என் மலர்
இந்தியா

வாக்கு திருட்டை கண்டித்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி நடத்தி கைதான ராகுல் காந்தி விடுதலை
- தேர்தல் ஆணையம் நோக்கிச் சென்றவ எம்.பி.க்கள் இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு தடுக்கப்பட்டனர்.
- போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தியை போலீசார் கைது செய்தனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகளை வெளியிட்டு, அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டார்.
பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து இதுபோன்ற பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன என தெரிவித்தார். இதையடுத்து, டெல்லியில் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் 2 முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி நடத்தினர். பாராளுமன்றம் to தேர்தல் ஆணையம்: பேரணி நடத்தி கைதான ராகுல் காந்தி விடுதலை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர்.
பாராளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கிச் சென்றவர்களை இரும்பு தடுப்பு வேலிகள் கொண்டு போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சஞ்சய் ராவத் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாலை விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் பின்னர் நாடாளுமன்றத்திற்கும் சென்றனர்.
முன்னதாக கைது செய்யப்பட்டபோது பேருந்தில் இருந்தபடி செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "யதார்த்தம் என்னவென்றால், அவர்களால் பேச முடியாது.
உண்மை நாட்டின் முன்பு உள்ளது. இந்தப் போராட்டம் அரசியலுக்காக அல்ல, அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கானது. ஒரு நபர் ஒரு ஓட்டுக்கான போராட்டம் இது. எங்களுக்குத் தேவை முழுமையான சரியான வாக்காளர் பட்டியல்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க கோரி கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.






