என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • டி20 தொடரின் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது.
    • 3 ஆவது டி20 போட்டியில் 14 பந்துகளில் அரை சதம் அடித்து அபிஷேக் சர்மா அசத்தினார்

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற டி20 தொடரின் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது.

    நேற்று நடைபெற்ற 3 ஆவது டி20 போட்டியில் 14 பந்துகளில் அரை சதம் அடித்து அபிஷேக் சர்மா அசத்தினார். இதன்மூலம் யுவராஜ் சிங்கிற்கு அடுத்த படியாக அதிவேகமாக அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    இதையடுத்து பேசிய அபிஷேக் ஷர்மா, "12 பந்துகளில் அரை சதம் என்ற யுவராஜின் சாதனையை முறியடிப்பது சாத்தியமற்றது" என்று தெரிவித்தார்.

    டி20 போட்டிகளில் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே தற்போது வரை சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், குடியரசு தின விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி, கவர்னரை வரவேற்றார்.

    இந்தியாவின் 77-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே இன்று குடியரசு தின விழா நடைபெற்றது.

    தமிழக போக்குவரத்து காவல் படையினரின் வாகன அணிவகுப்புடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், குடியரசு தின விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். அவரை தொடர்ந்து ராணுவ வாகன அணிவகுப்புடன் கவர்னர் ஆர்.என்.ரவி, விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி, கைகுலுக்கி வரவேற்றார்.

    இதைத்தொடர்ந்து காலை 8 மணியளவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    • குடிமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துகள்.
    • வளர்ந்த இந்தியாவிற்கான உறுதிப்பாடு இன்னும் வலுவாக வளரட்டும்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் 77-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பா அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    எனது சக குடிமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துகள். இந்தியாவின் மரியாதை, பெருமை மற்றும் மகிமையின் அடையாளமான இந்த மகத்தான தேசிய விழா, உங்கள் வாழ்வில் புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் புகுத்தட்டும். வளர்ந்த இந்தியாவிற்கான உறுதிப்பாடு இன்னும் வலுவாக வளரட்டும். இதுவே எனது இதயப்பூர்வமான விருப்பம் என்று கூறியுள்ளார். 

    • இந்தியாவின் 77-வது குடியரசு தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது.
    • நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 77-வது குடியரசு தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது:

    இந்திய மக்களுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.

    கடந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி முதல் நமது தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' இயற்றப்பட்ட 150-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்தியத் தாயின் தெய்வீக வடிவத்திற்கான ஒரு பாடலாக திகழும் 'வந்தே மாதரம்' பாடல், ஒவ்வொரு இந்தியரின் இதயங்களிலும் தேசபக்தியை விதைக்கிறது. தமிழ் கவிஞர் பாரதி, வந்தே மாதரம் பாடலுக்கு வலிமை சேர்த்துள்ளார்.

    அரசியலமைப்பு சட்டம் என்பது இந்தியாவைப் போன்ற மிகப்பெரிய குடியரசு நாட்டின் அடிப்படை ஆவணமாகும்.

    விளையாட்டுத் துறையில் மகளிர் சிறப்பாக செயல்படுகின்றனர். கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் மகள்கள் ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையையும், பின்னர் பார்வையற்ற மகளிர் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பையையும் வென்று வரலாறு படைத்தனர்.

    நமது இந்திய சகோதர, சகோதரிகள் கடின உழைப்பால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புகிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

    நமது நாட்டை சுத்தமாக வைத்திருப்பதில் தூய்மை பணியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். உலகத்தரம் வாய்ந்த இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் நமது நாட்டின் வளர்ச்சியை வடிவமைக்கின்றனர். நமது முப்படைகளின் துணிச்சலான வீரர்கள் தாய்நாட்டைப் பாதுகாக்க எப்போதும் விழிப்புடன் இருக்கிறார்கள்.

    நமது வாக்காளர்கள் தங்கள் அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறார்கள். வாக்களிப்பதில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருவது நமது குடியரசின் சக்திவாய்ந்த பரிமாணமாகும்.

    'பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ்' இயக்கம் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவித்துள்ளது. பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனாவின் கீழ் இதுவரை 570 மில்லியனுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 56 சதவீதம் பெண்களுடையது என தெரிவித்தார்.

    • ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் என்பதில் நான் கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாடு குறித்து, திருமாவளவன் நன்கு அறிவார்.
    • ‘முழுக்க முழுக்க தி.மு.க-வின் ஆட்களாகவே மாறிவிட்ட 20 பேர் வி.சி.க-வுக்குள் இருக்கிறார்கள்’

    தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் அக்கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர், 

    "திருமாவளவன் அவர்களே, நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள், ஆனால் உங்களுடைய கட்சி இங்கு மாறி ரொம்ப நாள் ஆகிவிட்டது. நீங்களும், 20 பேரும் மட்டும் தான் கட்சியில் இருக்கிறீர்கள். விசிகவில் 20, 30 தலைவர்கள் மட்டும் தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் தொண்டர்கள் அனைவரும் இங்கு மாறிவிட்டார்கள். அறிவாலயத்தில் பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் இன்றைக்கு வரைக்கும் ஏன் சிலை வைக்கவில்லை. திருமாவளவனை திமுகவினர் அடியாளாக பயன்படுத்துகின்றனர். அதிகாரத்துக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, அதிகாரத்துக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாடு." எனப் பேசியிருந்தார். 

    ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பேச்சுக்கு விசிக தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தநிலையில் அதற்கு விளக்கமளித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், 

    எனதருமை வி.சி.க தோழமைகளுக்கு...

    இன்று நடந்த த.வெ.க செயல்வீர்கள் கூட்டத்தில், நான் பேசிய பேச்சின் சில வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாக, என்மீது எப்போதும் பேரன்பும் அக்கறையும் கொண்ட வி.சி.க நிர்வாகிகள் பலர், தங்களது வருத்ததை என்னிடம் பதிவுசெய்துவருகிறார்கள். அவர்களுடைய வருத்தத்தை மதிப்பதோடு, உரிய விளக்கத்தையும் கொடுப்பது எனது கடமை என்று கருதுகிறேன். இன்றைய கூட்டத்தில், நான் சொல்ல வந்த கருத்தை சரியான வார்த்தைகளில் முழுமையாக வெளிப்படுத்தாமல் போனதாலேயே இந்தக் குழப்பம். எனவே, இந்தப் பதிவின் வாயிலாக நான் சொல்ல வந்த கருத்தை முழுமையாகப் பதிவுசெய்கிறேன்.

    'ஆட்சியிலும் பங்கு… அதிகாரத்திலும் பங்கு...' என்கிற முழக்கம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் அவர்களின் கரங்களில் கிடைக்கும் வரை என் குரல்வளையிலிருந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த முழக்கத்தையும் என் குரலையும், 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒருபோதும் அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது' என நினைக்கும் தி.மு.க தலைமை கடுமையாக ஒடுக்கப் பார்க்கிறது. அவ்வகையிலேயே என் பேச்சும் இன்று அவர்களால் திரித்துவிடப்பட்டிருக்கிறது.

    ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் என்பதில் நான் கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாடு குறித்து, திருமாவளவன் நன்கு அறிவார். எனது கல்லூரிக் காலம் முதலே பெருமதிப்பும் மரியாதையும் கொண்டு நான் நேசிக்கும் தலைவர் அவர். அதை உணர்ந்தவராகவே எப்போதும் நீங்கா அன்புடனும் என்னுடன் உரையாடுகிற, உறவாடுகிற தலைவராக திருமாவளவன் இருந்துவருகிறார்கள்.

    'ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும்' என திருமாவளவன் தன் வாழ்வையே அர்ப்பணித்துப் போராடிவருகிறார். ஆனால் அந்தக் கட்சியிலுள்ள 20 நபர்கள், தி.மு.க-வின் திட்டப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என்கிற முனைப்பில், அந்தக் கட்சிக்குள் தி.மு.க-வினராகவே மாறிச் செயல்பட்டுவருகிறார்கள். அப்படி 'முழுக்க முழுக்க தி.மு.க-வின் ஆட்களாகவே மாறிவிட்ட 20 பேர் வி.சி.க-வுக்குள் இருக்கிறார்கள்' என்கிற பொருளில் நான் சொல்ல வந்த கருத்து, 'வி.சி.க-வில் இருபது நபர்கள் மட்டுமே இருப்பதாக' நான் பேசிவிட்டதாகப் பொருள் மாறி புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

    எனது பேச்சில் சொல்ல வந்த கருத்து முழுமைபெறாமல் போனதால், அது முற்றிலும் தவறான விதத்தில் புரிந்துகொள்ளப்பட்டது. இச்சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திகொண்டு, மிகத் தவறான விதத்தில் எனது பேச்சும் கருத்தும் தி.மு.க சக்திகளால் திரித்துப் பரப்பப்பட்டு வருகிறது. தி.மு.க-வின் இந்த நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில், ஒடுக்கப்பட்ட மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை, அடிமட்ட வி.சி.க தொண்டர்கள் நன்கு அறிவார்கள்.

    வி.சி.க-வின் கொடிக்கம்பங்களைக்கூட சுதந்திரமான முறையில் நட முடியாத அளவிற்கு, ஆளும் அதிகார மையம் செய்யும் அடக்குமுறையை ஒடுக்குமுறையை அனைவருமே அறிவார்கள். அப்படி தம் உரிமைகளுக்காக நின்ற ஒடுக்கப்பட்ட மக்களின்மீது அதிகாரத்தைச் செலுத்தி அநியாய வழக்குகளை இந்த அரசு பதிவுசெய்ததை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட; ஒடுக்கப்பட்ட மக்களின்மீதே வழக்குப்பதிவு செய்த வஞ்சகத்தை, தமிழக மக்கள் ஒவ்வொருவரும் அறிவார்கள். தம்மைத் தேர்ந்தெடுத்த எளிய மக்களுக்கு இன்றைய அதிகார ஆளும் வர்க்கம் கொடுத்த 'ஒடுக்குமுறை' பரிசை மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

    வாக்கு அரசியலை மட்டுமே மனதில் கொண்டு, இந்த எளிய மக்களை ஆளும் தி.மு.க அதிகார வர்க்கம் சுரண்டுகிறது. தனது வாக்குத் தேவைக்காக மட்டும் வி.சி.க-வின் தோழர்களைப் பயன்படுத்தும் சூழ்ச்சி அரசியலையே எப்போதும் தி.மு.க செய்துவந்திருக்கிறது; வருகிறது. அதை மிக அருகிலிருந்து பார்த்து நன்கு அறிந்தவன் நான்.

    அதனாலேயே, வி.சி.க-வுக்குள், தி.மு.க-வின் குரலாகவே ஒலித்துவரும் 20 நபர்கள் குறித்து நான் குறிப்பிட்டுப் பேசினேன். அறிந்த உண்மையைப் பேசினேன். அந்த 20 நபர்கள் கொடுக்கிற தவறான தகவல்களை வைத்தே எங்கள் கட்சி மீதான விமர்சனங்களும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. எங்கள் கட்சியோ, நாங்களோ எவ்வித அதிகாரத்திலும் இதுவரை இருந்தது இல்லை. அரசியலில் ஒரு மாற்றம் வர வேண்டும்... அந்த மாற்றத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரமும் நிலைபெற வேண்டும் என்கிற நோக்கத்திலேயே, இந்த அரசியல் பயணத்தில் களமாடி வருகிறோம். அந்த உண்மை ஒருநாள் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்குத் தெரியவரும்.

    வி.சி.க இயக்கத்தில் தி.மு.க-வின் குரலாகச் செயல்பட்டு வரும் அந்த 20 நபர்கள் குறித்த உண்மை முகமும் ஒருநாள் உலகிற்குத் தெரியவரும். ஏன்? இப்போது அண்ணனுடன் பயணிக்கும் பலருக்கும் அந்த நபர்களைக் குறித்த உண்மைகள் தெரியுமே! நான் எனது அரசியல் பயணத்தை எந்தக் களத்திலிருத்து எந்த நோக்கத்திற்காகத் துவங்கினேனோ, அந்த நோக்கத்திலிருந்து இதுவரை நான் தடம் மாறவில்லை.

    'ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம்' என்கிற எனது குரல், அவர்கள் அதிகாரத்தை அடையும் வரை என்னிலிருந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். இதை நான் எப்போதும் அன்பும், நேசமும் கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களுக்கு மிக அன்போடு தெளிவுப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். எனது கருத்து, தவறான வகையில் பரப்பப்பட்டு வருகிறது. தி.மு.க செய்துவருகிற அந்தத் திரிப்பு அரசியலுக்குள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்கள் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகவே, இந்த விளக்கப் பதிவு.

    'ஆட்சியிலும் பங்கு… அதிகாரத்திலும் பங்கு' என்கிற ஒடுக்கப்பட்ட மக்களின் குரல், எப்போதும் எங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்!" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது
    • 14 பந்துகளில் அரைசதம் அடித்து அபிஷேக் சர்மா சாதனை படைத்தார்

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளில் இந்தியா வென்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிலிப்ஸ் 48 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறது. சரவெடியாய் வெடித்த அபிஷேக் சர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். யுவராஜ் சிங்கிற்கு அடுத்த படியாக அதிவேகமாக அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் அரைசதம் அடித்தார்.

    10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் அடித்து இந்தியா எளிதில் வெற்றி பெற்று டி20 தொடரை 3 -0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    • பத்ம விருதுகள், பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ என மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகின்றன.
    • மாதவனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது

    இந்தியாவின் 77வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ என மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகின்றன. 

    கலை, இலக்கியம், சமூக சேவை, மருத்துவம், கல்வி, பொது சேவை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும், பொதுவாழ்க்கையில் நீண்டகாலம் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் மறைந்த நடிகர் தர்மேந்திரா மற்றும் நடிகர் மம்மூட்டி, நடிகர் மாதவன் ஆகியோருக்கு 2026ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    தர்மேந்திர சிங் தியோலுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அல்கா யாக்னிக் (பாடகி) மற்றும் மம்மூட்டி ஆகியோருக்கு 'பத்ம பூஷண்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மாதவன், பிரசென்ஜித் சட்டர்ஜி (நடிகர்) மற்றும் சதீஷ் ஷா (மறைந்த நகைச்சுவை நடிகர்) ஆகியோருக்கு 'பத்ம ஸ்ரீ' விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    குடியரசு தின விழாவிற்கு முன்னதாக விருதுகள் அறிவிக்கப்பட்டாலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த ஆண்டின் பிற்பகுதியிலேயே குடியரசுத் தலைவர் மாளிகையில் பதக்கங்களை வழங்குவார். 

    • சஞ்சல் சந்திர பவுமிக் இரவு தான் வேலை பார்க்கும் இடத்தில் தூங்கி கொண்டிருந்தார்.
    • உள்ளே சென்று பார்த்த போது சஞ்சல் சந்திர பவுமிக் தீயில் கருகி சடலமாக கிடந்தார்.

    வங்கதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இதில் 9 இந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்துக்கள் வீடுகள், கடைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் வங்க தேசத்தில் மேலும் ஒரு இந்து வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். குமில்லா மாவட்டம் லட்சுமிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சல் சந்திர பவுமிக்(வயது 23). இவர் நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள வாகனம் பழுது பார்க்கும் கடையில் வேலை பார்த்து வந்தார். சஞ்சல் சந்திர பவுமிக் இரவு தான் வேலை பார்க்கும் இடத்தில் தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு கும்பல் கடையின் ஷட்டரின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியது. இதில் கடைக்குள் தீ பரவியதில் சஞ்சல் சந்திர பவுமிக் சிக்கி கொண்டார்.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது சஞ்சல் சந்திர பவுமிக் தீயில் கருகி சடலமாக கிடந்தார்.

    வாலிபரை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதற்கு காரணமான வர்களை உடனடியாகக் கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்கள் சேகரிக்கப்பட் டுள்ளதாகவும், கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

    • தேர்தலுக்காக பிரதமர் ஆயிரம் பேசினாலும் தேர்தலில் எதிரொலிக்காது.
    • நாங்கள் ஒரு கோடியே 32 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை தந்திருக்கிறோம்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணி என்பது அ.தி.மு.க.வின் ஒரு பகுதியும், அதேபோல பா.ஜ.க.வும் இணைந்ததை தவிர அதை நாங்கள் வலுவாக பார்க்கவில்லை, அது பலவீனமான கூட்டணி. எத்தனை கட்சிகள் அந்த கூட்டணியில் வந்து சேர்ந்தாலும் தி.மு.க. வின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்தியா கூட்டணியை யாராலும் எதுவும் செய்ய முடியாது. தமிழ்நாட்டு மக்களின் மனதில் யார் இருக்கிறார்களோ அவர்கள் தான் வெல்ல முடியுமே தவிர, கூட்டத்தைக் கூட்டி காட்டி யாராலும் வெல்ல முடியாது.

    தமிழ்நாட்டின் மக்களின் மனநிலையை இன்றைக்கு ஒவ்வொரு சர்வே மூலமாக நாங்கள் அறிந்து வருகிறோம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும், அதன் மூலமாக தங்களுக்கு இன்னும் பல நன்மைகள் கிடைக்க வேண்டும் என்பது தான் தமிழ்நாடு மக்களுடைய விருப்பம். அந்த விருப்பத்தை மோடியாலோ, வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது.

    கிரைம், மாபியா, கரப்ஷன் எல்லாம் பிரதமர் மோடியின் கட்சிக்கும், அவர்களது கூட்டணிக்கும் தான் பொருந்துமே தவிர எங்களுக்கு ஒரு துளியும் பொருந்தாது. 11 முறை தேர்தலில் தோல்வியடைந்த எடப்பாடி பழனிசாமிக்கு 12-வது தோல்வியை 2026 நிச்சயமாக தரும். துணை முதலமைச்சர் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து கொண்டி ருக்கிறார். தமிழ்நாட்டில் யாராலும் அசைக்க முடியாத ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறதே தவிர, மற்றவர்கள் சொல்லுகின்ற அளவிற்கு பலவீனமான ஆட்சி கிடையாது. பலமான ஆட்சியில் இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம் அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

    தேர்தலுக்காக பிரதமர் ஆயிரம் பேசினாலும் தேர்தலில் எதிரொலிக்காது. தமிழ்நாட்டு மக்கள் கெட்டிக்காரர்கள், அவர்களுக்கு எது நல்லது எது கெட்டது என்பது தெரியும். தங்களுக்கு எந்த ஆட்சி உதவி செய்யும் என்பது தமிழ்நாடு மக்களுக்கு தெரியும். மோடி ஆயிரம் குற்றச்சாட்டுகளை சொல்லலாம், குறைகளை சொல்லலாம். ஆனால் அவர் தனக்கு முன்னால் இருக்கக்கூடிய மாநிலங்களை எல்லாம், குறிப்பாக பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களையெல்லாம் பார்த்துவிட்டு அதைவிட தமிழ்நாட்டில் ஏதாவது குற்றங்கள் கூட என்று சொன்னால் அப்போது நாங்கள் பதில் அளிக்கிறோம்.

    யார் வந்தாலும் வந்தவர்களை வரவேற்கின்ற இயக்கம் தான் தி.மு.க. அவர்களுக்கு உரிய மரியாதை தருகிற தலைவர் தான் மு.க.ஸ்டாலின். எங்களை நம்பி வருகின்றவர்கள் கெட்டுப் போபவர்கள் கிடையாது. மற்றவர்களை நம்பி செல்பவர்கள் மோசம் போவதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

    எடப்பாடி பழனிசாமியை, டி.டி.வி.தினகரன் விமர்சனம் செய்து பேசிவிட்டு மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளது வெட்கக்கேடு. தேசிய ஜனநாயக கூட்டணி காட்டும் ஒட்டுமொத்த கூட்டத்தையும் நாங்கள் மகளிர் அணி கூட்டத்தின் மூலமாகவே பீட் செய்து விடுவோம். பகுதி பகுதியாக மக்கள் அலையை கொண்டு செல்கின்ற சக்தி இந்தியாவிலேயே தி.மு.க.வுக்கு இருப்பதைப் போல வேறு எந்த இயக்கத்துக்கும் கிடை யாது.

    நாங்கள் எப்போதும் எதிரிகள் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இறுமாப்பு கொண்டவர்கள் கிடையாது. எதிரிகள் இருக்கிறார்கள், ஆனால் எங்களோடு மோதும் அளவிற்கு அவர்கள் வலிமையாக இல்லை. நாங்கள் சொன்னதை செய்துள்ளோம். மகளிர் உரிமைத்தொகை தருகிறோம் என்று கூறினோம், அதை தந்துள்ளோம்.

    நாங்கள் ஒரு கோடியே 32 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை தந்திருக்கிறோம். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு 2000 ரூபாய் தருகிறோம் என்று கூறி ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமியை மக்கள் நம்புவார்களா, அல்லது ஒரு கோடியே 32 லட்சம் குடும்பங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையைக் கொடுக்கிற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நம்புவார்களா என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எங்கள் வெற்றிக்கான கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டிரம்ப், பொதுமேடையில் “கனடா அமெரிக்காவால்தான் உயிர் வாழ்கிறது” என்றார்.
    • கியூபெக் திரும்பிய கார்னி வீடியோ ஒன்றை வெளியிட்டு டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளர்.

    சீனாவுடன் உறவு வைத்துக் கொண்டால் கனடாவுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

    அமெரிக்கா அதிபர் டிரம்ப் கனடாவை தனது நாட்டுடன் இணைக்க தொடர்ந்து அறைகூவல் விடுத்து வருகிறார். இதற்கு கனடா நாட்டு பிரதமர் மார்க் கார்னி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். முன்னாள் பிரதமர் ட்ரூடோ காலத்தில், டிரம்ப் அவரை "பிரதமர்" என அல்லாமல், "கவர்னர் ட்ரூடோ" என்று அழைத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனால் கனடா-அமெரிக்கா இடையேயான உறவு கசக்க தொடங்கியது. இருப்பினும் இதனை புதுப்பிக்கும் முயற்சியில் கனடா சார்பில் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன.

    சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் டிரம்ப், மார்க் கார்னி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது டிரம்ப் அறிவித்த அமைதி வாரியத்தில் இணைய கார்னிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று அமைதி வாரியத்தில் இணைய கார்னி ஒத்துக்கொண்டார்.

    மேலும், அமெரிக்காவுடனான உறவை புதுப்பித்து கொள்ளவும் கார்னி ஒரு வாய்ப்பாக இதனை கருதினார். இருப்பினும் டிரம்ப் அவருடைய கோரிக்கையை நிராகரித்தார். மேலும், டிரம்ப் இது "பெரிய தலைவர்களுக்கான உருவாக்கப்பட்ட மிக உயரிய குழு, இதில் கனடாவுக்கு இடமில்லை" என்று பகிரங்கமாக அறிவித்தார்.

    மேலும், அவர் பொதுமேடையில் "கனடா அமெரிக்காவால்தான் உயிர் வாழ்கிறது" என்றார். இதனால் சுவிட்சர்லாந்தில் இருந்து பெரும் ஏமாற்றத்துடன் கார்னி திரும்பினார்.

    பின்னர் கியூபெக் திரும்பிய அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளர். அதில் அவர் "கனடா அமெரிக்காவால் உயிர் வாழ்வதில்லை. நாங்கள் கனடியர்கள் என்பதால்தான் கனடா செழிக்கிறது." என்றார்.

    பின்னர் அமெரிக்கா-கனடா இடையிலான நீண்டகால உறவைப் பாராட்டிய கார்னி, அதே நேரத்தில், எங்கள் வீட்டின் உரிமையாளர்கள் நாங்களே. இது எங்கள் நாடு; எங்கள் எதிர்காலம்; முடிவு எங்களிடமே உள்ளது. மேலும், நடுத்தர சக்தி நாடுகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், பெரும் சக்திகள் பொருளாதார ஒருங்கிணைப்பை ஆயுதமாகவும், சுங்க வரிகளை அழுத்தம் செலுத்தும் கருவியாகவும், நிதி கட்டமைப்புகளை கட்டாயப்படுத்தும் சாதனமாகவும், விநியோகச் சங்கிலிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் பலவீனங்களாகவும் மாற்றத் தொடங்கியுள்ளன, என்று குற்றம் சாட்டினார்.

    இதற்கு டிரம்ப் கடும் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "என்ன நினைத்துக்கொண்டுள்ளார் என தெரியவில்லை. எங்கள் தயவு இல்லாமல் சீனாவை சார்ந்து இருக்க விரும்புகிறாரா கவர்னர் கார்னி.

    சீனப்பொருட்களை கனடாவில் இறக்குமதி செய்தால் அவர்கள் போகிற போக்கில் உங்களை விழுங்கிவிடுவார்கள். அதனை மீறி நீங்கள் சீனா உடன் உறவு வைத்துக்கொள்ள விருப்பப்பட்டால் உங்கள் மீது 100 சதவீதம் வரிவிதிக்கப்படும்" என்றார்.

    முன்னதாக அமெரிக்காவின் அடுத்தக்கட்ட பாதுகாப்பு அம்சமான தங்க கவசத்தில் இணைய கனடா மறுப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    ஒரு காவல் அதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.

    நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் வெளியான படம் 'சிறை'. இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கி இருந்தார்.

    7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவல் அதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.

    நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்து இருந்தார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்து இருந்தார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். 'சிறை' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது.

    'சிறை' படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலையும் குவித்தது.

    அந்த வகையில், தமிழ்நாட்டில் 27.27 கோடி, கர்நாடகாவில் 1.05 கோடி என உலகளவில் ரூ.31.58 கோடி வசூல் குவித்துள்ளது. இப்படம் ரூ.6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே 'சிறை' படம் குடியரசு தினத்தையொட்டி நாளை ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.

    இந்நிலையில், சிறை படத்தை பார்த்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில்,""நேற்று சிறை படம் பார்த்தேன். அருமையான படம். யதார்த்தமான மற்றும் நம் மனதுக்கு நெருக்கமான, நெஞ்சைத் தொடும் ஒரு காதல் கதை. விக்ரம் பிரபு மற்றும் அவருடன் நடித்த நடிகர்களின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது" என்றார்.

    • மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது.
    • தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன்.

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை!

    மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது.

    இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது.

    தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன்.

    மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    ×