என் மலர்
இந்தியா
- பாடத்தில் இல்லாத கேள்வி கேட்கப்பட்டால் இமெயிலில் புகார் அளிக்கலாம்.
- வினா எண்ணுடன் தவறை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில் தவறு இருந்தால் இமெயிலில் புகார் அளிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
வினாத்தாளில் தவறு, பாடத்தில் இல்லாத கேள்வி கேட்கப்பட்டால் இமெயிலில் புகார் அளிக்கலாம் என தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.
அதன்படி, dgequestionpaperqueries@gmail.com என்ற இமெயிலில் மாணவர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் தவறு குறித்து புகாரளிக்கும்போது வினா எண்ணுடன் தவறை தெளிவாக குறிப்பிட வேண்டும் எனவும் தேர்வுகள் இயக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழக அரசியல் மற்றும் சமூக நீதி வரலாற்றில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
- அரசியல் நேர்மைக்கும், பொதுநலத்திற்குமான அர்ப்பணிப்புக்கும் அவர் ஒரு எடுத்துக்காட்டு.
கன்னியாகுமரி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்கள் இயக்கங்களின் முன்னோடி, எளிமையின் உருவகமாக வாழ்ந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். தமிழக அரசியல் மற்றும் சமூக நீதி வரலாற்றில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
வாழ்நாள் முழுவதும் விவசாயிகள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக ஓய்வின்றி போராடிய அவர், அதிகாரத்தில் அல்ல, மக்களின் இதயங்களில் தங்கிய தலைவர். அரசியல் என்பது அதிகாரம் மட்டுமல்ல, அது மனிதநேயப் பொறுப்பு என்பதை தனது வாழ்வால் நிரூபித்தவர்.
எளிமையான வாழ்க்கை, தெளிவான கொள்கை, உறுதியான நிலைப்பாடு, இவை அனைத்தும் நல்லகண்ணு அவர்களின் அடையாளங்கள். அரசியல் நேர்மைக்கும், பொதுநலத்திற்குமான அர்ப்பணிப்புக்கும் அவர் ஒரு எடுத்துக்காட்டு.
அவரது மறைவு குடும்பத்தினருக்கும், கட்சித் தோழர்களுக்கும் மட்டுமல்ல, சமூகநீதியை நம்பும் ஒவ்வொருவருக்கும் பேரிழப்பு.
அவரது சேவைகளை நினைவு கூர்ந்து, அவரது இலட்சியங்களை முன்னெடுத்து செல்லுவது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். அவரது சேவைகளுக்கு முன் சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 700 கனஅடியாக வந்தது.
- சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 700 கனஅடியாக வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.
மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குறைந்த அளவே தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை யை தமிழக அரசு வழங்குகிறது.
- அத்தியாவாசிய பொருளின் விலை பெரும் அளவில் உயர்ந்துள்ளது.
அரூர்:
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த எச்.தொட்டம்பட்டியில் பா.ஜ.க. தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் பேசியதாவது:-
தமிழகத்தில் கடந்த 2021-இல் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மாநிலம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் புழக்கம் அதிகரித்துள்ளன. இளம்வயது சிறார்கள் கூட போதைப்பொருள்களை பயன்படுத்தும் சூழல் உள்ளது. மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை யை தமிழக அரசு வழங்குகிறது.
ஆனால், அத்தியாவாசிய பொருளின் விலை பெரும் அளவில் உயர்ந்துள்ளது. அதாவது ஒரு குடும்பத்திற்கு ரூ. 50 ஆயிரம் அளவுக்கு கூடுதல் செலவு அதிகரித்துள்ளது.
எனவே, தமிழகத்தில் 2026-இல் நடைபெறும் சட்டபேரவைத் தேர்தலில் ஏழை, எளியோர் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றார்.
- வரும் மார்ச் 2-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும்.
- நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும்போது வழக்கம்போல எழும்பூரில் இருந்து புறப்படும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூரில் மின்சார ரெயில் நடைமேடை 10, 11-ல் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணி காரணமாக கூட்ட நெரிசலான நேரங்களில் (பீக் அவர்ஸ்) மின்சார ரெயில்களை சீராக இயக்க எழும்பூரில் இருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சிலவற்றில் மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.12661), வரும் மார்ச் 2-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறபட்டு செங்கோட்டை செல்லும். பொதிகை எக்ஸ்பிரஸ் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு வழக்கம்போல எழும்பூர் ரெயில் நிலையம் வந்தடையும்.
* நெல்லையில் புறப்பட்டு எழும்பூர் வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் (12632), வரும் மார்ச் 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையில், தாம்பரம் வரை இயக்கப்படும். இந்த ரெயில் நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு காலை 6.25 மணிக்கு வந்தடையும். நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும்போது வழக்கம்போல எழும்பூரில் இருந்து புறப்படும்.
* சென்னை எழும்பூரில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (22675), வரும் 28-ந்தேதி முதல் மார்ச் 15-ந்தேதி வரையில் எழும்பூரில் இருந்து காலை 10.15 மணிக்கு (2 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக) புறப்பட்டு திருச்சி செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கும் பிரதமர் செல்கிறார்.
- டெல்லியில் உள்ள பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை குழு சென்னை விமான நிலையம் வந்தனர்.
பிரதமர் நரேந்திரமோடி வருகிற 28-ந்தேதியன்றும், மார்ச் 1-ந்தேதியன்றும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். 28-ந்தேதியன்று இரவு தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர், அன்றைய தினம் இரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். மறுநாள் மார்ச் 1-ந்தேதியன்று ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் இருந்து பிரதமர் புதுச்சேரி செல்கிறார். புதுச்சேரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு மதுரையில் நடக்கும் பொதுகூட்டத்திலும் பிரதமர் பங்கேற்கிறார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கும் பிரதமர் செல்கிறார். பின்னர் மார்ச் 1-ந்தேதியன்று இரவு பிரதமர் தமிழக சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி செல்கிறார்.
பிரதமர் சென்னை வருகையையொட்டி கிண்டி, மீனம்பாக்கம் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் டிரோன்கள் பறப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
விமான நிலையத்தில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு பிரதமர் செல்லும் வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கிண்டி ஆளுநர் மாளிகையும் பலத்த பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்படுகிறது.
டெல்லியில் உள்ள பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை குழு சென்னை விமான நிலையம் வந்தனர். பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
- தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- தோழர் நல்லகண்ணு உடலுக்கு நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்த பொதுப்பார்வையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை தி.நகர் சிபிஐ அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தோழர் நல்லகண்ணு உடலுக்கு நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தோழர் நல்லகண்ணு உடலுக்கு நடிகர் சூர்யா மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
- தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 23-ந்தேதி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை சந்தித்தார்.
- தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி என்பது இன்னும் மதில் மேல் பூனை போன்று தான் உள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்படைந்து வருகிறது. ஆளும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையே இன்னும் நடைபெறவில்லை. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கான அழைப்பு இன்னும் தி.மு.க. சார்பில் விடுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சி அந்த அழைப்புக்காக காத்திருக்கிறது.
இருப்பினும், முன்னதாக கடந்த 22-ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த காங்கிரஸ் தலைமையின் கடிதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி உள்ளார். இந்த கடிதத்தில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 41 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 2 ராஜ்யசபா சீட்டுகள் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை வழங்குவதுடன், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 23-ந்தேதி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை சந்தித்தார்.
இந்தநிலையில், கிரிஷ் சோடங்கர் பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் மீண்டும். "ஆட்சி அதிகாரத்தை விரும்பாத கட்சி உண்டா? நாங்கள் என்ன அறக்கட்டளையா நடத்துகிறோம்." என்று தெரிவித்து உள்ளார்.
மேலும், தங்களுக்கு 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வாக்குகள் இருக்கிறது. 22 ஆயிரம் கிராம கமிட்டிகள் அமைத்துள்ளோம். 63 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்களை நியமித்துள்ளோம்.
எங்கள் பலத்தை த.வெ.க.வினர் உணர்ந்துள்ளதால் எங்களுக்கு திறந்த வெளியில் அழைப்பு விடுத்துள்ளனர் என்றெல்லாம் தெரிவித்து உள்ளார்.
எனவே தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி என்பது இன்னும் மதில் மேல் பூனை போன்று தான் உள்ளது. அதாவது ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில் கிரிஷ் சோடங்கர் உள்ளாட்சி தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எனினும் கடந்த ஜனவரி மாதமே ராகுல் காந்தி சென்னை வருவதாக இருந்த நிலையில் கூட்டணி உறுதிச் செய்யப்படாததால் அந்த திட்டமிடல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாத நிலையில் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வருகிற மார்ச் 5-ந்தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்கால் பகுதியில் நடைபெற உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கிராமக் கமிட்டி நிர்வாகிகள் கூட் டத்தில் பங்கேற்க இருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் உறுதியாக கூறப்படுகிறது.
- வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 9-ந் தேதி கடைசி நாளாகும்.
- தேவைப்பட்டால் மார்ச் 16-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்.பி. பதவி இடங்கள் வரும் ஏப்ரல் மாதம் காலியாகின்றன.
தமிழகத்தில் தம்பிதுரை, ஜி.கே. வாசன், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி. செல்வராசு ஆகிய 6 பேரின் எம்.பி. பதவிக்காலம் ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த 37 இடங்களை நிரப்புவதற்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இன்று முதல் மார்ச் 5ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 9-ந் தேதி கடைசி நாளாகும். தேவைப்பட்டால் மார்ச் 16-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் தி.மு.க. சார்பில் 4 எம்.பி.க்களையும், அ.தி.மு.க. சார்பில் 2 எம்.பிக்களையும் போட்டியின்றி தேர்வு செய்ய முடியும்.
இதற்கிடையே, அரசியல் கட்சிகள் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஓரிரு நாட்களில் வேட்பாளர்களை அறிவிக்க வாய்ப்புள்ளது.
- தலைமைத் தேர்தல் ஆணையர் சென்னையில் இன்றும், நாளையும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
- அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர் கலந்துரையாடுகிறார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சென்னையில் இன்றும், நாளையும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இதில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அரசு உயரதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர் கலந்துரையாடுகின்றனர்.
தலைமைத் தேர்தல் ஆணையரிடம் தேர்தலை வெளிப்படையாகவும், அமைதியாகவும் நடத்த அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உலகக் கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா இதுவரை சோபிக்கவில்லை.
- பவுலிங்கில் வருண் சக்ரவர்த்தி இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
சென்னை:
டி20 உலகக் கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜிம்பாப்வே அணியுடன் மோகிறது.
லீக் சுற்றில் 3 போட்டியிலும் வென்ற இந்தியா சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவிடம் 76 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டுமெனில் அடுத்த 2 போட்டிகளில் கட்டாய வெற்றி தேவை.
பேட்டிங்கில் அபிஷேக் சர்மா இதுவரை சோபிக்கவில்லை. கேப்டன் சூர்யகுமார் 180, இஷான் கிஷன் 176, ஷிவம் துபே 158 ரன் அடித்துள்ளனர்.
பவுலிங்கில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், சுழலில் வருண் சக்ரவர்த்தி இடத்தை தக்கவைத்துக் கொள்வர். கடந்த போட்டியில் அக்சர் படேலுக்கு வாய்ப்பு அளிக்காதது தான் தோல்விக்கு காரணம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளதால், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அவர் களம் இறங்கலாம்.
ஜிம்பாப்வே லீக் சுற்றில் பி பிரிவில் வலுவான ஆஸ்திரேலியா, இலங்கையை வீழ்த்தி முதலிடம் பிடித்து கம்பீரமாக சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது.
சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீசிடம் 107 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததால் இன்று கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.
பேட்டிங்கில் பிரையன் பென்னட் 180 ரன் அடித்து முதுகெலும்பாக உள்ளார். கேப்டன் சிக்கந்தர் ராசா, மருமணி, ரியான் பர்ல் ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்ப்பர்.
பவுலிங்கில் முசரபானி 4 போட்டியில் 11 விக்கெட் எடுத்து 2வது இடத்தில் உள்ளார். பிராட் எவன்ஸ், ரிச்சர்ட் ஙகரவா, சுழலில் கிரேம் க்ரீமர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கலாம்.
இன்று யார் தோற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும் என்ற நிலையில் களம் இறங்குகிறது. இந்திய வீரர்கள் நேற்று சேப்பாக்கத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்தியா-ஜிம்பாப்வே அணியுடனான போட்டிக்கு முன் மாலை 6 மணிக்கு அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பாடல்களை பாடி அவர் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார்.
- ஜம்மு காஷ்மீரின் ஷுபம் பண்டி சதமடித்து 121 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- அந்த அணியின் மேலும் 5 வீரர்கள் அரை சதம் கடந்து அசத்தினர்.
ஹூப்ளி:
ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ரஞ்சி டிராபிக்கான இறுதிப்போட்டி கர்நாடகாவின் ஹூப்ளியில் நடந்து வருகிறது. இதில் கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஜம்மு காஷ்மீர் அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்திருந்தது. ஷுபம் பண்டிர் சதமடித்து 121 ரன்னில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் யாவர் ஹசன் 88 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அப்துல் சமது அரை சதம் கடந்து 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. கேப்டன் பரஸ் டோக்ரா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 70 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்துல் சமது 61 ரன்னில் வெளியேறினார். கண்ணையா வாத்வான் 71 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் ஜம்மு காஷ்மீர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 527 ரன்கள் குவித்துள்ளது. ஷகில் லோத்ரா 57 ரன்னும், அபித் முஷ்டாக் 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
கர்நாடக அணியின் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட் வீழ்த்தினார்.






