என் மலர்tooltip icon

    இந்தியா

    • 6 வழிச்சாலை மூலம் மும்பை - நாக்பூர் பயண நேரம் 8 மணி நேரமாக குறைந்து உள்ளது.
    • சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மாநில சாலை மேம்பாட்டு கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி.) அறிவித்து உள்ளது.

    மும்பை:

    மும்பை - நாக்பூர் இடையே ரூ.55 ஆயிரம் கோடி செலவில் 701 கி.மீ. தூரத்துக்கு சம்ருத்தி விரைவு சாலை போடும் திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. தற்போது நாக்பூர் முதல் இகத்பூரி வரை பணிகள் முடிந்து சாலை திறக்கப்பட்டுள்ளது. இகத்பூரில் இருந்து அம்னே (தானே) வரை சாலைத்திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த 6 வழிச்சாலை மூலம் மும்பை - நாக்பூர் பயண நேரம் 8 மணி நேரமாக குறைந்து உள்ளது. சாலைப்பணி முழுமையாக முடிந்த பிறகு பயண நேரம் மேலும் குறையும்.

    இந்தநிலையில் வருகிற 1-ந் தேதி முதல் சம்ருத்தி சாலையில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மாநில சாலை மேம்பாட்டு கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி.) அறிவித்து உள்ளது.

    தற்போது இலகுரக வாகனங்களுக்கு கி.மீ.க்கு ரூ.1.73, வணிக இலகுரக வாகனங்களுக்கு ரூ.2.79, கனரக வாகனங்களுக்கு ரூ.5.85, 3 ஆக்சில் கனரக வாகனங்களுக்கு ரூ.6.83, கட்டுமான கனரக எந்திரங்களுக்கு ரூ.9.18, 7-க்கு மேற்பட்ட ஆக்சில் வாகனங்களுக்கு ரூ.11.07 கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் முறையே ரூ.2.06, ரூ.3.32, ரூ.6.97, ரூ.7.60, ரூ.10.93, ரூ.13.30 ஆக உயர்த்தப்பட்டது.

    அதாவது நாக்பூர் - இகத்பூரி இடையே ரூ.1,080 ஆக இருந்த இலகுரக வாகனங்களுக்கான சுங்க கட்டணம் ரூ.1,290 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல மினிபஸ் போன்ற இலகுரக வணிக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.1,745-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 75 ஆகவும், பஸ், லாரி உள்ளிட்ட 2 ஆக்சில் கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்து 655-ல் இருந்து ரூ.4 ஆயிரத்து 750 ஆகவும், கனரக கட்டுமான எந்திரங்களுக்கான கட்டணம் ரூ.5 ஆயிரத்து 740-ல் இருந்து ரூ.6 ஆயிரத்து 830 ஆகவும், 7 ஆக்சில் அல்லது அதற்கு மேற்பட்ட கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.6 ஆயிரத்து 980-ல் இருந்து ரூ.8 ஆயிரத்து 315 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

    இந்த சுங்க கட்டணம் வரும் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்து 2028-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

    • கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் 3 சிறப்பு இரவு நேர மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது.
    • வேளச்சேரியில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இரவு 11.25 மணிக்கு சேப்பாக்கம் வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை), 28, ஏப்ரல் 11, 25, 30, மே 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை காண செல்லும் ரசிகர்களின் வசதிக்காக சென்னை கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் 3 சிறப்பு இரவு நேர மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * சென்னை கடற்கரையில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இரவு 10.10 மணிக்கு சேப்பாக்கம் சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு வேளச்சேரி சென்றடையும்.

    * வேளச்சேரியில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 10.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இரவு 11.25 மணிக்கு சேப்பாக்கம் வந்தடையும். அங்கிருந்து புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும்.

    * சென்னை சேப்பாக்கத்தில் இருந்து மேற்கண்ட தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இரவு 12.05 மணிக்கு வேளச்சேரி சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அவர்கள் வெற்றி பெறும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
    • மாநிலங்களுக்கு இடையேயான புத்தராஜா கிரிக்கெட் கோப்பை போட்டிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    ஒடிசாவை சேர்ந்த 95 வயதான மூதாட்டி சபித்ரி மஜ்ஹி, பல வருடங்களாக விளையாடுவதற்கு GROUND இல்லாமல் இருந்த கிராமத்து சிறுவர் மற்றும் இளைஞர்களுக்காக தன்னுடைய 5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.

    ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தில் சிங்கஜார் என்ற கிராமம் அமைந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக, இந்த கிராமத்தில் கிரிக்கெட், கால்பந்து மற்றும் கபடி போன்ற மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    சிங்கஜார், விளையாட்டுகளை விரும்பும் கிராமமாக மாநிலத்தில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளது. இருந்தபோதிலும், கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தனியார் விளையாட்டு மைதானங்களை புதுப்பித்து மாநிலங்களுக்கு இடையேயான புத்தராஜா கிரிக்கெட் கோப்பை போட்டிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    எனவே விளையாட தங்களுக்கென ஒரு மைதானம் இல்லாதது குறித்து குழந்தைகளின் ஏக்கத்தை பார்த்த அந்த கிராமத்தை சேர்ந்த விளையாட்டு ஆர்வலரான 95 வயது மூதாட்டி சபித்ரி மாஜி, விளையாட்டு மைதானம் கட்டுவதற்காக தனது ஐந்து ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். தற்போது, நன்கொடையாக வழங்கப்பட்ட நிலத்தில் அரசாங்கம் ஒரு அரங்கம் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோருகின்றனர்.

    தனது முடிவு குறித்து பேசிய மூதாட்டி சபித்ரி மாஜி ''எங்கள் கிராமத்தின் குழந்தைகள் விளையாட்டுகளில் பங்கேற்பதைப் பார்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. அவர்கள் வெற்றி பெறும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் அவர்களுக்கு வழங்கிய விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் விளையாடுகிறார்கள், உடற்பயிற்சி செய்கிறார்கள், ஆரோக்கியமாக இருக்கிறார்கள்'' என்று தெரிவிக்கிறார்.

    முன்னதாக மூதாட்டி, கிராமத்தில் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி மற்றும் கோவிலுக்கு நிலங்களை நன்கொடையாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. சபித்ரி மாஜியின் கணவர் நிலம்பர் மாஜி 10 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். 

    • ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் பிராந்தியத்தின் நலத்தை பற்றி உண்மையிலேயே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களா?
    • தேவையில்லாத சந்தேகங்களை எழுப்புவது தவிர்க்கப்பட வேண்டும்.

    சென்னையில் இன்று பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பஞ்சாப், கேரளா, தெலுங்கானா முதல்- மந்திரிகள் உள்பட 24 கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களை பார்த்து உண்மையிலேயே கவலைப்படுகிறீர்களா? அல்லது அரசியல் நோக்கத்திற்காகவா? என ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் அருண் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் அருண் குமார் கூறியதாவது:-

    என்னுடைய கருத்தின்படி, ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் பிராந்தியத்தின் நலத்தை பற்றி உண்மையிலேயே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களா? அல்லது அவர்களுடைய அரசியல் நோக்கத்திற்காகவா? என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    அவர்கள் இது பற்றி சிந்திக்கட்டும். ஆனால் மீடியாக்கள், உண்மையிலேயே தொகுதி மறுசீரமைப்பு பணிகள் தொடக்கப்பட்டுள்ளதா? என அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்.

    மக்கள் தொகை கணக்கெடுப்பும் தொடங்கப்படவில்லை. தொகுதி மறுசீரமைப்பு குறித்த ஆலோசனையும் தொடங்கப்படவில்லை. சட்டம் தொடர்பான வரைவு கூட இன்னும் செய்யப்படவில்லை.

    தொகுதி மறுசீரமைப்பு சட்டம் வரைவு உருவாக்கும்போது, மத்திய அரசு செயல்முறைக்கு தயாராகும்போது, இது தொடர்பாக கேள்வி எழும்.

    தேவையில்லாத சந்தேகங்களை எழுப்புவது தவிர்க்கப்பட வேண்டும். ஒருவரையொருவர் நம்புவதும், அனைவரையும் அழைத்துச் செல்வதும் ஜனநாயகத்தின் சாராம்சம். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் மற்றவர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும்.

    இவ்வாறு அருண் குமார் தெரிவித்துள்ளார்.

    • திட்வானா பகுதியில் பஞ்சமுகி ஹனுமான் கோவில் அமைந்துள்ளது.
    • கொலை செய்வதற்கு முன் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவை பூசாரி சிவ்பால் அணைத்துள்ளார்.

    ராஜஸ்தானில் கோவில் பூசாரி பூஜை செய்வது தொடர்பான தகராறில் சக பூசாரியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் தவுசா (Dausa) மாவட்டத்தில் லால்சோட் எல்லைக்கு உட்பட திட்வானா பகுதியில் பஞ்சமுகி ஹனுமான்கோவில் அமைந்துள்ளது. இங்கு பரசுராம் தாஸ் மகாராஜ் (60 வயது).மற்றும் சிவ்பால் தாஸ் ஆகியோர் பூசாரிகளாக உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை கோவிலில் சாமி சிலைக்கு ஆரத்தி காட்டுவது தொடர்பாக இருவரும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிவ்பாலை பரசுராம் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூசாரி சிவ்பால் தாஸ், பரசுராமை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

    கோவிலுக்குள் பூசாரி உடல் கிடப்பதை அறிந்து உள்ளூர் மக்கள் திரண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் தப்பியோடிய பூசாரி சிவ்பால் கோவிலுக்கு 18 கிலோமீட்டர் தொலைவில் காயமுற்ற நிலையில் போலீசிடம் பிடிபட்டார். அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

    கொலை செய்வதற்கு முன் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராவை சிவ்பால் அணைத்துவிட்டு அதன் பின் கொலை செய்ததும் தெரியவந்தது. கோவில் பூசாரி சக பூசாரியால் கோவிலில் வைத்தே கொல்லப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் உக்ருல் மாவட்டங்களில் உள்ள முகாம்களை நீதிபதிகள் பார்வையிடுவார்கள்.
    • 60,000 பேர் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்,

    நீதிபதிகள் வருகை 

    மணிப்பூரில் இனக் கலவரத்தால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடியை மதிப்பிடுவதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய், ஐந்து மூத்த நீதிபதிகளுடன் இன்று (சனிக்கிழமை) மணிப்பூர் வந்தடைந்தார். 

    தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (NALSA) நீதிபதிகளின் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.  இதைத்தொடர்ந்து கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சட்ட உதவி மையங்கள் மற்றும் மருத்துவ முகாம்கள் திறப்பு விழா நடைபெற உள்ளது.

    இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் உக்ருல் மாவட்டங்களில் உள்ள முகாம்களை நீதிபதிகள் பார்வையிடுவார்கள். அங்கு இடம்பெயர்ந்த மக்களுடன் உரையாடி, அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் விநியோகிப்பதை மேற்பார்வையிடுவார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவி வழங்கல் உள்ளிட்ட செயல்பாடுகளையும் நீதிபதிகள் தொடங்கி வைகின்றனர்.

    மணிப்பூர் கலவரம்

    மணிப்பூரில் பெரும்பான்மையான மெய்தேய் சமூகத்தினர் பழங்குடியின அந்தஸ்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

    இதை எதிர்த்து மலைப்பிரதேச மாவட்டங்களில் அதிகம் வசிக்கும் குக்கி இன மக்கள் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து இரு சமூகத்தினருக்கும் இடையிலான பிரச்சனை 2023 இல் வன்முறையாக மாறியது. மே மாதம் பெண் ஒருவர் நிர்வாணமாக ஊர்வலம் நடத்திச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    அதைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், கொலை வெறியாட்டங்களும் அரங்கேறின. 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கலவரம் தாற்காலிகமாக அடங்கியபோதிலும் ஆயுதமேந்திய குழுக்களால் இன்று வரை மணிப்பூரில் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. வீடுகளை இழந்த பல குடும்பங்கள் நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றன.

     ஜனாதிபதி ஆட்சி

    கடந்த வருட இறுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கடத்தி கொலை செய்யப்பட்டபோது மீண்டும் கலவரம் வெடித்தது. கலவரத்தை தூண்டியதாக மணிப்பூர் பாஜக முதல்வர் பைரன் சிங் தொடர்பாக ஆடியோ பதிவுகள் வெளியாகின.

    இதனால் அவர் கடந்த பிப்ரவரியில் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது . இதற்கிடையே வெளிநாடுகளுக்கு தொடர்ந்து பயணிக்கும் பிரதமர் மோடி மணிப்பூருக்கு இதுநாள் வரை சென்று பாதிப்புகளை பார்வையிடாதது குறித்து காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. 

    மோடி எப்போ வருவார்?

    இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மணிப்பூர் பயணத்தை வரவேற்றுள்ள காங்கிரஸ் மோடியை மீண்டும் விமர்சித்துள்ளது.

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், மணிப்பூருக்குச் சென்ற ஆறு நீதிபதிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். கடந்த 22 மாதங்களில், நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர், சுமார் 60,000 பேர் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர், இன்றும் கூட, மணிப்பூரில் உள்ள சமூகங்களிடையே அச்சமும் சந்தேகமும் நிறைந்த சூழல் நிலவுகிறது.

    பிப்ரவரி 13 அன்று ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது, ஆனால் ஆகஸ்ட் 1, 2023 அன்று உச்ச நீதிமன்றமே மணிப்பூரில் உள்ள அரசியலமைப்பு முற்றிலுமாக தகர்க்கப்பட்டுவிட்டதாகக் கூறிய பிறகும், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த 18 மாதங்கள் ஏன் ஆனது? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சென்றது நல்லது, ஆனால் பெரிய கேள்வி என்னவென்றால், பிரதமர் எப்போது அங்கு செல்வார்? என்பதுதான் என்று தெரிவித்துள்ளார்.  

    • தங்கள் மகள்கள் ஓடிப்போய்விடுவார்கள் என்ற பெற்றோரின் பயம் ஆகியவை குழந்தைத் திருமணத்துக்கு வழிவகுக்கிறது.
    • பெண் 18 வயதை எட்டும்போது வரதட்சணையும் அதிகம் தர வேண்டியிருக்கும் என அஞ்சுகிறார்கள்.

    ஒடிசாவில் கடந்த 6 ஆண்டுகளாக தினமும் 3 குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாக அம்மாநில அரசின் தரவறிக்கை தெரிவிக்கிறது.

    அரசு தரவுகளின்படி மட்டுமே, 2019 முதல் 2025, பிப்ரவரி வரை ஒடிசா முழுவதும் 8,159 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. 30 மாவட்டங்களை கொண்ட ஒடிசாவில் அதிகபட்சமாக நபரங்பூரில் 1,347 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன.  

    பழங்குடி பழக்கவழக்கங்கள், வரதட்சணை, தொழிலாள வர்க்க குடும்பங்களின் இடம்பெயர்வு மற்றும் தங்கள் மகள்கள் ஓடிப்போய்விடுவார்கள் என்ற பெற்றோரின் பயம் ஆகியவை குழந்தைத் திருமணத்துக்கு வழிவகுப்பதாக அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.

    குழந்தை திருமணத்தைத் தடுக்க, ஒடிசா அரசு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் பஞ்சாயத்து, தொகுதி மற்றும் அங்கன்வாடி மட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகிறது. இது தவிர, குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாநில அளவிலான குழுக்களின் கூட்டங்களை அரசாங்கம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் நடத்தி வருகிறது.

    "குழந்தை திருமணத்தை ஒரே இரவில் முற்றிலுமாக நிறுத்த முடியாது. பெண்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்க, அவர்களுக்கு ஒரு சூழலையும் சமூகத்தையும் நாம் உருவாக்க வேண்டும் . இவ்வகை திருமணங்கள் பழங்குடியினரின் பாரம்பரிய நடைமுறையாகவும் உள்ளது" என்று சமூக ஆர்வலர் நம்ரதா சத்தா கூறுகிறார்.

    வாழ்வாதாரத்திற்காக வேறு இடங்களுக்கு தொடர்ந்து புலம்பெயரும் பெற்றோர்கள் தங்கள் பெண்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும், புலம்பெயர்ந்த இடத்தில் அவள்  யாருடனாவது ஓடிப்போய், குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சுகிறார்கள். மேலும் பெண் 18 வயதை எட்டும்போது வரதட்சணையும் அதிகம் தர வேண்டியிருக்கும் என அஞ்சி இளவயதிலேயே அவர்களை திருமணம் செய்து தந்துவிடுகின்றனர்

    இளவயது திருமணத்துடன், குழந்தைத் தொழிலாளர் முறையின் சவாலையும் ஒடிசா எதிர்கொள்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில், தொழிலாளர்களாக வேலை செய்த 328 குழந்தைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறை சட்டம், 1986 இன் கீழ், குழந்தைகளை வேலைக்கு அமர்த்தியவர்கள் மீது இதுவரை 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    • பள்ளி மாணவர்கள் பாடம் படிக்கும்போது போக்குவரத்து தலைப்பில் ரெயில் மற்றும் விமானங்கள் பற்றி வந்திருந்தது.
    • பிள்ளைகள் நாங்கள் விமானத்தில் போக முடியுமா? ரெயிலில் போக முடியுமா? என கேள்வி எழுப்பினார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம் பட்டியில் செயல்பட்டு வரும் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல அறக்கட்டளை பெயரில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ், பள்ளிக்கு தனது சொந்த செலவில் கட்டிடம் மற்றும் கணினி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்து இருந்த நிலையில், பள்ளியில் போக்குவரத்து பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருக்கும்போது ஒரு மாணவன் தலைக்கு மேலே பறக்கக்கூடிய விமானத்தில் நாம் என்று பறப்போமோ என்று ஆதங்கத்தோடு கேட்டுள்ளார்.

    அது மட்டுமல்லாமல் சொந்த ஊர் அருகே ரெயில்வே நிலையம் இருக்கிறது. ஆனால் ரெயிலில் கூட பயணித்ததில்லை எனக் கூறிய மாணவ-மாணவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்கு முடிவு செய்தார் தலைமை ஆசிரியர் பொன்ராஜ்.

    மாணவர்களிடம் தன் சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் செல்வதாக கூறிய தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் 3 மாதங்களுக்கு முன்பே தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு முன்பதிவு செய்து அதன்படி இன்று காலை 18 மாணவ-மாணவிகளை விமானத்தில் அழைத்துச் சென்று சென்னையில் வண்டலூர் பூங்கா மற்றும் மெட்ரோ ரெயில் பூண்டவட்டில் அழைத்துச் சென்று பார்வையிட உள்ளனர். நாளை மாலை சென்னையில் இருந்து முத்துநகர் ரெயில் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தர இருக்கின்றனர்.

    மிகவும் வறுமையில் இருக்கக்கூடிய நிலையில் நாங்கள் விமானத்தில் பறப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறும் மாணவர்கள் எங்களால் விமானத்தில் பணம் கொடுத்து பயணம் செய்ய முடியாத நிலையில் எங்கள் ஆசிரியர் அவரது சொந்த செலவில் சென்னைக்கு அழைத்துச் சென்று உயிரியல் பூங்காக்களை பார்வையிட வைப்பது ரெயிலில் அழைத்துச் செல்வது போன்ற விஷயங்கள் தங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்திருப்பதாகவும் நல்லாசிரியர் பொன்ராஜ்க்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் உருக்கமாக மாணவர்கள் கூறினர்.

    இதுகுறித்து தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் கூறுகையில், 2014-ம் ஆண்டு முதல் பண்டாரம் பட்டிக்கு தலைமை ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் பாடம் சம்பந்தமாக மாணவர்களை எனது சொந்த செலவில் அழைத்துச் செல்வது வழக்கம், பள்ளி மாணவர்கள் பாடம் படிக்கும்போது போக்குவரத்து தலைப்பில் ரெயில் மற்றும் விமானங்கள் பற்றி வந்திருந்தது. பிள்ளைகள் நாங்கள் விமானத்தில் போக முடியுமா? ரெயிலில் போக முடியுமா? என கேள்வி எழுப்பினார்கள்.

    அது எனது மிகுந்த கஷ்டமாக இருந்தது. தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து 17 மாணவ-மாணவிகள் மற்றும் இரண்டு பெற்றோர்கள், தான் உட்பட 20 பேர் செல்கிறோம். இதற்கு சுமார் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் செலவு ஆகிறது என்றார். மேலும் மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது தனக்கு சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்தார்.

    • வலைதள பயனர்கள் பலரும் கேப் டிரைவரின் வெளிப்படையான அறிவிப்பை பாராட்டி வருகின்றனர்.
    • சில பயனர்கள் வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டனர்.

    போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்ற பெங்களூரு நகரில் வாகன ஒட்டிகள் சிலர் தங்களது வாகனத்தில் வித்தியாசமான அலங்காரங்கள், வசதிகள் செய்திருந்த வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலாகி இருந்தது.

    இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், பெங்களூருவை சேர்ந்த கார் டிரைவர் ஒருவர் தனது வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு சில விதிமுறைகளை வகுத்து வைத்திருந்த எச்சரிக்கை அறிவிப்பு வைரலாகி வருகிறது.

    அதில், எச்சரிக்கை! வாகனத்தில் ஜோடிகள் ரொமான்ஸ் செய்யக்கூடாது. இது ஒரு கேப் வாகனம். இது உங்கள் தனிப்பட்ட இடமோ அல்லது ஓயோவோ அல்ல. எனவே தயவு செய்து தூரத்தை கடைபிடித்து அமைதியாக இருங்கள். மரியாதை கொடுங்கள், மரியாதை பெறுங்கள் என எழுதப்பட்டிருந்தது.

    வைரலான இந்த எச்சரிக்கையை பார்த்த வலைதள பயனர்கள் பலரும் கேப் டிரைவரின் வெளிப்படையான அறிவிப்பை பாராட்டி வருகின்றனர். சில பயனர்கள் வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டனர்.

    • இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரேகா குப்தா கலந்து கொண்டார்.
    • அவரின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக அரசு வெற்றி பெற்றது. டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்.

    இந்நிலையில் கடந்த மார்ச் 16 ஆம் தேதி பாஜக சார்பில் டெல்லியில் ரம்ஜான் மாத இப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. டெல்லியில் உள்ள இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரேகா குப்தா கலந்து கொண்டார்.

    மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் பல பாஜக தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களுக்கு ரேகா குப்தா பேட்டி அளித்தார். அப்போது, இஸ்லாமியர் பண்டிகையான ரம்ஜான் (RAMZAN) என்பதில் ராம் (RAM) என்ற இந்து பெயரும், இந்துக்கள் பண்டிகையான தீபாவளி(DIWALI) என்பதில் அலி (ALI இஸ்லாமிய பெயரும் இருப்பதாக ரேகா குப்தா பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

    அவரின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கிடையே இப்தார் நிகழ்ச்சி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரேகா குப்தா, "இப்தார் நிகழ்வில் அனைத்து சகோதர சகோதரிகளுடனும் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

    நமது கலாச்சாரம், பரஸ்பர மரியாதை, அன்பு மற்றும் நல்லிணக்கத்தின் சின்னமாகும். இது போன்ற நிகழ்வுகள் சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துகின்றன" என்று பதிவிட்டுள்ளார்.  

    • ஒட்டகத்தின் மீது இளம்பெண் ஒருவர் ஏறி நடனமாடுகிறார்.
    • ஒட்டகத்தை துன்புறுத்திய செயல் விலங்கு நல அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகத்தை துன்புறுத்தி அதன் மீது ஏறி ஒரு இளம்பெண் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள அனுமன் நகரில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

    அதில், வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், தெருவில் ஒரு கயிற்று கட்டில் உள்ளது. அதன் மீது ஒட்டகத்தை படுக்க வைத்து, அதன் இரு கால்களையும் கட்டி உள்ளனர். பின்னர் அந்த ஒட்டகத்தின் மீது இளம்பெண் ஒருவர் ஏறி நடனமாடுகிறார். பொழுதுபோக்கிற்காக இவ்வாறு நடனமாடியதாக கூறப்படுகிறது.

    ஆனாலும் ஒட்டகத்தை துன்புறுத்திய இந்த செயல் விலங்கு நல அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லட்சக்கணக்கான பார்வைகளை பெற்ற இந்த வீடியோவை பார்த்த பலரும் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

    • பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • காரை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனரை மர்மநபர்கள் கிழித்ததால் ஆத்திரமடைந்த அக்கட்சியினர் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காரை சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைவிட்டனர்.

    ×