என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் புகழ்பெற்ற 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க மகள் ஆராத்யாவுடன் பிரான்ஸ் சென்றார்.
    • ஐஸ்வர்யா ராய்க்கு விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

    உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் புகழ்பெற்ற 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க மகள் ஆராத்யாவுடன் பிரான்ஸ் சென்றார். அப்போது அவர் கையில் அடிபட்டு கட்டுப்போட்டு இருந்தார்.

    அந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலானதை பார்த்த ரசிகர்கள் பதறினார்கள். ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு என்று தவிப்போடு கேள்விகள் எழுப்பினர். விரைவில் குணமாக வேண்டியும் பதிவுகள் வெளியிட்டனர்.

    ஐஸ்வர்யா ராய்க்கு விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. கட்டுப்போட்ட கையுடனேயே வித்தியாசமான உடையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றார்.

    தற்போது ஐஸ்வர்யா ராய் பிரான்சில் இருந்து மும்பை திரும்பி உள்ளார். அடுத்த சில தினங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு கட்டுப்போட்டுள்ள கையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஐஸ்வர்யாராய் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முக சீரமைப்பு அறுவை சிகிச்சை பற்றி அதிகம் பேசியது இல்லை.
    • புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    திருநங்கை ஆர்வலரும், "மேட் இன் ஹெவன்" சீசன் 2 இணைய தொடரில் நடித்தவருமான திரினெத்ரா ஹல்தார் தன் முகத்தில் பெண்மையாக்கும் முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்ததன் மூலம், தான் பெண்ணாக மாறும் மாற்றங்கள் முழுமை பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் புகைப்படங்களையும் இணைத்துள்ளார். அதில், முகம் முழுக்க பேன்டேஜ் போடப்பட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது. இவரது முகத்தை சுற்றி கிராஃபிக் வரைபடம் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    முகத்தில் பெண்மையாக்கும் அறுவை சிகிச்சை செய்தது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இதை எனக்காக நானே செய்து கொண்டேன். இதை இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை. இத்தகைய மாற்றம் எனக்கு மருந்து, மாத்திரைகள் அடங்கிய வலி இல்லை, மாறாக இது புனிதமான ஒன்று. நான் முக சீரமைப்பு அறுவை சிகிச்சை பற்றி அதிகம் பேசியது இல்லை."

    "இந்த விஷயத்தில் கூச்சப்பட வேண்டாம் என்று நினைத்தேன். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யாரும் கண்டுக் கொள்வதில்லை. உண்மையில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இதை செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இந்த விஷயத்தில் நான் காத்திருக்க ஏராளமான காரணங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக கடந்து வந்த பிறகு தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்," என்று தெரிவித்தார். 


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நியூசிலாந்து போய் சாதித்துக் காட்டிய இந்தியன்.
    • யாரிடமும் நான் வாய்ப்பு கேட்டதில்லை.

    ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் "போகுமிடம் வெகு தூரம் இல்லை." அறிமுக இயக்குநர் மைக்கேல் கே ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

    சமீபத்தில் இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் கருணாஸ், "இயக்குநர் ஆணித்தரமாக அழுத்தமாகப் பேசக் காரணம் அவரது திறமை தான். அத்தனை சிறப்பாகப் படம் எடுத்துள்ளார். தயாரிப்பாளர் சிவா மிக நல்ல மனம் கொண்டவர். நியூசிலாந்து போய் சாதித்துக் காட்டிய இந்தியன். 24 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் யாரிடமும் நான் போய் வாய்ப்பு கேட்டதில்லை."

    "சினிமா உலகம் யாரையும் மதிக்காது, நமக்கான வாய்ப்புக்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். திரைத்துறை என்பது மிகப்பெரிய பயணம். மைக்கேல் இந்தக்கதை இப்படி தான் வரவேண்டுமெனப் பிடிவாதமாக எடுத்துக் காட்டியுள்ளார்."

    "என்னையும் விமலையும் வித்தியாசமாகக் காட்டியுள்ளார். அவருடன் எனக்கு இது தான் முதல் படம். நான் ஒரு ஹீரோவுடன் நடித்த எல்லாப் படமும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்தக்கதையைக் கேட்டு இந்தப்படம் நடித்தால் நாம் இறந்த பிறகு பேர் சொல்லிக்கொள்ளும் படமாக இருக்குமென என் குடும்பத்தினரிடம் சொன்னேன்."

    "ஆனால் ஒரு கட்டத்தில் இந்த வாய்ப்பு என் கையை விட்டுப் போனது, ஆனால் நாம் நடிக்கனும் எழுதியிருந்தால் அது நடக்கும் அப்படிதான் இப்போது நடந்துள்ளது. மகிழ்ச்சி. இந்தப்படத்திற்காக உண்மையாக உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் நன்றி," என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புஜ்ஜி தயாரிக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
    • அமிதாப் பச்சனின் அஸ்வத்தாமா தோற்றம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    கல்கி 2898 கி.பி., படம் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பர் "புஜ்ஜி"யின் அறிமுகம் மே 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் வீடியோ 'From Skratch EP4: Building A Superstar' என்ற தலைப்பு கொண்டுள்ளது. வீடியோவில், 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்த பயணம் நம்மை வியக்க வைக்கிறது. "சூப்பர் ஹீரோ", "பைரவாவின் சிறந்த நண்பன், " புஜ்ஜி" என பில்ட் அப் வசனங்களுடன் புஜ்ஜி தயாரிக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    2 நிமிடம் 22 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, கேரேஜ் அமைப்பிலான செட்டிங்கில், பிரபாசுடனான சந்திப்பு காட்சிகளைக் காட்டுகிறது, இது மே 22 ஆம் தேதி வெளியாகவுள்ள புஜ்ஜியின் பிரமாண்ட அறிமுகத்திற்கான ஆர்வத்தை அதிகரிக்கிறது.

    சமீபத்தில் 2898 கி.பி கல்கியின் சாம்ராஜ்யத்தில் அமிதாப் பச்சனின் அஸ்வத்தாமா தோற்றம், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் வெளியாக இருக்கிறது.

    நாக் அஸ்வின் இயக்கத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி போன்ற இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில் இந்த படம் உருவாகிறது.

    வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் கல்கி 2898 AD இந்த ஆண்டின் மிக முக்கிய படைப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இந்த சீரிசின் தீம் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    • இந்த சீரிசை ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார்.

    இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தனது 'உப்பு புளி காரம்'  சீரிசை வரும் மே 30 வெளியிட உள்ளது. புது சீரிஸ் வெளியீடு 'குடும்பப் பாட்டு' எனும் தீம் பாடலுடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    வண்ணமயமான காட்சிகள் மற்றும் நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பில், ஒரு மகிழ்ச்சியான மற்றும் இளமை நிறைந்த குடும்ப பொழுதுபோக்கை இந்த சீரிஸ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரிசின் தீம் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

     


    கனா காணும் காலங்கள் மற்றும் ஹார்ட் பீட் சீரிஸ் வரிசையில், 'உப்பு புளி காரம்' சீரிஸ் காதல், காமெடி, ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் பல அதிரடி திருப்பங்களை கொண்டிருக்கும். ஒரு வயதான அழகான தம்பதிகள் மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகள் என அவர்களின் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை சுற்றி பின்னப்பட்ட கதையாகும்.

    இந்த சீரிசில் நடிகர்கள் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா, தீபக் பரமேஷ் மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இடம்பெற்றுள்ளது. விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, எம் ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். ஷேக் இசையமைக்க, பார்த்திபன் மற்றும் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 28 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் . 'இந்தியன் 2 ' படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.

     28 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் . 'இந்தியன் 2 ' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்தியன் இரண்டாம் பாகத்தை குறித்து சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

    திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடல் மே 22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் குதிரையில் சில் அவுட் ஷாட்டில் கமல்ஹாசன் வருகிறார். இந்த அறிக்கையினால் ரசிகர்கள் மிகவும் கொண்டாடத்தில் இருக்கின்றனர். படத்தின் முதல் பாகம் போலவே இப்படமும் வெற்றிப்பெரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதைதொடர்ந்து படத்தின் மூன்றாம் பாகமும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த ஆண்டு லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தெ கிரேட்ட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இந்நிலையில் சில நாட்களுக்கு முன் படக்குழுவினர் அமெரிக்காவில் VFX பணிக்காக சென்றனர்.

    கடந்த ஆண்டு லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தெ கிரேட்ட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது விஜய் நடிக்கும் 68-வது படமாகும். கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்தில், சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் மிகவும் வைரலாகியது.

    இந்நிலையில் சில நாட்களுக்கு முன் படக்குழுவினர் அமெரிக்காவில் VFX பணிக்காக சென்றனர். நேற்று பணிகள் நிறைவடைந்தது என வெங்கட் பிரபு அவரது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டார்.

    இதனிடையே அரசியலில் குதித்த விஜய் இறுதியாக 69-வது படத்தில் நடித்துவிட்டு சினிமாவிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். இதனால், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத்  இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.

     

    இந்நிலையில், விஜய் நடிக்கும் 69-வது படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் சூர்யாவுடன் இணைந்து சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்து தேசிய விருது வென்றவர் ஆவார். இதுக் குறித்த் ஆதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பாராளுமன்ற தேர்தலில் அவரது சொந்த ஊரான ஹிமாச்சலப் பிரதேசம் மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
    • 'குயின்', 'தனு வெட்ஸ் மனு' உள்ளிட்ட படங்களின் மூலம் கங்கனா பாலிவுட்டில் பிரபலமானார். கங்கனாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள எமர்ஜென்சி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பாராளுமன்ற தேர்தலில் அவரது சொந்த ஊரான ஹிமாச்சலப் பிரதேசம் மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். சமீப காலமாக பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறிவந்த கங்கனா ரனாவத் இந்த தேர்தலில் போட்டியிடுவார் என்று ஆரம்பம் முதலே கூறப்பட்டு வந்தது. அதனபடி பாஜக சார்பில் களமிறங்கியுள்ள கங்கனா, மண்டி தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.

     

    இந்நிலையில் இந்த தேர்தலில் மண்டி தொகுதியில் வெற்றி பெற்றால் பாலிவுட்டை விட்டு விலகுவாரா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "ஆம்" என்று பதிலாளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "திரையுலகம் எனபது பொய், அங்குள்ள அனைத்தும் போலி. திரையுலகினர் எதார்த்த வாழ்க்கைக்கு மிகவும் மாறுபட்ட சூழலை உருவாக்குகிறார்கள்.

    பார்வையாளர்களைக் கவரும் ஒரு போலியான பளபளப்பான உலகம் அது. கட்டாயத்தாலேயே நான் சினிமாவில் நடித்து வருகிறேன். நடிப்பதில் சலிப்பு ஏற்படும்போது நான் கதை எழுதத் தொடங்கினேன். படம் இயக்குவது, தயாரிப்பது என என்னை பிசியாக வைத்துக்கொண்டேன். இனி முழுநேர அரசியலில் ஈடுபடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

    'குயின்', 'தனு வெட்ஸ் மனு' உள்ளிட்ட படங்களின் மூலம் கங்கனா பாலிவுட்டில் பிரபலமானார். கங்கனாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள எமர்ஜென்சி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975 முதல் 1977 வரை நாடு முழுவதும் அவசர நிலையைப் பிரகடனப்படுத்திய 21 மாத காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

    படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார். தமிழில் ஜெயம் ரவியின் 'தாம் தூம்', முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட 'தலைவி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

     

     

    • மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் சமீபத்தில் அஜித் குமார் கமிட்டாகி இருந்தார் .
    • இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தைக் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

    மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் சமீபத்தில் அஜித் குமார் கமிட்டாகி இருந்தார் .

    விடாமுயற்சி படத்தைத் தாண்டி குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது.

    இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தைக் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் அஜித் மூன்று முக பாவனையை கொடுத்தபடியுள்ளார். ஒன்று சாந்தமாகவும், ஒன்று சிரித்துக்கொண்டும் மற்றொன்று கோவமாக முக பாவனையில் காணப்படுகிறார். மேஜையில் துப்பாக்கிகள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர் தற்பொழுது ரசிகர்களுக்கு விருந்து அலளிக்கும் வகையில் இருக்கிறது. தற்பொழுது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிரது. படத்தை புஷா திரைப்படத்தை தயாரித்த மைத்த்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.

    அதன்படி ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குட் பேட் அக்லி படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கோலிவுட் திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன்.
    • விக்ரமின் தங்கலான் படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    கோலிவுட் திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'பேட்ட' படம் மூலம் தமிழில் களமிறங்கினார். இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து மக்கள் கவனத்தை பெற்றார்.

    இவர் தனுஷூடன் இணைந்து நடித்து வெளியான மாறன் திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றது. தற்போது விக்ரமின் தங்கலான் படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அப்படத்திற்காக சிலம்பம் தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்டார். சிலம்பத்திற்காகப் பயிற்சி எடுக்கும் காணொளிகளையும் அவ்வப்போது இணையத்தளத்தில் பகிர்ந்து வந்தார் மாளவிகா.

    இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்த பிறகும் தொடர்ந்து சிலம்பப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் மாளவிகா மோகன் நேற்று அவரது இன்ஸ்டாகிராமில் போட்டோ மற்றும் வீடியோக்களை பகிர்ந்தார். இது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆதிக் ரவிச்சந்திரன் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் "அந்நியன்".
    • இந்நிலையில் இந்த திரைப்படம் 4கே தரத்தில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மறு வெளியீடு செய்யப்பட்டது.

    ஆதிக் ரவிச்சந்திரன் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் "அந்நியன்". இது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஆரம்பத்திலும் பின்னர் பிரெஞ்சு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளிவந்தது. இதுவே பிரெஞ்சு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிரான்சில் திரையிடப்பட்ட முதலாவது இந்தியத் திரைப்படமாகும்.

    ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மூன்று சிறப்பு தோற்றங்களில் நடித்திருந்தார். மேலும், பிரகாஷ் ராஜ், சதா மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    இந்நிலையில் இந்த திரைப்படம் 4கே தரத்தில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மறு வெளியீடு செய்யப்பட்டது. தெலுங்கில் "அபரிசித்துடு" என்ற பெயரில் இந்த திரைப்படம் வெளியானது. இதனை தெலுங்கு ரசிகர்கள் திரையரங்குகளில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்நியன் போன்று வேடமிட்டு திரையரங்கில் ரசிகர் ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இவரை போன்ற ஒருவரின் வாய், மரியாதை மிக்க கடவுள் ராமரின் பெயரை உச்சரிப்பது என்பது பாவச்செயல்.
    • இஸ்லாம் எப்படி பயங்கரவாதிகளால் இழிவுப்படுத்தப்பட்டதோ, அதேபோல் மோடியால் இந்து மதம் இழிவுப்படுத்தப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக அரசியல் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் சீரிஸான "தலைமைச் செயலகம்" சீரிஸ் கடந்த 17ஆம் தேதி வெளியானது.

    இந்த வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் கிஷோர் பிரதமர் மோடியை விமர்சித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "மோடி பொது வாழ்க்கைக்கு மட்டுமல்ல, மனிதனாக இருக்கவும் தகுதியில்லாதவர். இவரை போன்ற ஒருவரின் வாய், மரியாதை மிக்க கடவுள் ராமரின் பெயரை உச்சரிப்பது என்பது பாவச்செயல். உண்மைக்கு புறம்பான, நெறிமுறையற்ற கருத்துகளை கூறுவதால் அவர் வெட்கப்பட வேண்டும்.

    அவரது வார்த்தைகள், செயல்பாடுகள் என அனைத்தும், உலகில் அவரை விட பெரிய பொய்யர், பெரிய கோழை, அதிக திமிர் கொண்டவர், மோசமானவர், கொடூரமானவர், முட்டாள், கீழ்த்தரமானவர், உணர்வற்றவர், மக்களுக்கு எதிரானவர், ஆபத்து நிறைந்தவர், ஊழல் நிறைந்த சர்வாதிகாரி என்பதை காட்டுகிறது.

    பாஜக ஆட்சியில் இருந்து 10 ஆண்டுகள் ஆன பிறகும், விவசாயிகள், இராணுவ வீரர்கள், பெண்கள், குழந்தைகள், மருத்துவமனைகள், கல்லூரிகளின் வளர்ச்சி குறித்தும், செய்த பணிகள் குறித்தும் பேசும் திறன் மோடிக்கு இல்லை. வெறும் பொய் சொல்லி வெறுப்பை மட்டுமே பரப்புகிறார். மேலும் கற்பனையாக வாக்கு ஜிகாத், ஊடுருவல்காரர்கள், பாகிஸ்தானியர்கள் என்று இந்த நாட்டு மக்களை கூறி வருகிறார்.

    அதோடு பிற கட்சியை சுட்டிக்காட்டி அவர்கள் உங்கள் வீடு, எருமை, சைக்கிள் உள்ளிட்ட சொத்துகளை எடுத்து கொள்வார்கள் என்றும், கோயில்களை பூட்டிவிடுவார்கள் என்றும் பேசி வருகிறார். இப்படியான அதிகாரப்பசி மற்றும் போலி இந்துவாக நடந்து கொள்வதால் இஸ்லாம் எப்படி பயங்கரவாதிகளால் இழிவுப்படுத்தப்பட்டதோ, அதேபோல் மோடியால் இந்து மதம் இழிவுப்படுத்தப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கு முன்னதாக நடிகர் கிஷோர், மோடியை விமர்சித்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு வைரலானது குறிப்பிடத்தக்கது.

    ×