத்தி வரும் யோகா வகுப்பில் கலந்துகொண்டார். இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந்தேதி துப்பாக்கி சுடும் பயிற்சி அளிப்பதாக கூறி யோகா ஆசிரியையை சதீஷ் ரெட்டி அழைத்து சென்றார்.
பின்னர் அங்கிருந்த தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து சதீஷ் ரெட்டி யோகா ஆசிரியையை காரில் கடத்தி சென்றார். பின்னர் சிட்லகட்டா அருகே வனப்பகுதியில் வைத்து சதீஷ் ரெட்டி உள்பட 4 பேரும் சேர்ந்து யோகா ஆசிரியையின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணப்படுத்தி தாக்கி உள்ளனர். பின்னர் கேபிள் வயரால் அந்த பெண்ணின் கழுத்தை நெரித்துள்ளனர். அப்போது சமயோசிதமாக செயல்பட்ட யோகா ஆசிரியை, தனது மூச்சை சிறிது நேரம் கட்டுப்படுத்தி மயக்கமடைந்தது போல் நடித்துள்ளார்.
யோகா ஆசிரியை உயிரிழந்துவிட்டார் என நினைத்து, ஆசிரியை அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு, அவரை அங்கேயே அவசர அவசரமாக ஒரு குழியை தோண்டி புதைத்துவிட்டு அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். மண்ணுக்குள் புதைந்து கிடந்த யோகா ஆசிரியை, தனக்கு தெரிந்த மூச்சுப்பயிற்சியை பயன்படுத்தி தனது மூச்சை கட்டுப்படுத்தியுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து மண்ணுக்குள் இருந்து வெளியேறி உயிர்தப்பியுள்ளார்.
பின்னர் அவர், உடலை மரக்கிளையால் மறைத்தப்படி வனப்பகுதி வழியாக 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வனப்பகுதியையொட்டி வசிக்கும் ஒரு வீட்டுக்கு சென்ற அவர், நடந்த சம்பவங்களை கூறினார். பின்னர் வீட்டில் இருந்தவர்கள் யோகா ஆசிரியை அணிய ஆடை கொடுத்தனர். இதையடுத்து அந்த கிராம மக்கள் உதவியுடன் யோகா ஆசிரியை, சிட்லகட்டா போலீசில் புகாா் அளித்தார்.
அதன்பேரில் போலீசார், கொலை முயற்சி, கடத்தல், தாக்குதல், கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த சதீஷ் ரெட்டி, அவரது நண்பர்கள் ரமணா, ரவி, சந்திரன் ஆகிேயாைரயும், அவர்களை கூலிப்படையாக ஏவிய பிந்துஸ்ரீயையும் போலீசார் கைது செய்தனர்.
ஹாலிவுட் இயக்குநர் குவெண்டின் டேரண்டினோ இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான படம் 'கில் பில்'(Kill Bill). இந்த படத்தில் கதாநாயகியை சிலர் உயிருடன் மண்ணுக்குள் புதைப்பது போலவும், அவர் தனக்கு தெரிந்த தற்காப்புக் கலையை பயன்படுத்தி மண்ணுக்குள் இருந்து வெளியேறி உயிர்தப்புவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் அதுபோன்ற சம்பவம் நிஜத்தில் நடந்துள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
- கஞ்சா செடியை வளர்த்த சிக்கிமை சேர்ந்த சாகர் - ஊர்மிளா தம்பதி கைது
- தான் வளர்த்த செடிகளின் புகைப்படத்தை ஊர்மிளா பேஸ்புக்கில் பதிவிட்டதால் போலீசில் சிக்கினார்
கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் கஞ்சா செடியை வளர்த்த சாகர் - ஊர்மிளா தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த சாகர் குருங் (37) மற்றும் அவரது மனைவி ஊர்மிளா குமாரி (38) ஆகியோர் பெங்களூரு நகரில் பாஸ்ட்புட் கடையை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஊர்மிளா குமாரி, தனது பேஸ்புக் பக்கத்தில் அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார். அவ்வகையில் தனது வீட்டின் பால்கனியில் உள்ள பூந்தொட்டிகளில் வளரும் விதவிதமான செடிகளின் வீடியோ மற்றும் படங்களை பேஸ்புக்கில் அவர் வெளியிட்டார்.
ஊர்மிளா பதிவிட்ட 17 பூந்தொட்டிகளில் 2 தொட்டிகளில் கஞ்சா பயிரிட்டிருந்தார். ஊர்மிளாவை பேஸ்புக்கில் பின்தொடர்பவர்கள் அப்புகைப்படத்தில் கஞ்சா செடி இருப்பதை கண்டறிந்து போலீசில் புகாரளித்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார் சாகர் மற்றும் ஊர்மிளாவை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 54 கிராம் எடையுள்ள கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், "அதிக பணம் சம்பாதிப்பதற்காக கஞ்சா பயிரிட்டோம் என்று தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் இந்த தம்பதியை போலீசார் ஜாமினில் விடுவித்தனர்.
- தாடியை ஷேவ் செய்யாத மாணவர்களுக்கு அப்சென்ட் போடுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
- இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியது.
கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரசு செவிலியர் கல்லூரியில் படிக்கும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் தங்கள் தாடியை ஷேவ் செய்ய வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் வற்புத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
நர்சிங் கல்லூரியில் படிக்கும் காஷ்மீரி மாணவர்கள் வகுப்புகள் மற்றும் மருத்துவ பணிகளில் பங்கேற்ப தங்களது தாடியை ஷேவ் செய்ய வேண்டும் அல்லது மிக குறைவான அளவு தாடி இருக்குமாறு ட்ரிம் செய்ய வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தாடியை ஷேவ் செய்யாத மாணவர்களுக்கு மருத்துவ அமர்வுகளின் போது அப்சென்ட் போடுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில், "கல்லூரியின் வழிகாட்டுதல்கள் மாணவர்களின் கலாச்சார மற்றும் மத உரிமைகளை மீறுவதாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, கல்லூரி நிர்வாகம் காஷ்மீரி மாணவர்களுடன் கலந்து பேசி அவர்கள் தாடி வைத்துக்கொள்ள எந்த தடையும் இல்லை என்று தெரிவித்து இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது.
- அவசர உதவி எண் மூலம் போலீசார் வேகமாக பதிலளித்து 20 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
- பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்தால் நாம் எதைத்தான் நம்பி பயணிப்பது... எவ்வளவு முன்எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல இரவு 10.30 மணிக்கு பெண் ஒருவர் ஓலாவில் காரை புக் செய்துவிட்டு காத்து கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் ஒருவர் அவரை அணுகி காரில் ஏறுமாறு தெரிவித்துள்ளார். அவரும் காரில் ஏறிய பிறகு டிரைவர் ஓடிபி-யை கேட்கவில்லை. மேலும் அந்த நபர் ஓலா ஆப்பை பயன்படுத்தவில்லை என்பதை அறிந்தார்.
இதனிடையே தனது ஆப்ஸ் வேலை செய்யவில்லை என்றும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான லோகேஷனை தருமாறு கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து லோகேஷனை ஷேர் செய்த பெண்ணிடம் கூடுதலாக பணம் கேட்டுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அப்பெண் தன்னை வேறு ஒரு காரில் ஏற்றிவிடமாறும் இல்லையென்றால் விமான நிலைய பிக்அப் ஸ்டாண்டில் திரும்ப விடும் படி கேட்டுள்ளார். இருப்பினும் அப்பெண் சொல்வதை கேட்க மறுத்த டிரைவர், காரை பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு எடுத்து சென்று நிறுத்தி ரூ.500 தரும்படி கேட்டுள்ளார்.
செய்வதறியாது தவித்த அப்பெண் அமைதியாக இருந்துள்ளார். பிறகு தேசிய அவசரகால உதவி எண்ணான 112-ஐ அழைத்துள்ளார். மேலும் விவரங்கள் அனைத்தையும் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவித்தார். அவசர உதவி எண் மூலம் போலீசார் வேகமாக பதிலளித்து 20 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அதன் பிறகு, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பெண்ணிடம் பணம் பறிக்க முயன்ற கார் ஓட்டுனர் பசவராஜ் என்று அடையாளம் காணப்பட்டது. அதன்பிறகு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அப்பெண் எக்ஸ் தளத்தில் பதிவிட, இதனை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர் ''இது மிகவும் பயமாக இருக்கிறது, உங்கள் புகார் கடிதத்தைப் படிக்கும் போது எனக்கு மயக்கமே வருகிறது'' என்றார்.
மற்றொருவர், ''ஓம் நீங்கள் இப்போது நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன், சில மாதங்களுக்கு முன்பு எனக்கும் இது நடந்தது. நான் வண்டியில் ஏறியதை ஆப்ஸில் காட்டாததால் வெளியே வந்தேன் என்று கூறினார்.
இந்த சம்பவம் விமான நிலைய பாதுகாப்பு மற்றும் பயணிகளின் பாதுகாப்பு நெறிமுறைகள் பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளது.






