என் மலர்tooltip icon

    இந்தியா

    • புனேவின் ஹெத் மலைப்பகுதியில் கொஹிடி கிராமத்தில் கேஷ்திர மகாதேவ் குண்டேஷ்வர் என்ற சிவன் கோவில் உள்ளது.
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில், கோயிலுக்குச் சென்ற பக்தர்களின் வாகனம் மலைப் பகுதியில் இருந்து கவிழ்ந்ததில் 8 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், 29 பேர் படுகாயமடைந்தனர்.

    புனேவின் ஹெத் மலைப்பகுதியில் கொஹிடி கிராமத்தில் கேஷ்திர மகாதேவ் குண்டேஷ்வர் என்ற சிவன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு நேற்று மாலை புனேவின் பபல்வாடி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 40 பக்தர்கள் லாரியில் சென்று கொண்டிருந்தனர்.

    மலைப்பாங்கான பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் லாரியில் இருந்த பயணிகளில் 8 பெண் பக்தர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 29 பேர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து விரைந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதேபோல், மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்தார். 

    • திருச்சி டிஐஜி வருண்குமார் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
    • ஜெயஸ்ரீ ஐபிஎஸ் ஆகியோரும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்ட்டுள்ளனர்.

    இதுகுறித்த உத்தரவை தமிழக கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டார். 

    அதன்படி, திருச்சி டிஐஜி வருண்குமார் சென்னை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளார். 

    டான்ஜெட்கோ தலைமை விழிப்புணர்வு அதிகாரியாக இருந்த டிஜிபி பிரமோத்குமார், சென்னை ஊர்க்காவல்படை டிஜிபி ஆக நியமிக்கப்ட்டுள்ளார். 

    சென்னை ஊர்க்காவல் படை ஐஜி ஜெயஸ்ரீ, மாநில குற்ற ஆவண காப்பக ஐஜி ஆக நியமிக்கப்ட்டுள்ளார். 

    சென்னை குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி  ஆயுஷ்மான் திவாரி, டான்ஜெட்கோ லஞ்ச ஒழிப்பு துறை தலைமை விழிப்புணர்வு அதிகாரி ( ஏடிஜிபி) ஆக  நியமிக்கப்பட்டுள்ளார். 

      

    • தேர்தல் ஆணையம் நோக்கிச் சென்றவ எம்.பி.க்கள் இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு தடுக்கப்பட்டனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தியை போலீசார் கைது செய்தனர்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகளை வெளியிட்டு, அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டார்.

    பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து இதுபோன்ற பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன என தெரிவித்தார். இதையடுத்து, டெல்லியில் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் 2 முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    இந்நிலையில், வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி நடத்தினர். பாராளுமன்றம் to தேர்தல் ஆணையம்: பேரணி நடத்தி கைதான ராகுல் காந்தி விடுதலை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர்.

    பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கிச் சென்றவர்களை இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சஞ்சய் ராவத் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாலை விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் பின்னர் நாடாளுமன்றத்திற்கும் சென்றனர்.

    முன்னதாக கைது செய்யப்பட்டபோது பேருந்தில் இருந்தபடி செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "யதார்த்தம் என்னவென்றால், அவர்களால் பேச முடியாது.

    உண்மை நாட்டின் முன்பு உள்ளது. இந்தப் போராட்டம் அரசியலுக்காக அல்ல, அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கானது. ஒரு நபர் ஒரு ஓட்டுக்கான போராட்டம் இது. எங்களுக்குத் தேவை முழுமையான சரியான வாக்காளர் பட்டியல்" என்று தெரிவித்தார். 

    இதற்கிடையே குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க கோரி கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 

    • காவல்துறையின் 42 கேள்விகளுக்கு விரிவான பதில் அளித்தது த.வெ.க.
    • வருகிற 21ஆம் தேதி மதுரையில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.

    விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற நிலையில், இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

    முதலில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த மாநாடு, விநாயகர் சதுர்த்தி விழா காரணமாக ஆகஸ்ட் 21-க்கு மாற்றியமைக்கப்பட்டது.

    மாநாட்டிற்கான தேதி மாற்றப்பட்ட பின்னர், த.வெ.க.வின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் அக்கட்சியினர் திருமங்கலம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனுசுல் நாகரிடம் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி மனு அளித்தனர்.

    அப்போது, மாநாடு நடைபெறும் இடம், எதிர்பார்க்கப்படும் கூட்டத்தின் அளவு, வாகன நிறுத்துமிடம், உணவு மற்றும் குடிநீர் வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்டத்தில் பங்கேற்கும் முக்கிய தலைவர்கள் குறித்த 42 கேள்விகளை காவல்துறை முன்வைத்தது. இந்தக் கேள்விகளுக்கு த.வெ.க. தரப்பில் விரிவான பதில்கள் அளிக்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து, மதுரையில் நடைபெற உள்ள த.வெ.க.வின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    • அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிப்பதற்கான அற்புதமான வாய்ப்பு கிராமசபைக் கூட்டங்கள் தான்.
    • அத்தகையக் கூட்டங்களை கடந்த பல ஆண்டுகளாகவே நாம் சிறப்பாக பயன்படுத்தி வருகிறோம்.

    அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் விடுதலை நாளையொட்டி மாநிலம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் நாள் காலை 11.00 மணிக்கு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கிராமங்கள் அனைத்தும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளாகத் திகழ வேண்டும் என்ற மகாத்மா காந்தியடிகளின் கனவை நனவாக்குவதற்கான மகத்தான ஆயுதம் தான் கிராம சபைக் கூட்டங்கள் ஆகும். நமது உரிமைகளை நிலைநாட்டுவதற்காக அவற்றை நாம் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிப்பதற்கான அற்புதமான வாய்ப்பு கிராமசபைக் கூட்டங்கள் தான். அத்தகையக் கூட்டங்களை கடந்த பல ஆண்டுகளாகவே நாம் சிறப்பாக பயன்படுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆயிரக்கணக்கான கிராமசபைக் கூட்டங்களில் நாம் வெற்றிகரமாக தீர்மானங்களை நிறைவேற்றினோம்.

    இந்த ஆக்கப்பூர்வமான பணி நடப்பாண்டிலும் தொடர வேண்டும். அதன்படி வரும் 15-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கிராமசபைக் கூட்டங்களில், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்கொண்டு சமூகநீதியைப் பாதுகாக்கவும், தமிழகத்தில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு இணையாகவும், சமூகப் பின் தங்கிய நிலையின் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு வழங்கவும் வசதியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க.வினர் உள்ளிட்ட பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று 75 ஆண்டுகளாக முழங்கி வரும் திமுகவுக்கு உண்மையாகவே ஜனநாயகத்தில் அக்கறை இருந்தால், கிராம சபைகளுக்கு உள்ள உரிமைகளை மதித்தும், அவற்றுக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதையைக் கொடுக்கும் வகையிலும் விடுதலை நாள் கிராமசபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அங்கீகரித்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • கிளாம்பாக்கத்தில் இருந்து வியாழக்கிழமை 570 பேருந்துகள் இயக்கம்.
    • புதன் மற்றும் வெள்ளிக்கிழமை தலா 375 பேருந்துகள் இயக்கம்.

    அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    15/08/2025 அன்று சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 13/08/2025 அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 13/08/2025 (புதன்கிழமை) அன்று 375 பேருந்துகளும் 14/08/2025 (வியாழக்கிழமை) அன்று 570 பேருந்துகளும், 15/08/2025 (வெள்ளிக் கிழமை) மற்றும் 16/08/2025 (சனிக்கிழமை) 375 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 14/08/2025 வியாழக்கிழமை அன்று 100 பேருந்துகளும் மற்றும் 15/08/2025 வெள்ளிக் கிழமை அன்று 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 14/08/2025 மற்றும் 15/08/2025 ஆகிய இரு நாட்களுக்கு 24 சிறப்பு பேருத்துகளும் இயக்கப்படுகிறது.

    மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருத்தும் 17/08/2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 715 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த வார இறுதியில் புதன் கிழமை அன்று 8,145 பயணிகளும், வியாழக்கிழமை அன்று 26,534 பயணிகளும், வெள்ளிக்கிழமை அன்று 5,004 பயணிகளும், சனிக்கிழமை 3,678 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 23,266 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு முன்பாகவே தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மேயர் பிரியாவிடம் இருந்து தகவல் மட்டும் தான் வருது தீர்வு வரவில்லை.
    • பணி நிரந்தரம் செய்வீர்கள் என்று நீங்க கொடுத்த வாக்குறுதியைதான் அவர்கள் கேட்கிறார்கள்.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 11 -வது நாளை எட்டி உள்ளது.

    இந்த நிலையில், சென்னையில் போராட்டம் நடத்தி வரும் மாநகராட்சிப் பணியாளர்களை நடிகை சனம் ஷெட்டி நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:-

    கொரோனா நாட்களில் நாம் உயிர் பயத்தில் இருந்தோம். அந்த நேரத்தில் தன்னுடைய குடும்பத்தை விட்டு விட்டு நமக்காக வந்தவங்க. ஊர் ஊரா.. தெரு தெருவா.. சுத்தம் செய்தவங்க. என்னுடனைய நண்பர்கள்.

    மேயர் பிரியா வாராங்க செய்தி சொல்லிவிட்டு போராங்க. அவரிடம் இருந்து தகவல் மட்டும்தான் வருது தீர்வு வரவில்லை. எத்தனை நாள் தான் இவர்கள் இப்படி இருக்க வேண்டும். அவர்களது வாழ்வாதாரத்தை பறித்து விட்டீர்கள்.

    பணி நிரந்தரம் செய்வீர்கள் என்று நீங்க கொடுத்த வாக்குறுதியைதான் அவங்க கேட்கிறார்கள். உங்க வாக்குறுதியை நீங்க காப்பற்றவில்லை என்றால், இனிமேல் முதலமைச்சரிடம் எதை எதிர்பார்க்க முடியும்.

    மக்களுக்காக தான் அரசாங்கம். மக்களுக்காக ஒரு பாலிசி மாற்ற முடியவில்லை என்றால் அரசாங்கம் இருந்து என்ன இல்லாமல் இருந்தும் என்ன. உங்க வாக்குறுதியை தான் கேக்குறாங்க. இனிமேல் ஓட்டு கேட்டு எப்படி வருவீங்க.

    என ஆவேசத்துடன் கூறினார்.

    • தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பில்தான் மாநகரம் சுத்தமாகிறது.
    • தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கத் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா போன்ற பெருந்துயர்க் காலங்களிலும், புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களிலும் மக்கள் நலனே முக்கியம் என்று கருதி, தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றியதில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு அளப்பரியது. அப்படி அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றிக் கடனாக, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்க வைத்ததே வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் சாதனை.

    தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கத் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் அறப் போராட்டத்தைத் தமிழக வெற்றிக் கழகம் முழுமையாக ஆதரிக்கிறது.

    தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை நான் நேரில் சென்று சந்திக்கலாம் என்றிருந்த நேரத்தில் தான் அவர்களாகவே என்னைச் சந்திக்க விரும்புவதை அறிந்தேன். மேலும் நான் நேரில் சென்று அவர்களைச் சந்தித்தால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் எனக் கருதிய தூய்மைப் பணியாளர்கள், தமிழக வெற்றிக் கழகத் தலைமை அலுவலகத்திற்கே வந்து என்னைச் சந்தித்தனர்.

    அப்போது தங்கள் நிலை குறித்து அவர்கள் தெரிவித்த கருத்துகள், கல் நெஞ்சையும் கரைய வைப்பவை. கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமல், மனசாட்சியும் மக்களாட்சி மாண்பும் அறவே அற்ற ஒரு அரசாக இந்த வெற்று விளம்பர மாடல் அரசு இருந்து வருவதைக் கண்கூடாகக் காண முடிகிறது.

    பலர் செய்யத் தயங்கக்கூடிய வேலைகளைத்தான் இவர்கள் சேவை மனப்பான்மையுடன் அரவணைத்துச் செய்துகொண்டு, தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பில்தான் மாநகரம் சுத்தமாகிறது. நோய்த்தொற்றுகள் தடுக்கப்படுகின்றன. அவ்வாறு செயல்படும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு, கொடுத்த வாக்குறுதியின்படி செவி சாய்ப்பதே அரசின் கடமை.

    எதிர்க்கட்சியாக இருந்தபோது தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்த வெற்று விளம்பர மாடல் திமுக, தற்போது வழக்கம் போல வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கி, நடுத்தெருவில் போராடும் நிலைக்குத் தள்ளிவிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    பல்லாண்டுக் காலமாகச் சென்னை மாநகரைத் தூய்மைப்படுத்தும் பணியில் உள்ள எளிய மக்களான தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக கடந்த 19.01.2021 அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் அவர்கள் எழுதிய கடிதத்தின்படியும், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 153இன் படியும், அவர்களைப் பணி நிரந்தரம் செய்து, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

    தங்கள் உடல்நலம் குறித்துக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வரும் எளியவர்களான தூய்மைப் பணியாளர்களின் அறவழிப் போராட்டத்திற்கும் சட்டப் போராட்டத்திற்கும் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகத் துணை நிற்கும்.

    • இந்தோ- இஸ்ரோ கொய்மலர் சாகுபடி பயிற்சி மையம் உருவாக்கிக் கொடுத்தோம்.
    • மலர்கள் விற்பதற்கு சர்வதேச ஏல மையம் ஒன்றை 20 கோடியில் அமைத்துக்கொடுத்தோம்.

    மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணத்தின் மூன்றாவது கட்டத்தைத் தொடங்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வேப்பனஹள்ளி, தளி மற்றும் ஓசூர் சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார்.

    இன்று மாலை வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பெருமளவு கூடியிருந்த மக்களிடம் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை பின் வருமாறு:-

    ராயக்கோட்டை பகுதி ஸ்தம்பிக்கும் அளவுக்கு மக்கள் வெள்ளத்தைப் பார்க்கிறேன். உங்கள் மகிழ்ச்சியே தேர்தல் வெற்றிக்கான திருப்புமுனை. விவசாயிகள் நிறைந்த இந்த பகுதிக்கு நிறைய திட்டங்கள் கொடுத்தோம். இங்கு மலர்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. பழங்கள், காய்கறிகளும் அதிகம் உற்பத்தியாகிறது.

    இந்த தொழில்கள் சிறப்பாக நடைபெறுவதற்காக இந்தோ- இஸ்ரோ கொய்மலர் சாகுபடி பயிற்சி மையம் உருவாக்கிக் கொடுத்தோம். மலர்கள் விற்பதற்கு சர்வதேச ஏல மையம் ஒன்றை 20 கோடியில் அமைத்துக்கொடுத்தோம். பெங்களூரு சென்று விற்கும் அவல நிலையை மாற்றி இங்கேயே நல்ல விலை கிடைப்பதற்கு இந்த ஏற்பாடு செய்தோம். ஆனால், அந்த மையம் அப்படியே பூட்டிக்கிடக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு விவசாயிகளைப் பழி வாங்குகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் சர்வதேச ஏல மையம் திறக்கப்படும்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழம் கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டது. இதற்கு அரசாங்கம் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அரசு அதை காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தரவேண்டும், ஒரு கிலோ மாம்பழம் 13 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மா விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகப் போராட்டம் நடத்தினோம். அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் மா விவசாயிகளுக்கு விடிவுகாலம் பிறக்கும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • வழித்தடம் 4-ன் நீட்டிப்பு- கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் உயர்நீதிமன்றம் மெட்ரோ வரை.
    • தாம்பரம் முதல் வேளச்சேரி வரை.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    1. வழித்தடம் 4-ன் நீட்டிப்பு- கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் உயர்நீதிமன்றம் மெட்ரோ வரை.

    இந்த நீட்டிப்பு, மெரினா கடற்கரை மற்றும் தலைமைச் செயலகத்திற்கான மெட்ரோ இணைப்பை மேம்படுத்துவதற்கு தோராயமாக சுமார் 7 கிலோ மீட்டர் நீளத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடம், தினசரி பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளும் எளிதில் அணுகுவதற்கும், நகரப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும் உதவும்.

    2. தாம்பரம் முதல் வேளச்சேரி வரை

    சுமார் 21 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடம் தாம்பரம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய புறநகர்ப் பகுதிகளை சென்னை மெட்ரோ ரெயில் வழித்தடம்-1-இல் உள்ள கிண்டி மெட்ரோ நிலையத்துடன் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இந்த வழித்தடம் தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி மற்றும் கிண்டி பகுதிகளில் பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்கும் வசதியுடன் உருவாக்கப்படும்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மேற்கண்ட இரண்டு பணிகளுக்கும் விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்கான ஆலோசனை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை M/s Systra MVA Consulting India Pvt நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

    கலங்கரை விளக்கம் மெட்ரோ முதல் உயர்நீதிமன்றம் மெட்ரோ வரை வழித்தடம் 4-ன் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிபதற்கு ரூ. 38,20,000 மற்றும் தாம்பரம் முதல் வேளச்சேரி வரை ரூ.96,19,000/- மதிப்பாகும். இந்த விரிவான திட்ட அறிக்கைகள் சமர்பிப்பதற்கான காலம் 120 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் மற்றும் Systra MVA Consulting India Pvt நிறுவனத்தின் உயர் துணைத் தலைவர் பர்வீன் குமார் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    இந்த திட்ட அறிக்கைகள் வழித்தட பாதை அமையும் இடங்கள், பயணிகளின் எண்ணிக்கை, பல்வேறு போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் விரிவாக மதிப்பீடு செய்யப்படும். இந்த அறிக்கை தகவலறிந்த முடிவெடுப்பதற்கு மற்றும் எதிர்கால திட்ட செயலாக்கத்திற்கும் அடித்தளமாக அமையும்.

    சென்னையின் வளர்ந்து வரும் போக்குவரத்து தேவைகள் மற்றும் நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்கு உகந்த, விரிவான மற்றும் எதிர்கால நோக்குடன் பொது போக்குவரத்து பயன்பாட்டை உருவாக்குவதில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் முனைப்புடன் செயல்படுகிறது.

    • இந்திய பிரதமர் மோடி உக்ரைன் அதிபருடன் டெலிபோன் மூலம் பேசியுள்ளார்.
    • ஜெலன்ஸ்கியுடன் பேசியது மகிழ்ச்சி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இந்திய பிரதமரான மோடி, உக்ரைன் அதிபரான ஜெலன்ஸ்கியுடன் இன்று டெலிபோன் மூலம் பேசியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி "உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசுவதிலும், சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அவரது பார்வைகளைக் கேட்பதிலும் மகிழ்ச்சி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    உக்ரைன்- ரஷியா இடையில் கடந்த மூன்று வருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், ரஷியா போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்கவில்லை.

    வருகிற வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்பை ரஷிய அதிபர் புதின் நேரடியாக சந்திக்கிறார். அப்போது போர் நிறுத்தம் குறித்து முடிவு எடுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    • கடந்த 24 மணி நேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
    • பெரும்பாலான ஆறுகள் நிரம்பி வழிகின்றன.

    பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இந்த வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இடைவிடாத கனமழை காரணமாக போஜ்பூர், பாட்னா, பாகல்பூர், வைஷாலி, லகிசாரை, சரன், முங்கர், ககாரியா, பெகுசாரை மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

    இங்குள்ள ஆறுகள் நிரம்பி வழிகின்றன. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதன்காரணமாக 16 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளில் என்டிஆர்எஃப் மற்றும் எஸ்டிஆர்எஃப்-ஐ சேர்ந்த 32 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    ×